தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

சின்னக்கருப்பன்


தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்
சின்னக்கருப்பன்

லீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது முனைந்து நின்று உதவியதை ஜெயமோகன் நெகிழ்ச்சியுடன் சொன்னார். ஜெயமோகன் தனது நண்பர் மீது மிகவும் பிரியம் கொண்டவர். அந்த அன்பு இப்போது அவரது நண்பருக்கு உதவிய லீனா மணிமேகலை மீது இருக்கிறது.

அந்த விஷயம் தாண்டி எனக்கு லீனாவின் படைப்புக்களின் எதிர் திசையில் இருக்கிறேன். அவரது குறும்படங்கள், கவிதைகள் எல்லாமே எனக்கு உவப்பானவை அல்ல. ஆனால், அவருக்கான படைப்பு உரிமை உண்டு என்பதை நான் கேள்விக்குறிய ஒன்றாகக்கூட கருதியவனல்ல.

சமீபத்தில் அவரது கவிதையை படித்து வெறுப்புற்ற இந்து மக்கள் கட்சியினர் போலீஸில் புகார் கொடுத்துவிட்டு போய்விட்டார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதாக அந்தோணி சாமி மார்க்ஸ், ரா.குறை ஆகியோர் இந்து மக்கள் கட்சியை எதிர்த்து கூட்டம் போட்டார்கள். அல்லது இந்து மக்கள் கட்சியை எதிர்த்து கூட்டம் போட்டதாக சொல்லிகொண்டார்கள். உள்ளே ஒரு தீவிர இடதுசாரி கும்பலொன்று நுழைந்து எங்களது மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் இன்னபிற தீர்க்கதரிசிகளை எப்படி நீ கிண்டல் செய்யலாம் என்று போல்போட் தாண்டவம் ஆடினார்கள்.

கம்யூனிஸ தீர்க்கதரிசிகளோடு இணைத்து பெண்ணின் உடலுறுப்புகளும் உடலுறவு வார்த்தைகளும் இருந்தன என்பதே இந்த தீவிர இடதுசாரி கும்பலின் எதிர்ப்புக்கு காரணம். ஒருவேளை இயேசு போல புத்தர் போல இந்த தீர்க்கதரிசிகளும் உடலுறவு இல்லாமல் பிறந்திருப்பார்களோ என்னவோ? தற்போது வடகொரியாவின் கிம் இல் சுங்குக்கு பின்னால் எழுப்பப்படும் ஒளிவட்டம் போல, இவர்கள் ஆட்சி வரும்போது இந்த தீர்க்கதரிசிகளும் உடலுறவு இல்லாமல் “புனிதமாக” பிறந்தனர் என்று எழுதப்படலாம். யார் அறிவார்?

இந்த கம்யூனிஸ தீர்க்கதரிசிகளை கிண்டல் செய்ததற்கு லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திர கூட்டத்தில் புகுந்து நடத்திய அராஜகத்தை நியாயப்படுத்த அவதூறான கேள்விகளை அங்கும், பிறகு இணையத்திலும் எழுப்பினார்கள். ஸ்டாலின் ஒரு 13 வயது சிறுமியோடு பாலுறவு கொண்டாரே, அதன் பின்னர் அந்த சிறுமியின் தாயோரோடும் உடலுறவு கொண்டாரே, அதனை பற்றி அதே போன்ற கேள்விகளை எழுப்புவார்களா என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

சில மாதங்களுக்கு முன்னால் நித்யானந்தா பற்றிய கட்டுரையில் ஜக்கரியாவை தாக்கிய சிபிஎம் கம்யூனிஸ்டு குண்டர்களை பற்றி எழுதியிருந்தேன். சிபிஎம் கம்யூனிஸ்டு தலைவர் பினாரயி விஜயன் அந்த தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார். சிபிஎம் குண்டர்கள் செய்த கலாச்சார போலீஸ்தனத்துக்கு கொஞ்சமும் குறைந்ததல்ல இந்த தமிழ்நாட்டு கம்யூனிஸ்டு குண்டர்கள் செய்த அட்டூழியம். (இவர்கள்தான் ஒரிஜினல் கம்யூனிஸ்டுகளாம், அவர்கள் போலி கம்யூனிஸ்டுகளாம். உங்களுக்கு ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா?)

