‘நல்லூர் இராஜதானி:நகர அமைப்பு ‘ – அத்தியாயம் எட்டு: பண்டைய நூல்களும் கட்டடக்கலையும்!

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

வ.ந.கிரிதரன்


[இவ்வத்தியாயம் மேலும் சில தகவல்களுடன் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதன் விளைவாக அடுத்துவரும் அத்தியாயமும் தமிழர்களின் நகர அமைப்பு மற்றும் கட்டடக்கலை பற்றி வரலாற்றுத் தகவல்கள், தற்போதும் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறிது விளக்கும்]

வேதகாலத்திலேயே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்றிருந்தது. கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்றிருந்தது. கட்டடக்கலை பற்றிய அறிவியற்துறை வாஸ்து வித்யா (Vastu-Vidaya) என அழைக்கப்பட்டது. இதனை விளக்கும் நூல்கள் வாஸ்து சாஸ்திர நூல்கள் (Vastu Shastras) என அழைக்கப்பட்டன. மச்யபுராண (Matsyapurana), விஷ்ணு தர்மோத்தர புராண (Vishnudhamotrapurana) போன்ற புராண நூல்களும், ஹயாசேர்சா பஞ்சார்த்திர ஆகம (Hayasirsha pancharatra Agama), வைகாநாச ஆகம் (Vaikhanasa Agama) போன்ற ஆகம நூல்களும் ஆலய அமைப்பு முறைபற்றிய விதிகளைக் கூறும். மத்திய காலகட்டத்தில் மேலும் சில நூல்கள் இத்துறையில் தோன்றின. மானசர (Manasara) , சிற்பப்பிரகாச (Shilpaprakasha) போன்றன குறிப்பிடத்தக்கன. தமிழிலும் சிந்தாமணி, சிற்பரத்தினம் போன்ற நூல்கள் தோன்றின. இவற்றிற்கிடையில் சிற்சில வேறுபாடுகள் காணப்பட்டாலும் பொதுவாக ஒரே கருத்தையே கொண்டிருந்தன.

பிரபல நாவலாசிரியரான நா.பார்த்தசாரதி தமிழில் ‘பழந்தமிழர் கட்டடக்கலையும் நகர அமைப்பும் ‘ என்னுமொரு ஆய்வு நூலினை எழுதியிருக்கின்றார். மேற்படி நூலினைத் தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகத்தார் நா.பா.வின் மறைவுக்குப் பின்னர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்படும் தகவல்களிலிருந்து இன்றைய ஸ்தபதிகளின் கட்டுரைகள் வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி நூலினை எழுதியுள்ள நா.பா. உண்மையிலேயே பாராட்டுக்குரியவராகின்றார். மேற்படி நூலில் பிரதான சில்ப சாஸ்திர நூல்களாக பரங்கிப்பேட்டை எஸ்.ஏ.குமாரசாமி ஆச்சாரியார் பதிப்பித்த ‘சில்பரத்னாகரம் ‘ ‘விசுவகன்மீயம், விசுவம், விசுவசாரம், பிரபோதம்…. செளரம் வரையிலான 32 நூல்களையும், இதுவரை பதிப்பிக்கப்படாத மனுசாரம் நூல் கூறும் ஈசாநம், விசுவகன்மீயம், விருத்தம்…. தேசிகம் முதலான 28 நூல்களையும் பிரதான சில்பசாஸ்திர நூல்களாக நா.பா. குறிப்பிடுவார். மேலுமவர் கணபதி ஸ்தபதியின் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டு மலரில் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையில் 52 சிற்பநூல்கள் தென்னிந்தியப் பிரிவில் காணப்பட்டதாகவும் , அவற்றில் தற்போது தமிழகச் சிற்பிகளால் கற்கவும், நடைமுறையில் பாவிக்கப்படுவது முழுமையாக எஞ்சியுள்ள மயமதம், விசுவகன்மீயம், மானசரம், மனுசாரம், இந்திரமதம், வாஸ்துவித்யா, தாஸ்யபம், சித்ர காஸ்யபம், நாராயணீயம் ஆகிய 9 நூல்களே என்றும் கூறுவார். மேலும் மேற்படி கண்பதி ஸ்தபதியின் கட்டுரையின் அடிப்படையில் நடைமுறையிலுள்ளவை ஸ்ரீகுமாரரின் சில்பரத்தினம், சில்பரத்னாகரம், மனுஷ்யாலய சந்திரிகா, சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, பிராமீயம், சரஸ்வதீயம் ஆகிய கோயில் ஆகமங்களூடன் ‘சிற்ப உபநிஷங்களே என்பார். ‘

பொதுவாக வட இந்தியக் கட்டடக்கலை நூல்களின் மூல ஆசிரியராகத் தேவலோகச் சிற்பியான விசுவகர்மாவைக் குறிப்பிடுவர். தென்னிந்திய நூல்களின் மூல ஆசிரியராக மயனைக் குறிப்பிடுவர். இக்கட்டடக்கலை நூல்கள் கூறும் கோட்பாடுகளிலிருந்து சமயம் எவ்வளவுதூரம் கட்டட, நகர அமைப்பு முறைகளைப் பாதித்துள்ளனதென்பதை அறிய முடிகின்றது.

