‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

இரா மதுவந்தி


அலெஹாண்ட்ரோ கோன்ஸாலஸ் இனாரிட்டு (Alejandro Gonzநூlez Iண்நூrritu) என்ற வாயில் நுழையாத பெயர் கொண்ட இந்த புது இயக்குனரின் முதல் படமே சென்றவருட ஆஸ்காரில் பெரிய அளவில் பேசப்பட்டு விருது கிடைக்காமல் போனது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

இந்த படத்தை இதுவரை பார்க்கவில்லை என்றால், பார்த்துவிட்டு இந்த கட்டுரையை படியுங்கள். மீதியை வெண்திரையில் காண்க சமாச்சாரம் எல்லாம் இதில் இல்லை. அவ்வப்போது முடிவைக்கூட இதில் பேசிவிடுவேன். முடிவு ஒன்றும் முக்கியமல்ல என்பதையும் நான் கூறிவிடுகிறேன்.

என் அண்ணனின் வீட்டுக்குச் சென்றபோது, இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டும், திடுமென்று இறங்கி ஓடும் குழந்தை பின்னால் ஓடிக்கொண்டும், அவ்வப்போது வெங்காயம் வெட்டிக்கொடுத்துக்கொண்டும் அரைகுறையாக பார்த்த இந்தப் படத்தைப் பற்றி பேசத்தான் போகிறேனே தவிர விமர்சனம் இல்லை.

குப்பத்திலிருந்து போயஸ் கார்டன் வரையிலும், கானாப்பாட்டிலிருந்து கர்நாடக இசைவிழா வரைக்கும், குஸ்தியிலிருந்து குஸ்காவரைக்கும் எல்லா சமாச்சாரங்களும் கலந்து உறவாடும் ஒரு நகரம் சென்னை என்றால், அதனை விட இன்னும் ஒரு படி மேலே செல்லக்கூடிய பிச்சைகாரன் வாந்தி மெக்ஸிகோ நகரம்.

அப்படிப்பட்ட ஒரு நகரத்தின் நாடியைப் பிடித்துப் பார்க்க வேண்டுமென்றால், ஒரு பரபரப்பான தெருவின் நடுவே அதிவேகத்தில் கார்கள் இடித்துக்கொள்ளும் விபத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்ற சிந்தனைக்காகவே இயக்குனருக்கு ஒரு பாராட்டு கொடுக்கலாம்.

கார்களின் உள்ளே இருந்தவர்களுக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அந்த கதைகளும், அந்த விபத்து மூலம் வெவ்வேறு திசைக்குச் சென்று விடுகின்றன. வாழ்க்கையே ஒரு தற்செயலாக நடந்த விபத்து என்ற அடிகோட்டுக்கு அப்புறம் அதன் பல பரிமாணங்களை வெட்கமின்றி பேசுகிறது இந்தப் படம்.

நாய் போல காதல் என்ற தலைப்பும் ஒரு மாதிரி உவமைதான். அதே போல அந்த விபத்தில் சிக்கும் அனைவரிடமும் ஒவ்வொரு நாய் அவர்களின் உவமையாக இருக்கிறது.

சுர வேகத்தில் மூச்சுத்திணறும் அளவுக்கு நிகழ்ச்சிகளையும், பேச்சுக்களையும், திடுமென்று மாறும் மனித குணங்களையும் சொல்லும் இயக்குனரை கொஞ்சம் குவிண்டின் டாரண்டினோ, கொஞ்சம் லூயி புவனெல், கொஞ்சம் ரோமன் போலன்ஸ்கி என்று பார்க்கலாம்.

குவிண்டின் டாரண்டினோவின் ஹோட்டல் கதையும், பல்ப் ஃபிக்ஷனும் பார்த்தவர்கள் அதுபோல இந்த அமோஸ் பெர்ரோஸ் என்று சொன்னால் நம்பாதீர்கள். இது அதையெல்லாம் விட இன்னும் அசுர வேகம்.

ஜபாட்டா புரட்சிக்காரனுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகளை அவ்வப்போது பார்த்துக்கொள்கிறான் புரட்சிக்காரன். புரட்சிக்காரனால் அவளைத் தன் மகள் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லை. புரட்சிக்காரன் இப்போதைக்கு சுப்பாரி கொலைகாரன் அவ்வளவுதான். ஒரு அவலமான சூழ்நிலையில் அண்ணனாக இருக்கும் தொழில் பார்ட்னரை கொன்றுவிட ஒரு தம்பி ஒரு புரோக்கரை நாட அந்த புரோக்கர் தம்பியை இந்த முன்னாள் புரட்சிக்காரனிடம் கூட்டிக்கொண்டு வருகிறான்.

