நமீதாவூம் கம்ப்யூட்டரும்

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

சூர்யகுமாரன்


இணையத்தில் வழக்கம் போல உலா வந்து கொண்டிருந்தபோது வினையாக வந்தது ஒரு சனி! மன்னிக்கவூம்.ஒரு சனிக்கிழமையன்று கணினிக்கு சற்று தண்ணீர்தோஷம்(‘ஜல’ என்பது வடமொழியாயிற்றே!) வந்தது போல முனகியது.இணையத் தொடர்புகள் நின்று போயின.சரி இணையப்போக்குவரத்து இன்றைக்கு அதிகம் போலும் என்று நினைத்து கணினியை அணைத்து விட்டு வெளியே போய் விட்டேன்.
மறுநாள் சோம்பேறித்தனமான ஞாயிற்றுக்கிழமை.மகாசனங்கள் மட்டன் கடைக்கும்,சிக்கன் கடைக்குமாக பல்விளக்காமல் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் மெதுவாக கணினியை உயிர்ப்பித்தேன்.இணையத்திற்கு போகவில்லை.எட்டிப்பார்த்த அடுத்த வீட்டுக்காரார் கணினிக்கு வேண்டுமானால் திருஷ்டி சுத்திப் போடுங்களேன் என்றார்.பொழுதுபோகாத இன்னும் சிலர் அறையில் வாஸ்து சரியில்லை தோஸ்த் என்றனர்.காரணம் அடுத்த சனி,ஞாயிறன்றும் இதேபோல் ஆனது.
இதே தொடர்கதையாகிப் போனது.வெள்ளிக்கிழமை சாயந்தரமானாலே எனக்குள் பட்சி பறக்கத் தொடங்கி விடும்.அவசரமாக மின்னஞ்சல்களை பார்த்து முடித்து விட்டு சனி-ஞாயிறு பிரச்சனையை எதிர்நோக்கத் தொடங்கி விடுவேன்.அதிலும் என்னுடைய சொந்த இணையதளத்தை மனைப்பக்கமாக(ஹோம்பேஜ்) வைத்திருந்தேன்.இந்த இணையதளத்திற்கு மட்டும் கணினி செல்வதே இல்லை.என்னடா இது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு வந்த சோதனை என்று மைன்ட்பீல்டு,மோஸில்லா நெருப்புநரி,ஒபேரா என்று வேறு தேடுபொறிகளுக்குத் தாவி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது கணினி நிபுணர்களை தேடலாமே என்று ஆளுக்கு ஆள் ஐசியூவில் இருப்பவனுக்கு ஆலோசனை சொல்வது போல ஆரம்பித்தார்கள்.
பிரச்சனை இதுதான்.
1.என்னுடைய மனைப்பக்கத்தை காணவில்லை என்கிறது ஐஇ
2.வேறு சில பிரபலமான இணையதளங்களையூம் காணவில்லை என்கிறது.
உதாரணமாக கூகுளையே காணவில்லை என்றது என்னுடைய கணினி.
3.சனி-ஞாயிறுகளில் மந்திரித்து விட்ட மாதிரி கணினியில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது.
4.சரியாக திங்கட்கிழமை காலை எட்டரை மணிக்கு அலாரம் வைத்த மாதிரி இணைய இணைப்பு தானாகவே கிடைத்து விடுகிறது.
பரங்கிமலை ஜோதி தியேட்டர் பக்கத்தில் யாரோ ஒரு கணினிசோதிடர் இருக்கிறராம்.மவூஸ்பேடில் மை வைத்து என்ன ஏது என்று பார்த்து விடுவாராம் என்றார் நண்பர்.எதற்கும் இருக்கட்டும் என்று கணினி பொறியன்களை வரவழைத்தேன்.நமக்கே ஹார்டுவேர் தெரியூம் என்றாலும் எந்த டாக்டரும் தனக்குதானே ஊசி போட்டுக்கொள்ள மாட்டாரல்லவா.அது போல நானும் ஒரு கொள்கை வைத்திருக்கிறேன்.எனது கணினியை நான் பழுது பார்ப்பதில்லை என்று.வந்த பொறியர்கள் வழக்கம்போல மோட்டுவளையைப் பார்த்து விட்டு இணைய செட்டிங்குகளை நிரடி விட்டு இனாம் கேட்கும் ஊழியர் போல தலையை சொறிந்தார்.புரிந்து விட்டது எனக்கு.ஹார்டுடிஸ்க்கை ஃபார்மட் செய்து விடலாம் என்று சொல்லப்போகிறார்கள் என்று நினைத்தேன்.அதேதான் சார்.இதெல்லாம் வைரஸின் வேலை.நமீதா என்று ஒரு சுதேசி வைரஸ் சுற்றிக் கொண்டிருக்கிறது. நமீதா படம் பார்க்காதவர்களின் கணிகளை எல்லாம் அந்த வைரஸ் துவம்சம் செய்து கொண்டிருக்கிறது என்று வேறு பயம் காட்டினார்கள்.
அரைமனதாக சம்மதித்தேன்.கூடவே ஒரு நிபந்தனையூம் விதித்தேன்.சி டிரைவ்வை மட்டும் ஃபார்மட் செய்யூங்கள் என்று.சடுதியில் சி டிரைவ்வை துடைத்தெறிந்து விட்டு மறுபடி கணினியில் சன்னல்எக்ஸ்பியூம்,ஆபிஸ்எக்ஸ்பியூம் நிறுவினார்கள்.அப்போதைக்கு இணையத் தொடர்பு கிடைத்தது.ஆனால் என்னுடைய சொந்த வலைமனையை கணினி வழக்கம்போல கண்டுகொள்ளவில்லை.கணினிக்கு கிடா வெட்டி பொங்கல் ஏதாவது வைக்க வேண்டுமோ? நமீதா படத்தை பார்க்காதது தவறௌ என்று நினைக்க வைத்து விட்டது என்னுடைய கணினி.
மறுபடியூம் எங்கே தவறு என்று ஆற அமர யோசித்துப் பார்த்தேன்.கீழ்க்காணும் அம்சங்கள்தான் என்னிடம் உள்ளன.
1.இரண்டு கணினிகள்.ஒன்று மேசைக்கணினி.இன்னொன்று மடிக்கணினி.
2.ஒரு யூடிஸ்டார் பிஎஸ்என்எல் பிராட்பேன்ட் மோடம்
3.ஒரு கணினிக்கு யூஎஸ்பி துளை வழியாக இணைய இணைப்பு.
4.இன்னொரு கணினிக்கு ஈத்தர்நெட் அட்டை வழியாக இணைய இணைப்பு.
5.இரண்டு கணினியிலும் வைரஸ்தாக்குதலைத் தவிர்க்கும் மென்பொருள் உண்டு.
6.தினமும் தானாகவே குறிப்பிட்ட நேரத்தில் மென்பொருள் வைரஸ் இருக்கிறதா என்று கண்காணிக்க ஆரம்பித்து விடும்.
7.எந்நேரமும் தயார் நிலையில் தடையில்லா மின்வழங்கியூம் இருக்கிறது.
எல்லா ஏற்பாடுகளும் சரியாகத்தானே இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சொல்லி வைத்த மாதிரி கனவில் நமீதா வந்து,
“பயலே இன்னுமா என் படத்தை நீ பார்க்கலை.உனக்கு இமெயிலில் ப்ளோஅப் எல்லாம் அனுப்பியிருந்தேனே”என்றாள்.
“என் கணினிக்கு என்ன ஆச்சு.எனக்கொரு உண்மை தெரிஞ்சாஆகனும்”என்றதும் சொன்னாள்.
“முட்டாளே.டிசிபிஐபியை பாத்தாயா.ஐபி முகவரியை சரியாகக் கொடுத்திருக்கிறாயா என்று பாத்தாயா”என்று நமீதா காணாமல் போனபோதுதான் நடுஇரவில் விழித்துக் கொண்டு கணினியை இயக்கினேன்.