மத்தியகாலம் வரையில் இத்துறை பற்றிய தகவல்கள் யாவும் வாய்வழி மூலமாகவே தந்தையிடமிருந்து புத்திரருக்கு என்ற முறையில் பேணப்பட்டு வந்துள்ளன. மத்திய காலகட்டத்திலேயே முதன்முறையாக இத்துறை பற்றிய தகவல்கள் யாவும் பனையோலைச் சுவடிகளில் எழுத்து மூலமாகப் பதிக்கப்பட்டு வந்தன. 1920ம் ஆண்டில் Stella Kramisch என்பவர் இச்சுவடிகள் பலவற்றை ஆராய்ந்திருக்கின்றார். இச்சுவடிகள் தரும் முக்கியமான தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம். முக்கியமாக நகர அமைப்பு பற்றிக் கூறப்படும் தகவல்களை நோக்குவோம்.

பிரபஞ்சமும் இந்துக்களின் கட்டடக்கலையும்!

இந்துக்களின் உபநிடதங்கள் கூறும் தத்துவங்களில் ‘பிரம்மம் ‘ பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. உருவமற்ற, ஆதி அந்தமற்று, எங்கும் பரந்து, நீக்கமற நிறைந்திருப்பதே பிரம்மம். இந்த உருவமற்ற பிரம்மத்தின் உருவ வடிவங்கள்தான் சிவன், விஷ்ணு, பிரம்மன் போன்ற தெய்வங்கள். இவ்விதமான உருவற்ற மூல வடிவத்திலிருந்து உருவானவன்தான் ‘வாஸ்துபுருஷன் ‘ அல்லது ‘வாஸ்துதேவன் ‘ என்பவன். இவனை மையமாகவைத்தே இந்துக்களின் கட்டடக்கலைத்துறை வளர்ச்சியுற்று வந்திருக்கின்றது. இவ்வித உருவ வடிவான வாஸ்து புருஷனை வாஸ்து புருஷ் மண்டல(ம்) என மேற்படி கட்டடக்கலை நூல்கள் வர்ணிக்கின்றன. இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிகளின் உருவ வடிவமே இந்த வாஸ்துபுருஷனாகும். ஆரம்பத்தில் எவ்விதம் உருவற்ற பிரம்மத்திலிருந்து உருவ வாஸ்து புருஷன் படைக்கப்பட்டானோ அவ்விதமே கட்டடக்கலைஞர்களும் உருவற்ற புறச்சூழலை (Environment) உருவவடிவமான கட்டடங்களாக வடிவமைக்கும்போது அக்கட்டடங்கள் மேற்படி வாஸ்துதேவனைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே அமைப்பார்கள். பிரபஞ்சத்துக்கும் மனிதர்களுக்குமிடையிலுள்ள தொடர்பினைக் கட்டடங்கள் அமைப்பதிலும் பேணியவர்கள் இந்துக்கள் என்பது இதிலிருந்து புலனாகின்றது.

வட்டமும், சதுரமும், வாஸ்துபுருஷ மண்டலமும்!

இந்துக்களின் கட்டடங்களையும், பெளத்தர்களின் கட்டடங்களையும் நோக்குபவர்கள் ஒன்றினை இலகுவாக அறிந்து கொள்வார்கள். பெளத்த கட்டடங்கள், தாது கோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன. இந்துக்களின் கட்டடங்களோ சதுர அல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டன. அநுராதபுர நகர, கட்டட அமைப்புத் துறையினை வட்ட வடிவம் எவ்வளவு தூரம் பாதித்துள்ளதென்பதை ரோலன் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர் ஆராய்ந்து தெளிவு படுத்தியுள்ளார். சந்தையை மையமாக வைத்து உருவான பண்டைய அநுராதபுர நகரைச் சுற்றி வட்ட ஒழுக்கில் வட்ட வடிவமான தாது கோபுரங்கள், இரு வேறு ஒழுக்குகளில் அமைக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வுகள் புலப்படுத்தும். வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப்போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல இந்துக்களும் இப்பிரஞ்சத்தை ஒருவித வெளி-நேர (Space- Time) அமைப்பாகத்தான் விளங்கி வைத்திருந்தார்களென்பது இதிலிருந்து புலனாகின்றது. இவ்விதம் இப்பிரஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்த்துக்கள் இவ்விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமானதொன்றல்லதான்.

மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப் போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரபஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுரவடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல் இந்துக்களும் இப்பிரபஞ்சத்தை ஒருவித வெளி(Space) நேர (Time) அமைப்பாகத்தான் விளக்கி வைத்திருந்தார்களென்பது புலனாகின்றது. இவ்விதம் இப்பிரபஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்த்துக்கள் இவ்விதிகளிற்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவோ (அல்லது செவ்வக வடிவாகவோ) அமைத்தார்களென்பதும் ஆச்சரியமானதொன்றல்லதான்.

இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட ‘வாஸ்து ‘ புருஷமண்டலத்திற்கேற்ப நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வாஸ்து புருஷனை இச்சதுர வடிவில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு சதுரங்களாக உருவாக்கப்பட்டார்கள். மேற்படி சதுரவடிவான வாஸ்து புருஷ மண்டலம் மேலும் பல சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்டன. இத்தகைய சிறுசதுரங்கள் ‘படா ‘க்கள் (Padas) என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு சதுரத்தையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கிரமித்திருக்கும். வாஸ்து புருஷமண்டலத்தின் மையப்பகுதியில் பலசிறு சதூரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமொன்று காணப்படும். இச்சதுரத்தை பிரம்மனிற்கு உருவகப்படுத்தினார்கள்.

மண்டுக மண்டலம் (படம் 1):

1. பிரம்மாவுக்குரியது; 4 சதுரங்கள்.

2. அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கடவுள்களுக்குரியது; 2 சதுரங்கள்.

3. ஏனைய கடவுள்களுக்குரியது ‘ 1 சதுரம்.

பிரம்மனைச் சுற்றி ஏனைய முக்கியமான தெய்வங்களைக்கொண்ட சதுரங்களும், அவற்றிற்கு வெளிப்புறமாக ஏனைய முக்கியம் குறைந்த தெய்வங்களைக் கொண்ட சதுரங்களுமாக மேற்படி வாஸ்து புருஷ மண்டலம் பிரிக்கப்பட்டிருக்கும். வாஸ்து புருஷ மண்டலத்தை 32 வகைகளில் சதுர வடிவில் உருவாக்கலாம். ஒரு சதுர வடிவான வாஸ்து புருஷமண்டலத்திலிருந்து 4, 9, 16, 25, 36, 49, 64, 81, … என்று 1024 சிறு சதுரங்களைக் கொண்ட முப்பத்திரண்டு வகைகளில் வாஸ்துபுருஷ மண்டலத்தை உருவாக்கலாமென்பதைப் பண்டைய இந்தியக் கட்டடக்கலை நூல்கள் கூறுகின்றன. இத்தகைய வாஸ்துபுருஷ மண்டலங்களில் 64 சிறு சதுரங்களை உள்ளடக்கிய மண்டுக மண்டலம் (Manduka mandala), 81 சிறு சதுரஙக்ளை உள்ளடக்கிய பரமசாயிக்க மண்டலம் (Parama sayika mandala) என்பவை முக்கியமானவை.

பரமசாயிக்க மண்டலம் (படம் 2):

மண்டுக மண்டலத்தைப் பொறுத்தவரையில் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்காகச் செல்லும் இரு அச்சுக்களாலும் முழு சதுர வடிவமும் பிரிக்கப்பட்டிருக்கும். பரமசாயிக்க மண்டலத்தைப் பொறுத்தவரையில் முழு சதுர வடிவமும் சமச்சீரற்றுப் பிரிக்கப்பட்டிருக்கும்.

இவ்விதமாக இந்துக்களின் கட்டடக்கலைக் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டடமும் (ஆலயமோ அல்லது இல்லமோ) நகரமும் உண்மையிலேயே இந்துக்களின் படைப்புத் தத்துவக் கோட்பாடுகளைப் புலப்படுத்தும் சின்னங்களாகத்தான் உருவாக்கப்படுகின்றனவென்பதை அறியமுடிகின்றது. இது சமயத்தின் பாதிப்பு எவ்வளவுதூரத்திற்கு நகர, கட்டடக்கலைத்துறைகளில் உள்ளதென்பதை வெளிப்படுத்துகின்றது. வட இந்தியக் கட்டடக்கலை நூல்கள் கூறும் வாஸ்து புருஷ மண்டலத்திற்கும், தென்னிந்திய நூல்கள் கூறும் விளக்கத்திற்குமிடையில் சிறு சிறு வேறுபாடுகள் நிலவியபோதும் பொதுவில் பெரிய அளவில் மாற்றமில்லையென்றே கொள்ளலாம். தென்னிந்திய ஆலய நகரங்களான மதுரை, ஸ்ரீரங்கம் போன்றவற்றில் இம்மாற்றத்தை வெளிப்படையாகவே அவதானிக்க முடிகின்றது. அடுத்து தமிழர்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றி வரலாற்றுத் தகவல்கள், தற்போதும் காணப்படும் வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இன்னும் சிறிது விளக்கமாகப் பார்ப்போம்.

—-

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்