இந்த குறிப்பிட்ட தமிழ்நாட்டு கம்யூனிஸ்டு குண்டர்கள் செய்யும் முதலாவது சென்சார் இது அல்ல. இதற்கு முன்பு தினமணியில் ஸ்டாலின் பற்றிய கட்டுரை வந்தது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பின்பு, மதன் எழுதிய குறிப்புக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பின்பு சங்கரராம சுப்ரமணியனின் கவிதைக்காக அவரை கட்சி அலுவலகத்துக்கு இழுத்துச் சென்று மன்னிப்பு கடிதம் எழுதித்தரச் சொன்னார்கள். இப்போது லீனா மணிமேகலை. இது கடைசியாகவும் இருக்கப்போவதில்லை. இந்த கமிசார்களின் அனுமதி பெற்றுத்தான் இனி கவிதையோ கட்டுரையோ எழுதப்படபோகுமென்றால், தமிழ்நாட்டை நினைத்து வருந்தாமல் என்ன செய்வது?

ஒன்று செய்யலாம். கம்யூனிச கொள்கையை விரும்புகிறார்களோ இல்லையோ, இந்த கலாச்சார போலீஸ்தனத்துக்கு எதிர்ப்பு காட்ட வேண்டியாவது ஆளுக்கொரு கம்யூனிஸ தீர்க்கதரிசிகளை கிண்டல் செய்து கவிதை எழுதலாம் என்று ஒரு நண்பர் எனக்கு எழுதினார். ஒருவர் எழுதினால் கட்சி ஆபீசுக்கு கூட்டிச்சென்று மன்னிப்பு கடிதம் எழுதித்தரச் சொல்வார்கள். எல்லோரும் செய்தால் என்ன செய்வார்கள்?

இந்த கட்டுரை இறுதியில் என்னுடைய பங்குக்கு ஒரு கவிதை.

அப்படியெல்லாம் தமிழ்நாட்டு கவிஞர்களிடம் தன்மானத்தையும், நிமிர்ந்து நிற்கும் போக்கையும் எதிர்பார்க்கமுடியாது என்று நண்பர் எனக்கு எழுதியிருந்தார். நானும் எதிர்பார்க்கவில்லை.

ஏதோ லீனா எழுதியிருக்கிறாரே.. சல்யூட்.

கவிதைகளை விட மோசமானவை, கவிதைகளை விளக்க அந்த கவிதையை எழுதிய கவிஞர்களாலேயே எழுதப்படும் உரைகள் என்று நான் நினைக்கிறேன். கவிஞர் பெருந்தேவியின் பதிவில் லீனா மணிமேகலையின் கவிதை விளக்க உரை இருக்கிறது. வாசகர்கள் படிக்கலாம்.

இன்னபிற

சில கவிதைகளை அப்படியே விட்டுவிட்டு, புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுதல் நலம். அதனை விட்டுவிட்டு, விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று ஒன்றும் புரியாமல் யாரோ எடுத்த வாந்திகளை மீண்டும் வாந்தி எடுத்து அவரவர்களை அசிங்கப்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று தோன்றுகிறது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்ட பெருந்தேவி, ஜமாலன், வினவு, அ. மார்க்ஸ், ராஜன் குறை, இன்னும் பல கவிஞர்கள் எல்லோருமே மார்க்ஸியர்கள் அல்லது அரைகுறை மார்க்ஸியர்கள் என்பது ஒரு பக்கம். இதில் பெருந்தேவி, ஜமாலன் போன்றவர்கள் எழுதியிருந்தது அது கவிதை அல்ல என்று. காரணம் அதில் பொருள் குற்றம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அம்மணிகளே… கவிதையை அனுபவிக்கணும்.. ஆராயக்கூடாது. அது ஒரு உணர்வின் வெளிப்பாடு. அது அறிவின் வெளிப்பாடு அல்ல. அதில் வரலாறு, புவியியல், இயற்பியல், பொருளாதார உறவுகள் எல்லாம் தேடக்கூடாது. அப்படி தேடினால், நாட்டில் ஒரு கவிதையை கவிதை என்று சொல்லமுடியாது. எனக்கென்னவோ, எப்படி எங்கள் பிதாமகர்களை நீ கிண்டல் செய்யலாம் என்ற கோபத்தை அடக்கிக்கொண்டு, இது கவிதை அல்ல என்று சொல்ல முனைகிறது. கவிதை பாலுறவின் முன்னர் மார்க்ஸியவாதியும் பித்தனாகத்தான் இருக்கிறான் என்று சொல்ல முனைகிறது. அப்போது அவனது அறிவும், மார்க்ஸிய வார்த்தைகளும் வெற்று வார்த்தைகளாக விளையாட்டு பொருட்களாக ஆகிவிடுகின்றன என்று சொல்கிறார் எனப்புரிந்துகொள்கிறேன். ஆனால், பெருந்தேவி-ஜமாலனோ, மார்க்ஸியர்கள் பெண்ணுடனான பாலுறவுக்காக அலைபவர்கள் என்று கவிதை சித்தரிக்கிறது என்று புரிந்துகொள்கிறார்கள்.

