தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்

This entry is part [part not set] of 27 in the series 20020819_Issue

சுந்தர ராமசாமி

மு. தளையசிங்கம் தமிழகத்தில் போதிய அறிமுகம் பெறாதவர். இவருடைய மூன்று புத்தகங்கள் அச்சேறியுள்ளன. ‘புதுயுகம் பிறக்கிறது’ (பதினோரு சிறுகதைகளின் தொகுப்பு. முதல் பதிப்பு 1965), ‘போர்ப்பறை’ (கதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றின் தொகுப்பு. முதல் பதிப்பு 1970), ‘மெய்யுள்’ (கட்டுரைகள், உரையாடல்கள், கவிதைகள், நாவல் ஆகியவற்றின் தொகுப்பு. தளையசிங்கத்தின் மறைவுக்குப் பின் 1974இல் வெளிவந்தது). இவை தவிர, அச்சில் வந்தவையாகவும் கையெழுத்துப் பிரதிகளாகவும் வேறு எழுத்துகளும் உள்ளன. ‘ஒரு தனி வீடு’, ‘யாத்திரை’, ‘கல்கி புராணம்’ ஆகிய நாவல்கள் முழுமை பெற்றவை. ‘ஒளியை நோக்கி’ என்ற நாவல் குறையாக நிற்கிறது. ‘குருக்ஷேத்திரம்’, ‘எதிரிகள்’, ‘ஓமாக்கினி’ ஆகிய முயற்சிகளும் உள்ளன. ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் ஈழத்து நவீன இலக்கியத்தை விமர்சிக்கும் கட்டுரைகள் ‘செய்தி’ பத்திரிகையில் அவர் வாழ்நாளிலேயே தொடராக வந்து முழுமை அடைந்துள்ளன. இன்னும் புத்தக உருவம் பெறவில்லை. ‘மல்லிகை’, ‘பூரணி’, ‘சத்தியம்’ ஆகியவற்றில் வெளிவந்து தொகுக்கப்பட்டுள்ள எழுத்துகளும் புத்தக வடிவம் பெறவில்லை.

தளையசிங்கம் 1935இல் பிறந்தார். 1957இல் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘சுதந்திரம்’ என்ற பத்திரிகையில் இவருடைய முதல் சிறுகதையான ‘தியாகம்’ வெளிவந்தது. முதல் நாவலான ‘ஒரு தனி வீடு’ 1960இல் எழுதப்பட்டது. இரத்தினபுரியில் தான் படித்து வந்த கல்லூரியிலேயே இவர் ஆசிரியரானார். விமர்சனத்தில் தீவிர ஆர்வம் கொண்டார். ‘விமர்சன விக்கிரகங்கள்’ கட்டுரைத் தொடர் ‘தினகர’னில் வந்தபோது சர்ச்சைக்கு உள்ளாயிற்று. இக்காலத்தில் முற்போக்கு – நற்போக்கு இரண்டினது குறைகளையும் எடுத்துக்காட்டும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1963இல் இவர் எழுதிய ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி – சில அவசரக் குறிப்புகள்’ தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் ஒரு மைல்கல் என்று கருதத்தக்கது. 1966இல் இவர் தன் குருவான ஸ்ரீ நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்தார். இக்காலத்தில் இவருடைய வேலை புங்குடுதீவு மகாவித்தியாலயத்திற்கு மாறிற்று. புங்குடு தீவில் பல ஆத்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டார். ஆத்மீக வகுப்புகள் நடத்தினார். 1968இல் சர்வோதய இயக்கத்தை ஆரம்பித்தார். 1969இல் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். 1970இல் ‘சத்தியம்’ பத்திரிகையை வெளியிட்டார். தேர்தலில் ‘சர்வோதய அரசியல் முன்னணி’யை உருவாக்கினார். 1971இல் புங்குடுதீவு கண்ணகி யம்மன் கோவிலில் நன்னீர்க் கிணறுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடம் அளிக்கும்படி போராடியபோது போலீசாரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். 1972இல் ‘மெய்யுள்’ என்ற புதிய இலக்கிய உருவம் போடப்பட்டது. 1973இல் இரண்டு மாதம் நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 2ஆம் தேதி மறைந்தார்.

நான் என் கட்டுரையைத் தமிழக வாசகர்களின் வசதியைக் கருதி அச்சேறியுள்ள இவரது மூன்று புத்தகங்களைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். முதற் பகுதி, தளையசிங்கத்தின் கருத்துலகம் பற்றி. அதிகமும் அவர் வார்த்தைகளைப் பயன்படுத்தியே கூறுகிறேன். இரண்டாவது பகுதி, இவருடைய சிந்தனைகளைப் பற்றிய என் எதிர்வினைகள்.

1

தளையசிங்கம் தனது கலைப் பார்வையைப் ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று அழைக்கிறார். ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்றால் என்ன ? இதைத் தெரிந்து கொள்வதற்கான முயற்சிதான் இந்தக் கட்டுரை. கலைப் பார்வை வாழ்க்கைப் பார்வையின் ஒரு பகுதி. வாழ்க்கைப் பார்வையைத் தெரிந்து கொள்ளாமல் கலைப் பார்வையை முழுமையாக அறிய முடியாது. ஆகவே தளையசிங்கத்தின் வாழ்க்கைப் பார்வையை மிகச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகெங்கும் மனிதன் அதிருப்தியில் ஆழ்ந்து கிடக்கிறான். அதிருப்தியின் வெளிமுகங்கள் பல. பயனற்ற பொழுதுபோக்குகளில் காலத்தை வீணடித் தல். போதைப் பொருள்களில் விழுந்து கிடத்தல். போலிக் கலைகள் எழுப்பும் கனவுகளில் தன்னை மறந்து நிற்றல். வாழ்க்கையில் ஆர்வமின்மை. சோம்பல். வன்முறை. இவ்வாறான எதிர்மறைச் செயல்கள் ஒருபக்கம். மறுபக்கம் வெவ்வேறு தளங்களில் சமூக மாற்றத்திற்கான முயற்சிகள், போராட்டங்கள். ஆனால் இந்த வெளிப்பாடுகளில் பிரச்சனையின் ஆழத்தை உணர முடிகிறதா ? விஞ்ஞானம் பாய்ச்சல்கள் நிகழ்த்திக்கொண்டு வருகிறது. மனம் கசந்த மனிதன் சமூகத்தை உதறி வெளியேறிக்கொண்டிருக் கிறான். உலகெங்கும் வெவ்வேறு விதமான சமூக அமைப்புகள் தோன்றி யிருக்கின்றன. அவற்றை நாம் எப்பெயர் இட்டு அழைப்பினும் அங்கு அதிருப்தி மிஞ்சுகிறது. சமூக மாற்றங்கள் எவற்றைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் ? மெய்யான வளர்ச்சி எது ? கட்சிகள், அரசுகள், நிறுவனங்கள் ஆகியவை தம் குறிக்கோள் பற்றித் தெளிவாக இருக்கின்றனவா ? சமூகப் பொருளாதார மாற்றங்களைப் பொருளாதாரக் காரணங் களுக்காகவே கொண்டு வரும்போது மேலான வாழ்வு மலருமா ? இவற்றைத் தாண்டி மற்றொரு எழுச்சிக்குரிய தளமாக இம்மாற்றங்கள் நிகழ்த்தப்படு கின்றனவா ? பெளதிக, சமூக, பொருளாதார, அரசியல் நிலைக்கும் அப்பாற்பட்ட உண்மை என்று ஒன்று இருக்கிறதா ? இருக்கிறது. அதுதான் சத்திய நிலை. இதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு எந்த நாட்டு அரசாங்கமும் இன்று நிர்வாகத்தை நடத்தவில்லை. கடவுள் என்பது மாற்றமற்ற சத்தியம். கடவுளை ஏற்றுக்கொள்ள விரும்பாதோர் புத்தர் கூறிய நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ளலாம். பெளத்தர்கள் கடவுளை மறுப்பினும், கடவுளை ஏற்பவர்கள் நிர்வாணத்தை ஏற்றுக்கொள்வர். நிர்வாண நிலைதான் திருப்தியை அளிக்கக்கூடியது. இந்த சத்திய நிலை முழுச் சமூகத்திலும் பரவாதவரையிலும் அதிருப்திகள் தொடரும்.

