நம்மாழ்வார்

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

எஸ் டி நெல்லை நெடுமாறன்


நம்மாழ்வார் பாண்டியர் மரபினர்

ஆழ்வார்களில் நம்மாழ்வாரே முதன்மைப்படுத்திக் கூறப்படுகின்றார்.

‘எந்தப் பகவான் வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றினாரோ அதே பகவான் நம்மாழ்வாராக அவதரித்துத் திருவாய்மொழியை அருளிச் செய்து அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் பொருட்களை விளக்கிக் கூறினார் ‘ ‘

வேதம் ஓதும் உரிமை அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவருக்கு மட்டுமே இருந்தது எனத் திருச்சந்தவிருத்தவுரை கூறுகிறது. தாழ்ந்தவன் வேதம் ஓதுவது இகழ்ச்சிக்குரியதாக அமைந்தது. சிறந்த முறையில் நம்மாழ்வார் வேதங்களைக் கற்றார் என அறியக்கிடக்கின்றது. ஆதலால் நம்மாழ்வார் உயர்ந்த குலத்தவராக அறியப்படுகின்றார்.

வேதத்தின் பொருள் மற்றும் அதன் உட்கருத்துகளையும் விளக்கிக் கூறியவர் நம்மாழ்வாரேயாவர்.

திருக்குருகூர் காரிமாறன் என்ற அரசனின் அருந்தவப் புதல்வரான நம்மாழ்வாரை வைணவர்கள் ‘தமிழ் வேதம் தந்த ஆழ்வார் ‘ ‘ எனப் பெருமைப்படுத்தியுள்ளனர். வைணவ அடியார்களில் மேம்பட்ட பெரியோரான அந்தணகுலத்து நாதமுனி, திருவழுதி நாட்டிற்கு வந்து வணங்கித் தமிழ் வேதம் அறிந்தவர்.

‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ் ‘ ‘ என்று நாதமுனி குறிப்பிடுவது நோக்கிடத் தக்கது. நாதமுனி தமிழ் வேதம் கற்று, தமிழ் மாறனாகிய நம்மாழ்வாரை வணங்கி, சோழநாட்டு வீரநாராயணம் போய்ச் சேர்ந்து வைணவக் கொள்கைகளை, கோட்பாடுகளைப் பரப்பி வந்தார். இத்தகைய செய்திகள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஸ்ரீ ராமானுஜ வைபவம் ‘ என்று நூலில் உள்ளன. நம்மாழ்வார் ‘மன்னும் வழுதிவளநாடன் ‘ ‘ என்று குறிப்பிடப்பட்டாரே அன்றி வேறு குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ‘தமிழ் மாறன் ‘ ‘ என இராமானுசர் கூறுவதிலிருந்தே நம்மாழ்வார் பாண்டியர் மரபினர் எனத் தெளிவாகத் துணியலாம்.

நம்மாழ்வாரைப் புகழ்ந்து போற்றி எழுதிய நூல்கள் ஏராளமாகும். குறிப்பாகச் சில நூல்களில் ‘திருக்குருகூர்காவலன் ‘ ‘, ‘தென்திருப்பேரைக் காவலன் ‘ ‘, ‘பொதிகைமலையை உடையவன் ‘ ‘, ‘பொருணையாறு உடையோன் ‘ ‘ என்று சிறப்பித்துக் கூறப்பட்டிருப்பது பாண்டியர் குல வளமை பொருட்டாகும். பொருணை ஆறும், பொதிகை மலையும் தொன்று தொட்டுப் பாண்டியருக்கு உரியன என்பதை நாம் அறிவோம்.

நவதிருப்பதிகளில் நம்மாழ்வார் திருப்பதி

தென்பாண்டி நாட்டில் நவதிருப்பதிகள் அமைந்திருப்பது எண்ணத்தகுந்தது. நவக்கிரகங்களின் ஆலயங்களாகவே இவ்வூர்கள் குறிக்கப்பட்டுள்ளன.

நவக்கிரகங்கள் நவதிருப்பதிகள் தெய்வங்கள் மாவட்டம்

சூரியன் திருவைகுண்டம் கள்ளபிரான் தூத்துக்குடி மாவட்டம்

சந்திரன் வரகுணமங்கை விசயாசனர் தூத்துக்குடி மாவட்டம்

அங்காரகன் திருக்கோளூர் வைத்தமாநிதி தூத்துக்குடி மாவட்டம்

புதன் ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் தூத்துக்குடி மாவட்டம்

குரு தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் தூத்துக்குடி மாவட்டம்

