‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

அரவிந்தன் நீலகண்டன்


தன்னை ‘தேசிய நாளிதழாக ‘ தானே அழைத்துக்கொள்ளும் சீன அடிவருடி மார்க்சிய பிரச்சார நாளிதழ் ‘தி ஹிண்டு ‘ மீண்டும் தன் ஐரோப்பிய விசுவாசத்தை நிரூபித்திருக்கிறது. (மார்க்சிஸ்ட்கள் ஐரோப்பிய மேன்மையை புகழ -குறிப்பாக பாரதத்தை இழிவுபடுத்தி வெள்ளைத்தோலை புகழ -ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தாலும் விடமாட்டார்கள். இந்த மார்கஸிஸ்ட்கள் அனைவருமே ஆரிய இனவாதத்தை ஏற்றுக்கொள்ளும் மேல்சாதியினர். ஒருவேளை அவர்களும் தங்களை வெள்ளையர்களின் ஒன்றுவிட்ட தாய்மாமன் கிளை என்று நினைக்கிறார்களோ என்னவோ!) அண்மையில் கத்தோலிக்க துறவி தெரசாவுக்கு வத்திக்கானால் அளிக்கப்பட்ட முக்திபேறு பட்டத்தில் இந்திய அரசின் முக்கிய தலைவர்கள் பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லையாம். ‘தி ஹிண்டு ‘வுக்கு தாங்க முடியவில்லை. ரோமில் இரண்டு யாத்திரீகர்கள் இதைப்பற்றி அங்காலாய்த்ததை செய்தியில் ஒரு பகுதியாக போட்டு புண்ணியம் தேடிக்கொண்டது ‘தி ஹிண்டு ‘. மாதா அமிர்தானந்தமயி நடத்திய அகில பாரத தொழில்முனைவோர் இணைந்து எவ்வாறு பாரதத்தை 2020 இல் வளர்ச்சியுற்ற நாடாக்கலாம் (மேற்கின் ஆயுத வியாபாரிகளும் சர்வாதிகாரிகளும் போடும் பிச்சையை திறமையாக வாங்க எப்படி நம் நாட்டின் வறுமையை விளம்பரப்படுத்தலாம் என்றல்ல) என்பது குறித்த மாநாட்டில் பாரத குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் உரையாற்றுகிறார். ‘தி ஹிண்டு ‘வுக்கு தன் முதல் பக்க செய்தியாக அது தோன்றவில்லை மாறாக சல்மான்கான் என்கிற நடிகரது வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறதாம் எனவே சல்மான்கான் பலவண்ண புகைப்படம் ப்ளோஅப் அளவில் முதல் பக்கத்தில். (என்ன இருந்தாலும் அமிர்தானந்தமயி மீனவ குலத்தில் பிறந்தவரல்லவா, அவர் என்ன தெரசா போல வெள்ளை சாதியா ? ‘அவாள் ‘ பத்திரிகையில் மாதா அமிர்தானந்தமயியின் படம் முதல் பக்கத்தில் வந்தால் தீட்டோ என்னவோ!) இந்த ‘தி ஹிண்டு ‘தான் ஒப்பாரி வைக்கிறது தெரசாவுக்கு முக்தி பேறு அளிக்கும் விழாவுக்கு பிரான்ஸ் நாட்டு அதிபரே வந்திருக்கும் போது ஏன் இந்திய பிரதமரோ குடியரசு தலைவரோ போகவில்லை என்று. பிரான்ஸ் ரோமன் கத்தோலிக்க நாடு. நடப்பது முழுக்க முழுக்க ஒரு ரோமன் கத்தோலிக்க மதச்சடங்கு. இந்தியா மதச்சார்பற்ற நாடு. அதுவும் ஏற்கனவே போப் ஜான்பாலுக்கு இந்த அரசு சிவப்புக்கம்பளமும் விரித்து அரசு மரியாதையும் அளித்த போது அவர் ‘ஆசிய ஆன்மாக்களை அறுவடை செய்ய ‘ அறைகூவல் விடுத்து இந்திய அரசின் மூக்கை உடைத்ததை வாஜ்பாய் கூட மறந்திருக்க முடியாது.

