தமிழாசிரியர்கள் என்ன செய்யலாம் ? : கனல் மைந்தன் கவனத்திற்கு

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

சின்னக் கருப்பன்


கனல் மைந்தன் சொல்வது இது :

1) ‘பெரும் பேராசிரியர்கள் இந்த அரங்கில் நடத்தும் தனிப்பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், தமிழ் என்ற நுகர் பொருளை, ஒரு புதிய வாணிகப்பண்டத்தை எப்படி காசாக்கிக் கொள்ளலாம் என்று முனைவது தெரிகிறது…

2) ‘தமிழ் இணையப் பல்கலைகழகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அதன் வழியாக உலகத் தொடர்புகளைப் பெருக்கிக்கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதையெல்லாம் பொருள் விற்பனை நோக்கத்தோடுதான் பேசப்படுகின்றன.

3) ‘ஆங்கிலக்கல்வியின் ஆதிக்கத்தால், தங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலம் அமைய ஆங்கிலக்கல்வியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களாகவும் தமிழாசிரியர்கள் இருக்கிறார்கள்.

4) ‘உலகமயமாதல் என்ற பிரம்மாண்டமான சக்தி இப்போது ஒரு ரத்தக்காட்டேரி போல தேசிய இனங்கள் மொழிகள், அடையாளங்கள் பண்பாடுகள் எல்லாவற்றையும் அழிக்க முற்படுகின்றது. இதற்கு எதிர்ப்பாக தேசிய இனங்களின் எழுச்சிதான் பேரியக்கமாக உருவாகும்.

5) ‘தமிழ் ஊடகங்கள் நுகர்வுக் கலாச்சாரத்துக்கே சேவை செய்கின்றன. ‘

****

தமிழாசிரியர்கள் திராவிட இயக்கத்துக்கு பெருத்த ஆதரவு தந்து, அதன் அறிவுஜீவி மூலதனமாக இருந்து அதனை வழி நடத்தினார்கள். ஆனால், திராவிட இயக்கத்தின் பின்னே இன்னொரு ஆதிக்க சாதிகள் தாம் இருந்தனவே அன்றி, தாழ்த்தப்பட்ட சாதிகளும் இல்லை, எல்லாத் தமிழர்களின் பிரதிநிதியாகக் கூட இல்லை என்பதை நான் இன்னொரு முறை சொல்ல வேண்டியதில்லை. தமிழாசிரியர்கள் தமிழ் பற்றிய அடையாளத்தை தமிழ்த் தேசிய அடையாளமாகக் காட்டி அதன் மூலம் இந்திய தேசிய அடையாளத்துக்கு மாற்றாக உருவாக்க ஒத்துழைத்தாலும், புதிய ஆதிக்க சாதிகள், பழைய ஆதிக்கச் சாதிகளை பதவி இறக்கம் செய்ததும், தமிழாசிரியர்கள் தேவைப்படவில்லை.

இப்போது குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் இவர்கள். இடது சாரி சிந்தனை வழியே, நுகர்பொருளாக தமிழ் ஆகக் கூடாது என்ற பார்வை மார்க்ஸியப் பார்வை அல்ல. தமிழைப் புனிதமாய்ப் பார்ப்பதும், இதனால் தமிழ் நுகர் பொருளாகக் கூடாது என்பதும் இவர்கள் பார்வை. நுகர்வுக் கலாச்சாரத்து எதிர்ப்பு என்ற போர்வையில் தங்களுக்கு இடம் கொடுக்காத வியாபாரங்களை வெறுப்பது என்றும், தங்களுக்கு இடம் இல்லாததால், ஆங்கிலக்கல்வியின் ஆதிக்கம் என்றும் புலம்புபவர்களாகவும் இருக்கிறார்கள்.

***

ஆங்கிலக்கல்வியை நாம் உதறி விடமுடியாது என்று மறுபடி கூறவேண்டிய அவசியமில்லை. சீனாவிலிருந்து, தெற்கு அமெரிக்கா வரை ஆங்கிலத்தில்தான் உயர் தொழில்நுட்பம் நடந்து கொண்டிருக்கிறது. அதனை உதறிவிடமுடியாது. அப்படி உதறிவிட்டுப் போக முடியும் என்ற கனவை, வட இந்திய இந்தி அரசியல்வாதிகள் கூட உதறிவிட்டார்கள். ஆங்கிலக் கல்வி என்பது தமிழ்ச் சிறப்புப் பெறுவதற்குத் தடையாக இருக்காது. அப்படி உயர்தொழில்நுட்பத்தை ஆங்கிலத்தில் சொல்லித்தராத சமூகங்களும் நாடுகளும் தொடர்ந்து நசிந்து கொண்டே இருக்கின்றன. பங்களாதேசும் பாகிஸ்தானும் சிறந்த உதாரணங்கள்.

***

உயர்தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் இருந்தாலும் தமிழாசிரியர்கள் செய்வதற்கு முக்கியமான வேலை இருக்கிறது. அது சிறந்த மொழிபெயர்ப்பாளர்களாகவும் மொழிபெயர்ப்பு வழிகாட்டிகளாகவும் ஆவது.

இன்றைக்கும் ஆங்கிலப் பேராசிரியர்களும், ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பவர்களும் செய்யும் முக்கியமான காரியம் மொழிபெயர்ப்புகளுக்கு உதவுவது. இன்றைக்கு ஏராளமான தமிழர்கள் இந்தியாவில் நடந்திருக்கும் தாராளமயமாக்கல் மூலம் வளமை பெற்றவர்களாக, நுகர்வுக் கலாச்சாரத்தில் இருக்கிறார்கள். இணையத்தில் இருக்கும் ஏராளமான தமிழ் தளங்களே, அவர்கள் தொடர்ந்து தமிழில் பலவற்றைப் படிக்க விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. தமிழில் வெளியிடப்படும் ஏராளமான புத்தகங்கள் வெகு விரைவில் விற்கின்றன. காலச்சுவடு நடத்தும் நிறுவனம் தமிழைப் பணம் பண்ணுகிறது என்பதில் நமக்கு சந்தோஷம் இருக்க வேண்டும். எத்தனைக்கு எத்தனை தமிழ்ப் புத்தகங்கள் விற்கின்றனவோ, அத்தனைக்கு அத்தனை நாம் மகிழ வேண்டும். தமிழ் சிறந்த நுகர் பொருளாவது மட்டுமல்ல, தமிழில் வரும் கதைகளும், கட்டுரைகளும், இலக்கியங்களும், அறிவியல் புத்தகங்களும் நுகர்பொருளாவதில்தான் தமிழின் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், இன்னும் இதர இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து இந்திய மொழிகளுக்கும் கலை இலக்கிய பரிவர்த்தனைக்கு தேவை இருக்கிறது.

அதையெல்லாம் விட எளிய தமிழில், பரவலாகப் படிக்கப் படக்கூடிய சிறந்த அறிவியல் புத்தகங்களின் தேவை மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.

அறிவியல் புத்தகங்கள் எல்லாம் தமிழில் வெளியிடுவதற்கு ஒரு காலத்தில் காகிதத்தின் கட்டாயம் இருந்தது. இன்றைக்கு இணையம் இருப்பதால், அந்த கட்டாயம் சற்றுக் குறைந்திருக்கிறது. தமிழில் அறிவியல் தளங்கள் மிக அதிகமான அளவில் வருவதன் மூலமாகத் தான், எதிர்காலத்து தமிழின் இருப்பு நிச்சயப்படும். இருப்பினும் இந்த நோக்கோடு விடாப்பிடியாக தமிழில் அறிவியலை எழுதி வரும் தமிழ்த்தளங்கள் மிகவும் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. தமிழில் அறிவியலை தொடர்ந்து எழுத வேண்டும் என்று விரும்பி எழுதிக்கொண்டிருப்பவர்களும் சிறிய எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.

தொடர்ந்து வளர்ந்துவரும் நம் சமுதாயத்தில், தொழில்நுட்பக் கருவிகள் அதிகம் உபயோகப்படுத்தப்படும் எதிர்காலத்தில், இருக்கும் தமிழைக் கொண்டு இலக்கியம் கூடப் படைக்க முடியாது. தொழில்நுட்ப வார்த்தைகள் தமிழில் இல்லையென்றால், சாதாரண வாழ்க்கையைக் கூட எழுத , பரிமாறிக் கொள்ள முடியாது.

இன்றைக்குத் தமிழில் இத்தனை செய்யப்பட்டிருக்கின்றதென்றால், அதன் காரணம் தமிழாசிரியர்கள் அல்லர். தமிழ் மொழி பேசும் அறிவியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும்தான் காரணம்.

****

ஆகவே, தமிழாசிரியர்கள் முதலில் ஆங்கிலம் படிக்க வேண்டும். அதனையும் மிகவும் நல்ல முறையில் உருப்படியாகப்படிக்கவேண்டும். அதன் பின்னர், அதில் அவர்கள் சிறந்ததெனக் கருதும் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். மொழிபெயர்க்க மொழிபெயர்க்கத்தான், ஒருவரது தமிழும் வளம் பெறும், அவரது ஆங்கிலமும் வளம் பெறும். இன்றைக்கு இருக்கும் எல்லா தமிழாசிரியர்களும் ஆளுக்கு ஒரே ஒரு நூலை எளிய தமிழில் மொழிபெயர்த்தால், தமிழில் இருக்கும் சிறந்த புத்தகங்களின் எண்ணிக்கை வெகு விரைவிலேயே உச்சத்தை எட்டிவிடும். அந்தப் புத்தகம் இலக்கியமாய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமூகவியல், குழந்தை நூல், அறிவியல், வரலாறு என்று எதுவாகவும் இருக்கலாம். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று ஒரு உண்மையான தமிழர் பாரதியார் ஆசைப்பட்டிருக்கிறார். அரசாங்கம் செய்யும் என முயற்சி செய்து நடத்திய இயக்கங்களின் விளைவாக, தமிழை முதன்மைப் படுத்தும் அரசுகளை கடந்த 30 வருடங்களாக தமிழ்நாடு பெற்றிருக்கிறது. அதனால் எந்த பயனும் விளையவில்லை என்பதை நீங்களே சொல்கிறீர்கள். அரசாங்கத்தின் இணைய தளத்தில் கூட தமிழைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. திராவிடக் கட்சிகளுக்கு, ஒரு தேசியக் கட்சியிலிருந்து இன்னொரு தேசியக் கட்சிக்கு கூட்டு மாறவும், வழக்குகளை தள்ளிப்போடவும்தான் தமிழ் பயன்பட்டிருக்கிறது. ஆக, இதுவரை நடந்த புரட்சிகள் மூலமாக பயனில்லாத போது, எதிர்காலப் புரட்சிகள் மூலம் என்ன பயன் இருக்கும் என நினைக்கிறீர்கள் ? ஆனால் அந்த புரட்சிக்கு தனி நபர்கள் உலகெங்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்விட்சர்லாந்தில் வேதியியல் பேராசிரியராக இருந்து கொண்டே ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்களை இணையத்துள் கொண்டுவந்த கலியாணசுந்தரம், அவரது சகாக்களும், அவரைப் போன்று, இணையத்தில் தமிழ் இருக்க வேண்டும் என்று முனைந்திருப்பவர்களும் எந்த புரட்சிக்காகவும் காத்துக்கொண்டிருக்கவில்லை. இவர்கள் செல்லும் பாதையில் தான், இவர்கள் பின்னால்தான் அரசாங்கமும் மற்ற நிறுவனங்களும் வருகின்றன என்பதைப் பாருங்கள்.

இணையம் வெகுவேகமாக தமிழ்நாட்டில் பரவி வருகிறது. இது வெகுவிரைவில் ஒவ்வொரு கிராமத்தையும் எட்டிவிடும். ஒரு கணினித் திரைக்குள் உலகத்தின் அனைத்து இலக்கியங்களும், அறிவியல் விஷயங்களும் தமிழில் இருக்கின்றன என்பதைப் போல சிறந்த செய்தி வேறென்ன இருக்க முடியும். ? இப்படிப்பட்ட ஆக்கங்களுக்காக ஒரு சந்தையை உருவாக்க முடிந்தால் அது நேர்மையாய்ப் பணம் பண்ணும் வழியாகவும் ஆகக் கூடும்.

அப்படிப்பட்ட உலகத்தின் சிறந்த புத்தகங்களைப் படித்துவிட்டு பிறகும் தமிழர்கள் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டமாட்டார்கள். தலைவனுக்காகத் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள்.

தமிழ் நுகர்பொருளாவது பற்றி கவலைப்படத் தேவையில்லை. சந்தோஷம் கொள்ள வேண்டிய விஷயம். தமிழ் தரமான நுகர்பொருளாக ஆவதற்கு தமிழாசிரியர்கள் உழைக்க வேண்டும்.

***

karuppanchinna@yahoo.com

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்