சென்றவாரங்களின் குறிப்புகள் – நவம்பர் 13 2003 (பவுண்டேஷன்கள்,பாகிஸ்தான், காங்கிரஸ் அறிக்கை)

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

சின்னக்கருப்பன்


***

ரம்ஸ்ஃபீல்டின் ஒப்புதல் வாக்குமூலம்

டொனால்ட் ரம்ஸ்பீல்ட் எனக்கு மிகவும் ‘பிடித்தமான ‘ அரசியல்வாதியாக

ஆகிவருகிறார்.

சமீபத்தில் (அவரே கசிய விட்டதாக கூறப்படும்) கடிதத்தில் ஈராக்கில் அமெரிக்க மறு நிர்மாணத்தின் முயற்சிகளின் முன்னேற்றம் பற்றிய பச்சையான கேள்விகள் நிறைய இடம் பெற்றிருந்தன.

http://www.usatoday.com/news/washington/executive/rumsfeld-memo.htm

மேலும் இந்த கசிவு சம்பந்தமாக எந்தவிதமான ஆய்வுக்கமிட்டியும் உருவாக்கப்படவில்லை. ஆக பலர் வேண்டுமென்றே இவை கசியவிடப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள்.

கிடக்கட்டும்.

அதில் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது ஒரு விஷயம் கசிய விடப்பட்ட கடிதத்தில், அமெரிக்காவின் ராணுவ மந்திரி டொனால்ட் ரம்ஸ்பீல்ட், அமெரிக்க ராணுவத்தளபதி டிக் மையர்ஸிடம் கேட்கிறார்.

‘Should we create a private foundation to entice radical madradssas to a more moderate course ? ‘

கேள்வியைப் பாருங்கள். ‘நாம் ஒரு தனியார் பவுண்டேஷனை உருவாக்க வேண்டுமா ? ‘

இதில் நாம் என்பது யார் ? பெண்டகன். அமெரிக்க ராணுவத்துறை. இதில் இன்னொரு சொல்லாத செய்தியும் தொக்கி நிற்கிறது. பாகிஸ்தானில் தாலிபன் உருவாக்கத்த்ல் பெரும்பங்கு வகித்த மதரஸாக்களை ஜியாஉல் ஹக் காலத்தில் உருவாக்கி ‘இஸ்லாமியப் போராளிகள் ‘ என்ற பெயரில் மதச்சார்பான கல்வி தவிர்த்து வேறு பயனில்லாத கல்வியை அளித்து, ரோபோக்களை உலவ விட்டதில் அமெரிக்காவின் பங்கு பற்றிய ஒப்புதல் வாக்குமூல அது. பணம் சவூதி அரேபிய வழியாய்ச் சென்றது. சவூதி அரேபியா அமெரிக்காவின் உற்ற நண்பன். மதவெறி பஸ்மாசுரன்கள் வரம் தந்த அமெரிக்க பகவான் மீதே பாய்வது கண்டு ஃபவுண்டேஷன்களை வேறு திசையில் திருப்ப இவர்களுக்கு யோசனை.

அமெரிக்காவின் தனியார் பவுண்டேஷன்களைப் பற்றிய புல்லரிக்கும் கட்டுரையை சமீபத்தில் திண்ணையில் படித்தேன். சிரிப்புத்தான் வருகிறது.

***

அமெரிக்காவின் தனியார் பவுண்டேஷன்களில் புல்லரிப்பவர்கள், தனியார் பவுண்டேஷன்களிடமிருந்து காசு பெற்றுக்கொண்டு இந்தியாவில் சமூக சேவை, சப்-அலட்டரான் வேலை செய்பவர்கள், இந்தியர்களுக்கும், இந்திய அரசாங்கத்துக்கும், இந்திய ஜனநாயகத்தின் சாதனைகளை கேவலப்படுத்துவதும், இந்திய நாட்டின் சாதனைகளையும், அதன் எதிர்ப்பார்ப்புகளையும் பார்ப்பன-பனியா எதேச்சதிகாரமாக மொழிவதும், எனக்கு ஆச்சரியமாக இருந்ததேயில்லை.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு படித்த (படித்த படிப்புக்கு இந்தியாவில் வேலை கிட்டாத) வர்க்கம் கொண்ட மேதாவித்தனம் இன்று, பவுண்டேஷன்களின் இனியகனாவாக, மேற்கண்ட வியாதி ஒரு அறிவுஜீவி போர்வை கொண்டு, சிறுபத்திரிக்கைகளில் எழுத முனைபவர்களிடமிருந்து தி இந்து வரை பரவிக்கிடக்கின்றது.

***

பாகிஸ்தானில் இந்திய ஜனநாயகம் பற்றி

‘தமிழ் ‘ அறிவுஜீவிகள் உலகெங்கும் பரவிக்கிடக்கிறார்கள். ஏன் பாகிஸ்தானில் கூட. ஆனாலும் அவர்கள் தம்முடைய நாடு ராணுவசர்வாதிகாரத்தில் உழன்றால் கூட இந்தியாவின் ‘போலி ஜனநாயகத்தை ‘ விமர்சிப்பவர்கள்.

சமீபத்தில் soc.culture.indian என்ற செய்திக்குழுமத்தில் படித்த ஒரு குறிப்பின் தலைப்பு. ‘ஏன் இந்தியாவின் போலி ஜனநாயகத்தைவிட பாகிஸ்தானில் பத்திரிக்கை சுதந்திரம் சிறப்பாக இருக்கிறது ? ‘

இந்தியாவில் எந்த அரசியல்வாதியின் பேயாட்டத்தையும் உடனே sham democracy என்று அழைத்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியிலிருந்து நியூஸ் குரூப்பில் உளறும் பாகிஸ்தானிய வாய்ச்சொல் வீரர்கள் வரை குதிப்பார்கள். இன்றைய செய்திப்படி, பாகிஸ்தானின் பிரச்சார மந்திரியும், செயலாளரும், இன்னும் இதர சிலரும் இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்காக இந்தியப் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிற்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இது காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அளிப்பது போல ஒரு மாரல் அண்ட் பொலிடிகல் ஆதரவா என்று தெரியவில்லை.

மேற்கண்ட செய்தியின் உள்ளே இருந்தது, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி. முரசொலி ஆசிரியர், இந்து ஆசிரியர்கள் போன்றவர்களை கைது செய்ய ஜெயலலிதா அரசு முனைந்ததை விமர்சிக்கும் செய்தி.

இதில் வினோதம் என்னவென்றால், நம் தமிழ் அறிவு ஜீவிகள் கூட அப்படி பாகிஸ்தானில் பத்திரிக்கை சுதந்திரம் கொடி கட்டிப் பறக்கிறது என்று எழுதினால் ஆச்சரியப்பட மாட்டேன். (முக்கியமாக இஸ்லாமாபாத் சென்று சர்வாதிகாரியைச் சந்தித்து இந்திய கூட்டணி அரசினை பாஸிஸ அரசு என்று எழுதக்கூடிய என் ராம் அல்லது மாலினி பார்த்தசாரதி அல்லது வேறு மேதாவிகள்.)

கொசுறு செய்தி: தி நியூஸ் என்ற பாகிஸ்தானின் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் ஆங்கிலப்பத்திரிக்கையின் முந்நாள் ஆசிரியர் பாகிஸ்தானிய சர்வாதிகாரியால் ஓட ஓட விரட்டப்பட்டு அமெரிக்காவில் உட்கார்ந்திருக்கிறார். அவரால் முடிந்தது என்று ஸவுத் ஏஷியா டிரிப்யூன் என்ற வலைப் பத்திரிக்கையை நடத்தி வருகிறார். http://www.satribune.com என்ற வலை முகவரியில் இதனைப் பார்க்கலாம்.

ஜாவெத் ஹாஸ்மி என்ற எதிர்கட்சித் தலைவர் (முந்நாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கட்சி) கைது செய்யப்பட்டு ராணுவச் சிறையில் இருக்கிறார். அதனை எதிர்த்து ரகளை செய்த சில பாகிஸ்தானிய எம்பிக்கள் முட்டிக்கு முட்டி பேர்க்கப்பட்டார்கள். முகத்தில் ஒரு சிரிப்பு கூட இல்லாமல் காத்திரமாக முகத்தை வைத்துக்கொண்டு அதன் பொம்மை பிரதமரும் ராணுவசர்வாதிகாரியும் பாகிஸ்தானில் ஜனநாயகத்தை கொண்டுவந்தே தீருவோம் என்று சூளுரைக்கிறார்கள்)

***

பாகிஸ்தானின் பொருளாதாரக் குற்றங்கள் : அரசியல்வாதிகள் போய் ராணுவம் வந்தது..

ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கிகள் எந்த அளவுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றன என்பதற்கு இவை பாகிஸ்தானின் பொருளாதார நிலவரத்தை பற்றி கொடுத்த அறிக்கை வைத்தே காணலாம்.

(நீ பாகிஸ்தான் ஆப்ஸஸ்ட் என்று வைதாலும் படித்துப்பாருங்கள்)

டுபாக்கூர் பொருளாதாரம். ஏ கே 47 கலாச்சாரம், தினம் ஒரு வெடிப்பு, தொடர்ந்து கீழிறங்கும் பொருளாதாரம், பொங்கும் மக்கள்தொகை வளர்ச்சி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவக்கல்வி அழிப்பு மதரஸாவில் படித்து பட்டம் பெறுவதை தொழில்நுட்பக்கல்விக்கு சமானமாக அரசாங்கம் மதிப்பிடுவது ஆகியவைகள் இன்று பாகிஸ்தானின் நிலைமையை நாசம் செய்துவிட்டன.

இன்று ஆக்ஸிஜன் கொடுக்கும் அமெரிக்க டாலர் பணம் 7 பில்லியன் டாலர் இஇல்லையென்றால் அரசாங்க அலுவர்களுக்கும் ராணுவத்துக்கும் காசு கொடுக்கவே கஜானாவில் காசு இல்லை. இருந்த போதிலும், வாங்கும் அந்தக் கடன் காசையும் உதவிக்காசையும் ராணுவத்திலும் தளவாடங்களிலும் போட்டு ராணுவ அதிகாரிகள் கொள்ளை லஞ்சம் அடித்து ஸ்விட்சர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். (பாகிஸ்தானின் முன்னாள் கப்பல்படை தலைவர் சுமார் 2 பில்லியன் டாலரை எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு கம்பி நீட்டிவிட்டார். அதற்குத் தண்டனையாக அவருக்கு கொடுத்த அட்மிரல் பட்டத்தை பிடுங்கி விட்டார்களாம்)

கூடவே ஒரு கொசுறு செய்தி: அமெரிக்காவின் இனிய தோழனாக, பயங்கரவாதத்தை எதிர்த்து போராடும் உற்ற தோழனாக இருக்கும் பாகிஸ்தான் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லாமல், இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகம் கொண்டு வருவதைப் பற்றி உலகத்தின் சர்வாதிகாரியான ஜார்ஜ் புஷ் சின்ன எஜமான் பேசியிருக்கிறார்.

எதேச்சதிகார ஜனநாயகம் திடார் மிக்ஸ் – ஒன்னு வாங்கினால் ஒன்னு இனாம் என்ற ஒரு அட்டகாசமான பேச்சு அருந்ததி ராய் பேசங் கேட்டேன். பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற அடியாட்களை வைத்திருக்கும் மாஃபியா பாஸ் அமெரிக்கா என்று யார் பேசப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

***

சவூதி அரேபியாவில் வெடிக்கும் பயங்கரவாதம்

சவூதி அரேபியாவில் வெடிகுண்டுகள் சவூதி அரேபியர்கள் இல்லாத இடத்தில் வெடித்திருக்கின்றன. சில இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். வருந்துகிறேன்.

பஸ்மாசுரன் கதைதான் என்று தோன்றினாலும், கட்டுப்பாடற்ற மக்கள்தொகைப் பெருக்கமும், படித்து வேலை செய்யாத பணக்கார சோம்பேறி வாழ்க்கையும், வாழ ஒரு லட்சியத்தைத் தேடி, சாக ஒரு லட்சியத்தைத் தேடி அலைகிறது என்றே தோன்றுகிறது.

பெட்ரோ டாலர் மறைந்து போகப் போக பிரச்னை தீவிர வலு அடையும். பெட்ரோலியத்தின் தேவை குறையக் குறைய, இந்தியாவில் அணுசக்தியை (பாதுகாப்பான முறையில்) வெகுவாக உற்பத்தி செய்து பெட்ரோலியத்தின் தேவையைக் குறைக்கும்போது, (அல்லது இன்னொரு வழியில் மின்சாரம் உற்பத்தி செய்து பெட்ரோலியத்தின் தேவையை குறைக்கும்போது) காசற்ற, படித்த, சமீபத்தில் பணக்கார வாழ்வு வாழ்ந்ததனால் உருப்படியாக ஏதும் செய்யத்தெரியாத ஒரு கூட்டம் இலட்சியத்தால் உந்தப்பட்டு உலகெங்கும் பரவும். விளைவை நாம் பார்க்கப்போகிறோம்.

இன்றைய தேவை ஒரு மோகினி.

***

பாஜகவை மிஞ்சும் வகையில் காங்கிரஸ் காவி வண்ணம் அடித்து கட்சி மெனிபஸ்டோ வெளியிட்டிருக்கிறது.

இந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் நிச்சயம் ஜெயித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் இன்று காவியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.

பாவம் நம் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவிகள்.

ரால்ஃப் நாடர் என்ற அமெரிக்க கிரீன் கட்சி வேட்பாளர் சொன்னார். அமெரிக்காவில் இரண்டு கட்சி ஆட்சிமுறை இல்லை. ஒரு கட்சி ஆட்சிமுறைதான் இருக்கிறது. இரண்டுமே ரிபப்ளிகன் கட்சிகள்தாம். இரண்டுமே அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் பொருட்டு, அமெரிக்கத் தொழில் நிறுவனங்களின் நலனுக்காக, அமெரிக்கத் தொழில் நிறுவனங்களால் நடத்தப்படுபவை என்று.

இந்தியாவில் இந்தியத் தொழில் நிறுவனங்களால் இந்திய அரசியல் நடத்தப்படவில்லை என்றாலும், இன்று இரண்டு கட்சிகளும் ஒரே நிறத்தை வெகு வேகமாக அடைந்து கொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது.

பாஜக தன்னுடைய பாரம்பரிய கொள்கைகளை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு இன்று அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அதன் அனுதாபிகள், பாஜக என்ற காங்கிரஸ் டூப்ளிகேட்டுக்கு ஓட்டுப்போடுவதற்கு பேசாமல் காங்கிரசுக்கே போட்டு விடலாமே என்று பேசுகிறார்கள். மறு பக்கம், காங்கிரஸ் அனுதாபிகள் காவி வண்ணம் அடித்து இன்று வரும் காங்கிரஸ் என்னும் பாஜக டூப்ளிகேட்டுக்கு ஓட்டுப் போடுவதற்கு பேசாமல் பாஜகவுக்கே ஓட்டுப் போட்டுவிடலாமே என்றே கேட்பார்கள்.

உருவாகி வரும் இந்து ஓட்டு வங்கிக்கு பயந்தோ என்னவோ, பிராந்தியக் கட்சிகள் கூட தங்கள் மீது காவி வண்னம் அடித்துக்கொள்கின்றன. இந்தப்பக்கம் சந்திர பாபு நாயுடு ஆந்திராவில் 2400 வெங்கடாசலபதி கோவில்களை கட்டப்போகிறேன் என்று சொல்கிறார் (என்ன ஆச்சு – மதச்சார்பற்ற அரசு என்ற இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கை ?) மறு பக்கம் பாஜகவாகவே மாறிவிட்ட அந்தோணியோ, முஸ்லீம் தலைவர்களையும் கிரிஸ்துவ சர்ச்சையும் காய்ச்சுகிறார். (அதுவும் மரத் பிரச்னையிலேயே)

மாறாமல் இருப்பது தலைவர் கலைஞர் மட்டுமே. பாஜகவோடு கூட்டணியில் இருந்தாலும், இஸ்லாமையும் கிரிஸ்துவத்தையும் புகழ்ந்தும் இந்து மதத்தை இகழ்ந்தும் மாறாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் என்ன பேசினாரோ அதனையே இன்றும் கூறுகிறார். இன்று நாள் வரை தீபாவளிக்கு அவர் வாழ்த்துச் சொல்லிப் படித்திருக்கிறீர்களா ? கேட்டிருக்கிறீர்களா ?

***

karuppanchinna@yahoo.com

Series Navigation