குறிப்பாக வட்டிக்கானை பொறுத்தவரையும் சரி, பொதுவாகவே மேற்கை பொறுத்தவரையும் சரி தெரசாவை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. உலக வரலாற்றிலேயே குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் மிகப்பெரிய அகில உலக ஸ்தாபனமாக கத்தோலிக்க திருச்சபை அறியப்படும் நேரத்தில் தெரசாவின் முக்திபேறு விழா ஒரு நல்ல பிரச்சார வரம். மேற்கிற்கோ திறமையற்ற இந்திய அரசு, மனிதாபிமானமற்ற கிழக்கத்திய சமுதாயம் தன் ஏழைகளை தூக்கி எறிய, வெள்ளைத்தோல் கிறிஸ்தவ பெண்துறவி அந்த ஏழைகளை அரவணைக்கும் காட்சியைப் போல ‘வெள்ளை மனிதனின் உலகச்சுமை ‘ கருத்தாக்கத்தை மீள்-நிலைநிறுத்துவது வேறெதுவும் இல்லை. அது சரி. ஆனால் பாரதியர்களுக்கு ‘தி ஹிண்டு ‘ எதிர்ப்பார்ப்பது போல இதில் குதூகலிக்க என்ன இருக்கிறது ?

கொச்சியில் உள்ள அமிருதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் அல்லது நாடு முழுவதும் உள்ள ஹெட்கேவார் இரத்த வங்கி அல்லது அரவிந்த் கண் மருத்துவமனை அல்லது டாக்டர் சுதர்ஷனின் விவேகானந்த கிரிஜன சேவை மையம் என ஏதாவது ஒரு ஹிந்து மருத்துவ சேவை அமைப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதற்கு உலகிலிருந்து பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் மருத்துவ சேவைக்கான நன்கொடையாக வருகிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த தொகையில் எதுவும் இந்திய வங்கியில் வைக்கப்படாமல் வெளிநாட்டு வங்கிகளிலேயே வைக்கப்படும். அதற்கு எவ்வித கணக்கு தணிக்கையும் கிடையாது. இந்நிலையில் அந்த ஹிந்து சேவை அமைப்பின் நிறுவனருக்கு உடல் நிலை குன்றுகிறது. இந்த சேவை நிறுவனத்தின் புகழால் கவரப்பட்டு உலகப்புகழ் பெற்ற மருத்துவர் அவருக்கு பணி புரிய இந்தியா வருகிறார். அங்கே இந்த அமைப்பின் பிரதான சேவைமையத்தை காண்கிறார். அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லை என அவர் காண்கிறார். உலகின் மிக செல்வாக்குடைய மருத்துவ பத்திரிகையில் இதனை அவர் அறிவிக்கிறார். அப்போது இந்தியாவில் எத்தகைய புயல் கிளம்பும் என நினைக்கிறீர்கள்! ஏறத்தாழ அனைத்து பத்திரிகைகளிலும் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் இதுவே தலைப்பு செய்தியாக இருக்கும். கார்ட்டூன்கள், ஜோக்குகள் என மக்களின் மனதிலேயே அந்நிறுவனத்தின் மருத்துவசேவை என்பது மோசடியென பதிந்துவிடும்.

