திண்ணைகள் வைத்த வீடு..

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


*******************************************

வலப்புறமும் இடப்புறமும்
திண்ணைகள் வைத்து
சிமெண்டால் இழைத்த வீடு

முதுகு சாய மேடும்
விளக்கு வைக்க மாடமும்
வாசலில் துவாரபாலகராய்…

திஜர., லாசர., கதைகள் .,
மன்னார்குடியின்
ஒற்றைத்தெரு.,
முதல்தெரு., இரண்டாம் தெரு
மூன்றாம்தெரு எல்லாவற்றிலும்..

வெற்றிலைக் காவியும்.,
பன்னீர்ப் புகையிலையும்.,
கும்மோணம் டிகிரி காப்பியும்.,
சீட்டுக் கட்டுகளும்..
வார்த்தை வண்டல்களும்
உதப்பல்களும் நிறைந்து..

வயதான பெற்றோராய்
வெளிறிப் போய் சில
பால்கிண்ணம் பொலிந்து..
கதைகேட்கும் சிறாராய் சில..

யௌவனக் கவர்ச்சியில்
வண்ணமடித்து சில ..
வெறுமையான மடியாய்
வெள்ளையடித்து சில..

திண்ணைகள் பால்கனிகளாய்
ஆளோடிகள் வராண்டாக்களாய்
காமிரா உள் கம்ப்யூட்டர் ரூமாய்
கொல்லைகள் காணாமல் போய்..

காற்றை வெய்யிலை இருளை.,
கவலையில்லாமல் கிடந்து
கதைத்துக் களிக்கும் இடமாய் ..
கம்பி போட்ட திண்ணை..

விடியலில் பள்ளியெழுச்சியும்
பன்னீராய் தெளித்துக் கோலமும்
மாலையில் ருத்ரமும் சமகமும்
இரவில் பவளமல்லிவாசமும் கலந்து

திண்ணைகள் தேடி சென்றேன்..
இளைப்பாற.. எங்கும் இல்லை
கிளையில்லா பறவையாய்..
பறந்து பறந்து பற்றினேன் திண்ணையை

ஓய்வெடுக்க அல்ல..
ஓய்ந்து அமர அல்ல..
உழைப்பை …என் உருவாக்கத்தை
உலகெல்லாம் அறியச் செய்ய..

திண்ணையில் கவிகள்.,
கதைகள்., கட்டுரைகள்.
இயற்றமிழ் இயற்றும்
அனைவரையும் எடுத்தியம்பும்

வாழ்க திண்ணை.. வளர்க திண்ணை..
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும்
எங்கள் அன்பு சால் திண்ணைக்கு
தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்…

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்