தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இறைவன் யார் ? அறிந்திலேன் நான் !
இதுவரை அறிந்திருக்க வில்லை !
ஆயினும்
இதை மட்டும் அறிவேன் !
அவனைத் தேடி
அடிக்கும் இடி மின்னல் புயல்
அணைக்காத
உள்ளத்து விளக்கொளியில்
ஆதிமுதல்
யுக யுகமாய்
யாத்திரை செய்கிறான் மனிதன்
ராத்திரி பயத்தில் !
அவன் அழைப்பைக் கேட்பவர்
எவரும் அச்சமின்றி
அபாயத்தைக் கடப்பர் !
உலகப் பொருட்களை உதறி
விலகிச் செல்வார் !
சிரச்சேத மாவதையும் அவர்
வரவேற்பார் !

மரணத்தின் கோரக் குரலோசை
இன்னிசைக் கீதமாய்
ஒலிக்கிறது அவன் காதில் !
தீக்கனலும் கரித்துள்ளது
அவன் உடலை !
ஈட்டிகள் ஊடுருவி யுள்ளன
அவன் உடலை !
கோடாறி இரு துண்டாய்ப்
பிளந்துள்ளது அவனை !
அனுதினமும் தொடர்ந்து எரியும்
புனித தீயிக்கு
எண்ணை ஊற்றுவதுபோல்
ஆசைப் பொருட்களைத்
தியாகம் செய்கிறான்
ஈசனைத் தேடிச் செல்பவன் !
முடிவில் வாழ்வுக்கு வெகுமதியாய்
இதயத்தைப் பிழிந்து
தாமரைக் குருதி போல்
தன்னையே அர்ப்பணம் செய்தான்
முடிவான மன நிறைவு
தருவது
மரணமென ஒப்பி !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 6, 2008)]

Series Navigation