சுக்கிரன் திருப்புளியங்குடி காய்சினவேந்தன் தூத்துக்குடி மாவட்டம்

சனி திருக்குளந்தை என்ற பெருங்குளம் மாயக்கூத்தன் தூத்துக்குடி மாவட்டம்

கேது தொலைவில்லி மங்கலம் தேவபிரான் தூத்துக்குடி மாவட்டம்

இராகு இரட்டைத்திருப்பதி அரவிந்தலோசனன் தூத்துக்குடி மாவட்டம்

இத்தகைய நவக்கிரகம் பற்றிய இறைவணக்கப் பதிகளாக அமைந்த இக்கோயில்கள் வைணவக் கோயில்களாகும். இவற்றுள், ஆழ்வார் திருநகரி என்ற திருத்தலமே நம்மாழ்வார் தொடர்புடைய தலமாகும். இத்திருத்தலம் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

நம்மாழ்வார் காலம்

நம்மாழ்வார் பிறந்த காலத்தை அறிஞர்களால் இன்றுவரை ஒழுங்குபடுத்த முடியவில்லை. வைணவ நூல்களில் ஆழ்வார்களை வரிசைப்படுத்தவும் முடியவில்லை. இராமானுஜ நூற்றந்தாதி அருளிய வடமொழிச் சுலோகம் நம்மாழ்வாரை இறுதி ஆழ்வாராகவே கூறுகிறது. நம்மாழ்வார் இடைப்பட்டவரோ இறுதி ஆழ்வாரோ அதைவிட அவர் ஆழ்வார்களிலே தலைமையானவர் ஆவார். ஆனால் பெருமாள் சீயரின் குருபரம்பரை, வேதாந்த தேசிகரின் அதிகார சங்கிரம், பிரபந்தசாரம் என்ற நூல் மற்றும் மணவாள மாமுனிகளின் நூல் போன்றவை ஆழ்வார்களில் நம்மாழ்வாரைக் கடைப்பட்டவராகவே உணர்த்துகின்றன. நாலாயிரத் திவ்வியப்பிரபந்தமும் கடைப்பட்டவராகவே நம்மாழ்வார் காலத்தைக் கூறுகிறது. நம்மாழ்வார் இடைப்பட்டவரோ கடைப்பட்டவரோ அதைவிட அவர் ஆழ்வார்களில் தலைமையானவர் ஆவார்.

நம்மாழ்வார் குலம்

அஞ்சலென வடியவரை யாள வேண்டி

அரசர்கள் சிரோமணியாங் காரிராசன்

தஞ்சிறுவனென உலகில் வந்து தோன்றி

என்று நம்மாழ்வார் திருக்கோலக்கவி கூறுவதால் நம்மாழ்வார் அரசர்கள் சிரோமணியாம் காரிராசன் மரபில் வந்து தோன்றினார் என்று திட்டவட்டமாக அறிகிறோம்.

திருவழுதி வளநாடனைத் தென்திருப்பேரைக் காவலனை

….ராமாவ தாரதீர நாராயணன் வழுதிநாடன் நங்குலநாதன்

திருவுளம் கிளர்தர வழுதிநன் நாடா

தமிழ் தென்திருப்பேரை கோவே

என்று மகர நெடுங்குழைக் காதர் பிள்ளைத் தமிழ் கூறுவதைத் தெளிகிறோம்.

ஆழ்வார் திருநகரில் இருந்த அ.ம. மலையப்பப் பிள்ளை கவிராயர் (வேளாளர்) மாறன் அவதாரக் கவிதை என்ற நூலை எழுதியுள்ளார். இவரது காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டாகும்.

திங்க ளிரண்டுபுகுந் தெய்வத் தனிச்சுடரை

நங்கை திருவயிற்றில் வந்துதித்த நன்மணியை

யங்கண் வழுதிவள நாடர்குலத் தாரமுதா

யெங்கண் பெருமானை யெம்பெருமான் காக்கவே

நங்கை பிராட்டியாரின் திருவயிற்றில் உதித்த நம்மாழ்வார் பெருமானை ‘ ‘வழுதி வளநாடர் குலத்து ஆரமுதே ‘ ‘ என்று வெள்ளாளர் குலத்தவரே சுட்டிக்காட்டுதல் நோக்கத்தக்கது. இத்தகைய இலக்கியச் சான்றுகளை உற்றுநோக்குதல் ஆய்வாளர்களின் கடமையாகும்.

மாறன் கலம்பகம் என்னும் நூல்

திருப்புளிக் கீழ்வீற்றிருக்கு

மாறன் பொருணை வள நாடான்

என்கிறது. திருப்புளிக்கீழ் வீற்றிருந்த நம்மாழ்வார் பெருமானை ‘மாறன் பொருணை வளநாடான் ‘ ‘ என்று இந்நூல் உணர்த்துவது அறியற்பாலதாம்.