அந்நிறுவனத்தின் பெயரில் நியூயார்க் வங்கியில் இருக்கும் தொகை மட்டும் ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகப்புகழ் பெற்ற மருத்துவர் – டாக்டர் ராபின் பாக்ஸ். பத்திரிகை உலகப்புகழ் பெற்ற மருத்துவ இதழான ‘தி லான்ஸெட் ‘. நிறுவனம் தெரசாவின் ‘மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி ‘ வருடம் 1994. இதோ டாக்டர் பாக்ஸின் 17.செப்டம்பர் 1994 தேதியிட்ட அறிக்கையிலிருந்து,

‘ மருத்துவர்கள் எப்போதாவது வந்து போனவாறு உள்ளனர். ஆனால் அங்கேயே இருப்பவர்கள் மிஷினரியின் ஊழியர்கள்தான். (இவர்களில் சிலரே மருத்துவ பயிற்சி உடையவர்கள்) ஒரு சிறுவன் வெகு அதிக காய்ச்சலுடன் மிகமோசமான நிலையில் கொண்டு வரப்பட்டான். அவனுக்கு அளிக்கப்பட்ட மாத்திரைகள் டெட்ராசைக்ளினும் பராசெட்டமாலும். இறுதியில் ஒரு மருத்துவர் வந்து மலேரியாவாக இருக்கலாம் என்று க்ளோரோகியூனை அளிக்கிறார்.குறைந்த பட்சம் இரத்த பரிசோதனையாவது செய்து குணப்படுத்த முடிந்த நோயா இல்லையா என்பதையாவது கண்டுபிடிக்கலாமில்லையா. ஆனால் நோய் பரிசோதனைகள் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. சகோதரிகளுக்காவது எளிமையான மருத்துவ பயிற்சிகள் அளிக்கலாமில்லையா. அதற்கும் அனுமதியில்லை. அன்னையினை பொறுத்தவரையில் இவை அவரது நம்பிக்கையின் விதிகளுக்கு விரோதமானது. மருத்துவ திட்டமிட்ட அணுகுமுறையை காட்டிலும் இறைநம்பிக்கையே அவரது பற்றுக்கோல். இல்லாவிடில் பொருள்முதல்வாதப் போக்கிற்கு அது வழிவகுத்துவிட கூடும்….இங்கு ஊழியம் புரியும் அருட் சகோதரிகளின் ஆன்மிக குணமாக்கும் திறனைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் எளிமையான ஆனால்ஜெஸிக்கள் கூட இல்லை. சரியான நோயறிதல் முறைகள் இல்லை. அன்னையின் நிறுவன வழிமுறைகள் முறையான ஹாஸ்பைஸ் வழிமுறைகள் அல்ல. எனக்கு நோய் வந்தால் நான் எதை விரும்புவேன் என்பதில் குழப்பமில்லை. ‘

பல மிஷினரி ஆஃப் சாரிட்டி ஊழியர்கள் இதே குறையினை கூறுகின்றனர். வரும் நன்கொடைகள் வங்கிகளில் முடக்கப்படுகின்றனவே தவிர நோயாளிகளின் உடல்உபாதையை குறைக்க பயன்படுத்தப்படுவதில்லை. ஏன் ? தெரசா துன்பப்படுவதை இறை வாய்ப்பாக கருதுகிறார். தெரசாவே ஒரு தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் கூறுகிறார், ‘அந்த கேன்ஸர் நோயாளி வலியால் துடித்தார். நான் கூறினேன், ‘நீ இயேசு போலவே துன்பப்படுகிறாய். இயேசு உன்னை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார். ‘ அதற்கு அந்த நோயாளி சொன்னார், ‘ நான் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன். இதுதான் இயேசுவின் முத்தமென்றால் சீக்கிரமே அவர் எனக்கு முத்தமளிப்பதை நிறுத்திக்கொள்ளலாம். ‘. தெரசாவிற்கு அவர் நோயாளிகளிடன் காட்டும் கருணை என்பது அவர்கள் நோயை துடைப்பதல்ல மாறாக ஒரு விபரீத மத நம்பிக்கை. இந்த விபரீத நம்பிக்கையின் விளைவுகள் பயங்கரமானவை.டாக்டர் பாக்ஸின் அறிக்கையிலிருந்து: ‘அச்சிறுவன் விரைவில் இறந்துவிடுவான். அவனை பார்த்த அமெரிக்க டாக்டர் கூறினார், ‘உண்மையில் அது எளிய சிறுநீரக நோயாகத்தான் இருந்தது. சிறிய அறுவை சிகிச்சை போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் மிஷினரிகள் அறுவை சிகிச்சைக்கு வெளியே எடுத்துசெல்ல அனுமதிக்கவில்லை. ‘ ‘ஏன் ஒரு காரை பிடித்து கொண்டு செல்ல வேண்டியதுதானே ‘ என்றேன். டாக்டர் கூறினார், ‘அதை அவர்கள் செய்யமாட்டார்கள். ஏனெனில் ஒருவனுக்கு செய்வதை அவர்கள் அனைவருக்கும் செய்யவேண்டும் என்பார்கள் ‘ ஆனால் அச்சிறுவனின் வயது பதினைந்து! ‘

எல்ஜி ஜெலிப்ஸி ‘மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி ‘யுடன் (சான்பிரான்ஸிஸ்கோவிலிருக்கும் HIV யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லத்தில்) உழைத்தவர். Sanfrancisco Review of Books இன் ஆசிரியராகவும் பணியாற்றியவர். இவர் கூறுகிறார், ‘இந்த இல்லத்தில் சேர்ந்தவர்கள் மேலும் மேலும் மனச்சோர்வடைந்தனர். அவர்கள் டிவி பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் நண்பர்களை காண அனுமதிக்கப்படுவதில்லை. …பலர் தங்களை மீண்டும் வெளியே அனுப்பிவிடும்படி கெஞ்சத்தொடங்கினர். ‘

கல்கத்தா ‘மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி ‘யுடன் உழைத்த சூஸன் ஷீல்ட்ஸ் கூறுகிறார், ‘ஏழைகளுக்கு அன்னை காட்டும் பரிவும் அன்பும் அவர்களை கடவுளிடம் கொண்டு செல்லவே. இறக்கும் தருவாயில் உள்ளவர்களிடம் அருட் சகோதரிகள் ‘உங்களுக்கு இறைவனிடம் செல்ல ஆசைஉள்ளதா ? ‘ என மட்டும் கேட்கவேண்டும். ஆம் என்று கூறியவுடன் அவர்கள் தலையினை துடைப்பதை போல புனிதநீரில் முக்கிய ஈரத்துணியால் ஞானஸ்நானம் வழங்கப்படும். இது முழுக்க முழுக்க இரகசியமாகவே நடக்கும். ‘ ருவாண்டாவில் ‘மிஷினரிஸ் ஆஃப் சாரிட்டி ‘யுடன் உழைத்த 75 வயது எமிலி லூயிஸ் கூறுகிறார், ‘அன்னை தெரசா கூறினார் ‘கருகலைப்பு செய்தவர்களுக்கு நான் என் நிறுவனத்திலிருந்து அனாதைகளை தத்தெடுக்க அனுமதியேன். ‘ ‘

இவை ஒரு புறமிருக்க, அவர் தன் பிரபலத்தை சம்பாதிக்க தன் நண்பர்கள் மூலம் இந்தியா மீது வாரி வீசிய சேறு அபரிமிதமானது. தெரசாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் டாமினிக் லாப்பயர். இவரது ‘City of Joy ‘ எனும் நாவல் முழுக்க முழுக்க தெரசாவினை சுற்றி அமைக்கப்பட்டது. இந்நாவல் தெரசாவினை மேற்கில் பிரபலப்படுத்திய முக்கிய பிரச்சார சாதனங்களில் ஒன்று. அந்நாவலில் இராமகிருஷ்ண மிஷன் குறித்து வரும் வார்த்தைகளை பாருங்கள், ‘புயலால் சேதமடைந்த அப்பகுதியில் இந்திய அரசு போலிஸார் யாரையும் அனுமதிக்கவில்லை. இராமகிருஷ்ணா பெயரில் அமைந்த மிஷனின் காவி உடையணிந்த துறவிகளை தவிர. அவர்கள் புயலால் வீட்டை இழந்த குழந்தைகளை காப்பாற்றுவதில் மும்மரமாக இருந்தனர். ஆனால் அந்த பெண்குழந்தைகளை அவர்கள் பெற்றோர்கள் காணப்போவதே இல்லை. ஏனெனில் அந்த துறவிகள் பெண்களை பம்பாயில் விபச்சாரத்திற்கு விற்றுவிடுவார்கள். ‘ இராமகிருஷ்ணா மிஷன் துறவிகளை ‘pimps ‘ என்கிறார் லாப்பயர். எந்த கிறிஸ்தவ துறவிகளை குறித்தும் ஹிந்து இயக்கங்கள் இவ்வாறு சர்வதேச அளவில் கூறியதில்லை. ஆனால் ‘தி ஹிண்டு ‘இதே லாப்பயரிடம் மறக்காமல் தெரசா குறித்து புகழுரை வாங்கி போட்டு தன் வெள்ளைத்தோல் விசுவாசத்தை காட்டியுள்ளது. தெரசாவை மேம்படுத்தி காட்ட நம் தேச சேவை அமைப்புகளை பற்றி வக்கிர பொய்களை கூறிய லாப்பயரை தெரசா இதற்காக கண்டிக்கவில்லை. இதைவிட அற்ப காரியங்களுக்காக, அவை கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிரானதென்றால் தன் நண்பர்களை கண்டிக்கும் தெரசா லாப்ப்பயரின் படுபாதக வக்கிர பிரச்சார உக்திக்கு அமைதியாக இருந்தார்.

தெரசாவின் மற்றொரு நற்பண்பு சர்வாதிகாரிகளை அன்பு செய்வதும் ஆதரிப்பதும். குறிப்பாக சர்வாதிகாரிகள் கத்தோலிக்கர்களாக இருந்தால் அவர்கள் மீதான தெரசாவின் அன்பு அதிகரிக்கும். அல்பேனியாவின் காம்ரேட் என்வர் கோஸா, ஹையித்தியின் துவாலியர் போன்றோர் இதில் அடக்கம். ஒரு இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கலிலியோவுக்கும் திருச்சபைக்குமான மோதல் இப்போது நிகழ்ந்தாலும் கூட தான் திருச்சபையையே ஆதரிப்பதாக கூறினார். தெரசா ஒரு அடிப்படைவாத மத மாற்ற பிரச்சார கருவியேயன்றி அவருக்கும் மனிதாபிமானத்திற்குமோ மனித நேயத்திற்குமோ எள்ளளவும் தொடர்பில்லை. சோஷலிச இந்திய அரசின் தோல்விகளையும் அதனால் விளைந்த மானுட சோகத்தையும் தன் பிராபல்யத்திற்கும் , தன் மத அடிப்படைவாதம் பரப்புவதற்கும் பயன்படுத்திய தெரசாவின் முக்தி பேறுவிழா கத்தோலிக்க மதத்திற்கு முக்கியமானதாக இருக்கலாம். மேற்கின் அடிவருடி மெக்காலே-மார்க்ஸிய புத்திரர்களுக்கு எஜமான விசுவாச புளகாங்கிதம் ஏற்படுத்தலாம் . பாரதியர்களுக்கோ அதனால் ஏதுமில்லை.

தகவல்கள்: ‘The Missionary Position, Mother Theresa in theory and practice ‘, கிறிஸ்டோபர் ஹிட்சன்ஸ், வெர்ஸா பதிப்பகம் UK. (இந்நூலினை எனக்கு அனுப்பிய இணைய இன்பிடல்ஸ் இயக்கத்தை சார்ந்த நண்பர் ஸ்டாபன் வெல்ஷிற்கு நன்றி.)

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்