தமிழைப் பாடு நீ!

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

கரு.திருவரசு,


செந்தமிழின் சந்தநலம்
சிந்துகின்ற துறையிது!
சிந்துநடை முந்துமனச்
சீர்வரிசைப் பொருளிது!
அந்தரத்தில் அந்தரங்க
ஆன்மசுகம் தருவது!
சொந்தமென வந்தவர்க்குச்
சுந்தரத்தேன் சொரிவது!

வல்லினத்தின் வலிமையோடு
நல்லியலைச் சொல்லியும்
மெல்லினத்தின் மென்மையோடு
மேடைநடிப் பாடியும்
வல்லினமும் மெல்லினமும்
மருவிவரும் இடையினம்
நல்லிசையால் முத்தமிழில்
நடுவிருக்கும் நாயகம்!

ஏழுவகைச் சுரம்பாடி
எட்டுத்திசை எட்டலாம்!
தாளவகை தெரிந்துகொண்டால்
தட்டின்றித் தட்டலாம்!
காலவகை இசையிலுண்டு
காலம்விட்ட தமிழனே
ஞாலமுடி மேலெழுந்து
நடுத்தமிழைப் பாடுநீ!

thiruv@pc.jaring.my

Series Navigation