நம்மாழ்வார் ஊஞ்சல் கவிதை என்ற நூல்

சீர்மேவு திருவழுதிக் குலத்தில் தோன்றுஞ்

செண்பகவண் சடகோப னாடி ரூஞ்சல்

என்று குறிப்பிடுகிறது. திருவழுதிக் குலம் என்றும் பாண்டிய குலம் என்றும் கூறப்படுவதை எண்ணித் துணிவோமாக. அத்திருவழுதிக் குலத்தில் அவதரித்தவரே நம்மாழ்வார் ஆவார்.

ஆதிநாதன் வாகனமாலை என்ற நூல்

திருவழுதிவளநாடர் வார்த்தை

என்பதால் நம்மாழ்வார் அரச மரபினர் என்று அறிய முடிகிறது. நம்மாழ்வார் ஊஞ்சற்கவிதை என்ற நூல் நம்மாழ்வாரை ஆழ்வார்களுக்கெல்லாம் அரசன் (தம்பிரான்) என்று கூறுகிறது.

ஆற்றோடு வளைமுழங்குங் குருகை வாழும்

ஆழ்வார்கள் தம்பிரான்

என்பதால் ஆழ்வார்களில் நம்மாழ்வாரே மிக உயர்ந்தவராகக் கருதப்பட்டார் என்று தெரியவருகிறது.

திருஞான முத்திரைக்கை மாறன் வீரன்

செண்பக வண்சட கோபன்

வீரக்குடியினர் அரசர் என்ற அடிப்படையிலேயே வீரன் செண்பகவண் சடகோபன் என்று இங்குப் பாடலாசிரியர் கூறியுள்ளார்.

ஆழ்வார்திருவனந்தல் என்ற ஏடு

திருவழுதி வளநாட னேதிரு வனந்தலோ

செண்பகச் சடகோப னேதிரு வனந்தலோ

சீரார் தமிழ்க்கரச னேதிரு வனந்தலோ

செண்பகச் சடகோப னேதிரு வனந்தலோ

என்கிறது. தமிழுக்கு அரசன் பாண்டியன் என்பது இப்பாடலிலிருந்து நோக்கிடத்தக்கது. தமிழ் வளர்த்த சான்றோர் அவரே; இதன் பொருட்டுத் தமிழ்நாடன் என்று பெருமைப்படுத்தப்பட்டார்.

நம்மாழ்வார் பதம் என்ற நூல்

செண்பக மாறா நரவீரா

கூறு மறைத்தமிழ் நரவீரன் றடம்

பொருநை மாறன் நங்கையார் பெற்றபேர்

மாறன் மலிந்து வளமீளுங் குறுகையூரன்

வையம் புகழ் குருகை அய்யன் செண்பகமாறா

இப்பாடலாசிரியரின் கால அளவில் ஆட்சித்தலைவர்களை ‘அய்யன் ‘ ‘ என்று சிறப்பித்தது வழக்கமாயிற்று. எனவே நம்மாழ்வாரையும் அய்யன் எனச் சிறப்பித்தார் எனலாம். மேலும் வைணவத் தென்கலை அய்யங்கார்களில் தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களில் பாண்டியகுல சான்றோர்களே அந்தணராக மாற்றம் பெற்றனர் என்ற பண்டைய வழக்கும் உண்டு.

ஆதிநாதன் வாகனமாலை என்ற கவிதை நூல்

நாராயணன்வழுதி நாடாளன் சீராளன்

என்கிறது. ஆதிநாதரூசல் என்ற நூல் நாடாய்ச்சிமார் மூவர் ‘திருவடிகள் வாழி ‘ ‘ என்று கூறுவதில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டத்தில் சான்றோர் குலத்துப் (நாடார்) பெண்களை ‘நாடாச்சி ‘ ‘ என்று அழைக்கும் வழக்கு இன்றும் பிற சமூக மக்களிடையே உள்ளது. சிறப்புக் கருதியே பிற சாதியினர் இவ்வாறு அழைக்கின்றனர்.

நம்மாழ்வார் திருத்தாலாட்டு என்ற நூல்

திருவழுதி நாடுமுற்றுஞ் செங்கோல் செலுத்துந்

திருவழுதி நன்மரபிற் செல்வக் குமரன்

என்றும்,

எங்கள் அரசன்குலக் குமரன்

– என்றும் கூறுகிறது.

நம்மாழ்வாரின் அன்னையார்

சீர்பூத்த நீண் மதிளுஞ் செம்பொன்செய் கோபுரமும்

கார்பூத்த மாளிகையுங் கற்பகக்காவுஞ் செறிந்த

திருவண் பரிசாரத் தேவசனையே

மருவவர விந்தத்தில் வளர்திருவாழ் மார்பன்

கற்றெடுத்த கல்விக் கடலாளருந் தவத்தாற்

பெற்றெடுத்த பெண்கள் பெருமாளுடைய நங்கை

என்பதால் திருவழுதிநாடு முழுதும் செங்கோலாட்சி செய்யும் வேந்தர் குடியில் தலைமகன் காரிமாறனைத் தந்தையாகவும், நீண்ட மதில், செம்பொன்னாலான கோபுரம், மாளிகை, பனைமரங்கள் நிறைந்த சோலையுடைய திருவண் பரிசாரத்தில் அமைந்த திருவாழ்மார்பன் பிரபுவின் மகள் நங்கையைத் தாயாகவும் அமையப் பெற்றவர் நம்மாழ்வார் என்று உணர முடிகிறது.

நமது கல்வெட்டுகளில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த குலசேகர பாண்டியன் மெய்க்கீர்த்தியில் இம்மன்னனின் தேவியின் தோழியராக இருந்த பெண்கள் பற்றி கூறியவிடத்து ‘விளங்கு கதிரொளி வீரசிம்மாசனத்து வீற்றிருந்த தேவிக்கு கற்பகத்தரு கீழ் கலை வல்லார் புகழ் மன்னவர் தேவியர் உடனிருந்து பணிசெய்தனர் ‘ என்று சொல்லப்பட்டிருப்பதை அறிவோமாக. கி.பி. 1160-இல் அமைந்த திருக்கடையூர் கல்வெட்டு சோழவேந்தன் வென்ற அரசர்கள் பட்டியல் குறித்து சொல்லியவிடத்து ‘கற்பகரும் ‘ என்று சேரனைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் குறிப்பிடத்தக்க ஆவணம் ஒன்றைப் பார்ப்போம். கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லில் செதுக்கிய பனைமரம் ஒன்று உத்தரப்பிரதேச அருங்காட்சியகத்தில் உள்ளது. இதனை கல்பக விருட்சம் என்று குறித்திருப்பது அறியற்பாலதாம். இதுபோன்று அண்மையில் கண்டறியப்பட்ட தென்காசி பாண்டியர் செப்பேடுகளிலிருந்து (கி.பி. 17-ஆம் நூற்றாண்டு) அரசன் கற்பக ஓலையால் ஆணையிட்டான் என்பதை அறிய முடிகிறது.

இவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாத காலத்தில்

செங்கோலை விட்டுக் கொடுங்கோல் செலுத்தினமோ

வெங்கோப நீத்தார்க்கு வேதனைகள் செய்தோமோ

ஆறிலொன்று கொள்ளா தவனி புரந்தோமோ

ஊரிலன்பர் செய்த உதவி மறந்தோமோ

மகப்பேறு இல்லாத நிலையில் ஆட்சியில் தவறு செய்தோமோ என்று வேதனைப்படுவது நோக்குக; செங்கோல் செய்வதும், ஆறிலொன்று கடமை பெறுவதும் அரசகுலத்தவருக்கே அமைந்ததாகும். ஆனால் சோழ மண்டல சதகம் என்ற நூல் எட்டிலொரு கடமையை வேளாளர் பெற்றதாக (பிற்காலம்) குறிப்பிடுகிறது.

நம்மாழ்வார் (மரபினரைச்) சுட்டிக்காட்டும் போது,

…. துடரிமலை காவலனே

பொருநைத் துறையானே; பொதியமலைக் காவலனே

குருகைப் பெருமானே குமரித் துறையானே

என்று கூறுவதால் மிகத் தெளிவாகப் பாண்டிய குலமரபினரில் ஒரு கிளை திருக்குருகூர் சிற்றரசர் என்று அறியக் கிடக்கின்றது. திருக்குருகூர் நல்லாட்சியின் பொருட்டு,

தென்னர் புகழச் சகத்தோர் பணிகேட்ப

மன்னன் வணங்க மறையோர் புடைசூழப்

பேரரசர் ஆன பாண்டியன் இவரைப் புகழ்ந்து கூறினான். மக்கள் இவர் ஆணையை மதித்து நடந்திட்டனர். பிற மன்னர்கள் வணங்கினர். அந்தணர் காரிமாறனைச் சுற்றி இருந்தனர். இந்த நிலையில் உள்ள உயர் குடியினரே திருக்குருகூர் மன்னராவர். திருவழுதி நாட்டுச் சிறப்புகளைக் கூறும்விடத்து அமைந்த தலைவனை ‘திருவழுதி நாடன் ‘ ‘ என்றும் ‘திருவழுதி நாடான் ‘ ‘ என்றும் சுட்டிக்காட்டுவது அறியற் பாலதாம்.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் திருக்குறுங்குடிப் பெருமாளைச் சேவித்து வணங்கித் தவமிருந்து பெற்ற பிள்ளையாக நம்மாழ்வார் பிறந்தார்.

நம்மாழ்வாரின் அன்னையார்

…. நல்லார் தமை நோக்கி

எங்கள் குடிக்கும் மிறையோன் பெருங்குடிக்கும்

உங்கள் குடிக்கு மொருமகவாய்த் தோன்றினான்

என்றும், அரசன் குடிக்கும், பாண்டியன் பெருங்குடிக்கும், தான் பிறந்த திருவண் பரிசாரத்தில் உள்ள பிரபுவான திருவாழ்மார்பன் குடிக்கும், நாட்டில் வாழும் குடிகளை ஆண்டு கொள்ள ஒருவனாக அவதரித்துள்ளான் என ஆனந்தப் பெருக்கினால் கூறினாள்.

மிக வலுவான இறையோன் பெருங்குடி என்று கூறுவது அரசகுடியை என்பது தெளிவாக உணரப்படும். மேலும்,

…. வெண்சா மரை யிரட்டப்

பூசக்கிர வாளப் புவியோர் புடைநிழற்ற

மாசக்கிரவாள வண்ண வட்டக்குடை நிழற்ற

என்னும் பகுதியில் வெண்சாமரம் வீசுவதும், வெண்மை (வண்ணம்) வட்டக் குடைகளைப் பிடித்துப் பெருமைப்படுத்துவதும் சொல்லப்பட்டிருக்கின்றது. வெள்ளைக்குடையும், வெண் சாமரமும் அரச குலத்தவருக்கே அமைந்ததாகும். கி.பி.17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசராக உருவாக்கப்பட்ட சேதுபதிகள் கூட செங்காவிக்குடை உடையவராகவே ஆவணங்களிலும், செப்புப் பட்டயங்களிலும் குறிப்பிடப்படுகின்றனர். ஆகவே நம்மாழ்வார் பாண்டிய அரச மரபினரேயன்றி வேறு மரபினர் அல்லர் என்பது திட்டவட்டமாகத் தெளிவுறும்.

திவ்விய சூரி சரித்திரம் என்ற நூல், ‘நம்மாழ்வார் அரசர் மைந்தர் ‘ ‘ என்று குறிப்பிடுகிறது. வேறு சமூகத்தில் அரசர் தோன்றி இருப்பின் அச்சமூகத்தையும் இணைத்துக் கூறுவது தமிழ்நூல்கள் மரபு. ஆனால் திவ்விய சூரி சரித்திரம் அரசர் மைந்தர் என மிகவும் விரிவாகவே சுட்டிக் காட்டுகிறது. நம்மாழ்வார் திருக்குறுங்குடி நம்பியின் அருளாலே பிறந்தவர் என நாம் அறிவோம். அதே ஊரில் பிறந்த சுந்தரம் அய்யங்கார் நிறுவன (சாரிடாஸ்) வெளியீடு நம்மாழ்வார் ‘ ‘தாயும் தந்தையும் அரச மரபினர் ‘ ‘ என்று சுட்டிக் காட்டுகிறது. கலைக்களஞ்சியம் ‘ஆண்ட சிற்றரசு குலத்துக் காரியார் என்பாருக்கு உடைய நங்கையார் புத்திரராய் நம்மாழ்வார் அவதரித்தார் ‘ ‘ என்கிறது.

கி.பி.910–இல் அமைந்த சானூர் கல்வெட்டு புதூருடையான் நம்மாழ்வாரடிகள் என்ற கிராம ஆட்சித் தலைவனை நமக்கு அடையாளம் காட்டுகிறது. இதனால் நம்மாழ்வார் இக்காலத்திற்கும் முற்பட்டவர் எனக் கல்வெட்டால் அறிய முடிகிறது. வேளாளர்குல சிதம்பர கவிராயரால் கி.பி.16–ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீவலமாறன் கதை, சீவலமாறன் தென்பாண்டி நாட்டில் குடியேற்றப்பட்ட அந்தணர் மனைகள் ஆயிரத்தெட்டும், அரசகுலத்தவருக்கு இரண்டாயிரம் குடியிருப்பு மனைகளும், வணிககுலத்தவருக்கு எண்ணாயிரம் மனைகளும், சூத்திரராகிய வெள்ளாளருக்குப் பதினாயிரம் குடியிருப்பு மனைகளும் பஞ்சமராகிய பலபட்டைகளுக்கு இருபத்தேழாயிரம் குடியிருப்பு மனைகளும், வழங்கினார் என்பதால் அரசகுலத்தவர் என்போர் தனிமரபினர் ஆவர். ஆட்சிப் பொறுப்பில் அமைந்தவன் மட்டுமே அரசன் என்று அழைக்கப்பட்டான் என்ற சிலரின் கருத்தைச் சீவலமாறன் கதை எதிர்கொள்கிறது. ஐவர்ராசாக்கள் கதை பாண்டியன் வள்ளியூர்ப் பகுதியில் பலருக்கு உதவிகள் வழங்கினான்; ‘தாடாள்வான் தம்பிமார்களுக்கும் வழங்கினான் ‘ ‘ என்கிறது.

திருவாவடுதுறை ஆதீனத்துச் செப்பேடு சிவகாசியில் உள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களை நாடாதி நாடாக்கள் என்றும், பிற பிரிவினரைப் பலபட்டடைகள் என்று கூறுவதும் அறியற்பாலதாம். இச்செப்புப் பட்டயத்தில் இராமநாதபுரம் சீமையின் ஒரு பகுதியில் வாழ்ந்த நாடார்கள் சேதுபதிகளையோ, அல்லது நாயக்கர்களையோ குறிப்பிடாமல் ‘சேர சோழ பாண்டிய பூமியில் ‘ ‘ என்று கூறுவதால் இச் சமூக மக்கள் மூவேந்தர் தொடர்புடையோர் எனத் துணியலாம். இது போன்று திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதி ஊர்களையெல்லாம் சீவலமாறன் கதை கூறுகிறது. மேலப்பாட்டம், திருத்து போன்ற ஊர்கள் உழவராகிய வேளாளர் வாழும் கிராமங்களாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் மணப்படை வீடு என்ற ஊரினை ‘வழுதியர் குலங்கள் வாழும் வீடு தன்னில் ‘ ‘ எனக் கூறி, பாண்டியர் குலத்தவரை நமக்கு அடையாளம் காட்டுகிறது அந்த நூல்.

தாடாள்வான் குலமும் நம்மாழ்வாரும்

தாடாள்வான் ஆகிய திருவிக்கிரமனை அதாவது விஷ்ணுவைத் தலைவனாகக் கொண்டதே வைணவ மதம். ஆதிசேடனின் மறு அவதாரமாகவே நம்மாழ்வாரை வைணவ அடியார்கள் கொண்டுள்ளனர். நம்மாழ்வார் பாண்டியர் மரபினர் என்பதில் யாருக்கும் வேறுபாடு தோன்றியதாகக் கருத முடியவில்லை. ஆனால் நம்மாழ்வார் அரசகுலத்தவரா அன்றி வேளாளரா என்ற கருத்து வேறுபாடு பலரிடையே நிலவி வருகிறது. பிரபந்தத் திரட்டு எனும் நூல் விஷ்ணுவின் வழிவந்தவர்கள் அரசகுலத்தவர்கள் என்கிறது. எனவே தாடாள்வான்குலம் அரசகுலத்தவரே. பல செப்புப் பட்டயங்களும், ஓலைச் சுவடிகளும், ஆவணங்களும் அரசகுலத்தவரைத் தாடாள்வான் குலத்தினர் எனச் சுட்டுகின்றன. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே வளர்த்தவர்கள் அரச குலத்தவர். இந்நிலையை இன்று வரை அரச குலத்தவராகிய நாடார்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கொங்கு நாட்டுச் செப்புப் பட்டயங்களில் தாடாள்வான் குலம்

கி.பி.17–ஆம் நூற்றாண்டில் அமைந்த நாயக்கர் காலச் செப்புப் பட்டயம் ஈரோடு மாவட்டம் பூந்துறை செல்வ இரத்தின அந்தணக் குருக்களிடம் உள்ளது. அது, ‘சவுந்திர பாண்டியன் தன் மண்டலத்தில் தாடாழ்வானென்றும் நாடாழ்வானென்றும் சான்றோர் குலத்து நாடார்களைக் குறிப்பிடுகிறது. இப்பட்டயம் போன்று அமைந்த கருமாபுரம் (சேலம்) சான்றோர் மடத்துச் சிவசுப்பிரமணிய பண்டிதர் என்ற அந்தணக் குருக்களிடம் இருக்கும் செப்பேடு தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் வழியாகப் புலவர் டாக்டர் செ. இராசு என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயத்திலும் சவுந்திர பாண்டியர் மண்டலத்தில் தாடாழ்வான் என்றும் உள்ளது.

நாடார் திருமண வாழ்த்தில் தாடாள்வான் குலம்

டாக்டர் ஆ.தசரதனால் பதிப்பிக்கப்பட்ட வலங்கை வாழ்த்து (1984) ‘வாழ்வு வழங்கவென்று வந்தகுல கெம்பீரன் தாடாள்வான் சோழன் தனிச்சோழன் தேசமதில் நாடாண்மை பெற்று நன்மை கிட்டிக் கொண்டவர்கள் ‘ ‘ என்பதாலும் தாடாள்வான் என்பவன் அரசகுலத்தவன் என இனிதே விளங்கும்.