சத்திய எழுச்சி என்றால் என்ன ?

சட்டம், உயிர், மனம் என்று வளர்ந்துள்ள பரிணாமம் இன்று மனத்தையும் தாண்டிச் செல்ல முயல்கிறது. மனத்தைத் தாண்டிய நிலையில்தான் சத்தியத்தின் பூரணப் பிரவாகம் உட்புக முடியும். இன்று வரையிலும் ஞானிகளே இந்நிலையை அடைந்திருக்கின்றனர். கடுமையான பயிற்சிகள் மூலம் இந்நிலையை இவர்கள் அடைந்தனர். ஞானிகளிடம் தோன்றிய சத்திய எழுச்சியை எங்கும் நீக்கமற நிறையச் செய்ய வேண்டும். ஆகவே, இன்றைய பிரச்சனைகளை ஆராயும்போது அவற்றை அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதாரத் தளத்தில் மட்டும் வைத்து ஆராயாமல் பூரண பரிணாமத் தேவையான சத்திய எழுச்சிக்குரிய ஆழம் வரையிலும் விரித்துப் பார்க்க வேண்டும். அதிருப்தியாளனே போராட முன் வருவான். அதிருப்தியாளர்களில் கலைஞர்கள் நுட்பமான உணர்வுகளும், அகலமான மன விரிவுகளும், ஆழமான சிந்தனையும் கொண்டவர்கள். அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்குரிய சமிக்ஞையின் அலைகள், ஞானிகளை விட்டுவிட்டால் கலைஞர்களிடமே அதிக அளவில் தட்டுப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த அலைகளுக்கு உருவம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இன்றைய கலைஞன் இருக்கிறான். ஞானிகளின் மேலான நிலைக்கு முழு மனித குலத்தையும் உயர்த்த வேண்டும். இந்தத் தாண்டல் நிறைவேறு வதற்கு முன், சிறுசிறு கூட்டங்கள் இணைந்து பெருங் கூட்டமாக மலர வேண்டியுள்ளது. இது கலைஞர்களின் கூட்டமாகவும் சிந்தனையாளர் களின் கூட்டமாகவும் இருக்கும்.

மெய்யான மதத்திற்கும் மெய்யான விஞ்ஞானத்திற்கும் முரண்பாடு எதுவும் இல்லை. ஒன்று உண்மைக்கு உள்ளுணர்வுகளை நாட, மற்றொன்று புற உலகைச் சார்ந்து நிற்கிறது. ஒன்று அனுபவம். மற்றொன்று ஆராய்ச்சி. சீரழிந்த மதமும் சீரழிந்த விஞ்ஞானமும் பொது ஒற்றுமைகளைக் கொண்டவை. வாழ்க்கையையும் சமூகத்தையும் துறக்கத் தூண்டிய மதத்தைக் கேலி செய்தது விஞ்ஞானம். மேற்கே அதே விஞ்ஞானம் முதலாளித்துவத்திற்குத் தன் ஆத்மாவை விற்று வாழ்வை அழித்தது. கறுப்பர்களை ஒதுக்கி வைக்கும் சமூகம் எந்த அளவு விஞ்ஞானபூர்வமானது ? மனிதத் தன்மைகளைப் பணநாயகம் விழுங்கிக்கொண்டிருப்பது வரையிலும், உலக சர்வாதி காரத்திற்குக் கனவுகள் கண்டுகொண்டிருப்பது வரையிலும் சந்திர யாத்திரைக்கும் காசி யாத்திரைக்கும் அதிக வேற்றுமை இல்லை.

முதலாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பும் சத்திய எழுச்சிக்குரிய தளங்களுக்கு வழி வகுக்க வேண்டும். முதலாளித்துவ அமைப்பு பொதுவுடைமை அமைப்பு வழியாகத்தான் சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல வேண்டும் என்பதில்லை. முதலாளித்துவ அமைப்பு தோன்றுவதற்கு முன்னரே, நிலவுடைமை அமைப்பிலிருந்தே நேராகப் பொதுவுடைமை அமைப்புக்குப் போக முடியுமென்றால், முத லாளித்துவ அமைப்பும் பொதுவுடைமை அமைப்பைத் தாண்டி சத்திய எழுச்சிக்குரிய தளத்திற்குச் செல்ல முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் மாற்றமடைந்து கொண்டிருக்கிறது. சமூகம் மாற, மதிப்பீடுகள் மாறுகின்றன. இம்மாற்றத்தை விஞ்ஞானரீதியாக உணர்ந்த மார்க்சியவாதிகள், முழு மையை நோக்கி சமுதாயத்தைத் துரிதப்படுத்தி வளர்க்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். சத்தியத்தைப் பற்றிய தரிசனங்கள் அறிவுக்குள் சீராக இறக்கப்பட்டு அறிவின் உதவி மூலம் வியாக்கியானப் படுத்தப்படும் போதுதான் மனித வளர்ச்சிக்கு உதவும் பார்வை விரிவடையும். இன்று நடைமுறையில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெரிய தத்துவம் மார்க்சியம் மட்டும்தான். வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகளை விளக்கிக்கொள்ளவும், அந்த விளக்கத்தின் மூலம் சமூகத்தின் பிற துறைகளுக்குரிய செயல்களை நிர்ணயிக்கவும் எந்தத் தத்துவம் மக்களால் பயன்படுத்தப்படுகிறதோ அது வாழும் தத்துவமாக அமைகிறது. மற்ற சிந்தனைகளால் முழுச் சமூகத்தையும்-அரசியல், பொருளாதாரம், கலை போன்ற பிற துறைகளையும்-ஸ்பரிசித்துப் பேச முடியாது. ஆகவே, இன்றைய நிலையில் கலைஞன் தனது கலையின் ஆட்சியை இன்னும் கூர்மையாகவும் வலுவாகவும் செலுத்த வேண்டும் என்றால், ஒன்று அவன் மார்க்சியவாதியாக இருக்க வேண்டும். அல்லது மார்க்சியத்தை வெல்லும் மற்றொரு பார்வையைத் தேடிக் கண்டுபிடிப்பவனாக இருக்கவேண்டும். மார்க்சியத்தை இன்னும் யாரும் முழுமையாக வென்றுவிடவில்லை. வெல்ல முயன்றவர்கள் பூரண வெற்றி பெறவுமில்லை. மார்க்சியம் தோற்கும் இடத்தில்கூட, அது கொண்டுவந்த நன்மைகளை எடுத்துச் செல்லும் விசாலப் பார்வை வேண்டும்.

மார்க்சியத்தின் மறுபக்கத்தையும் பார்ப்போம். சரித்திரத்தின் புதிய தேவையை மார்க்சியம் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகிக்கொண்டிருக் கிறது. சரித்திர வளர்ச்சிக்கு ஏற்ப மார்க்சியவாதிகளின் தத்துவப் பார்வை வளரவேண்டுமென்றால், அந்தத் தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படும் சில அம்சங்களைத் தகர்க்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால் மார்க்சியவாதிகள் இதனை உணர முடியாதவர்களாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை மறுப்பவர்கள் மார்க்சியத்தின் நியாயமான நன்மை களை ஒப்புக்கொள்ள மறுப்பதுபோல், இந்த மார்க்சியவாதிகளும் தங்களது இறுக்கமான தத்துவத்தையும் மீறிக்கொண்டு புதுப்பார்வைக்குரிய கால கட்டம் வந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். சத்தியத்தின் ஒரு காலகட்ட வளர்ச்சிக்கு எவ்வளவுதான் ஒரு தத்துவப் பார்வை உதவினாலும், அக்கால கட்டத்தில் எவ்வளவுதான் அப்பார்வை பூரணமாக இருந்தாலும், பரிபூரணமான சத்தியத்தின் முழுப்போக்கையும் அது அடைந்துவிடப் போவதில்லை. எல்லாத் தத்துவங்களும், தத்துவங்களையும் கடந்த ஒரு நிரந்தரமான சத்தியத்தின் அந்தந்தக் கால வெளிக்காட்டல்களை அல்லது தர்ம வளர்ச்சியைப் படம் பிடிக்க முயலும் தற்காலிகப் பார்வை அழுத்தங்களே. எனவே, அந்தந்தக் காலத் தத்துவப் பார்வைகளை அந்தந்தக் காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தும்போதுகூட, அதே தத்துவங்களை யும் மீறி சத்தியத்தில் தன்னை நிறுத்திக்கொள்பவன்தான் சார்பு நிலையில் தர்ம வளர்ச்சிக்கு ஏற்றவாறு சரியாக மாறக்கூடியவனாகவும் போராடக் கூடியவனாகவும் இருக்கிறான்.