அண்ணனை உளவு பார்க்கும் ஒரு தருணத்தில் நடக்கிறது அந்த விபத்து. அந்த விபத்தில் அடிபட்டவனிடமிருந்த பணத்தையும் அங்கு இருந்த சண்டைக்கார நாயையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறான் புரட்சிக்காரன். புரட்சிக்காரனிடம் ஏராளமான நாய்கள். அடிபட்ட நாயை குணப்படுத்தி மற்ற நாய்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று திரும்பும்போது அவன் இதுவரை வளர்த்துவந்த செல்ல நாய்களை எல்லாம் இந்த சண்டைக்கார நாய் கொன்று குதறி எடுத்து போட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். தன்னுடைய செல்ல நாய்கள் கொல்லப்பட்ட கோபத்தில் புதிய இந்த சண்டைக்கார நாயைக் கொல்ல துப்பாக்கியை எடுக்கிறான். காசுக்காக கொலை செய்யும் இவனுக்கு நாயை கொல்ல மட்டும் மனம் வருவதில்லை. திடாரென்று பொறி தட்டுகிறது அவனுக்கு. நாய்ச்சண்டையில் கொல்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட இந்த நாய்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?

நாயின் ஒரிஜினல் சொந்தக்காரன் ஒரு வாலிபன். இந்த நாயை நாய்ச்சண்டையில் கொல்வதற்குப் பழக்கப்படுத்தி அதன் மூலம் சம்பாதிக்கிறான். அவனது அண்ணனின் மனைவிக்கும் அவனுக்கும் தொடர்பு. அவன் அவளை வற்புறுத்தி ஓடிவிடலாம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறான். அந்த விபத்தில் கணவன் இறந்ததும், அவள் தனது மைத்துனனை விட்டு விலகி விடுகிறாள். அவன் அவள் வருவாள் என்று ரயில் நிலையத்தில் காத்திருந்து, வரவில்லை என்று அறியும்போது மனம் உடைகிறான்.

அந்த விபத்தில் காலை இழந்த ஒரு மாடல் அழகி, தன்னுடைய அழகான பொமரேனியன் நாய் எலிகளால் குதறப்படுவதற்கும், தன்னுடைய பெரிய விளம்பர உருவப்படம் எதிர்த்த கட்டடத்திலிருந்து அகற்றப்படுவதற்கும் சேர்த்து அழுகிறாள்.

கதை பல பரிமாணங்களில் விரைந்து ஓடுகிறது. இறுதியில் கிழட்டுப் புரட்சிக்காரன் தன்னோடு ஒட்டிக்கொண்ட சண்டைக்கார நாயுடன் எங்கோ தொலைதூர அழகான வான விளிம்பு நோக்கி தொழிற்சாலை அசுத்தங்களிடையே நடந்து செல்வதோடு கதை முடிகிறது.

மனிதர்கள் சினிமாக்களில் கொலை செய்யப்படுவது என்பதை பார்த்து பழகி வித்தியாசமாய் எடுத்துக்கொள்ளாத நம் மனம், நாய்ச்சண்டையின் வன்முறை தீவிரத்தில் அதிர்வதை நம்மை உணரவைக்கும்போது வெற்றியடைகிறார் இயக்குனர். அண்ணனுக்கும் தம்பிக்கும் நடுவே ஒரே ஒரு துப்பாக்கியை வைத்துவிட்டு, அவர்களது உடைகளைப் போட்டுக்கொண்டு வெளியேறும் புரட்சிக்காரன் அவர்களைக் கேவலமாக திட்டுகிறான். அவன் சென்றதும், அந்த துப்பாக்கியை எடுத்து மற்றவனை சுட இருவரும் போராடுகிறார்கள். நம்பிக்கை இழக்கும்போது, எந்த உண்மையும் கண்களைத் திறக்காது என்பதையும், காலம் காலமாக பங்காளி சண்டையில் போராடிக்கொண்டிருக்கும்போது, ஒருவன் அதிலிருந்து வெளியேறுவதையும் காண்பிப்பதும் அடிநாதமாக ஓடுகிறது.

மகள் மீது புரட்சிக்காரனுக்கு அன்பு. அண்ணன் மனைவி மீது தம்பிக்கு அன்பு. நாய்கள் மீது புரட்சிக்காரனுக்கு அன்பு. பணத்தின் மீது இன்னொரு தம்பிக்கு அன்பு. எல்லாவற்றையும் விட்டு துறவி போல நடக்கிறான் பழைய கொலைகார புரட்சிக்காரன். புரட்சிக்காரனின் ஆசை நாய்களைக் கொன்ற புது நாய் இன்று அவனோடு நடக்கிறது. ஆங்கிலத்தில் love is a bitch என்று சொல்வதற்கு தெளிவான தமிழில் எப்படிச் சொல்வது ?

***

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி