சுப்ரபாரதிமணியனின்” ஓடும் நதி ” – ஒரு குறியீட்டு நாவல்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

சி ஆர் ரவீந்திரன்


வாழ்க்கையை முதன்மைப்படுத்தி அதனுள் இயங்கும் மனிதர்களை அவர்களுடைய இயல்புகளோடு வெளிப்படுத்தும் நாவல்கள் தமிழில் குறைவாக உள்ளன. கருத்தை முன்வைத்து அதற்கு ஈடுகட்டும் விதத்தில் கற்பனையான அனுபங்களையும், மனித இயல்புகளையும் வடிவமைக்கிம் போக்கிலிருந்து மாறுபட்டு அண்மையில் வெளிவந்திருக்கிறது சுப்ரபாரதிமணியனின் “ஓடும் நதி” நாவல். வாசிப்பு அனுபவத்தில் மாறுபட்ட புரிதல்களுக்கு இடமளிக்கும் இது ஒரு குறியீட்டு நாவல் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் தகர்ந்து விழுந்து எழுந்து ஓட முயலும் மனிதர்களையே நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் பார்க்க முடிகிறது. நவீன வாழ்க்கையில் எல்லா வகைப்பட்ட மனிதர்களும், தங்களுடைய மரபு வழிப்பட்ட வாழ்க்கையிலிருந்து விரட்டப் படுகிறார்கள்.நதி என்பது ஒரு கலாச்சாரப் பண்பாட்டின் அடிப்படையாகவே இருந்து வந்திருக்கிறது. தொழில் நாகரீகம் வெளியிலிருந்து திணிக்கப்படும் பொழுது மரபுக்கும், புதுமைக்கும் இடையில் மனிதர்கள் சிக்கித் தவித்து அவலத்திற்கு உள்ளாகி விடுகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்துவிட்ட மனிதர்கள் வாழ்க்கை ஓர் உன்னதம் என்ற மதிப்பீட்டைக் கைகழுவுவிட்டுப் பிழைப்பு அல்லது அபத்தம் நிறைந்த அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். மனித உறவுகள் சிதைந்து விடுகின்றன. அர்த்தமிழந்து போன வாழ்க்கையில் மனிதர் காயங்களுடன் சிதைந்து போன மனதைச் சுமந்து கொண்டு தம்மை நிலைப்படுத்திக் கொள்ள புதிய அர்த்தத்தைத் தேடுகிறார்கள். மரவு வழிப்பட்ட மதிப்பீடுகளை உதறிவிட்டுப் புதிய மதிப்பீடுகளை உருவாக்க முனைகிறார்கள். இதைப் புலப்படுத்தும் விதத்தில் செய்தியை உள்ளடக்கியிருக்கிறது இந்த நாவல். அதை அதற்கே உரிய இயல்புத் தன்மையுடன் வடிவப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.

நவீன வாழ்க்கைக்கு உட்பட முடியாமல் தம்மைத் தற்கொலைக்கு உள்ளாக்கிக் கொண்டவர்களைப் பற்றிய நினைவுகளிலிருந்து செல்லமணியின் அறிமுகம் நிகழ்கிறது. அவர்களைச் சார்ந்து சுற்றுப்புற சூழல்களின் அமைதியான நிலை தகர்க்கப்படுவதும், வாழ்கை தொழில் சார்ந்த நவீனத் தன்மைக்கும் உள்ளாவதை அடையாளம் காட்டுகிறார் நாவலாசிரியர். அழகும், தூய்மையும், இயல்பான வள்ர்ச்சியும் நிறைந்திருந்த ஒரு வாழ்க்கைச் சூழல் செல்லமணியின் கண்முன்னே தகர்ந்து நொறுங்கி சிதைகிறது. காலப்போக்கில் அவளுடைய வாழ்க்கையும் அவளும் சிதைந்து போவதை இயல்பாக நாவலில் பார்க்க முடிகிறது.

அவள் நேசித்த செல்வன் தொலைதூரத்திலிருக்கும் நாகாலாந்து பழங்குடியினரின் நடுவே வாழும் சூழலில் அவளுக்கு எழுதிய கடிதங்களை அவள் சேகரித்து நேசமாக வைத்திருந்து அவையும் பொருளற்றும் போய்விட்ட சூழலில் அவள் அவற்றைத் தீயிலிட்டுக் கருக்கிவிடுகிறாள். உடலின் வேட்கையால் அவள் கன்னித்தன்மை கழிவதும், வயதின் முதிர்ச்சியால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவனை நம்பி அவனுடன் புலம்பெயர்ந்து அநாதையாகக் கைவிடப்படுவதும்,அடைக்கலம் தேடி அலைவதும், சொந்த ஊர் திரும்புவதும், மனநிறைவில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும், தவிக்க முடியாத நிலைமையில் முறையில்லாத நிலைமையில் முறையில்லாத வாழ்க்கைக்கு உள்ளாகி மனச்சிதைவுடன் உயிர் வாழ்வதும் செல்லமணியின் வாழ்க்கைச் சாரமாகிவிடுகிறது.

அகலிகையின் குறியீடு நிலவுடைமைச் சமுதாயத்தின் அடையாளமாக இருப்பதைப் போல செல்லம்மணியின் குறியீடு நவீன சமுதாயத்தின் குறியீடாக இருக்கிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் அபூர்வமானவையாகவே இருக்கின்றன. நன்மையும், உண்மையும் நிறைந்த பழங்குடி மக்களின் இயற்கை சார்ந்த வாழ்க்கையை நேசிக்கும் செல்வன் தவிர்க்க முடியாத நெருக்கடியால் நகரத்திற்கே திரும்புகிறான்.

பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூருக்கும், நாகாலாந்துக்கும் இடையிலான கலாச்சாரப் பண்பாட்டு வாழ்க்கை முறையை ஒப்பிட்டு பார்க்கும்போது, மனிதர்கள் இயற்கையிலிருந்து வெகு தொலைவு விலகி வந்துவிட்டார்கள் என்பதை நாவல் உணர்த்துகிறது.

சிறிய தொழில் நகரமாக இருந்த திருப்பூர் தன் அளவில் நொய்யல் நதியை மையமாக் கொண்டிருந்தாலும் அது மாசுபடிந்து அதன் சுற்றுப்புறங்களை அழித்து அவலப்படுத்திவிட்ட கசப்பான செய்தியை நாவல் அழுத்தமாகச் சொல்லுகிறது.

அழுக்குகளுக்கும், மனச்சிதைவுகளுக்கும், வாழ்வியல் மரபுகளின் தகர்வுகளுக்கும் இடையில் மனிதர்கள் இன்னும் அன்புடனும், பணிவுடனும், கருணையுடனும் வாழ்கிறார்கள் என்பதையும் நாவல் உறுதிப்படுத்துகிறது. செல்லமணியின் வாழ்க்கைச் சூழலுக்குள் வியப்பிற்குரிய விதத்தில் விதவிதமான மனிதர்கள் வந்து போகிறார்கள். தன்னுடைய சிதைந்த மனத்தின் வலியோடு வாழ்க்கையை ஏர்றுக் கொண்டு நிதானமாகவே வாழ்கிறார் செல்லமணி. தன்னுடைய கரைகளின்
ஓரங்களிலும், அவற்றின் அவை சார்ந்த நிலங்களிலும் வாழ்ந்த மனிதர்களுக்கு உயிர் உறவாக இருந்த நொய்யல் நதி கலங்கிச் சிதைந்து கழிவுகளைச் சுமந்து கொண்டிருப்பதைப் போல அவளுடைய வாழ்க்கையும் ஒடிக் கொண்டிருக்கிறது.

நாவலின் வடிவமும், மொழியும் சிதைவில்லாமல் ஒழுங்குமுறையில் ஒருங்கிணைந்து இருக்கின்றன. நாவலின் மொழி படைப்பாளியின் நெகிழ்ச்சியான வெளிப்பாட்டுத் தொனியுடன் ஒவ்வொரு சிறிய அம்சத்தையும் உள்ளடக்கிக் கொண்டு இயல்பாக இயங்குகிறது. நாவலின் வடிவமும், உள்ளடக்கமும் பலமுறை வாசிப்பதற்குரிய அனுபவத்தை மீண்டும் மீண்டும் தூண்டுகின்றன. நவீனமயமாகிவரும் வாழ்க்கையைக் நவீனமான வெளிப்பாட்டு முறையில் நாவலாசிரியர் இதைப் படைத்திருக்கிறார்.

– சி ஆர் ரவீந்திரன், கோவை

issundarakkannan7@gmail.com

Series Navigation

சி ஆர் ரவீந்திரன்

சி ஆர் ரவீந்திரன்