வர்க்க வேறுபாடுகளைத் தாண்டிய பொதுவுடைமை, சோஜலிசத்தை மட்டும் அடைந்தால் போதாது. அதைத் தனியாகக் கொண்டு வரவும் இயலாது. பொதுவுடைமைப் போராட்டத்தோடு அகத்தே காணும் வேறுபாடுகளையும் முழுச் சமூகத்தையும் தாண்டினால்தான் உண்மையான சோஜலிசமும் உண்மையான ஞான எழுச்சியும் அடுத்த கட்ட மனிதப் பரிணாமமும் காணமுடியும். இனிவரும் காலத்தில் கலைத் துறைகள் மட்டுமே பரவசத்தையும் மன அமைதியையும் தெளிவையும் நிறைவையும் தந்து நோயைப் போக்கும் மருந்தாக இருக்கப் போவதில்லை. இனிமேல் எல்லாத் தொழில்களுமே கலையாகவும் யோகமாகவும் தொழுகையாகவும் இருக்குமாறு செய்யவேண்டும். ஃப்ராய்டு கூறிய மனச்சிக்கல்களும் மார்க்ஸ் கூறிய மனப்பிறழ்வும் நீங்கிய முழுமையான மனிதனை உருவாக்க வேண்டும். இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்புகொண்டிருக்க வேண்டும். சகல துறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அவற்றை முழுமை அடையச் செய்வதற்கும், சகல துறைகளையும் திட்டமிட்டு சம வேகத்தில் புதுமையை நோக்கி வளர்ப்பதற்கும் அரசியல் அதிகாரமே நேரிடையான வழியைக் காட்டுகிறது. ஷனநாயக அமைப்பு சமூக மாற்றத்திற்குப் பூரணமாக உதவாத அமைப்பாகவே இருக்கிறது. சமூகத்தின் சகல துறைகளும் பிரிவுற்று, குறியற்றுத் தாமத நடைபோட, தடுமாற்றங்களும் சிதறல்களும் தோன்றுகின்றன. மத்தியிலிருந்து அதிகாரம் குவிக்கப்படும் பொதுவுடைமை அமைப்பிலோ பொருள் உற்பத்தி நிச்சய பலன்களைத் தரும்போதும், ஷனநாயக மன உணர்வுகள் பலியாகி அதிருப்தி மிஞ்சுகிறது. சமய ஞானம் மறுக்கப்படுவதால் முழுமையற்ற ஒரு பார்வையைக் கொண்டே முழுமையை எட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன. சமயமும் சமயவாதிகளும் இதுகாலம் வரையிலும் பிற்போக்கு வாதத்தின் தூண்களாக இருந்தார்கள் என்பதற்காகச் சமய ஞானத்தை மறுக்கத் தேவையில்லை. முற்போக்கை விரும்புகிறவர்கள் தங்களது லட்சியத்திற்காக இதைப் புரட்சிகரமாகப் பயன்படுத்தலாம். மார்க்சியவாதிகள் இதை இன்னும் உணராதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணப் பொதுவுடைமையை ஏற்றுக்கொள்வதால் மட்டும் சர்வாதிகாரத்தின் இறுக்கம் தளர்ந்து சுதந்திர மலர்ச்சி வந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஓரளவுக்காவது மத்தியில் அதிகாரம் திரட்டப்படாமல் முழுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியாது. ஆனால் அது தேவைக்கு அதிகமான சர்வாதிகாரமாக, தனிப் பட்டவர்களின் குறைகளையும் தீர்க்கதரிசனமின்மையையும் மறைக்கும் சர்வாதிகாரமாக மாறாமல் இருப்பதற்குச் சமய ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் பூரணத்துவம் மட்டும் வழி தரப்போவதில்லை. நடைமுறைப்படுத்து பவர்களின் மன வளர்ச்சியையும் பக்குவத்தையும் பொறுத்தும் இது இருக்கும். அதனால்தான் கலைஞர்களும் எழுத்தாளர்களும்-அந்தப் பூரண விரிவை வெளிப்படுத்தும் பக்குவத்தை வளர்க்கக் கூடியவர்களாக இருப்பதால்-அரசியலில் அதிகமாகப் பங்குபற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும், தன் அக ஆழத்தைக் கண்டுபிடிக்காத வரை முழுமையின் பூரணத்துவம் பெறப்போவதில்லை. ஆகவே சமய ஞானிகளின் கண்டுபிடிப்பைப் பூரணமாகப் பயன்படுத்த இன்றைய எழுத்தாளர்கள்தாம் முன்வர வேண்டும்.

சமய ஞானத்திடமிருக்கும் உண்மையைச் சமூக வளர்ச்சிக்கு உதவும் வகையில் எல்லாத் துறைகளிலும் பிரவேசிக்கச் செய்ய வேண்டும். அதற்காக முதலில் ஒவ்வொருவரும் தனது அகத்திலேயே அந்த ஞானத்தை எழுப்ப வேண்டும். வர்க்க வேறுபாடுகளும் குண வேறுபாடுகளும் அங்குதான் புதைந்து கிடக்கின்றன. அவையே பிற்போக்குக் கோட்டையாகவும் பிறப்பு பிறப்பாய் வரும் இயல்புகளின் மறைவிடங்களாகவும் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்றி அங்கு புரட்சியைக் கொண்டு சென்று முழுமையின் மலர்ச்சியை ஏற்படுத்தாத வரைக்கும் புறச் சூழலில் மட்டும் புரட்சியை நடத்திப் பூரண இலக்கியத்தையும் சரி, முழுமையான வாழ்க்கையையும் சரி, கொண்டு வர முடியாது. எழுத்தாளர்கள் இனியேனும் இதை உணர வேண்டும். இவ்வாறு இலக்கியத்தில் ஆரம்பமாகும் இந்த ஞான அலை-பிரபஞ்ச யதார்த்தம்-முழுச் சமூகத்திலும் பரவுவதே சர்வோதயம்.

இன்றைய சமூகத்தில் காணப்படும் கலைஞர்களை -படைப்பாளிகளை-நான்கு வகையினராகப் பிரிக்கலாம்.

1. மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளும் படைப்பாளிகள்.

2. மார்க்சியத்தை மறுத்து அதை வெல்லக்கூடிய திட்டவட்டமான தத்துவப் பார்வை ஏதும் இன்றித் தங்கள் உள்ளுணர்வுகளின் உந்துதல்களுக்குக் கலையுருவம் கொடுப்பவர்கள்.

3. கட்டுப்பெட்டிகளும் போலிகளும்.

4. வியாபாரிகள்.

மார்க்சியத்தை மறுப்பவர்களில் சிலர் உள்ளுணர்வுகளின் மூலம் ஆழமான கலையுருவத்தைத் தேடிப் போயிருக்கின்றனர். புதுமைப்பித்தன், மெளனி, சி.சு. செல்லப்பா போன்றவர்களுக்குத் திட்டவட்டமான பார்வை ஏதும் இல்லாததால் தர்ம வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் போராட முடிய வில்லை. இவர்கள் மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை விடவும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள் என்பது அச்சித்தாந்தத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் மேலும் சிறப்பாக எழுதியிருப்பார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. மார்க்சியச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் பார்வை விரிவுக்கு ஏற்ப, கலைத் திறமையும் அவர்களுக்கு இல்லை என்றே அர்த்தமாகிறது. நம் பின்னணியில் திறமை மிகுந்த கலைஞர்கள் பெரும்பாலும் மார்க்சியத்தால் கவரப்படுவதில்லை. இந்தியப் பண்பாட்டின் ஆழம் அதிகம். மார்க்சியத்தை விடவும் அதிகம். அதனால் இந்தியப் பண்பாட் டையே சார்ந்து நின்று திறமை மிகுந்த கலைஞர்கள் அதன் பழந்தோற்றத்துடனேயே திருப்தியடைந்து விடுகின்றனர்.

கட்டுப்பெட்டிகளுக்கு உதாரணமாகப் பண்டிதமணி கணபதிப் பிள்ளை முதல் மு. வ. வரை பலரைச் சொல்லலாம். இன்று வரையிலும் சமூகம் கண்டுபிடித்த உண்மைகளைக் கட்டிக்காத்து வருகின்றனர் என்ற அளவுக்குத்தான் சமூகம் இவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு இவர்கள் அவசியமானவர்களே. போலிகளுக்கு உதாரணமாக அகிலன் முதல் நா. பார்த்தசாரதி வரை இருக்கின்றனர். போலிகளிலும் ஒத்தோட மறுப்பவர்கள் அண்ணா, மு. கருணாநிதி போன்றவர்கள். கட்டுப்பெட்டிகளும் போலிகளும் மலிந்த ஒரு சமூகத்தில் இவர்கள் புரட்சிவாதிகளாகத் தெரிவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் காட்டும் வளர்ச்சி வெறும் மாயைதான்.

பிறந்து கொண்டிருக்கும் புது யுகத்திற்குரிய இலக்கிய வார்ப்புகள் எப்படி இருக்கும் ? இவை அடிப்படையான உருவ உள்ளடக்க மாற்றங்களைக் காட்டும் என்பதை இப்போதே நிச்சயமாகச் சொல்லிவிடலாம். ஐரோப்பிய அறிவு வாதத்திற்கு முந்திய இலக்கியப் படைப்புகள் உள்ளுணர்வு செறிந்த கற்பனைக் காவியங்களாக இருப்பதுபோல் அறிவுவாதத்திற்குப் பிந்திய படைப்புகள் ஐம்புலன்கள் சார்ந்த, அறிவும் செறிந்த யதார்த்த இலக்கியங்களாக இருக்கின்றன. முந்தியவற்றில் பிரபஞ்ச உணர்வு இருந்தது. பிந்தியவற்றில் இந்த உலகத்து உணர்வும், குறிப்பாக, பிரதேச, சமூக, பொருளாதார நிலைகளுக்குரிய உணர்வுகளும் அதிகமாக இருக்கின்றன. இனி வரும் படைப்புகளில் மீண்டும் பிரபஞ்ச உணர்வு தலைதூக்கும். ஆனால் அறிவு வாதத்தாலும் அதற்குரிய விஞ்ஞானத்தாலும் பெறப்பட்ட யதார்த்த உணர்வுகளும் கூடவே நிற்கும். இதனைப் ‘பிரபஞ்ச யதார்த்தம்’ என்று கூறலாம். விஞ்ஞானமும் ஆத்ம ஞானமும் கலந்த பேரறிவு இது.

பிறக்கப்போகும் இலக்கியத்தில் உருவமும் உள்ளடக்கமும் புதிய தளத்துக்குரிய உருவ உள்ளடக்கத்தைப் பெறும். இதுதான் மெய்யுள். இது ஒரு புதிய இலக்கிய உருவம். இது ஒரு பூரண உருவமாகவும் இருப்பதனால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் ஒரு உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்ற வித்தியாசங்களை இது ஏற்காது. இக்கால வரையிலுமுள்ள இலக்கிய உருவங்கள் எல்லாம் பெரும்பாலும் கற்பனைத் தளங்களுக் குரியவையே. ‘மெய்யுள்’ கற்பனைக் கோலங்களைத் துறந்து அவற்றின் தளங்களையும் தகர்த்துக்கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய இலக்கிய உருவமாகும். அதன் உள்ளும் புறமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும். அதனால் இது, இக்காலம்வரையுள்ள கலை இலக்கியங்களை அழிக்கும் கலை இலக்கியமாகவும் இருக்கும்; அதேபோல் தத்துவ, சரித்திர, விஞ்ஞான உருவங்களாகவும் இருக்கும்; சமூக, பொருளாதார, அரசியல், ஆத்மீக மெய் வாழ்க்கை அனுபவங்களாகவும் அமையும்.

இன்றைய இலக்கியத்தைப் பார்க்கும்போது ஞான அலையின் உந்துதல்களைப் பெரிய அளவில் உணர்ந்து செயல்பட்டவர் பாரதி. புதுமைப் பித்தன் கதைகள் நடைமுறையிலுள்ள ஆத்மீக வீழ்ச்சியைக் கேலி செய்யும் முயற்சிதான். புதுயுக ஞான அலைகளின் ஆரம்பம் இவரிடம் இல்லை. மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் இந்த அலையை உணர்ந்தாலும் அதற்குப் பிழையான அர்த்தம் கொடுத்து இடையிடையே அதைத் திருகிச் சாகடித்துக் கொன்றுவிடுகின்றனர். அவர்கள் காட்டும் இலக்கோடு அந்த அலை நின்றுவிடப் போவதில்லை. அத்துடன் அவர்கள் ஆதரிக்கும் சர்வாதிகாரம் இதற்கு நேர்மாறானது. புதுமைப்பித்தனிடம் காணப்படும் கேலி உணர்ச்சியும், இயலாமை உணர்வும் இவர்களது சர்வாதிகாரத்திற்குப் பின்னால் பெருமளவு மறைந்து கிடக்கின்றன. புதுயுக ஞான அலை பிறப்பிக்கப் போகும் வீரத்திற்கும் செயல் வேகத்திற்கும் முன்னால் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் மார்க்சியத்தின் இயலாமையும் தாழ்வு உணர்ச்சிகளும் தெரியவரும். முற்போக்கு மார்க்சிய எழுத்தாளர்கள் புதுயுக ஞான அலையைப் பிழையாகப் புரிந்துகொண்டவர்கள்தான். பாரதிக்குப் பின் இப்புதிய அலையின் பிறப்பு பிரக்ஞைபூர்வமான அளவுக்கு வளர்ந்திருப்பது ஷெயகாந்தனின் ‘பிரம்மோபதேசம்’, ‘விழுதுகள்’, ‘பிரளயம்’ என்ற கதைகளிலும் மு. பொன்னம்பலத்தின் ‘அது’ என்ற கவிதைத் தொகுதியிலும்தான். ஷெயகாந்தனிடம் இது திரண்டு பெருத்த சக்தியாய் உருவெடுத்து வருகிறது.