அரசன் நீதி செய்யும் மண்டபத்தை நச்சினார்க்கினியரின் மலைபடுகடாம் உரை ‘சான்றோர் என்பவர் சமைந்திருக்கும் மண்டபம் ‘ ‘ என்று குறிப்பிடுகிறது. சமைய நாராயணர் என்பது நாராயணன்

குலத்து நீதி செய்யும் சான்றோர் என்பதாம். ‘நடுவிருந்த சாணாரும் நாடார் என்பர் ‘ ‘ எனக் காகபுஜண்ட நூல் சுட்டிக்காட்டுவதை அறிவோமாக.

சிருங்கேரி மடத்துப் பட்டயம் பாண்டிய நாடார்க்குரியது

விஜயதுரைசாமி கிராமணியால் எழுதப்பட்ட நாடாரென்னும் சொல்லாராய்ச்சியில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் சிருங்கேரி ஜெகத்குருக்களால் வழங்கப்பட்டதான செப்புப் பட்டயம் நாடார் குல குருக்கள் பற்றியதாகும்.

பாண்டிய குலமாயும் சிவகோத்திர சம்மனனராயும் உள்ள சான்றோர் குல நாடார்களுக்கு மைசூர் சமஸ்தானம் தாராபுரம் தாலுகா குளஞ்சாவடி கிராமம் தெற்குப் பிரகார அக்ரகாரம்ராமஸ்வாமி சாஸ்திரியர் பெளத்திரர் சிவராமசாமி சாஸ்திரியாரை குலகுருவாக நெகமுகம் செய்து

என்று சிருங்கேரி மடத்து ஜெகத்குருவால் வழங்கப்பட்ட செப்புப் பட்டயம் கூறுகிறது. அரசருக்கு முடிசூடும் உரிமையுள்ள மடம் சிருங்கேரி என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அகிலத்திரட்டு அம்மானையும் வைணவமும்

சோழர்கள் தம் செப்பேடுகளில் திருமாலைத் தம் முதல்வனாகவே கூறுகின்றனர். தாடாள்வானே அரச சமூகத் தொடர்புடையவன் என்று சுட்டிக்காட்டப்படுதலை அறிகின்றோம். இதுபோன்று கி.பி.19–ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த முடிசூடும் பெருமாள் என்ற முத்துக்குட்டி சுவாமிகள் சான்றோர் சமூகத்தைத் தாடாள்வானுடன் தொடர்புபடுத்தித் தம் அகிலத்திரட்டு நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். கி.பி.19–ஆம் நூற்றாண்டில் வைணவத்தைத் தென்பகுதிகளில் வளர்த்த பெருமை இவருக்கு உண்டு.

இனத்தான் கோயில் என்ற நாராயணசாமி கோயில்கள்

இனத்தான் கோயில் என்ற பெயர் கொண்ட வைணவ வழிபாட்டுக் கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிகமான ஊர்களில் அமைந்துள்ளன. குறிப்பாகத் தண்டுபத்து, சீர்காழி, கொட்டங்காடு, கச்சினாவிளை போன்ற சான்றோர் சமூகம் உள்ள ஊர்களில் இவை இருப்பதை அறியலாம். வைணவக் கோயில்களில் இன்றும் நாடாரே வணக்கம் கொள்ளும் நிலையை இம்மாவட்டத் தில் பார்க்கிறோம். குறும்பூர் ஆதிநாராயணப் பெருமாள் கோயில் நாலுமாவடி நாடாக்களின் வரலாற்று உரிமை படைத்த கோயிலாகும். இதுபோன்று ஆழ்வார் தோப்பில் விஷ்ணுகோயில் திருவிழாவை இன்றும் நாடார்களே நடத்தி வருகின்றனர். மூதறிஞர் அருணாசலக் கவுண்டர் தாம் உரை செய்த முத்திவழி அம்மானையில் ஆழ்வார் தோப்பு என்ற அழகான நன்னிலத்தில் வாழ் தமிழ் நாடனது வம்சத் திலே உதித்தோன் என்ற பாடல் அடிக்கு நம்மாழ்வார் குலத்திலே பிறந்தவர் என்று ஆழ்வார்தோப்பு நாடார் குலத்தவனான நூலாசிரியனைச் சுட்டிக்காட்டுகின்றார். இவனைப் பாண்டியன் வழிநாடான் எனக் கருதி இருக்கலாம். ஆகவே இனத்தான் கோயில்கள் என்பன வைணவ வணக்கம் கொள்ளும் மரபு வழிக் கோயில்களாகும்.

இனத்தான் கோயில் என்று நாராயணரை வழிபடும் சமூகமாகிய சான்றோரைக் கூறுவது எண்ணிடத் தக்கது. இனத்தான் கோயிலைக் கிராம மக்கள் நாராயணசாமி கோயில் என்று அழைப்பார்கள். இனத்தான் கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயில் இராசாக்கள் கோயிலாகும். ஏறத்தாழ 40 க்கு மேற்பட்ட ஊர்களில் இனத்தான்கோயில் அல்லது பள்ளிப்படைகளில், ஐவர்ராசா வணக்கம் அல்லது பாண்டியர் வணக்கம் உள்ளது.

