ஜெகத்ஜால ஜப்பான் 13. அசோபிமசு

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

சித்ரா சிவகுமார்


ஜப்பானிய மொழியில் அனுபவித்தல், விளையாடுதல் என்பதை இந்த வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.

ஜப்பானில் விளையாட்டுக்கு பஞ்சமே இல்லை. எத்தனை தான் வேலையில் கவனம் செலுத்தினாலும் உடலுக்கு வேண்டிய சக்தியை கூட்ட ஜப்பானியர்கள் தங்களைப் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அதனாலேயே உலக நாடுகள் அனைத்தும் பங்கேற்கும் ஒலிம்பிகஸ் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் அவர்களால் இருக்க முடிகிறது.

ஜப்பானியர்கள் வேலையோடு கூடவே உடற்பயிற்சிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இன்று அங்கு புகழ் பெற்று விளங்கும் விளையாட்டு அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்பால் என்னும் பந்து விளையாட்டு.

ஜப்பானில் பாரம்பரிய வீர விளையாட்டுகள் தற்காப்புக் கலைகள் பல உண்டு. ஜூடோ, கென்தோ, சுமோ போன்ற விளையாட்டுக்கள் இன்றும் அங்கு பிரபலமாகவே இருக்கின்றன.

ஜூடோ என்பது “பண்பான வழி” சண்டைப் போட்டி. மிகவும் நிதானமாகச் செய்யும் ஒன்று. இதில் தங்கள் உடல் வலுவையும் ஆற்றலையும் காட்டுவதை விடவும் தங்கள் சண்டைத் திறனைக் காட்டுவதே முக்கியமாகக் கருதப்படுகிறது. உடலையும் மனதையும் ஒரு சேர பயிற்றுவிப்பதே இதன் குறிக்கோள்.

ஜூடோ
கென்தோ பயிற்சி, வாள் கொண்டு செய்வது. கென்தோ என்பதற்கு ‘வாள் வழி” என்று பொருள். ஆண் பெண் இருபாலாரும் போடக் கூடிய சண்டைப் பயிற்சி.

சமுராய் காலங்களில் உண்மையான கூரிய வாள் கொண்டு செய்யப்பட்ட இந்த சண்டை தற்காலத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட கத்தியைக் கொண்டு போடப்படுகிறது. கென்தோ பயிற்சி பெறுபவர்கள் அதற்கான தற்காப்பு உடையை அணிந்து கொண்டே செய்வர். இதுவும் மனதிற்கும் புத்திக்கும் பயிற்சி தரும் விளையாட்டே.
கென்தோ

ஜப்பானில் தேசிய விளையாட்டு என்று எதுவும் அரசாங்கத்தால் குறிப்பிட படாவிட்டாலும் சுமோ பயிற்சியாளர்கள் சுமோ விளையாட்டை தேசிய விளையாட்டாக சொல்லிக் கொள்கின்றனர்.

சுமோ இந்தியாவின் குஸ்திச் சண்டை போன்றதே. ஆனால் இது ஷின்டோ மதத்தின் பல கூறுகளை இன்றும் பின்பற்றும் சண்டைப் போட்டி என்றே சொல்லலாம். இது ஒரு சில நொடிகளே நீடிக்கும் சண்டைப் போட்டி. ஒரு வட்ட வடிவமானப் பகுதியில் சண்டையிடுவர்.

சுமோ

முதலாவதாக வட்டத்தை விட்டு வெளியே வந்தாலோ அல்லது பாதம் தவிர இதர உடற்பகுதி தரையில் பட்டாலோ அவர் தோற்றவர் ஆவார். சுமோ சண்டைப் போடுகிறவர்கள் இதற்கென பிரத்யேகமாக உள்ள பள்ளிகளில் தங்கி குருகுல முறையில் சண்டைப் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் இதற்கென பிரத்யேகமான உணவையும், உண்ணும் முறைகளையும் மேற்கொள்கின்றனர். உடற்பருமனை கூட்ட உணவு உண்டதுமே உறங்கச் சென்று விடுவர்.

அடுத்த முக்கிய விளையாட்டு பனிச்சறுக்கு விளையாட்டு. ஜப்பானில் மட்டுமே 500 மேற்பட்ட பனிச்சறுக்குத் தலங்கள் உள்ளன. ஹொக்கைடோ பகுதியில் வருடம் முழுவதுமே அதிக பனி பெய்யும் காரணத்தால் உலகின் பல பகுதிகளிலிருந்து பனிச் சறுக்கு வீரர்கள், வீராங்கனைகள் எப்போதும் ஜப்பானிற்கு வந்த வண்ணம் இருப்பர்.

பனிச் சறுக்கில் ஆர்வம் உள்ளவர்கள் எவர் வேண்டுமானாலும் இவ்விடங்களுக்குச் செல்லலாம். இதற்குத் தேவையான உடைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். அங்கேயே பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். பயணிகளுக்கு இது ஒரு புதிய அனுபவத்தைத் தரவல்லது.

Series Navigation