2

மு. தளையசிங்கம் பெருமளவுக்குத் தன்னில் இருபதாம் நூற்றாண்டிற்குரிய பிரச்சனைகளையும் ஓரளவு இருபது நூற்றாண்டுகளின் சாரத்தையும் வெளிப்படுத்த முயன்ற ஒரு சிந்தனையாளர். உடல்கள் இருபதாம் நூற்றாண்டில் கிடந்து உழல, பிரக்ஞை முந்திய நூற்றாண்டு ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ கூறுபட்டுக் கிடக்க பிரச்சனைகளுக்கு எதிர்வினை யாக வாய்க்கு வரும் சொற்களை உதிர்க்கும் நம் சிந்தனையாளர்களின் மத்தியில் விதிவிலக்காக வந்து சேர்ந்தவர் தளையசிங்கம். இருபதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியை நெருங்கிக்கொண்டிருக்கும்போது இவருடைய சிந்தனைகள் கருக்கொண்டுள்ளன என்று சொல்லலாம். ரஷ்யப் புரட்சிக்கு ஏகதேசமாக ஐம்பது ஆண்டுகள் பிந்திய காலப் பகுதி இது. தான் பிறந்து வளர்ந்த மண்ணையும் கலாச்சாரத்தையும் சார்ந்தும், கடல் தாண்டிய தேசங்களைச் சார்ந்தும், இவ்வுலகின் முழுமை சார்ந்தும், பிரபஞ்சம் சார்ந்தும் அவர் சிந்திக்க முற்பட்டார். இப்பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, சுய வாழ்வின் அனுபவ ஆய்வு களுக்கு மேலாக உலகத் தளத்தைச் சார்ந்த- கிழக்கிலும் மேற்கிலுமான-படைப்புகளையும் அறிவுகளையும் திரட்டித் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். தத்துவம், சமயம், இலக்கியம் ஆகியவற்றில் விசேஜ ஈடுபாடும், விஞ்ஞானத்தில் ஆர்வமும் இவர் கொண்டிருப்பதை இவரது எழுத்து நமக்குக் காட்டுகிறது. பிரச்சனைகளுக்கு விடைகள் தேடிச் செல்லும் போது தனது தேசம், தனது மொழி, தனது சமயம், தனது இலக்கியம் ஆகியவற்றின் வட்டங்களிலிருந்து விடுதலை பெற்று, முன் தீர்மானங்களின் சொச்சங்களைச் சுமக்காமல் உண்மைகளைத் தேடிச் செல்வதை உணர முடிகிறது. பிரச்சனைகள்; அவற்றைப் புரிந்துகொள்வதற்கான தயாரிப்பு; விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சிகள்; உணர்வு நிலைகள் தாண்டித் தருக்க மொழியில் தன் எண்ணங்களைத் தெளிவாகக் கூறல்; இவைதாம் தளைய சிங்கத்தின் அடிப்படையான பண்புகள்.

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப்போல் முழு வீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு உள்ளனவா ? இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் இரண்டு பெயர்கள் கிடைக்கின்றன. ஒருவர் பாரதி, மற்றொருவர் புதுமைப்பித்தன். பாரதி, தாழ்ந்து போனமைக்குத் துக்கித்து, மேலான ஒன்றை எழுப்ப முயன்றார். புதுமைப்பித்தன், தாழ்ந்து போனதை வெட்ட வெளிச்சமாக்கினார். இந்த வரிசையில் மூன்றாவதாக வருபவர் தளையசிங்கம். பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையைத் தன் காலத்திற்குக் கொண்டுவந்து, இடைக்கால சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து, இடைவெளிகளை அடைத்து, முழுமைப்படுத்த முயன்றார் என்று சொல்லலாம்.

அணுகுமுறையில் தளையசிங்கத்தின் மேலான குணமென்ன ?

பிரச்சனைகளை ஏக காலத்தில் பலர் எதிர்கொள்ளும்போது பொது வான சிந்தனைகள் தோன்றுகின்றன. இச்சிந்தனைகள் இணைந்து தளங்கள் உருவாகின்றன. தத்துவம், சமயம், கட்சி, நிறுவனங்கள், சபைகள் ஆகியவற்றின் பொதுப் பெயராகத் தளம் என்று வைத்துக்கொள்வோம். தளங் களின் தோற்ற நியாயங்கள் என்ன ? பிரச்சனைகள். பிரச்சனைகள் ஆராயப்படுகின்றன. விடைகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வுக்கான நடைமுறைகள் அமலாகின்றன. இவ்வளவு நிலைகளும் உண்மை என்றால் சிந்தனையாளன் தன் முழு ஆற்றலையும் பிரச்சனைகளை முன்னிறுத்திச் சிந்திப்பதிலும் அதற்கான விடைகளைக் கண்டுபிடிப்பதிலுமே கரைத்துக்கொள்ள வேண்டும். பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு அவனை நகர்த்தும் உண்மைகளை-அவை எந்தத் தளத்தைச் சார்ந்த உண்மை என்றாலும் சரி-எடுத்துத் தன்னில் இணைத்துக் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத விதியாக அவனிடம் தொழிற்பட வேண்டும். இவ்வாறான ஒரு விதிக்கு அவன் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும்போது பிற தளங்களை விமர்சித்து ஒதுக்குவதில் மட்டுமல்ல, தன்னிடம் விட்டுப்போன உண்மைகளின் துணுக்குகளேனும் பிற தளங்களில் ஒதுங்கி நிற்கின்றனவா என்பதை அவன் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவனாகவும் இருக்கிறான். முன்விதிகளையும், அனுமானங்களையும், தத்துவ முடிவுகளையும் தாண்டி பிரச்சனைகளின் புதுமுகங்களோடு வரும் வாழ்வின் முன் அவன் தன்னை இன்றைய மனிதனாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் அவன் நிரந்தரம் சேர்த்துக்கொள்ள வேண்டியவனாகவும் இருக்கிறான். முழு உண்மையும் இன்னும் எவரிடத்திலும் குத்தகை போய் விடவில்லை என்பதிலும், எவரிடத்து நின்றும் அதன் கீற்று எந்த நிமிஜமும் வெளிப்படலாம் என்பதிலும் அவன் விழிப்புணர்வுள்ளவனாக இருக்க வேண்டும். இப்புதிய உண்மைகளை ஏற்கவோ, பயன்படுத்தவோ, அவன் இணைந்துகொண்டிருக்கும் தளத்தோடு கொண்டுள்ள இறுக்கமான உறவுகளோ, முன் விதிகளோ தடையாக இருக்கக்கூடாது. புதிய உண்மைகளை ஏற்பதன் மூலம் தன் தளத்தின் உருவம் சிதைந்துபோகும் எனவும், அச் சிதைவு அத்தளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது துணுக்கு முகத்தைச் சிதைத்துவிடும் எனவும் அஞ்சக் கூடியவன் தனது முகத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறானே அன்றி, பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தன்னைத் தாண்டுபவன் அல்லன். பிரச்சனைகளின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு, விடைகள் தேடிய முயற்சியில் தளங்களில் வந்து ஒதுங்கியவன், தளங்களைக் காப்பாற்றும் முயற்சியில் சீரழிந்து சிறுத்துப் போவதை இன்று உலகெங்கும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்பின்னணியில் தளங்களைவிட உண்மை முக்கியம் என்று சிந்திக்கத் தலைப்பட்ட தளையசிங்கம் மிக முக்கியமானவர்.

மேற்கு-கிழக்கு என்றோ, நேற்று-இன்று என்றோ, தன் மதம்-பிற மதங்கள் என்றோ, தன் கலாச்சாரம் -பிற கலாச்சாரங்கள் என்றோ, ஆத்மீகம்-பெளதிகம் என்றோ பாகுபாடுகளில் தன்னைக் குறுக்கிக்கொள்ளாமல் இவற்றிலிருந்து விடுதலை பெற்று மனத்தயக்கங்கள் இன்றியும், விருப்பு வெறுப்புகள் இன்றியும், சிந்தனை உலகில் மேற்கொண்டிருக்கும் பயணத்தை இவர் எழுத்துகள் காட்டுகின்றன.

தளையசிங்கத்தின் சிந்தனையின் மையம் என்ன ? அந்த மையத்தில் நாம் காண வேண்டிய சிறப்பு என்ன ?

பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு மனித ராசியை நகர்த்துவதற்கு இன்று வரையிலும் நம்மை வந்து எட்டியிருக்கும் தத்துவங்களின் போதா மையை இவர் ஆராய்கிறார். மனிதனின் மிக முக்கியமான ஒரு கூறு அவன் தன் சுயநல வட்டங்களிலிருந்து எப்போதும் வெளியே சாடித் தனது வீச்சைப் பெருக்கியும் அகலப்படுத்தியும் வைத்துக்கொள்வதில் நிறைவு காண்கிறான் என்பதாகும். இம்முனைப்பு நபருக்கு ஏற்ப அண்டை வீடு வரையிலுமோ பிரபஞ்சத்தின் எல்லை வரையிலுமோ விரிகிறது. மனித வளர்ச்சிக்கு இந்த அம்சம் ஆற்றியுள்ள பங்கு மிகப் பெரியது. தனக்கும், பிற ஜீவராசிகளுக்கும், இயற்கைக்கும், பொருளுக்கும் பொதுவான ஏதோ ஒன்று இருப்பதான உணர்வு வெளிப்படுவதின் உருவங்களே சுயத்தைத் தாண்டி நிகழும் யாத்திரைகள். இதை வசதிக்காகப் பிரபஞ்ச உணர்வு என்று சொல்லலாம். இப்பிரபஞ்ச உணர்வின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உந்துதல் எப்போதும் மனிதனை ஆட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வுணர்வு மனிதனுக்கு இருப்பதுவரையிலும் பெளதிகத் தேவைகளின் நிறைவேற்றங்களை அவன் தனது பயணத்தின் இறுதி இலட்சியமாகக் கொள்ள வாய்ப்பில்லை. பெளதிகத் தேவைகள் நிறை வேறிய பின்பும் பரிணாமம் தொடரும்-அதன் போக்கு இன்றைய நம் அனுமானத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும்.

இன்று உலகெங்கும் வியாபித்திருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றால் அப்பிரச்சனைகளின் முழுமையை ஆராய்ந்து அறியும் ஆற்றலை நாம் பெற வேண்டும். இந்த ஆற்றல் இன்று நமக்கு இல்லை. சார்ந்து நிற்கும் தளங்களின் கருவியாகப் பயன்படுவது நின்று, தளங்களைக் கருவியாகப் பயன்படுத்தும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ள இன்று நமக்குத் தெரியவில்லை. முதலில் இச்சுதந்திர நிலை உருவாக வேண்டும். பிரச்சனைகளின் முகங்களைத் தத்துவம் அவதானிக்கும்போது காலம் நின்றுகொண்டிருப்பதில்லை. நகரும் காலம் தத்துவம் அவதானிக் காத புதுப் பிரச்சனைகளை எப்போதும் கொண்டு வருகிறது. இவற்றையும் சேர்த்துச் சிந்திப்பதற்குத் தத்துவ அறிவும் தத்துவத்திலிருந்து பெறும் விடு தலையும் தேவையாகின்றன. தத்துவ அறிவு புலமையைச் சார்ந்தது எனில் தத்துவத்திலிருந்து பெறும் விடுதலை படைப்பு மனத்தைச் சார்ந்தது. படைப்பு மனமற்ற புலமை இன்றையப் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திப்ப தான பாவனையில் நேற்றைய சரித்திரத்தைக் கிளறிக்கொண்டிருக்கிறது. படைப்பு மனங்களோ அவை எத்தளத்தைச் சார்ந்து இருப்பினும், பிரச் சனைகளின் முதல் பதிவுகளை நிகழ்த்துவதற்குக் காரணம் அவை நேற்றைய சுமையிலிருந்து விடுதலை பெற்று நிற்பதாகும்.

அடுத்து மனிதனின் மனம் சம்பந்தப்பட்ட தடை. இன்று மனிதன் தன்னைப் பற்றி முழுமையாக அறியவில்லை. மனத்தைப் பற்றிய பெளதிக சித்தாந்தங்களின் செல்வாக்கில் இதை அறிந்துகொள்வதற்கான முயற்சி களும் பின்தள்ளப்பட்டுவிட்டன. புற உலகுக்கும் மனத்துக்கும் தவிர்க்க முடியாத இணைப்புகள் உள்ளன. ஒன்றில் நிகழும் மாற்றங்கள் மற்றொன் றைப் பாதிக்கக் கூடியன. இருப்பினும், மனத்தைப் புற உலகின் தவிர்க்க முடியாதத் தொகுப்பாக மட்டும் கருதுவதில் விடுதல்கள் உள்ளன. இந்த விடுதல்கள் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி நிச்சயமான ஆராய்ச்சி யிலிருந்துகூட நிச்சய பலன்களைப் பெற முடியாமல் தடுத்துக்கொண்டிருக் கின்றன. மனத்தின் மிகச் சுருக்கமான பகுதியோடு கொண்டிருக்கும் தொடர்பையே ‘நான்’ என எண்ணி இயங்குகிறான் மனிதன். மனத்தின் சிறு பகுதிக்குச் சுதந்திர இயக்கம் இல்லை. மறைந்து நிற்கும் பெரும் பகுதி சிறு பகுதியை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இது பற்றிய அறிவு மேற்கிலும் கிழக்கிலும், சுய ஆய்வு மூலமோ புறப் பரீட்சைகளின் மூலமோ தொகுக்கப்பட்டு உண்மைகள் வெளியாகிவிட்டன. மனிதனை ஆட்டிப் படைக்கும் சக்தி, அதிகாரத்திற்கான உந்துதல் எனவும், பாலுணர்ச்சி எனவும், மத உணர்வுகள் எனவும் ஆராய்ச்சி விரிந்துகொண்டுபோகிறது. ஆகவே, மனிதன் தன் மனத்தை முழுமையாக அறியாமல், அதன் விருப்பு வெறுப்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது. இவ்விருப்பு வெறுப்புகளை அறியாத நிலையில் அவனுக்கும் உண்மைக்குமான தொடர்புகள் மங்கலா கவோ, மறைந்தோ, மாறாட்டமாகவோதான் இருக்க முடியும். புற உலகத் தின் விளைவாக மட்டுமே மனத்தைப் பார்ப்பதும், புற உலகு மாறும்போது மனத் தொகுப்பு அதற்கேற்ப இயற்கையான மாற்றம் கொள்ளும் என முடிவு கட்டுவதும் முழுமையான உண்மை அல்ல என்பது இன்று தெளி வாகிவிட்டது. மேலே கூறிய இடைவெளிகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முற்பட்டமையே தளையசிங்கத்தின் சிந்தனையின் மையம் என நாம் கொள்ள வேண்டும்.

பரிணாமத்தின் அடுத்த கட்டமான சத்திய எழுச்சிக்கு மனித ராசியை நகர்த்த, புற உலகையும் அக உலகையும், பொருளையும் மனத்தையும், சமயத்தையும் விஞ்ஞானம் உள்ளிட்ட பிற அறிவுத் துறைகளையும் இணைத்து, அனைத்திலும் அழுகிப்போன பகுதிகளைக் கழித்து, ஜீவனுள்ள பகுதிகளைச் சேர்த்து புதுக் கண்டுபிடிப்புகளையும் உடனுக்குடன் அணைத்தபடி இறுக்கமற்ற சில சிந்தனைகளை வடிக்க அவர் முயல்கிறார். இவை அவரது எழுத்துகளில் நான்கு பகுதிகளாகப் பிரிகின்றன.

1. இன்றைய அதிருப்தி நிலை பற்றிய விவரிப்பு.

2. இன்றுவரை வந்துள்ள தத்துவங்களின் குறைகளும் போதாமைகளும்.

3. சமயத்தின் ஜீவனைப் புதுப்பித்தல்.

4. புதுப்பித்த சமய நோக்கின் ஜீவனையும் அறிவுத் துறைகளையும் இணைத்தல்.

தளையசிங்கத்தின் கவனம் பெருமளவு மார்க்சியவாதிகளுடன் சம்பாஜணைகள் நிகழ்த்துவதிலேயே இருக்கிறது. உண்மையைத் தேடும் மனத்தின் பக்குவம் நிறைந்த சம்பாஜணைகள் இவை. இந்த சம்பாஜ ணைகள் பொதுவுடைமைப் புரட்சிக்குப் பிந்திய அரை நூற்றாண்டுச் சரித்திரத்தை நுட்பமாக எதிர்கொண்டதன் விளைவுகளாகும். லட்சியவாதிகளையும் புது உலகம் மலரக் கனாக் கண்டவர்களையும் பார்த்து சரித்திரம் மிகக் கொடுமையாகச் சிரித்த காலப்பகுதி இது. தளையசிங்கத்தை எதிர்கொள்ள வரும் மார்க்சியவாதிகள், இக்காலச் சரித்திரம் அளித்த ஏமாற்றங் களையும், கொடுமைகளையும், தளையசிங்கம் தன் மூளையின் பின்பகுதியில் சுமக்கிறார் என்பதை உணர வேண்டும். இக்காலப் பகுதியின் ஊனங்களை ஏற்றுக்கொள்ளும் மனங்களே தளையசிங்கத்துடன் மறு சம்பாஜணை நிகழ்த்த முடியும். இக்காலப் பகுதி அளித்த ஏமாற்றங்களையும் கொடுமைகளையும் விவரித்துப் பேச தளையசிங்கம் மறுத்திருப் பதிலிருந்து கட்சி-எதிர்க்கட்சியாடும் கொண்டாட்டம் அல்ல அவருடைய உந்துதல் என்பதும், சரித்திரத்திலிருந்து படிப்பினைகள் கற்று மேற்கொண்டு சிந்தித்துப் புதிய சரித்திரத்தை உருவாக்கும் தர்மத்திலேயே தன்னை அவர் பிணைத்துக்கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவரும். இக்காலச் சரித்திரத்தின் ஏமாற்றங்கள் ஒருவன் மனத்தில் உறையும்போது தத்துவங்கள் தன்னளவில் வலுவற்றவை என்பதும், அதோடு உறவுகொள்ளும் மனிதனின் நற்பண்புகளுக்கு ஏற்றவாறுதான் அவை பயன்படுகின்றன என்பதும் அழுத்தம் பெற்றுவிடுகின்றன. சீரழிந்த மனிதன், பெரும் தத்துவங்களைத் தான் ஸ்பரிசித்த மாத்திரத்தில் சீரழித்து நாற அடித்ததையும், பொதுப் புத்தியும் எளிய உண்மையுணர்வும் மட்டுமே கொண்டவன் இவற்றிலிருந்து கூட சிறு மலர்களைப் பூக்க வைத்துக் காண்பிப்பதையும் இன்று எல்லாத் துறைகளிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தத்துவம் எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு முக்கியம் மனிதப் பண்பு என்றாகிவிட்டது. ஏட்டிலிருந்து மண்ணிலிறங்க வேண்டிய நற்பண்பைத் தத்துவம் அளிக்க இயலவில்லை என்றும் ஆகிவிட்டது. எளிய நற்பண்புகளிலிருந்து அகமலர்ச்சி என்ற தளத்திற்கு விரியும்போது தத்துவத்திலிருந்தும் புற உலகத்திலிருந்தும் மனிதன் சுவீகரித்துக்கொள்ளும் உண்மைகளின் ஆற்றலும் மிக அதிகமாகவே இருக்கும். இந்த வளர்ச்சியை அடைந்து மனிதராசி முழுமையும் அதன் பயனைப் பெறவேண்டும் என்பதே தளையசிங்கத்தின் குறிக்கோள்.

தளையசிங்கத்தின் சிந்தனைகள் எந்த அளவுக்கு நிறைவேற சாத்தியம் கொண்டவை ?

இன்று இவருடைய சிந்தனைகள் ‘உட்டோப்பியா’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியவை. ‘மண் வாடையற்ற கனவு’ என்ற அர்த்தத்தில் நான் இதைப் பயன்படுத்தவில்லை. தம் காலத்திய உலகு பற்றிய பிரக்ஞையுடன் அறிவுவாதங்களுக்கும் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டு இந்த உட்டோப்பியாவை முன்வைத்திருக்கிறார் தளையசிங்கம். எந்தக் கோட்பாட்டிலுமே-அது வாழ்வில் அமலாவதற்கு முன்-அதன் நடைமுறை சாத்தியமற்ற பகுதிகள் சிலிர்த்துக்கொண்டு நிற்கும். நாம் விழுந்து கிடக்கும் பள்ளமோ சிறு லட்சியங்களைக்கூடச் செயல்படுத்த இயலாது என்ற மனச்சோர்வைத் தருவதாக இருக்கிறது. ஞானிகள் பெற்ற சத்திய எழுச்சியை முழு மனித குலமும் பெறவேண்டும் என்ற லட்சியம், செல்லவேண்டிய பாதைகள் பற்றிய விவரிப்போ குறிப்போ அற்ற நிலையில், கனவாக நிற்கிறது. எங்கு ஆரம்பித்து என்னென்ன செய்து எவ்வழி சென்றால் லட்சிய நிறைவேற்றம் பெறமுடியும் என்ற திகைப்பு ஏற்படுகிறது. கருத்துகளை மனித மனங்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகங்கள் முற்றாக அழுகிப் போய்விட்ட நிலையில் எவற்றை நம்பி இயக்கத்தை ஆரம்பிப்பது ? இந்த நடைமுறைப் பிரச்சனைகளைத் தளைய சிங்கம் எதிர்கொண்டதாகத் தெரியவில்லை. ஆத்மார்த்தமான மனங்கள் பிரச்சனையின் தீவிரத்தை உணரும்போது ஏதோ ஒரு மையத்திலிருந்து இயக்கம் ஆரம்பம் கொண்டு அதன் பார்வை விகாசத்தினால் படரும் என அவர் கருதியிருக்கக் கூடும். அவரது வாழ்க்கைக் குறிப்பும் அவர் பின்பற்றிய நடைமுறை இதுதான் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

பிரபஞ்ச உணர்வுகள் ஞானிகளுக்கு அடுத்தாற்போல் படைப்பாளிகளிடையே வெளியாகும் என அவர் கருதியதால் இலக்கியம் பற்றிய தன் எண்ணங்களையும் வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் காலத்தில் உள்ளுணர்வுகள், அறிவு வாதம் இவற்றின் பலத்தை ஆதாரமாகக் கொண்டு பிரத்தியட்ச உலகம் சாராத கற்பனைகளை ஒதுக்கி நடைமுறை வாழ்வு உண்மையின் தளத்தில் சோதிக்கப்பட வேண்டும் என்கிறார். இவ்வாறு தனது புதிய இலக்கியக் கோட்பாட்டைத் தளையசிங்கம் வரையறுக்கும் போது இன்று வரையிலும் வந்து சேர்ந்துள்ள இலக்கியம் இவ்வுண்மைகளைப் பின்பற்றி இயங்காததன் மூலம் உலகத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்றும், ‘மெய்யுள்’ சார்ந்த வழியிலேயே இயங்கியிருந்தால் பெரும் ஆக்கங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் இவர் நம்புகிறார். இந்நிலை பற்றி நாம் யோசிக்க வேண்டும்.

இலக்கியத்திற்கு வாழ்க்கைதான் அடிப்படையாக இருக்கிறது. பயணங்கள் வாழ்வின் தளத்திலிருந்துதான் மேற்கொள்ளப்படுகின்றன. கலைஞனின் ஆற்றலுக்கு ஏற்ப, உள்ளுணர்வுகளுக்கும் புற உலக அறிவுக்கும் ஏற்ப யாத்திரை விரிவடைகிறது. சுய அனுபவத்திலிருந்து, சுய அனுபவத்தின் தெளிவற்ற கோலத்திலிருந்து, முன்னுக்குப் பின் முரணான கோலத்திலிருந்து, முழுமையற்ற கோலத்திலிருந்து உண்மைகளைத் தேடித் தொகுத்து வாழ்க்கை பற்றிய தன் பார்வையை முன்வைத்துச் செல்லும் யாத்திரை இது. இவ்வாறான தொகுப்பில் கற்பனையின் தீண்டல் தவிர்க்க முடியாதது. ‘இவ்வாறு நிகழவில்லை’ என்பதில்தான் படைப்பு கற்பனையே தவிர, ‘நிகழ்ந்ததில் நான் கண்டது இதுதான்’ என்ற ஆசிரியரின் கூற்றில் ‘இதுதான்’ அவனது அனுபவ உண்மை. புற உலகம் அதன் தெளிவற்ற நிலையில் தறிகெட்ட கற்பனையாகவும், படைப்பு உலகம் கலைஞனின் பார்வையால் கூடும் ஒருமை உணர்ச்சியில் உண்மையாகவும் நிற்கிறது. படைப்பு, சரித் திரம் அல்லதான். ஆனால் சரித்திரம் எப்போதும் இலக்கியப் படைப்பு களில்தான் மனிதத் தன்மை பெறுகிறது. ஒரு தேசத்தைப் பற்றிய புரிதலில் சரித்திரம் தராத ஒரு பரிணாமத்தை இலக்கியம் எப்போதும் தந்து கொண்டிருப்பது இதனால்தான்.

