This entry is in the series 20020330_Issue

சேவியர்.


இன்னொரு
ஜனனம் வேண்டுமெனக்கு.

சங்க இலக்கியங்களின்
சந்துகளில் சுற்றி வந்ததற்காய்
கர்வக் கிரீடம்
சூட்டிக் கொண்டேன்.

யாராரோ எழுதியவற்றை
தூசு தட்டித் தான்
என்
கவிதைகளும் பிரசுரமாயின.

எல்லைகள் இல்லை
எனும்
ஓர் எல்லைக்குள் இருந்து
நான்
எறிந்த கற்களே அதிகம்.

முத்துக்களை சொந்தமாக்கியதற்காய்
சிப்பியை விட
அதிகமாய்
சந்தோசப் பட்டுத் தீர்ந்தது
என் ஜீவிதம்.

எனக்கு இன்னோர்
ஜனனம் வேண்டும்.

எனக்கான நடைவண்டியை
நானே
தேர்ந்தெடுக்கும் ஆரம்பம்,
எனக்கான பாடையை
நானே புனையும் முடிவு.

என்னில் துவங்கி,
என்னில் முடிந்தாலும்,
எங்கும்
‘நான் ‘ இல்லா ஓர் வாழ்க்கை.

ஒளியை பிடித்து
இருட்டைத் துரத்திய காலத்தை
நிமிர்த்தி விட்டு,
இருளில் கரைந்து
ஒளியாகும் நிலைக்காண,

இன்னொரு ஜனனம்
வேண்டும் எனக்கு

***
xavier@efunds.com

Series Navigation