தேடாமல் வந்தது.

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

குமரி எஸ். நீலகண்டன்


இருண்ட பையிலிருந்து
எழுந்து வந்ததும்
எதுவும் இல்லாமல்
இருட்டைத் தேடி
ஒளியை அறிந்து
முகங்களை அறிந்து
சிரிப்பினை அறிந்து
ஓசைகளை அறிந்து
அவற்றையெல்லாம் தேடி
தவழ்ந்து தடுமாறி
கைவண்டியின் கைப்பிடியைத்
தேடிப் பிடித்து
நின்று.. நிமிர்ந்து
அம்மாவின் கைகளைத் தேடி
தவழ்ந்து முத்தங்கள் பொழிந்து
பொம்மைகள் தேடி
பொழுதுகள் தேடி
பள்ளி பருவமும் வந்தது
புத்தகங்கள்.. பேனா…
பென்சில்.. நண்பர்கள்..
கிரிக்கெட் மட்டை
கில்லி கம்பு எனத்
தேடித் தேடி
வெளியூர் பயணத்தில்
அவ்வப்போது
அப்பா.. அம்மாவையும் தேடி
அறிவின் தேடலில்
யாஹூ… கூகிளென
அகலத் தேடி
மண் தேடி
பெண் தேடி மணந்த பின்
மக்களைப் பெற்று
கோவில் விழாவில்
குழந்தையைத் தேடி
பள்ளி தேடி
படிக்க வைத்து
குடும்பம்.. குதூகலம்..
பணம்… அலுவலகமென
அனைத்திற்குமாய் தேடி
முதுமை வந்தபோது
இளமையைத் தேடி
குனிந்த முதுகிற்கு
கூடவே துணையாய்
கைக் கம்பு தேடி
புத்தகங்கள்.. மருந்துகள்
எங்கோ தவறவிட்ட
கண்ணாடியின்றியே
கண்ணாடியைத் தேடி….
இப்படி இன்னும் சில
தேடி…தேடி…
அன்பிற்காய் கண்களை
அகல விரித்துத்
தேடிய போது
தேடாமல் வந்தது
மரணம்…..
punarthan@yahoo.com

Series Navigation

குமரி எஸ்.நீலகண்டன்..

குமரி எஸ்.நீலகண்டன்..