சுஜாதா என்றொரு கதை சொல்லி

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


தமிழ்ப் படைப்புலகத்தில் பொதுவாக ஒரு நூலையோ அல்லது படைப்பாளியையோ விமர்சிப்பவர்களை இரு பிரிவினராகக் கொள்ளலாம்.

ஒன்று: விமர்சனம் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நூலை அல்லது அந்நூலாசிரியரை பரஸ்பரம் பாராட்டிக் கொள்பவர்கள்- இங்கே பாராட்டப்படுபவர் தன் பங்கிற்கு இந்த விமர்சகரை வேறொரு இடத்தில் பாராட்டியோ தேவையென்றால் வரிந்துகட்டிக்கொண்டு அன்னாருக்காக ஒரு கடிதமோ எழுத வேண்டும் என்பது இவர்களுக்கிடையேயான எழுதப்படாத ஒப்பந்தம்.

இரண்டு: விமர்சனம் என்ற பெயரில் தன்னில் உளைச்சலை ஏற்படுத்திய நூலின் அல்லது படைப்பாளியின் முதுகில் உள்ள அழுக்கைத் தேடுவது.

தமிழகத்தில் அரசியலில் பங்கேற்காமல், அரசியலை விமர்சிக்கின்ற – அரசியல் ஞானமுள்ள நடுநிலை விமர்சகர்கள் உண்டு. இசை மற்றும் நாட்டியத்திற்கும் நடுநிலை விமர்சகர்கள் இருக்கின்றார்கள். ஆனால் படைப்புலகத்தில் மட்டுமே விமர்சகன் என்பவன் மற்றொரு படைப்பாளியாகவே இருக்கின்ற சாபக்கேடு. அவ்வாறான விமர்சனம் எந்த லட்சணத்திலிருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே. தனது சகோதரியைப் பெண் பார்க்கவந்த மாப்பிள்ளையிடம் ‘ என் தமக்கை குணத்தில் வாசுகி, அழகில் ரதி ‘ என்று வருணித்துவிட்டு ‘சரியாகப் பார்த்தீர்களா ? அவளுக்கு வலது கண்ணில், பார்வைக் கோளாறு, செயற்கைக் கண் வைத்திருக்கிறோம் ‘ என்று இளையவள் முடித்தாளாம். இந்த மனக் கோளாறுதான் ‘சுஜாதாவின் அறிவியற் சிறுகதைகள் ‘ என்ற ஒட்டு-மற்றும்- செயற்கை யதார்த்தக் கட்டுரையிலும் வெளிப்பாடாகவிருந்தது.

சுஜாதாவின் எழுத்தாளுமையை விளக்கப் புகுந்த ஜெயமோகன், தன்னிடமேற்பட்ட சுஜாதாவின் பாதிப்பை தன்னாளுமைத் திறனால் வெல்ல முடிந்தது குறித்துச் சந்தோஷம். நன்றி. கடந்த தலைமுறையில் சுஜாதா போன்றவர்களுக்கு, புதுமைப்பித்தன் பாதிப்பாகவிருக்க எப்படி முடிந்ததோ அந்தவகையில் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களுக்குக் குறிப்பாக நவீன உத்தியைக் கையாளுகின்றவர்களிடம், அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட சுஜாதாவின் பாதிப்பு இருந்தே தீரும் என்பதுதான் ஜெயமோகனின் இந்த ஒப்புதல் வாக்குமூலம்.

‘சொல் புதிது, பொருள் புதிது, முறை புதிது, நடை புதிது ‘ எனும் பாரதியின் வரைமுறைக்காக வந்து நின்ற மணிக்கொடி எழுத்தாளர்கள் வரிசையில், புதுமைப் பித்தனுக்குப் பின்னே அறுபதுகளில் எழுதப் புகுந்து இன்றைக்கும் அதிக எண்ணிக்கையில் வாசகர்களைப் பெற்றிருக்கின்ற எழுத்தாளர் சுஜாதாவாகத்தான் இருக்கமுடியும். சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகளை மதீப்பீடு செய்கின்ற வகையில் தன் ஞானத்தை அதிகமாகத் தெரிவிக்கின்ற நோக்கமே பெருவாரியாக ஜெயமோகனின் கட்டுரையிலிருப்பது வெளிப்படை. ஆங்கிலத்தில் அறிய நேர்ந்த வார்த்தைகளை குழப்பமாகத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து (உ.ம் – Hybernation என்பதை – ஆழ்துயில் என்பது. சென்னைப் பல்கலைக்கழக அகராதிப்படி ‘நீள் துயில் ‘ ) சுஜாதாவை நவீன தொழில் நுட்பத்தின் விளவு – பிளாஸ்டிக் ஆர்ட்- அபத்தம் அங்கதம் – இது இல்லை அது இல்லை..எனச் சொல்ல எனக்கு கண்ணதாசன் எழுதிய ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவாரடி ஞானத் தங்கமே! இவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே ‘ என்ற பாடல் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது.

சுஜாதாவின் வாசகர்களுக்கென ஜெயமோகன் தனது அகராதியில் சில பெயர்களை வைத்திருக்கிறார் அவர்கள் 1. வணிக இதழ் வாசகர்கள். 2. வாசிப்புச் சோம்பல் உள்ளவர்கள் 3. நல்ல வாசகர்கள் அல்லாதவர்கள் 4. முற்போக்கு உள்ளடக்கம் தேடும் இலக்கிய வாசகர்களாக அல்லாதவர்கள்….

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் என்ற தலைப்பிட்ட இக்கட்டுரை ‘சுஜாதாவின் இலக்கிய இடத் ‘தினை ஆராயப் புகுந்து – ‘அறிவியல் புனைகதைகள் பற்றிய சுஜாதாவின் பார்வை ‘ யில் இவரது பார்வையையே அல்லது ஞானத்தையே அதிகமாக வெளிப்படுத்தி, ‘சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் ‘ பிறகு மீண்டும் ‘சுஜாதாவின் பாதிப்பு ‘ என்று முடிக்கிறார். ஆக இதனை ஜெயமோகன் வார்த்தைகளிற் சொல்லப் போனால் செயற்கை யதார்த்தமும், உள்ளூடகமற்ற, மிகு கற்பனை கொண்ட, முதல்தளத்தன்மை (அதாவது ‘ஆழமின்மை ‘)யும் ஒட்டுத்தன்மையும் கொண்ட சமீப நேற்று கட்டுரை.

சுஜாதா ஏன் ஒரு இலக்கியவாதியாக அங்கீகரிகரிக்கபடவில்லை ? -என்ற கேள்வி ஆயிரத்தோராவது தடவையாக எழுப்பப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இதற்கென ஏதேனும் சங்கப் பலகை இருக்கின்றதா ? அதன் தாளாளர்கள் அல்லது புரவலர்களைப் பற்றிய முகவரி தெரிவித்தால் நன்றாக இருக்கும். சில நேரங்களில் இலக்கியவாதிகள் செய்யும் ஜல்லிக்கட்டு வித்தைகளைப் பொறுத்தும் இலக்கிய அந்தஸ்துக் கிடைப்பதாகக் கேள்வி. சரி சுஜாதாவை விடுங்கள், இன்றைய படைப்பாளிகளில் யார் இலக்கியவாதியென, நாளைக்கே நமது இலக்கியவாதிகளிடம் சென்று ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்திப்பாருங்கள் ஒருவர்கூட தேறமாட்டார். இருக்கின்ற ஒவ்வொருவருவருக்கும் அடுத்தவர் இலக்கியவாதியல்ல என்ற எண்ணம் பூரணமாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்தால் கட்டுரை நீளும். மீண்டும் சுஜாதா ஏன் இலக்கியவாதியல்ல என்பதற்கு ஜெயமோகன் வெளியிட்ட மூன்று அபிப்ராயங்களைப் பார்ப்பதற்கு முன்னால் தமிழ்ப் படைப்பாளிகளிடையே ஒருவரை இலக்கியவாதி, எனக் கொள்வதற்கு எனக்குத் தெரிந்த வேறு சில காரணங்களும் உள்ளன. அதனை வாசக நண்பர்களுக்குத் தெரிவிப்பதன் மூலம், இந்த கட்டுரைக்கு உங்களைத் தயார்படுத்த இயலுமென நினைக்கிறேன்.

அவை:

1. சிக்கலாக எழுதவேண்டும் எளிமையாக எழுதினால் இலக்கியவாதி அல்ல.

2. சிற்றிதழ்களில் இடம் பிடிக்கத் தெரியவேண்டும். முடியவில்லையென்றால் சொந்தமாக இதழ் ஆரம்பித்து நீங்களும் வேண்டப்பட்டவர்களும் எழுதிக் கொள்ளலாம். பெயர் வைப்பதில் கவனம் தேவை. தமிழில் பெயர்வைத்து வடமொழியிலோ, ஆங்கில வார்த்தைகளை அப்படியே நேரடியாக மொழிபெயர்த்தோ எழுத வேண்டும். அதனை விடுத்து ஆனந்தவிகடன், குமுதம் என்று அலைந்தீர்களானால் போச்சு. நீங்கள் இலக்கியவாதி அல்ல.

3. எழுத்தாளன் கிராமத்தில் பிறந்து கிராமத்தை எழுதவேண்டும். நகரத்தில் பிறந்து நகரத்தை எழுதினால் இலக்கியவாதி அல்ல.

4. மார்க்ஸியவாதியாகவிருக்கவேண்டும் அல்லது தீவிர இந்துத்துவாதியாகவிருக்கவேண்டும்.

5. கையில் ஒரு ஆங்கில இலக்கிய தகவல் புத்தகமோ ( The Companion to English Literature), எழுத்தாளர் கையேடோ( The Writers Handbook) இருப்பின் கூடுதல் பலம். அப்பாவி வாசகர்களைப் பெரிய பெரிய பெயர்களைச் சொல்லி ஆச்சரியப்படுத்தலாம்.

இவைகள் தமிழ் நாட்டில் இலக்கியவாதிகள் என நம்பப்படுவதற்கான அடிப்படைத் தகுதிகள். இது தவிர வேறு காரணங்களும் உண்டு. அதனை அடிக்கடி பத்திரிகைகளிற் படித்திருப்பீர்கள். ஜெயமோகன் கட்டுரையில் இவைபற்றி குறிப்பிடப்படவில்லையென்றாலும் உள்ளூடகமாகவிருக்கின்றது, வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அப்படி புரிந்து கொள்ளமறுப்பவர்கள், வாசிப்புச் சோம்பல் உள்ளவர்கள் அல்லது நல்ல வாசகர்கள் அல்லாதவர்கள்.

சுஜாதா இலக்கியவாதி அல்ல என்பற்கான காரணங்களில் முதலாவதாக ஜெயமோகன் நம்புவது அல்லது அனுமானிப்பது:

‘அவர் தன்னை தமிழின் அதிகார, வெகுஜன, பிரபல சக்திகளுடன் எப்போதும் தெளிவாக அடையாளம் காட்டிக் கொள்வது ‘

ஆக இங்கே கவனிக்க வேண்டியது ‘தெளிவாக ‘ என்கின்ற வார்த்தையை. சுஜாதா வெகுஜன, பிரபல சக்திகளுடன் ‘அடையாளம் ‘ காட்டிக் கொள்ளலாம் தவறில்லை. ‘தெளிவாக அடையாளம் ‘ காட்டிக் கொள்வதுதான் தவறு. இதற்குக் காரணம் சுஜாதாவா ? தமிழ் நாட்டின் ரசனையா என்பது விளங்கவில்லை. சு. சமுத்திரத்திடம் காவிரிநீர்ப் பிரச்சினையில் எழுத்தாளர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்ற வேண்டுகோள் வைக்கப் பட்டபோது அவர் சொன்னது, ‘ எழுத்தாளன் கலந்து கொள்வானென யார் எதிர்பார்ப்பது ? விஜயகாந்த் வருகிறார், சரத்குமார் வருகிறார் என்பதால்தான் கூட்டம் சேருமேயொழிய எங்களுக்கு எவன் வருவான் ? ‘ என்று பிரஸ்தாபித்தார். அது உண்மையும் கூட. சந்தர்ப்பம் வாய்த்தால் அரசியல் தலைவர்களென்ன நடிகர்களோடும் (அதாவது வெகு ஜனசக்திகளோடு) கைகுலுக்கும் இலக்கியவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதனைச் சுஜாதா செய்யக்கூடாது அதாவது தெளிவாக. ஆகவினி சுஜாதா கமலுடன் பேசினேன், மணி ரத்தினத்துடன் டிபன் சாப்பிட்டேன் என்று தெளிவாக அடையாளம் காட்டிக் கொள்வதை நிறுத்தவேண்டும். குறிப்பாக சிக்கலான நேரங்களில் ‘நக்கீரன் கோபால் எனது நண்பர், ‘கலைஞரும் நானும் ‘ என்பதான வியாசங்களைத் தவிர்ப்பது மிக மிக அவசியம். அதற்குப் பதிலாக அமெரிக்காவின் பாக்தாத் ஆக்ரமிப்புக் குறித்ததான கட்டுரையை ஒரு இலக்கிய ஏட்டில் எழுதி புஷ்ஷைக் கண்டிக்கலாம். தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ஏற்பட்ட புத்திலக்கிய வளர்ச்சிபற்றி, ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சியின் 8வது வட்ட நூலகத்தின் ஆதாரங்களை வைத்து ஒரு கட்டுரை எழுதலாம். அப்படி நடந்தால்.. ‘சூ மந்திரக்காளி ‘ நாளைக்கே சுஜாதா ஒரு இலக்கியவாதி.

இரண்டாவது காரணமாக ஜெயமோகன் நம்புவது: சுஜாதாவின் எழுத்து உள்ளீடற்றது. அது ஒரு போதும் நெகிழச் செய்வது இல்லை என்பது. சுஜாதாவின் எழுத்தில் உள்ளீடுள்ளது என்பதற்கும் ஆதாரத்தினை வைக்க முடியும். சரி, ‘உள்ளீடுள்ளதுதான் இலக்கியம் ‘ என்ற விதி எங்கேனும் இருந்தால் தெரிவிக்கலாம். சுஜாதா தொட்டது சமூகவியல், குற்றவியல், அறிவியல், வரலாற்றியல் மற்றும் உளவியல். இவைகளில் உள்ளீடுகளை முற்றிலுமாக நிராகரிக்கலாம். அறிவியலிலும், உளவியலிலும் உள்ளீடுகள் சொல்லப்படுவதும் சொல்லப்படாததும் எழுதுகின்றவரின் விருப்பம். இப்படி அவரை குறை காணும்போது, உள்ளீடற்ற எழுத்தென்று எதுவுமில்லையென வீம்புக்காகவாவது வாதிடவேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் ‘புரிதல் ‘ எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமுள்ள இடைவெளியைப் பொறுத்தது. வெற்றிடத்திற் கூட ஓசையுண்டு. கேட்கின்றவர்களுக்குப் புரியும். குழப்பித்து வாசகனைக் கொட்டாவி வரவைப்பதை விட, புரியவைத்து புன்னகைக்க வைப்பது மேலானது. எளிமையாக இருப்பதெல்லாம் இலக்கியம் ஆகாது என்பது சொத்தை வாதம். இது கடந்த அரைநூற்றாண்டுகளாக கம்யூனிஸ நாடுகளின் இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகளை மட்டுமே அதிகமாக படித்துவிட்டு இலக்கியம் பேசுவர்களின் வாதம். இவர்களில் பெரும்பாலோருக்கு மேற்கத்திய இலக்கியம் என்பது பள்ளி, கல்லூரிகளில் பாடத் திட்டங்களில் படித்ததுதான். இந்தியாவில் இந்த மொழிபெயர்ப்புகள் படும்பாட்டினைக் குறித்து தனியாகவே ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

இலக்கியம் என்றால் சமூகத்திற்கு நல்ல கருத்தினைச் சொல்லவேண்டும். சுஜாதாவிடம் அப்படியேதுமில்லை என்பது அடுத்த குற்றச்சாட்டு. பின்நவீனத்துவத்தைப் பற்றி பேசுகின்றவர்கள்தான் இந்தக் கருத்தினையும் வைக்கிறார்கள். நவீன இலக்கியம் என்பது நீதிக் கதைகள் அல்ல. இலக்கியவாதிகளும் மகாத்மாக்கள் அல்ல. சுஜாதாவின்மீது வைக்கப்படும் இத்தகு விமர்சனத்திற்குப் புதுமைப்பித்தன் பதிலையே இங்கு பார்வைக்கு வைக்கலாம்.

‘இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும் இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவமிருப்பதாகவும் அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம் உண்மை அதுவல்ல… ‘ – (புதுமைப் பித்தன் கட்டுரைகள் -1954)

சுஜாதாவின் இலக்கியத் திறனுக்கு எதிராக வைக்கும் மூன்றாவது குற்றச்சாட்டு அவரது ‘நடை ‘ என்றுச் சொல்லிவிட்டு, அதை மனதார வாழ்த்துகிறார். பாராட்டுகின்றபோது ஏன் இதனைக் குற்றமாகக் கொள்கிறார் என்பது முதலில் புரியவில்லை. முதற்குற்றம் வெகுஜனசக்திகளோடு அவர் பழகுவது, இரண்டாவது குற்றம் உள்ளடக்கமற்ற, அவர் எழுத்து என்கின்ற அனுமானம், மூன்றாவது குற்றம் ‘சுஜாதாவின் நடை ‘ அந்த

நடையைவைத்துத் தமிழில் மிக அதிகமாக படிக்கும் எழுத்தாளராக அவர் இருப்பது.. இப்படி எழுதுவதால் எங்கே பிரச்சினை ? என யோசித்தபோதுதான் இறுதியில் அந்நடைக்கு ‘அந்தரங்கத் தன்மை ‘ இல்லையென முடிக்கிறார். இந்த அந்தரங்கத் தன்மை, உள்ளீடற்றது ஆகிய குற்றச் சாட்டுகளுக்கு, எனது பதில் மேலேக் குறிப்பிட்ட புதுமைப்பித்தனின் வாசகமே.

எல்லாவற்றிற்கும் மேலாகப் பந்தாடப்படுவது சுஜாதாவின் அறிவியல் ஞானம். ஜெயமோகனின் பார்வையில் சுஜாதா ஒரு நவீனத் தொழில் நுட்பத்தின் விளவு. அவரது ஆக்கங்கள் நவீன கருவிகள், இதனை எந்த பரிசோதனைச் சாலையில் வைத்துக் கண்டு பிடித்தாரோ. உதாரணத்திற்கு கணிப் பொறியாம். அது எதற்கும் பயன்படுமாம். சுஜாதாவையே நவீனத் தொழில் நுட்பத்தின் விளைவு என்றாகிவிட்ட பிறகு அவரது ஆக்கங்கள் நவீன கருவிகள் என்றால் என்ன பொருள் ?

நண்பர்களே என்னைப் பொறுத்தவரையில் சுஜாதா இலக்கியவாதி அல்ல என்பதற்கான அடிப்படைக் காரணமே சுஜாதாவின் இந்த அறிவியல் ஞானமே. இவர்களால் தொடமுடியாத ஒன்றை சுஜாதா தொடுவதைத் தீவிர இலக்கியம் பேசுபவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்தத் துறையை பொறுத்தவரை ‘ கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி ‘ கதையாக பலர் சுஜாதாவாக ஆக, முயற்சித்து தோற்றுப் போனது ஊரறிந்த செய்தி.

அறிவியற் புனைகதைகளைப் பொறுத்தவரையில் ஒன்றை நினைவிற் கொள்வது அவசியம். அது படைப்பவனின் இலக்கிய ஆற்றலை மட்டுமல்ல அறிவியலையும் பொறுத்தது. இங்கே படைப்பவன், வாசகனை மனதில் நிறுத்தியே ஆகவேண்டுமெனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது

ஜெயமோகன் எழுப்பும் சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் வெகு எளிமையான ஒரே பதில்:

‘..that is undoubtedly true for the scientist writing an article that is expected to be understood by people who have little or no scientific background. The writer will have to keep simplifying scientific language, explaining technical terms. Keeping the audience in mind is probably valuable for reporting in newspapers and magazines…. ‘ – Madeline L ‘Engle

அறிவியல் புதின எழுத்தாளரென சுஜாதாவால் சொல்லப்பட்டு ஜெயமோகனால் அப்படி இல்லையென மறுக்கப்படுகின்ற, உலகிலேயே அறிவியல் புதினங்களுக்காக அதிக முறை பரிசுகளைவென்ற ( Hugo Award மட்டும் 5 முறை- Locus Poll Award 10 முறை)

Ursula Le Guin:அறிவியல் கதைகள் பற்றிச் சொல்லும் போது, ‘It is basically an intellectuel form of literature – with all the limitations, and all the potentialities , that go with the dominance of inntellect ‘ என்கின்றார்.

சுஜாதாவின் ‘சொர்க்கத் தீவு ‘, ‘என் இனிய இயந்திரா ‘, ‘அடுத்த நூற்றாண்டு ‘, ‘திமலா ‘, ‘கடவுள் வந்திருந்தார் ‘ மற்றும் இதர சுஜாதாவின் அறிவியல் புனைவுகள் அனைத்துமே மேற்குறிப்பிட்ட இரண்டு எழுத்தாளர்களின் அபிப்ராயங்களை ஒத்து போகின்றன. பொதுவாக அறிவியற் கதைகளென்பது, அறிவியல் நூல்கள் அல்ல. கிடைத்திருக்கின்ற அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில், முழுக்க முழுக்கக் கற்பனையில் அல்லது அதீதக் கற்பனையில் எழுதுகின்ற அறிவியல் ஆற்றலை வெளிபடுத்துகின்ற புனைவுகள். அவைகளுக்கு அறிவியல் விதிப்பாடு பொருந்தி வரவேண்டுமென்ற அவசியமில்லாததை இன்றைய மேற்கத்திய அறிவியற் புனைகதைகளைப் படிப்பவர்கள் அறிவார்கள்.

