தனுஷ்கோடி ராமசாமி யின் ‘தீம் தரிகிட ‘- சிறுகதைத் தொகுப்பு சுட்டும் மனித உரிமை மீறல்களும், அதற்கான தீர்வுகளும்.

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

முனைவர் மு. பழனியப்பன்


இலக்கியங்கள் சமூக ஆவணங்கள் ஆகும். குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் இலக்கியங்கள், அக்கால கட்டத்தில் நிகழும் சமூகச் சிக்கல்களையும், அவற்றிற்கானத் தீர்வுகளையும் எடுத்துரைப்பனவாக உள்ளன. குறிப்பாக தற்கால நாவல், சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்கள் தற்காலச் சமுதாயத்தைப் பெரிதும் சித்திரிப்பனவாக உள்ளன.

தீம் தரிகிட- சிறுகதைத் தொகுப்பினை எழுதியவர் தனுஷ்கோடி ராமசாமி ஆவார். ஆனந்த விகடன், தாமரை, செம்மலர் ஆகிய இதழ்களில் வெளிவந்த பத்துக்கதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக இத்தொகுப்பு உள்ளது. இவர் சாத்தூரில் வாழ்ந்தவர். சிவகாசிக்கு அருகில் இவர் வாழ்ந்ததால் இவரது கதைகள் பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர் சிக்கல்கள் பற்றியனவாக உள்ளன. மேலும் இவர் தமது படைப்புக்களை தோழமை உணர்வோடு, அரசியல் கலந்து படைத்தவராகவும் உள்ளார். இயல்பாக இவரது கதைகளில் மனித உரிமை மீறல்கள் அதிகம் சுட்டப் பெறுகின்றன. அதற்கு மேற்கண்ட சூழல்கள் காரணமாக இருக்கலாம். இவர் மீறல்களைக் காட்டுவதுடன் அதற்கானத் தீர்வுகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளின் மையக்கருத்தை முதலில் அறிந்து கொள்வது இக்கட்டுரைக்கு வலு சேர்க்கும். எனவே இத்தொகுப்புள் அடங்கியுள்ள கதைகளின் மையக்கருத்து பின்வருமாறு.

1. தூ

அதிகாரியின் மனைவி வெளியூர் போவதற்குப் பேருந்து நிறுத்தம் வரை காவலாகப் போகும் தொழிலாளி ஒருவரின் மனநிலையினை விளக்கும் கதை.

2. பரவசம்

நான்கு தங்கை, ஒரு தம்பியுடன் பிறந்த பெண்ணொருத்தி அவர்களை முன்னேற்ற முயலும் பாங்கினை கூறும் கதை.

3. சுதந்திரம் சிறையிலே

ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகிச் சிறையில் இருக்கும் ஒரு ஆசிரியரின் தாய் இறந்து போக, அவருக்கும் ஏற்படும் வேதனைகள், மற்றவர்களின் உதவிகள் ஆகியன குறித்த கதை.

4. அந்தக் கவிதை நினைவில் நிற்கும்

இளமைக் காலத்து நண்பர்களாக இருந்த ஒரு ஆணும், பெண்ணும் பெண்ணின் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் சந்திப்பும், அதனால் ஏற்படும் விளைவுகளும் பற்றியது

5. கந்தகக் கிடங்கிலே

தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைபார்க்கும் சிறுவனின் துயரம் உரைப்பது.

6. அந்த அழகு

தன் மனைவியின் மீது சந்தேகம் கொள்ளும் சராசரிக்கும் கீழான கணவனின் இழிநிலையை விவரிக்கும் கதை.

7. பிரவாகம்

காதல் தோல்வியால் வைகை வெளிளத்தில் கலக்கும் இளைஞனின் கதை கூறுவது.

8. நேசம்

சமூக இன்னல் களையப் போராடும் இளைஞனின் ஒருதலைக் காதல் பற்றியது.

9. உலகையே ஒரு பூவாக்கி

தாள் திருத்தும் பணியின் போது ஒன்று சேரும் தமிழாசிரியர்களில் ஒருவர், அங்கு வந்திருந்த கிறித்துவ பாதிரிப்பெண் ஒருவர் மீது தான் கொண்ட காதலை, மறைவின்றித் தெரிவிக்க – ஏற்படும் குழப்பத்தை உணர்த்தும் கதை.

10. தீம் தரிகிட

இளமையில் தனக்கு ஏற்பட்ட அவலநிலையை, ஏழ்மைநிலையை எண்ணிப்பார்க்கும் ஒரு அதிகாரியைப் பற்றியது.

இப்பத்துக் கதைகளையும் அதனதன் தன்மை கருதி கீழ்க்காணும் வகையுள் அடக்க இயலும்.

1. குழந்தைத் தொழிலாளர்க்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களும், தீர்வுகளும்.

2. போராடும் அமைப்புகளில் பங்கேற்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களும், தீர்வுகளும்.

3. பெண்கள் மீதான மனித உரிமை மீறல்களும் , தீர்வுகளும்.

என்ற மூன்று பிரிவுகளில் இக்கதைகளை, இக்கட்டுரை ஆராயத் தலைப்படுகின்றது.

இப்படைப்பாளர் ஒரு ஆசிரியராகவும், குழந்தைத் தொழிலாளர் சிக்கலுள்ள ஊரின் அன்மையராகவும், பெண் முன்னேற்றக் கருத்தினராகவும் இருந்ததால் மேற்கண்ட மூன்று இயல்புகளும் இவரிடம் காணப்பெறுகின்றன.

1. குழந்தைத் தொழிலாளர்க்கு ஏற்படும் மனித உரிமைச் சிக்கல்களும் தீர்வுகளும்.

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமையுண்டு. அதை மறுத்து அவர்களைத் தொழிலாளிகளாகப் பயன்படுத்துதல் என்பது மிகப் பெரியக் குற்றமாகும். இருப்பினும், அதிகக் குழந்தைகளுடையக் குடும்பங்கள் பொருளாதார நலிவில் இருந்துத் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களைத் தொழில்களுக்கு அனுப்ப முயலுகின்றன. இதன் காரணமாக கல்வியினை இழந்து, மதிய உணவை இழந்து, காலை முதல் மாலை வரை நொடியளவு நேரம் கூட ஓய்வில்லாது உழைக்க வேண்டியக் கட்டாயத்திற்கு சிறுவர், சிறுமியர்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் குழந்தைத் தொழிலாளர் சிக்கலுள்ள பகுதிகளில், எதிர் காலத்தில் படித்த தலைமுறையினரே இல்லாத அபாயம் ஏற்பட்டுவிடக்கூடும்.

சிவகாசிக்கு அருகில் வாழ்ந்த இப்படைப்பாளர், தமது பல கதைகளைச் சிவகாசிக் களததிலேயே அமைத்துள்ளார். தூ- கதையில் வரும் மாரியம்மாவின் கணவன், சிறுவயது முதலே தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைப்பார்ப்பவனாக விளங்குகிறான். பரவசம்- என்ற கதையில் வரும் ராஜமணி, தனது நான்கு தங்கைகள், ஒரு தம்பியை தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டியவளாகிறாள். கந்தகக்கிடங்கிலே- என்ற கதை முழுக்கக் குழந்தைத் தொழிலாளர் வேதனையைப் படம் பிடிப்பதாக உள்ளது. இக்கதையில் வரும் பாலகிட்ணன், குழந்தைத் தொழிலாளியாக காலை நான்கு மணிக்குத் தீப்பெட்டித் தொழிலுக்குச் சென்று, இரவு எட்டுமணிக்கு வீட்டிற்கு வருகிறான். வீட்டுக்கு வந்ததும் குளித்தும், குளிக்காமலும் அவசர அவசராமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடுபவனாக உள்ளான். காலையில் மீண்டும் எழுவதும் போவதும் இதுவே அவனது வாழ்வாகின்றது. ஒருநாள் அவனது தம்பிக்கு உடல்நலம் சரியில்லாது போகின்றது. இதன் காரணமாக இவனுக்குக் கவலை அதிகரித்துத் தூக்கம் கெட்டுவிடுகிறது. காலையில் வேலையின் போதுத் தூங்கி விழுகிறான். இதனால் கோபமுற்ற கணக்குப்பிள்ளை இவனை அடிக்கின்றார். இவனது மண்டை புடைத்து இரத்தம் கசிகின்றது. அந்தநேரம் இவனது அம்மா முதலாளியிடம் அட்வான்ஸ் கேட்க வருகிறாள். மகன் அடிப்பட்ட செய்தி அறிந்துத் துடித்துப்போய் கணக்குப்பிள்ளையிடம் கோபத்தோடு கேள்வி கேட்கிறாள். அதற்கு அவர் ஒஒவேலை செய்யற எடத்தில வேலயதாம்மா செய்யனும். . . செய்யலேண்ணா அடிக்கத்த

ான் செய்வோம். எங்களுக்காகவா அடித்தோம். அடியாத மாடு படியாது. அதிகமா ஏங்கிட்ட எதுவும் பேசாத. வெளியே போ ஒஒ(பக். 64-65) என்று அதிகார தோரணையில் பதில் சொல்கின்றார்.

இவரது பேச்சு குழந்தைத் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் போக்கிற்குச் சான்றாக உள்ளது. இரத்தம் குடிக்கும் காட்டேரிகளாக முதலாளி வர்க்கம் இருப்பதற்கு இக்கதை சரியான எடுத்துக்காட்டாகும். கணக்குப்பிள்ளையிடம் நியாயம் கிடைக்காததால் அந்த ஏழைத்தாய் முதலாளியிடம் செல்ல எண்ணுகிறாள். ஆனால் பாலகிட்ணன் அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதவாறு முதலாளியிடம் அட்வான்ஸ் கேட்கப் போவோம் என்கிறான். இவனின் இக்கூற்றை எண்ணி யாரை நோவதுள இக்கதையில் மேற்படி முதலாளியின் மகள் அதே ஊரில் தனது கல்லூரி நண்பர்களுடன் முதியோர் கல்வி நடத்த வருகிறாள். இங்கு தொழிலாளிகளின் பிள்ளைகள் அனைத்தும் படிக்க வழியில்லா நிலைக்குத் தள்ளப் பெற்றிருப்பதை உணர்கிறாள். ஆனால் முதலாளியின் மகள் படித்தவளாக வலம் வருகிறாள். மேலும் அவள் முதியோர் கல்விக்கு ஊக்கம் தருகிறாள் என்று காட்டுவதன் மூலம் இரு வர்க்கங்களுக்கும் உள்ள முரண்பாடு கேலியாகக் கூறப்பெற்றுள்ளனமையை உணரமுடிகின்றது. குழந்தைத் தொழிலாளர் சிக்கல் தீரக் காட்டாயக் கல்வி தேவை என இக்கதை மறைமுகமாக எடுத்துரைக்கின்றது. இவ்வூரில் உள்ள கல்விக்கூடம் சரிவர இயங்குவதில்லை என்பதையும் கதையாசிரியர் காட்டியுள்ளார்.

ஒஒபேருதான் இரண்டு வாத்தியார். ஒரு நாளுமே ரெண்டு பேரும் பள்ளிக்கூடத்துக்கு வர்றதில்லை. வட்டிக்குக் கொடுத்து வாங்குறதும், ஊருல தீப்பெட்டி ஆபிஸ் நடத்துறதும்தான் அவங்களுக்கு முக்கியம். (ப. 61)ஒஒ என்ற கூற்றின் மூலம் அவ்வூர் பள்ளிக்கூடத்தின் செயலற்ற நிலையினை அறிந்து கொள்ள முடிகின்றது. அடிப்படைக் கல்வியினை அனைத்துச் சிறுவர்களுக்கும் கட்டாயமாக்கி, கல்விக்கூடப் பணிகளையும் சரிவரக் கண்காணித்தால் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகாமல் தடுக்கமுடியும். இந்தத் தீர்வினை முன்வைத்து தீம்தரிகிட- என்ற கதை நடைபோடுவதாக உள்ளது.

இக்கதையின் நாயகன் ராஜகருப்புசாமி இளவயதில் வறுமையை மீறி கல்வி கற்று அரசாங்க வேலை வாய்ப்பு பெறுகிறான். இவனைப் படிக்க வைக்க இவனுடன் பிறந்த தம்பி, தங்கை இருவரும் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வாழ்விழந்து வந்தனர். இதனை இவன் தனது அறை நண்பன் ஒருவனிடம் சான்றிதழ் பெற ஆதரவற்ற (லஞ்சம் கொடுக்க முடியாத ) தாய் ஒருத்தியும், அவளது மகனும் வரும்போது எண்ணிப் பார்ப்பதாகக் கதையில் காட்டப்பெற்றுள்ளது. இக்கதையின் மூலம் படித்து முன்னேறிய ஒருவரின் நிலையையும், படிக்காமல் வாழ்விழந்து போனச் சிலரின் நிலையையும் ஆசிரியர் ஒரு சேரக் காட்டியுள்ளார்.

இவ்வாறு குழந்தைத் தொழிலாளர் நிலை ஒழிய கட்டாயக் கல்வி என்ற தீர்வினை படைப்பாளர் காட்டியுள்ளார்.

2. போராட்ட அமைப்புகளின் சார்பாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களும்,

தீர்வுகளும் போராட்டம் என்பது எல்லா மட்டங்களிலும் இக்கால கட்டத்தில் நடைபெறுவதாக உள்ளது. தொழிற்சங்க போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள், ஆசிரிய சங்க போராட்டங்கள் எனப் பலவும் அவ்வப்போது நடைப்பெறும்போது போராட்டத்தைக் கலைக்கக் காவலர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் செயல்கள் அத்துமீறும் போது மனித உரிமைகள் பறிபோகின்றன. இச்சூழலை அடிப்படையாகக் கொண்டு இரு கதைகள் இடம் பெற்றுள்ளன.

அந்தக் கவிதை நினைவில் நிற்கும்- கதையில் தனசேகரன் ஆண்டாள் இருவரும் இளவயது நண்பர்களாக அறிமுகமாகின்றனர். வளர்ந்த பின்பு தனசேகரன் மின் வாரிய சூப்பர்வைசராகவும், அவள் மருத்துவராகவும் பணியேற்கின்றனர். ஒரே ஊரில் இருவரும் சந்திக்கின்றனர். நட்பு வளர்கிறது. தனசேகரன் அநியாயங்களுக்கு எதிராகப் போராடுபவன். பல போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெறுகின்றான். அவன் ஒரு முறை ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளும் போது காவல் துறையின் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகின்றான். இவனை ஆண்டாள் பணிபுரியும் மருந்துவமனையில் சேர்க்கின்றனர். அவளின் சிகிச்சை பலனின்றி அவன் இறந்து போகின்றான். இங்கு தனசேகரன் மீது பாய்ந்த குண்டு மனித உரிமை மீறலின் குறியீடாகும்.

இவ்வாறு உரிமைகள் பறிக்கப்படும்போது அதனை எவ்வாறு தட்டிக்கேட்பது ? பாதிக்கப்பட்டவர் செயலற்ற நிலையில் இருக்கும்போது, அடுத்த கட்ட நிலையில் உள்ளவர்கள் சிக்கலைக் கையில் எடுத்துக்கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும். இத்தீர்வைச் சுதந்திரம் சிறையிலே – என்ற கதையில் படைப்பாளர் கையாண்டுள்ளார். ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டம் ஒன்றில் ஏறக்குறைய 1500 ஆசிரியர்கள் சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

அதில் முத்துப்பாட்டன் என்ற ஆசிரியரின் தாயார் இறந்து விடுகின்றார். இவர் ஊருக்குப் புதிதாக வந்தவர் என்பதாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதாலும் அவ்வூரார் எவரும் உதவ முன் வரவில்லை. இக்கட்டான இச்சூழலில் அவருக்கு சிறையிலுள்ள ஆசிரியர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் தந்து உதவுகின்றனர். வெளியில் உள்ள சங்கச் சார்பாளர்கள் அவருடைய தாயின் ஈமக்கிரியைகளைக் கவனித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் இவரை ஜாமினில் விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றனர். இவ்வாறு அவரது உரிமை, உணர்வு காக்கப்படுகின்றது.

இக்கதையின் வாயிலாக சங்கம் சார்ந்தவர்களின் ஒற்றுமை வலிமையை ஆசிரியர் தெளிவாகக் காட்டி, அதனையே தீர்வாகவும் காட்ட முனைந்துள்ளார்.

3. பெண்களுக்கு எதிரான உரிமை மீறல்களும், தீர்வுகளும்

இக்காலத்தில் பெண்கள் பல்வகைக் கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஆணுக்கு அடங்கிய அடிமையாக பெண் இருக்க வேண்டுமென ஆணுலகம் எண்ணுகிறது. அவளுக்கென தனித்த விருப்பு வெறுப்புகள் இருக்கக் கூடாது. ஆணின் விருப்பமே இவளின் விருப்பமா இருக்க வேண்டும் இவைபோன்ற பல இக்கட்டுகள் பெண்களுக்கு உள்ளன.

அந்த அழகு- என்ற கதையில் வரும் சொரூபராணி அவளது கணவனின் சந்தேகப் பார்வையால் படாத துன்பம் பெறுகிறாள். வீட்டிற்கு எவர் வந்தாலும் இவளைச் சந்தேகப்படுவது இல்ல விழக்களின் போது இவள் சொந்தக்கார ஆண்கள் யாரோடாவது பேசினால் குற்றம் காண்பது சந்தேகிப்பது அடிப்பது போன்ற கணவனின் தேவையற்ற கொடுஞ்செயல்களால் இவளின் வாழ்வு நரகமாக மாறுகின்றது. ஒருமுறை இவளது சித்தப்பா பையன் இளவயது முதல் இவள்மீது பாசம் கொண்ட நல்லவன் இவளைக் காண வருகின்றான். அவளோ இவனை வரவேற்காது, இவன் கொண்டு வந்த இனிப்புகளைப் பெற்றுக்கொள்ளாது மறுத்துத் தனது கணவனது இயல்பைச் சொல்லி அழுகிறாள். இந்நிகழ்வை வீட்டின் மச்சுமீது இருந்து இவளின் கணவன் பார்த்து மனம் திருந்துகிறான். கணவன் மனம் திருந்தி ஒஒநான் பி. யூ. சி பெயிலாகி வீட்டிலேயே இருந்தப்போ… எங்க வீட்டுக்குப் பக்கத்தில் பாரஸ்ட் டிப்பார்மெண்டுல வேலை பார்க்கிறவர் குடிவந்தார். அவங்களோட ரொம்ப யோக்கியனா… பணிவா பழகி …. அவர் வீட்டிலே இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி… அவர் மனைவியோட தொடர்பு வச்சிக்கிட்டேன். இப்ப வரைக்கும் அதைத் தொடர்ந்துக்கிட்டிருக்கேன்… அவருக்காக ரொம்பப் பாதுகாப்பா லஞ்சம் வாங்குறதும் உண்டு… மன அலைக்கழிப்பை அடக்க வெளியூர்களுக்குப் போய்த் தனியாக் குடிக்கிறதும் உண்டு. என்ன மாதிரித்தான் எல்லா ஆம்பளைகளும் இருப்பாங்க… என் மனைவியும் இருப்பான்னு நெனைச்சிட்டேன்… உங்க ரெண்டு பேரைப் போலவும் மனுஷங்க இருப்பாங்கன்னு

எனக்குத் தெரியாது…ஒஒ(பக் 79-80) என்று அவன் கூறும் வார்த்தைகள் அவன் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதை விளக்குவனவாக உள்ளன. இதன்மூலம் படைப்பாளர் பெண்களுக்கு ஏற்படும் உரிமை மீறல் சிக்கலைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அதற்கு மாற்றாக மன மாற்றத்தையும் காட்டிக் கதையினை முடித்துள்ளார்.

தொகுப்புரை

தீம்தரிகிட சிறுகதைத் தொகுப்பில் இக்கால சமுதாயத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல் சிக்கல்களில் முக்கியமான மூன்று எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. அதற்கான தீர்வுகளும் காட்டப் பெற்றுள்ளன.

குழந்தைத் தொழிலாளர் சிக்கலுக்குக் கட்டாயக் கல்வியையும் போராட்ட குழுக்கள் மீது நடத்தப் பெறும் உரிமை மீறலுக்குத் தீர்வாக அவர்களது ஒற்றுமையையும் மகளீர்க்கான சிக்கல்களுக்குத் தீர்வாக மனமாற்றத்தினையும் இத்தொகுப்பு முன் மொழிந்துள்ளது.

muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்