தாதன் கூட்டத்து வைணவச் சான்றோர்

தூத்துக்குடி மாவட்டம் பேரிலோவன்பட்டி, கோவில்பட்டி, சேமப்புதூர் வாழும் தாதன் கூட்டத்து நாடார்கள் வைணவர்களின் சிறப்புடையவர்கள். இது போன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விளாம்பட்டி, தேனியிலும் வாழும் நாடார்களில் சிறந்த வைணவர்கள் உண்டு. இன்று வரை திருமால் வணக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதும் புரட்டாசி மாதம் விரத நோன்பும் புலால் மறுத்து உண்டு வாழும் சீரிய பழக்க வழக்கங்களையும் இவர்கள் கொள்வர். சான்றோர் குலமக்களைப் போன்று வேளாளர் யாரும் இத்தகைய வைணவராக இம்மாவட்டத்தில் உறுதியாக அமைந்திடவில்லை.

நம்மாழ்வார் என்ற பெயரை நாடார்கள் வைத்துக் கொள்ளும் வழக்கு இம்மக்களிடையே காணப்படுகிறது. ஆனால் வெள்ளாளர் தம்மைச் சைவ பிள்ளைமார் என்று உரிமை பாராட்டிக் கொள்வதிலும், வெள்ளாளர்களில் தம்மை உயர்ந்தோர் என்று பெருமை கொள்வதிலும் இன்றும் சைவத் தொடர்பை வலுவாக்கி வாழ்வதையும் இம்மாவட்டத்தில் காண முடிகிறது.

பூதூரில் வந்துதித்த புண்ணியனோ

பூங்கமழும் தாதார்மகன்தான் இவனோ

தூதுவந்த நெடுமாலோ இம்மூவரில்

மணவாள மாமுனிகளில் இவர் யார் ?

என்பதில் தாதர் குறிப்பிடப்படுகின்றனர்.

நம்மாழ்வாரும் நாமும்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் ‘சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ‘ அருகே அமைந்த திருவழுதிநாடான் விளை என்ற ஊர் சான்றோர் கிராமமாகும். இவ்வூரில் பிறந்த இராசகோபால் நாடார் நம்மாழ்வாரும் நாமும் என்ற நூல் எழுதியுள்ளார். இந்நூலில் நம்மாழ்வார் என்ற ஆழ்வாரின் மரபினர் நாடார்களாகிய தாமேயென இயற்கைச் சான்றுகளை எடுத்து விளக்கியுள்ளார். இவ்வூரில் நம்மாழ்வார் பெயரால் இவரது குடும்பத்தினர் பாடசாலை நடத்துகின்றனர்.

மகர நெடுங்குழைக்காதர் வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோயில் திருவிழாவில் திருமலாபுரம் நாடார்களுக்கு முதல் மரியாதை இன்றும் செய்யப்படுகிறது. தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களில் வாழும் தென்கலை அய்யங்கார்கள் தம்மை அரச மரபினர்களிலிருந்து அந்தணராக மாறியோர் என்றும், நாடார்களாக இருந்தவர் என்றும் கூறுவது எண்ணத் தகுந்தது. குழைக்காதர் என்று அழைத்துக் கொள்ளும் தென்கலை அய்யங்காரையும் நாடார்களையும் இன்றும் பெயர் வழக்கில் காணலாம்.

இதுவரை கூறப்பெற்ற கருத்துகளிலிருந்து, நம்மாழ்வார் அரச குலத்தவர் என்றும், பாண்டிய அரச மரபினர் என்றும் பிற அறிஞர்கள் ஒத்துக்கொள்வதும், தூத்துக்குடி மாவட்ட நாடார்களுக்கு அரச அந்தஸ்து இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும், அம்மாவட்டத்தில் நாடார்களே வைணவ வழிப்பாட்டுடன், நம்மாழ்வாரின் நாமமும் பெற்று வருபவர்களாயிருப்பதற்கான சான்றுகளும், சைவத்தைக் கடைப்பிடிக்கும் வெள்ளாளர் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வாறும் நம்மாழ்வாரோடு தொடர்புபடார் என்றும் அறிந்து கொள்ளலாம்.

(முனைவர் ஆ.தசரதன் தொகுத்து, தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம் 2005-ஆம் ஆண்டில் வெளியிட்ட பத்மநாப சுவாமி கதைப்பாடல் என்ற நூலில் இந்த ஆய்வுக் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டுள்ளது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.)

இரா

nellai.nedumaran@gmail.com

எஸ் டி நெல்லை நெடுமாறன் , அ கணேசன் படைப்புகள்

நெல்லை நெடுமாறன், எஸ் இராமச்சந்திரன் படைப்புகள்

Series Navigation