சுஜாதாவிற்குப் பிறகு தமிழில், அறிவியற் கதைகளை சுப்ரபாலன், அர்னீகா நாசர், மாலன் போன்றோர்கள் முயற்சித்திருக்கின்றார்கள். பொதுவாகவே இதற்குக் குறிப்பிட்டத் தரப்பு வாசகர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களோ பெரும்பாலும் ஆங்கிலப் புதினங்களைப் படிப்பவர்கள். இந்த நிலையில், அவர்களுக்குக்

கீழேயான வாசகர்களைத் தேடவேண்டிய கட்டாயம் சுஜாதாவுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிறது. அத்தகு வாசகர்களை மனதிற்கொண்டே எழுத வேண்டிய கட்டாயம். இதையும் கொஞ்சம் எண்ணிப் பார்க்கவேண்டும். இங்கே தமிழில் வாசகர்கள் என்பவர் யார் என்பதை மனதிற் கொள்ளுதல் அவசியம். முதலாவதாக அதிக எண்ணிக்கையில் பெண்கள் – குடும்பக் கதைகளை உருக உருகப் படிப்பவர்கள். கொலை, கொள்ளை அரசியல் வம்புச் செய்திகளில் ஆர்வம் காட்டி பிறகு பாக்கெட் நாவல்களை படிப்பவர்கள், இரண்டாவது வகை. தமிழிலக்கியம் படித்துவிட்டு-காதலுடன் கவிதை எழுத ஆரம்பித்து, படைப்பாளிகளாகவும் வாசகர்களாகவும் இருப்பவர்கள், மூன்றாவது வகை. கல்லூரியில் படிக்கின்றபோது டம்பமாக சேஸ், ஷெல்டன் புத்தகங்களை கைகளில் அடக்கி, முதலைந்து பக்கங்களை வாசித்துவிட்டு, பிறகு தமிழ்ப் புதினங்கள் பக்கம் ஒதுங்குபவர்கள் நான்காவது வகை. இறுதியாக, இயல்பாய் அல்லது விபத்தாக ஆரம்பித்து நல்ல புத்தகங்களை தேடிபிடித்துப் படிக்கப் பழகிக் கொண்டவர்கள் ஐந்தாவது வகை. சுஜாதாவின் வெற்றியே இந்த ஐந்து வகைத் தரப்பினராலும் அறியபட்டதுதான்.

ஜெயமோகன், சுஜாதாவின் கதைகள் கார்ல் சகனோடு (Carl Sagan) ஓரளவு ஒத்துபோகின்றது என்கிறார். எனக்கு சுஜாதவிடம் Aldiss Brian, Robert Sheckley இருவரின் இணைந்த சாயலிருப்பதாகப் படுகிறது. சுஜாதாவோ தன் நண்பர்களுக்கு Arthur C. Clarke, Ray Bradbury, Theodore Sturgeon என சிபாரிசு செய்கிறார். சொல்லப் போனால் H.G. Wellsன் கால இயந்திரத்தின் (Time Machine) முன்னோடி நமது ராமாயாணம், மகாபாரதம், விஷ்ணு புராணம் எனச் சொல்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அது இங்கே முக்கியல்ல. இதில் கவனிக்க வேண்டியது அறிவியல் புனைகதைகள் என்பது, நான் முன்பே சொன்னது போன்று பாடநூல்கள் அல்ல. அதுவும் ஒரு கதை (Fiction)தான். ஆரம்பத்தில் மேலை நாடுகளில் உளவியல், மானுடவியல், உயிரியல், வான சாஸ்திரம் எனப்படித்தவர்கள் அறிவியல் கதைகளை எழுதத்தொடங்கி இன்றைக்கு அந்தச் துறையைச் சாராதவர்களும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கற்பனைக் கதைகள் என்பதால் அறிவியல் விதிப்படிதான் எழுதவேண்டுமென்ற நியதியில்லை. ஆகவே எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்த விதி, எம்.ஐ.டி. டியில் படித்த சுஜாதாவுக்குத் தெரியவில்லையே என்பது, அறிவியல் புனைகதைகளை நாம் அறிவியல் நூல்களாகக் கொள்ளுவதால் ஏற்பட்ட குழப்பமேயன்றி வேறில்லை.

சுஜாதாவை ஒரு இலக்கியவாதி இல்லை-இல்லையென, திரும்பத் திரும்பச் சொல்லுவதே, அவர் ஒரு இலக்கியவாதி என்பதை வலியுறுத்துகிறது. சுஜாதாவைக் குறித்தான அனைத்து விமர்சனங்களுமே பொறாமையின் வெளிப்பாடாக இருந்திருக்கின்றதேயொழிய ஆரோக்கியமான நடுநிலை விமர்சனங்களாக இருப்பதில்லை. சுஜாதாவுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. அவரது வரவு, மற்ற இலக்கியவாதிகளைப் போலவே ( சற்று மேலானதாகவும் கூட) தமிழுக்குக் கிடைத்த கொடை. அவரது கேள்வி பதில்கள், அறிவியற் கட்டுரைகள், சிறுகதைகள், குறு நாவல்கள், நாவல்கள் அனைத்துமே பன்முக வெளிப்பாடு. ‘காகிதச் சங்கிலிகள் ‘, ‘ஏறக்குறைய சொர்க்கம் ‘, ‘கனவுத் தொழிற்சாலை ‘.. ஆகியவற்றிற்கு இலக்கியத்திற்கான எல்லாத் தகுதிகளும் உண்டு. சுஜாதாவின் சிறுகதைகள் பற்றித் தனியாகவே ஆராயவேண்டும். ‘இரயில் புன்னகை ‘, ‘குதிரை ‘, ‘முழு வைத்தியன் ‘, ‘பேட்டி ‘, ‘ஒரு நாள் மட்டும் ‘, ‘குந்தவையின் காதல் ‘, ‘க்ளாக் ஹவுஸ் புதையல் ‘ அனைத்துமே மேலை நாடுகள் எதிர்பார்க்கின்ற சிறுகதைத் தரத்தில் உள்ளவை.. இவைகளைப் பற்றி விவரிக்க தனியாகவொரு கட்டுரை தேவை

‘நன்றாகவும், வேகமாகவும் எழுதுவது என்பது இயலாது ‘ என்பது Isac Asimovன் அபிப்ராயம். தலைப்பையும் வந்து சேரவேண்டிய தேதியையும் குறிப்பிட்டுவிட்டு வெகு ஜனவிதழ்களுக்கு எழுதும்போது சுஜாதாவின் சில படைப்புக்கள் சோடைபோயிருக்கின்றன. இது ஏறக்குறைய அனைத்து எழுத்தாளர்களுக்கும் நிகழ்வதுதான். சுஜாதாவின் நடையைப் பற்றி அனவருமே பாராட்டுவது அறிந்த செய்தி. இது தவிர வேறு பல சிறப்புகளும் அவரது படைப்பில் உள்ளன. உ.ம். கதை மாந்தர்கள் இயல்பாய் இருப்பார்கள். அவர்களது அறிவும் நெறியும், பாத்திரங்களின் தன்மைக்கேற்ற அமையும். கதையில் வருகின்ற மாந்தர்களிலே, படைப்பாளியான சுஜாதா தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை, தேவையிருந்தாலொழிய. தன் நீதிகளை வாசகன் மீது திணிப்பவரல்ல. வாசகனுக்குப் பெட்டகத்தை திறந்துவைத்துவிட்டு ஒதுங்கும் மனோபாவம்… இப்படி நிறையச் சொல்லிக் கொண்டு போகலாம்.

பத்திரிகை உலகத்திற்கு ஒரு ஏ.என் சிவராமனைப்போல, புதின உலகத்திற்கு சுஜாதா. நடுத்தர படித்த வர்க்கத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்த அந்த ஆற்றல் சாதாரணமானதல்ல.

இறுதியாக ‘சராசரி மனிதனைச் சென்றடைவது இலக்கியமல்ல ‘ என்பவர்களுக்கு ஒரு வார்த்தை

‘உலகிற் புகழ்பெற்ற காப்பியங்களும், இலக்கியங்களும் சராசரி மனிதனைச் சென்றடைந்தவையே. ‘.

*****

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா