சொன்னால் விரோதம்

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

பசுபதி


மண்ணென்றும் பெண்ணென்றும் வரம்பற்ற ஆசைகள்முன்
மண்டியிட்டு மடிந்தனர் வரலாற்றில் பலமாந்தர். (1)

ஆசைகள் வெறியாகி அழுக்காற்றுப் பால்குடித்து
நாசப் படமெடுக்கும் நச்சரவம் விரோதம் . (2)

அயலாரை, அன்னியத்தைக் கண்டாலே அஞ்சிடுவோர்
பயமென்னும் உண்மைதனைப் பகையுணர்வில் புதைத்திடுவர். (3)

அச்சக் கடல்கடைந்தால் ஆலமென விரோதமெழும்.
அச்சத்தின் காரணம் அறியாமை ஊற்றன்றோ ? (4)

மதமென்றும் சாதியென்றும் மாறிமாறிப் பிரித்திடுவோர்
விதவிதமாய் வெறுப்பூற்றி விரோதத்தை வளர்த்திடுவர். (5)

அறியாமையை அகற்றிவிடின் அண்டிடுமோ விரோதம் ?
அறியாமலா ஞானவாளை அருணகிரி வேண்டினார் ? (6)

என்னசொன்னால் விரோதம் இவ்வுலகில் மறைந்துவிடும் ?
அன்புநெறி தழைத்தோங்கி ஆலமரமாய் வளர்ந்துவிடும் ? (7)

அருணகிரி அன்றுரைத்த அருள்வாக்கு அவிரோதம் !
திருமூலர் நம்அன்பே சிவமென்று மெய்பகர்ந்தார்! (8)

அன்னியரும் அன்பரும் ஆண்டவன்முன் சமமன்றோ ?
அன்பே இறை எனவுணர்ந்தால் அவிரோதம் உலகாளும் ! (9)

**********

Series Navigation