அந்த கவிதை கம்யூனிஸ்டு தலைவர்களையும் கொள்கையையும் விமர்சிக்கிறது என்று மட்டுமே பார்க்காமல், எல்லா கொள்கைகளின் பொருளற்ற தன்மையை, உடலுக்கு முன்னால், மரபணுவின் எதேச்சதிகாரத்தின் முன்னால், உழைப்பாளர்களது சர்வாதிகாரம் போன்றவை வெறும் வார்த்தைகளாகவே பொருளற்று வீழ்கின்றன. இதுவேதான் நித்யானந்தாவுக்கும் நடக்கிறது. அவரது தத்துவம், பிரம்மச்சரியம், வேதாந்தம் போன்றவைகள் உடலுக்கு முன்னால் கலைந்து தூக்கி எறியப்படுகின்றன.

மார்க்ஸியத்தை விட இன்னும் அறிவியல்பூர்வமானது பெண்ணியம். பெண்ணியம் என்று பெயர் போட்டு ஏதாவது ஒரு பெண் எழுத்தாளர் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிவிட்டால், பெண்ணியம் முன்னகர்ந்துவிட்டது என்று சொல்லிவிடுவார்கள்.

ஒரே உழைப்புக்கு ஆணுக்கு நிகராக சம்பளம், குடும்பத்தின் பொறுப்புக்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முடிந்த வரை சம பங்கு, சமூக பொறுப்புகளிலும் தொழில்களிலும் ஆணுக்கு நிகராக வாய்ப்பு என்பதுதான் பெண்ணியம் என்று நினைத்திருந்தேன். இப்போதெல்லாம் அப்படி இல்லை போலிருக்கிறது. பூகோ என்கிறார்கள். அப்புறம் என்னனென்னவோ சொல்லி பெண்ணியம் பேசுகிறார்கள். (ஆனால் பாருங்கள், இப்படி பெண்ணியம் பேசுபவர்களில் யாருமே இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண்களின் நிலைமையைப் பற்றி மூச்சுவிடமாட்டார்கள். ஏன் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றியும் ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்னிடம் விலாவாரியாக பேசினார். அது ஒரு மாதிரி பெண்ணியம்!! நமக்கெல்லாம் புரியாது)

இந்த கவிதை விளக்க உரையில் லீனா மணிமேகலை ”கற்பழிக்க” என்ற நவீன சொல்லாடலை எடுத்துக்கொண்டு நேராக தேவார காலத்தில் புகுந்து “கல்வி அழிக்க” என்றதிலிருந்து பாலுறவு பலாத்காரத்தை கண்டறிந்து கே ஏஜி தோழர் எடுத்துக்கொடுக்க அதனையும் இங்கே “விளக்கி” விட்டார். எதற்கு என்றுதான் தெரியவில்லை.

கூடவே தமிழர்களுக்கு ஒழுக்க நிலைபாடுகளே இல்லை(!) என்றும் இன்னொரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆதாரம் கோவில் சிற்பங்கள்!

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி!

**

தருண் விஜய் ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார். இன்னொரு சிறுமி எரிக்கப்பட்டாள் என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இந்த கட்டுரையை படித்து அதிர்ந்தேன். காரணம். அந்த செய்தியில் அவர் குறிப்பிடும் இருட்டடிப்பு.
A girl is burnt again

**
இன்னும் திருச்சியில் உயிருடன் இருக்கும் தீண்டாமைச் சுவரை இடிக்க பெரியார் திராவிட கழகம் முயல்கிறது. அதற்கான என்னுடைய மனமார்ந்த ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகஸ்ட் 15 இல் இழுத்துப் பூட்டப்படும்! திருச்சி தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம்!!

**

பெண்ணுரிமை பேசும் கம்யூனிஸ்டு

தோழர்!
மார்க்ஸ்
எங்கல்ஸ்
லெனின்
ஸ்டாலின்
மாவோ
போல்போட்
ஹூ ஜிந்தாவ்
பிடல் காஸ்ட்ரோ எல்லாம் சொல்லியிருக்காங்க
புரட்சி வந்தாத்தான் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கும் யாரடா அது கௌரி
துரத்து அவள வெளியே..

Series Navigation