இலக்கியம் சார்ந்து பேசும்போது உண்மையின் தொகுப்புக்குக் கற்பனை யைச் சார்ந்து நின்ற கலைஞர்களை ‘மெய்யுள்’ முன்னால் வைத்துப் பின்தள்ளுவது சாத்தியமற்றதாகவே இருக்கிறது. ‘மெய்யுள்’ வரையறுக்கும் கருத்தோட்டம் இலக்கியத்தைப் போலி செய்யும் எழுத்துகளுக்கு முன்னால்தான் வலுப்படக் கூடியது. இங்கு கற்பனை, இலக்கிய நோக்கத் திற்கு நேர் எதிரான நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெய்யான கலைஞன், வாழ்வின் சத்தியத்தைத் தொகுத்து மயக்கத்தை அகற்றும்போது, போலி, வாழ்வின் தெளிவற்ற நிலையைப் பயன்படுத்தி அவற்றில் கனவைக் கலந்து மயக்கங்களை உருவாக்குகிறான். இப்போலிகள் தங்கள் கீழான தொழிலை உதறி, அன்றாட வாழ்வைச் சார்ந்த பொருள் பொதிந்த நிகழ்வுகளைத் தேர்ந்து, அவற்றை உண்மையின் தளத்தில் வைத்து ஆராய முற்படுவார்கள் என்றால், அவை சமூக ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாக இருக்கும். நாம் படித்துப் பார்க்கக்கூடியதாகவும் அவை இருந்துவிடக்கூடும். தளையசிங்கமே எழுதிக் காட்டியுள்ள ‘கலைஞனின் தாகம்’ என்ற நாவல், எப்படி சாதாரண உலக நிகழ்வும், கற்பனை தவிர்த்து, உண்மையின் தளத்திற்கு நகர்த்தப்பட்டு, விருப்பு வெறுப்பற்ற மனங்களின் ஆராய்வுக்கு உட்படும்போது முகத்திரைகள் வரிசையாகக் கிழிபட, கண்டுபிடிப்புகள் வெளிப்படுவதிலுள்ள ‘உயர்நிலைப் பரபரப்பு’ ஏற்படுத்தச் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. ஆனால் இது போன்ற முயற்சிகள் பெரிய குரல்கள் சாதித்துள்ள கற்பனை சார்ந்த படைப்பின் முன்னால் பின் தங்கியே நிற்கும். ஏனெனில் மெய்யுளில் ஆய்வு இருக்கிற அளவு புனர்படைப்பு இல்லை. புனர்படைப்பு கற்பனையின் துணை இழந்து நிகழ்த்தக்கூடியதும் அல்ல.

இனி உருவ உள்ளடக்கங்கள் பற்றி. உள்ளடக்கமே உருவத்தைத் தீர்மானிக்கிறது என்ற சரியான நிலையிலிருந்து தன் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு போகிறார் தளையசிங்கம். சோவியத்தில் புரட்சிக்குப் பின் புதிய உருவங்கள் ஏற்படாததால் அங்கு புதிய உள்ளடக்கமும் ஏற்படவில்லை என்ற முடிவுக்கு வந்து, கலையில் புதிய உள்ளடக்கத்தையும் அதனால் புதிய உருவத்தையும் பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றங்கள் நிகழ்த்தாது என்றும், சிந்தனையில் ஏற்படும் புரட்சியே இலக்கியத்திலும் புரட்சி ஏற்படுத்தும் என்றும் கூறுகிறார். இவர் ஒரு விமர்சகனாகச் செயல்படுவதில் முழு முனைப்பு கொண்டவரல்லர். இலக்கிய விமர்சனத் தில் ஆரம்பித்துத் தத்துவவாதியாக உருக்கொள்ளும் திசையே இவருடைய போக்கு. இலக்கியப் படைப்புகள் பற்றிய இவரது முடிவுகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள முடியாதபடியே இருக்கின்றன. இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

படைப்பின் உள்ளடக்கத்தை அலசி ஆராயும் முடிவுகள் சிந்தனை உலகைச் சார்ந்த விஜயம். இலக்கிய விமர்சனம் அல்ல. படைப்பில் உள்ளடக்கத்தைப் பார்ப்பது உள்ளடக்கத்தைப் பார்ப்பதாகுமே தவிர படைப்பைப் பார்ப்பதாகாது. உள்ளடக்க ஆராய்ச்சியில் படைப்பு கீழ்நிலைக்கு இறக்கப்படுகிறது. படைப்பில் உள்ளடக்க உருவக்கூறுகள் உருகி இறுகி புதிய வடிவம் எடுத்துவிடுகின்றன. இந்த வடிவத்தைச் சிதைக்காமல் இதன் கூறுகளைப் பிரிக்க முடியாது. இம்முழுமையை மறந்து படைப்பின் உள்ளடக்கத்தை மட்டும் கருதி ஒரு படைப்பை ஏற்பதும், உள்ளடக்கத்தில் கொள்ளும் கருத்து வேற்றுமையினால் கருத்தொற்றுமை கொண்ட மற்றொரு படைப்பை முந்தைய படைப்புக்கு மேலாக வைப்பதும் மிகத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். சத்திய எழுச்சியின் தோற்றத்தை ஷெயகாந்தன் வெளிப்படுத்துகிறார் என்ற முடிவில் நின்று, நிதர்சனத்தில் அவலத்தை முன்வைத்த புதுமைப் பித்தனை முன்னவரின் பின்னே தள்ளுவது ஒரு உதாரணம். சத்தியத்தின் தளத்தில் புதுமைப்பித்தன் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத கலை உறவுக்கும், தன் விருப்பங்களைப் புற உலகில் படியவைத்துக் கதைகளை ‘உருவாக்கும்’ ஷெயகாந்தனுக்குமுள்ள வேற்றுமையை அறியாமல் போனது உள்ளடக்க ஆராய்ச்சி சார்ந்து படைப்பை மதிப்பிட்டதில் பெற்ற கோணலாகும்.

ஒரு விவாதத்திற்கான குறிப்புகளாக இந்த எண்ணங்களை முன் வைத்திருக்கிறேன்.

கோவை ‘இலக்கு’ மாநாட்டில் படித்த கட்டுரை, 1982

***

திண்ணை குறிப்பு:

( மு தளையசிங்கம் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரை ‘காற்றில் கலந்த பேரோசை ‘ தொகுப்பில் உள்ளது. மு தளையசிங்கம் பற்றிய விவாதத்தில் சர்ச்சிக்கப் படும் இந்தக் கட்டுரையை திண்ணை வாசகர்கள் படிக்கக் கூடும் என்றால் , வாசகர்கள் விவாதத்தின் சரடுகளைப் புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும் என்று எண்ணினோம். திண்ணை ஆசிரியர் குழு இந்தக் கட்டுரையைப் பிரசுரிக்க அனுமதிக்கும்படி சுந்தர ராமசாமியைக் கேட்டுக் கொண்டது. அனுமதி அளித்த சுந்தர ராமசாமிக்கும் , ‘காலச்சுவடு பதிப்பகத்தி ‘ற்கும் திண்ணை வாசகர்கள் சார்பில் திண்ணை ஆசிரியர் குழுவின் நன்றிகள்.)

Series Navigation