நலமுற

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

வை.ஈ. மணி


காலை வானில் கருமுகில்கள்
காணாது மனம் களிப்புற்று
காலை வீசி உடற்பயிற்சிக்
கெனச் சிறிது நடக்கக்கற்

சாலை ஓரப் பாதையினில்
சென்ற என்னைக் கண்டவுடன்
‘மாலை ‘* வலம் வருவோர்கள்
மகிழ்ந் துடன் வந்தனரே (1)

வருத்த முற்ற என்மனதில்
வடிவு பெற்ற குறையொன்று
பருத்த உடல் என்றறிந்தும்
படுத்தும் ஆசை தள்ளநான்

மருத்து வர்சொல் மீறியுண்டு
மகிழத் தின் பண்டங்கள்
இருக்கு மிடம் கண்டணுகி
இனிப் புண்ணக் காத்திருந்தேன் (2)

வலம் வரும் மனிதர்களில்
மனம் நொந்து காணப்படும்
சிலர் காலில் ஊனமுற்றும்
சிலர் உடல் மிகமெலிந்தும்

பலர் பெருத்த வயிற்சுமந்தும்
பலம் குறைந்து நடைதளர்ந்தும்
சொலர்க் கரிய துயிரமேற்றுச்
செல்லும் காட்சி உறுத்தினதே (3)

நலம் குன்றி நோயடுக்கும்
நம் மனதில் அடங்காத
புலன் ஆசை வேரூன்றிப்
பெரும் தீயன செய்வதனால்

பலன் இல்லை ஐயமில்லை
புலன் ஆட்சி நிலைத்திடில்
நலம் பெற்று இன்புறுவார்
புலன் அடக்கி வாழ்பவர் (4)

* ‘MALL ‘

Series Navigation

வை ஈ மணி

வை ஈ மணி