This entry is in the series 20060414_Issue

சி. ஜெயபாரதன், கனடா


என் அன்புக்கு உரியவனே!
என் குருதிப் பாலெடுத்து,
வெண்பொங்கல் பண்ணச் சொன்னாய்!
என் வியர்வையில் நீந்தி
பொன் ஊஞ்சல் ஆடினாய்!
இரவில் குடித்து விட்டு
விடிய விடியப்
பெரிய புராணக் கச்சேரி வைத்தாய்!
என் உப்பைத் தின்று
எனக்கே உலை வைத்தாய்!
ஊருக்கு என்முகம் காட்டி
உன்னுடைய
பேருக்கு பொன்முலாம் பூசினாய்!
என் முதுகில் ஏறி
உன் கோபுரத்தைக் கட்டினாய்!
எனது நெஞ்சைக் கல்லாக்கி
உனது கரத்தை உளி ஆக்கினாய்!
என் கழுத்தணியைத் திருடி,
உன் அழுக்குகளை கழுவிக் கொண்டாய்!
என்னுடலை விற்க வைத்து,
உன்னுடலுக்குச் சுகம் தேடினாய்!
அவை எல்லாம் பொறுத்தேன்,
அன்புக் குரியவனே! …
எப்படிப் பொறுப்பேன்,
என்னுயிரைத் தீயிலிட்டு
பின்னுமோர்
கன்னி தேடிப் போகி றாயே ?

****

[S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 11, 2006]

Series Navigation