தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

மதுமிதா


புதிதாய் திருமணம் செய்துகொண்ட ஒரு விவசாயி, தனது மனைவியை ஒரு நகரத்துக்கு அழைத்துச் சென்றான். நாட்டுப்புறத்தானாகவே அவன் காலம் கழித்தவனாதலால், பெருநகரத்தில் காணும் அனைத்திலுமே அவன் கண்ட அந்த வேகமும், பரபரப்பும் அவனுக்கு மிகுந்த உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.
ஒரு இடத்தில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. விவசாயியும், அவனுடைய மனைவியும் அங்கே நின்று பார்த்தனர். ஒரு குரங்காட்டி வித்தை காட்டிக்கொண்டிருந்தான்.
குரங்கு சிவப்பு உடையும், சிவப்பு தொப்பியும் அணிந்திருந்தது. குரங்காட்டியின் கட்டளையை சிரமேற்கொண்டு அப்படியே வித்தை செய்தது. கூட்டத்தினர் குரங்கின் வித்தையைப் பாராட்டி, கரகோஷம் செய்தனர். குரங்கு பணத்தைப் பொறுக்கிக் கொள்ளட்டுமென்று தரையில் காசை வீசினர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த விவசாயி, வாழ்வதற்கான மிகச் சரியான வழி இதுதான் என்று நினைத்தான். விவசாய வேலைபோன்று இது மிகச் சிரமமான வேலையாகவும் இல்லை; வேடிக்கை விளையாட்டாக இருந்தாலும், உடனடியாய் பணம் கிடைப்பதும் தெரிந்ததால் இதுவே சிறந்த வேலையென நினைத்தான்.
வித்தை முடிந்து கூட்டம் கலைந்ததும், விவசாயி குரங்காட்டியிடம் சென்று பேச ஆரம்பித்தான். “அருமையான நிகழ்ச்சி! நிகழ்ச்சிக்கேற்ற வருமானம் கூட!” என விவசாயி கூறினான். குரங்காட்டி,” நன்றி. இதென்ன பெரிய விஷயம். ஆனால் இதில் கிடைப்பது எனக்கு போதும்” என்றான்.
“எனக்கு உன்னைப் பார்த்து பொறாமையாய் இருக்கிறது. நல்ல குரங்கை வேறு வைத்திருக்கிறாய். நீ செய்வதுபோல் தொழில் செய்ய எனக்கு விருப்பமாயிருக்கிறது. சொல். உன் குரங்கை எனக்கு விற்று விடுகிறாயா? நான் உனக்கு பணம் தருகிறேன். நீ வேறு ஏதேனும் தொழில் செய்துகொள்.” என்றான் விவசாயி.
குரங்காட்டிக்கு ஆச்சர்யமாகிவிட்டது. ஆனால்,”வேண்டாம். எனக்கு பணம் தேவையில்லை. குரங்கு விற்பனைக்கானதல்ல. எங்கு நான் போனாலும் குரங்கு என்னுடனேயே இருக்கும். ஒரே மாதிரி சாப்பிடுகிறோம்; தூங்குகிறோம்; வித்தை செய்கிறோம். குரங்கு எனக்குத் துணை. சொன்னதைக் கேட்கும் மனைவியைப் போன்று என்னுடன் இருக்கிறது. அதனால், குரங்கை நான் விற்கமாட்டேன்.” என பதிலளித்தான்.
விவசாயி விடவில்லை,” நண்பனே! நான் உண்மையிலேயே உனது குரங்கை எனதாக வாங்கிக்கொள்ள விரும்புகிறேன். உனக்கு குரங்கு மனைவியைப் போன்றதென்றால், என் மனைவியை பண்டமாற்றாக மாற்றிக் கொள்ளலாம். என்ன சொல்கிறாய்?”
இப்போது குரங்காட்டி விழிகளை அகலத்திறந்து வியப்பின் உச்சிக்குப் போனான்.”பண்டமாற்றா? குரங்குக்கு பதிலாய் உன் மனைவியா? எங்கே இருக்கிறாள் உன் மனைவி?”
விவசாயி மரத்தின் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியைக் காட்டினான்.
குரங்காட்டி அவளைப் பார்த்தான். ‘அழகாய் இருக்கிறாள். ஒரு அருமையான பெண்ணை பொக்கிஷமாய் பாதுகாக்கத்தெரியாத மூடன் போலிருக்கிறது இவன். அவளை நான் பெற்றுக்கொண்டு இந்தக் குரங்கைக் கொடுத்து விடுகிறேன்’ என நினைத்தான்.
எல்லாவற்றையும் கேட்ட மனைவி, தன்னை ஒரு குரங்குடன் மதிப்பிட்ட கணவன் மேல் கோபம் கொண்டாள். பிறகு இது அவனுக்கு ஒரு தண்டனையாகட்டும் என நினைத்தாள். மேலும் வித்தை செய்பவனுடன் உலகம் முழுதும் சுற்றுவது வேடிக்கையாய் இருக்கும் என நினைத்தாள்.
அதனால், “சரி. நான் இதற்கு ஒத்துக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டாள்.
வித்தைக்காரன் தனது குரங்கையும், பொருட்களையும் விவசாயியிடம் கொடுத்து விட்டு, கை நிறைந்த பணத்துடனும், அவனின் மனைவியுடனும் சென்றான்.
ஒரு தேர்ந்த குரங்காட்டிபோல் நிகழ்ச்சி நடத்த விரும்பினான் விவசாயி. பக்கத்து ஊருக்குச் சென்று மேடையமைத்து பொருட்களை வைத்தான். ஆனால் குரங்கு தனது புது யஜமானனின் பேச்சை செவி கொடுத்தும் கேட்பதாயில்லை. அவனைப் பார்த்து குழப்பமடைந்து தனது கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு குரங்கு அருகிலிருந்த மரத்தின் மேல் ஏறிக்கொண்டது.
விவசாயியும், பக்கத்திலிருந்தவர்களும் குரங்கைப் பிடிக்கச் சென்றனர். குரங்கு எங்கோ ஓடி மறைந்துவிட்டது. விவசாயிக்கு தான் அனைத்தையும் இழந்து விட்டோம் என்பது புரிந்தது. கீழே அமர்ந்து பெருமூச்சுவிட்டான்,”அய்யோ! இப்போது எனக்கு மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.”

madhuramitha@gmail.com

அன்புடன்

Series Navigation

மதுமிதா

மதுமிதா