லேன் இணைப்பில் ப்ராப்பர்டீசை க்ளிக் செய்தேன்.அதில் உள்ள டிசிபிஐபியை இரட்டைக்ளிக் செய்தேன்.

அப்படி செய்தபோது அதில் தானாகவே ஐபிமுகவரிகளை ஏற்றுக்கொள்ளும்படி செய்தேன்.கணினியை மறுபடி இயங்கச் செய்தபோது எனது வலைமனையை அடையாளம் காட்டியது.இன்னொரு கணினியிலும் இணைய இணைப்பு வேலை செய்தது.அதற்கு பரிகாரமாக மறுநாள் நமீதா நடித்த பில்லா தெலுங்கு வர்ஷனையாவது டிவிடியில் பார்த்து விடுவது என்று
நினைத்துக் கொண்டிருந்தபோது என்னுடைய மவூஸ் அருகே சின்னதாக உட்கார்ந்திருந்த விதி லேசாக சிரித்தது.அன்றைக்கு சனிக்கிழமையாம்.காலையில் கணினிகள் இணையத்தொடர்பை அறுத்துக் கொண்டன.என்ன முயன்றும் கணினியில் இணையத்தொடர்பு கிடைக்கவில்லை.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை சோதனையாகவே கழிந்தது.’இந்தியத் தொலைக்காட்சியில் முதன்முதலாக’ ரகப்படத்தைக் கூட பார்க்காமல் என்னுடைய வலைமனையை இணையத்தில் உலவவிடும் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன்.உடனே பதில் அனுப்பியிருந்தார்கள்.இரண்டுநாட்களில் அவர்களது தொழில்நுட்ப ரத,கஜ,துரகபதாதிகள் பிரச்சனைய தீர்த்து விடுவதாக.ஆனால் அவர்களிடமிருந்து பதிலேதும் இல்லை.முப்பது மின்னஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பியபோதும் அத்தனை மின்னஞ்சல்களுக்கும் ஒரே மாதிரி பதிலையே அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இது வேலைக்கு ஆகாது என்று அந்த நிறுவனத்திலிருந்து என்னுடைய வலைமனையின் பெயரையூம்,வலைமனையை இணையத்தில் நிறுவூம் வேலையையூம் இன்னொரு மும்பை நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டு விட்டேன்.அந்த புதுநிறுவனத்தில் மாற்றிக்கொண்ட பிறகு சனி-ஞாயிறு பிரச்சனை அதன்பின் வரவில்லை.கணினி சுகமாக இயங்கியது.ஆனது சில நாட்கள்.நமீதா சாபமோ என்னவோ.மறுபடியூம் ஒரு சுபநாளில் கணினி இணையத்தொடர்பை லேசாக துண்டித்துக் கொண்டது.இன்னொரு கணினியில் இணையத்தொடர்பு கிடைத்தது.
கணினிப்பொறியன்களை வரச்செய்து பார்த்தேன்.அவர்கள் மறுபடியூம் மோட்டுவளையைப்பார்த்து யோசித்தபோது கண்டிஷனாகச் சொல்லி விட்டேன்.
ஹார்டுடிஸ்க்கை ஃபார்மட் செய்ய மாட்டேன் என்று.அவர்கள் வைரஸ்நீக்கி மென்பொருளை நீக்கி விடச் சொன்னார்கள்.தினமும் குக்கீஸ்களையூம் நீக்கி விடச் சொன்னார்கள்.விடாது கருப்பு என்று நினைத்துக் கொண்டு வைரஸ்நீக்கிகளை துhக்கி எறிந்தேன்.அடுத்த சனி-ஞாயிறு பார்ப்போம் என்று விடைபெற்றார்கள்.போகிறபோக்கில் ஈத்தர்நெட்டை விட யூஎஸ்பி விலுவிழந்தது.ஈத்தர்நெட்டில் 100எம்பிபிஎஸ் வேகம் கிடைத்தால்,யூஎஸ்பியில் 12எம்பிபிஎஸ் வேகம்தான் கிடைக்கும்.அதனால் யூஎஸ்பியை புறக்கணித்து விட்டு ஒரு ஸ்விட்சிங் ரூட்டரை பொருத்தி இரண்டு கணினிக்கும் ஈத்தர்நெட் இணைப்பே கொடுத்து விடுவோம் என்று ஒரு ரூட்டரை என்னிடம் விற்பதற்கு திட்டமிட்டு விட்டனர்.
சரி.அதையூம் பார்த்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வலைமனையை இணையத்தில் உலாவவிடும் புதிய நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆசாமிகள் புதிதாக ஒரு உண்மையை சொன்னார்கள்.ஒவ்வொரு இணையதளத்தின் டிஎன்எஸ் பதிவேடுகளை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை ஐஎஸ்பி என்பவர்கள் புதிதாக்கிக்கொண்டே இருப்பார்களாம்.பிராட்பேன்டிற்கான எனது ஐஎஸ்பி யார் என்றால் பிஎஸ்என்எல்காரர்கள்.அவர்கள் அரசு சார்ந்த நிறுவனமாயிற்றே.இப்போது தனிப்பட்ட நிறுவமாகி விட்டாலும் இன்னமும் தங்களை அரசுப்பணியில் இருப்பவர்கள் என்ற மமதை கொண்டவர்களாயிற்றே என்று அவர்களை அணுக தயங்கினேன்.தொலைபேசில் சிக்கலைச் சொன்னால் நான்குநாள் கழித்து என்ன ஏது என்று விசாரிப்பார்கள்.நேரி
ல் வரமாட்டார்கள்.அவர்களை தொடர்பு கொண்டு டிஎன்எஸ் பதிவேடுகள் குறித்து கேட்டால் சரிவர பதில் சொல்லாமல் ஏதேதோ சொன்னார்கள்.கடைசியில் தொலைபேசித்துறையிலுள்ள துணை தொலைபேசி அலுவலர் தொடர்பு கொண்டு பிரச்சனையை தீர்த்து வைத்தார்.
இதற்கிடையே பிங்க் என்றொரு கட்டளை கொண்டு கணினியில் முகவரிகள் தெரிகிறதா என்று பார்க்கச்சொன்னார்.இதற்கு கமான்ட் பிராம்ட் வழியாக டாஸ் பகுதிக்குள் செல்ல வேண்டும்.(என்னதான் விண்டோஸ்7ம் பதிப்பு வந்தாலும் டாஸ் இல்லாமல் நாம் இல்லை!)அங்கே பின்வரும் கட்டளையை அடிக்க வேண்டும்.
c:\ping “நம் வலைமனையின் பெயர்” அப்படிக் கொடுத்து திரையில் என்ன வருகிறதென்று பார்க்க வேண்டும்.
முதலில் இந்த கட்டளை வேலை செய்யவில்லை என்று வந்தது.அதன்பிறகு
c:\config “நம் வலைமனையின் பெயர்” என்று கொடுத்துப் பார்க்க வேண்டும்.இதற்கு கட்டளை timed out என்று வந்தது.

இப்போது ஒரு கணினியில் ஒரு மாதிரியாகவூம் இன்னொரு கணினியில் இன்னொரு மாதிரியாகவூம் ஐபிமுகவரிகளைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார் அவர்.அதன்படி மாற்றிப் பார்த்து விட்டு பிங்க் கட்டளை கொடுத்தோம்.

அதன்பின் கான்ஃபிக் கட்டளைக் கொடுத்துப் பார்த்தோம்.அது பின்வருமாறு வந்தது.
ஐபி முகவரிகளை பின்வருமாறு மாற்றியிருந்தோம்.

இது ஒரு கணினிக்கான முகவரி.இன்னொரு கணினிக்கான முகவரியில் கடைசி இலக்கத்தை மாற்றியிருந்தோம்.

சற்று சரியாக கவனித்துப் பாருங்கள்.நான்கு மாதத்திற்கும் மேலான மனஉளைச்சல்.வாரஇறுதியில் தொடர்ந்து வந்த பிரச்சனைகள் ஒரு கடைசி இலக்க எண்ணை மாற்றியதும் தீர்ந்து போனது.ஆனால் தீராத சந்தேகம் எது தெரியூதா.பொருந்தாத ஐபி முகவரி எண்ணைப் பயன்படுத்தியிருந்தால் அதெப்படி வாரநாட்களில் மட்டும் அது வேலை செய்கிறது.ஏன் வாரஇறுதியில் மட்டும் முரண்டு பிடிக்கிறது.ஏன் குறிப்பிட்ட வலைமனைகளை மட்டும் காணவில்லை என்று தெரிவிக்கிறது என்ற குழப்பத்துடனே உறங்கச் சென்றதுமே இன்றைக்கு கனவில் மறுபடி நமீதா.
“இன்னுமா படவா என் புதிய படத்தைப் பார்க்கவில்லை.உன்னுடைய ப்ளாக்கை ஒரு பெண் கூட படிக்க மாட்டாள் என்று சபிக்கட்டுமா.ஒருவிஷயம். உன் கணினியில் ஆஸ்க் இருக்கிறதா(ask.com) இருந்தால் அதை பதிவூநீக்கி விடு.தன்னிடம் விளம்பரம் கொடுக்காத வலைமனைகளை அது காட்டவே காட்டாது.அந்த வலைமனைகள் இல்லவே இல்லை என்று சத்தியம் செய்யூம்”என்று சொல்லி விட்டு காணாமல் போனாள்.
என் ஒரு கணினியில் ஆஸ்க் இருந்தது.
———————-

mail:writersuryakumaran@gmail.com
blog:http://writersuryakumaran.blogspot.com

Series Navigation

சூர்யகுமாரன்

சூர்யகுமாரன்