நட்புடன் நண்பனுக்கு

This entry is part [part not set] of 35 in the series 20090926_Issue

சக்தி சக்திதாசன்


உள்ளத்தின் ஒளியில்

உண்டான வெளிச்சத்தில்

உருவங்களின் ஆட்டம் – அதிலே

உன்னுடைய தோற்றம்

எத்தனை நாட்கள் நண்பா

எண்ணத்தின் பூக்கள்

எங்கள் மனங்களில்

எப்படி எல்லாம் விரிந்தன ?

முத்தென நினைவுகளை

பொத்தியே வைத்தேன் மனச்சிப்பியினுள்

முத்தியே வெடித்தன இன்று

சுத்தியே வந்தன ஞாபகங்கள்

அன்புக் கம்பள விரிப்பில்

அன்று நாம் நடந்த வனப்பு

இன்று நினைக்கையில் கனவடா

இன்ப அலைகளின் துடிப்படா

இளமையெனும் ஊஞ்சலில்

கபடமில்லாமல் நாமாடிய வேளைகள்

இனியரு பொழுது வாராதா

இதயத்தின் ஏக்கங்கள் தீராதா ?

நினைவு என்னும் மை கொண்டு

நாமெழுதிய நட்பெனும் புத்தகம்

கனவென்னும் நூலகத்தில் இன்று

காலமாகிப் போனதுவோ நண்பா !

வானத்தில் வலம் வரும் வெண்ணிலவு

வீ£சும் காற்றோடு கலந்த நம் நினைவுகளை

பூசிக் கொண்டு சென்று கோவில் வீதியில்

பொன்னொளியாய் தெளித்திடுமா?

குருமணலில் நாம் பதித்த சுவடுகள்

குருதி சொரிந்த நம் மண்ணில்

செந்நிறப் பதிவுகளாய் பதிந்து

செப்பிடுமோ நமது நட்பின் ஆழத்தை

எதோ என்னை அறியாமல்

என் நண்பன் உன் நினைவுகள்

என்னுள்ளத்தில் குதித்துக் கும்மாளமிட

ஏட்டில் வடித்து விட்டேன் கவிதையாக

அன்புடன்

சக்தி

Series Navigation

சக்தி சக்திதாசன்

சக்தி சக்திதாசன்