சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

சின்னக் கண்ணன்


****

அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பப் பட்டதாலோ என்னவோ சிவந்த கண்களுடன் எழுந்த சூரியன், அந்தச் செம்மணல் கிராமத்தினுள் பார்வையை ஓட்ட முடியாமல் அதிர்ச்சியடைந்தான்.காரணம் வானத்திலிருந்து முதலிலேயே அந்தக் கொடூரமான காட்சியைப் பார்த்துவிட்ட மேகப் பெண்கள் தங்கள் சேலையினால் சூரியனின் கண்களை மூட முயற்சித்தது தான். அப்படியும் கூட கிடைத்த இடைவெளியில் கிரணங்களை ஓட்டியவன், காட்சியைக் கண்டதும் மிகவும் நொந்து போனான்..

காரணம், கீழே, செம்மணல் கிராமத்தின் பிரதானத் தெருவில் அந்தப் பெண் படுத்திருந்தது தான்.. இல்லை..உயிருடன் இருந்த போது அவள் பெண்..இப்போது அது..ஒருக்களித்துக் கிடந்த அந்த உடலின் மீது சேலையானது சம்பிரதாயத்திற்காகச் சுற்றப்பட்டது போல இருந்தது..

அவ்வாறு அந்தப் பெண் கிடப்பதை முதலில் பார்த்தது – இயற்கை உபாதையைக் கழிக்கலாம் என தூக்கக் கலக்கத்துடன் எழுந்த குட்டிப் பையன் தான்… இந்த அக்கா ஏன் இங்க வந்து தூங்குது.. என சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே வேலை முடித்து வீட்டிற்குச் சென்று தனது அம்மாவிடம் சொன்னான்.. ‘ஒரு அக்கா நடுத்தெருவில படுத்துத் தூங்குது. ‘ சில நாழிகைப் பொழுதில் அந்தச் செம்மணல் கிராமமே விழித்துக் கொண்டு விட்டது..

கூட்டத்திற்கு அந்தப் பெண்ணை முதல் பார்வையிலேயே அடையாளம் தெரிந்து விட்டது.. ‘அட.. அந்த நாலாவது தெரு விலாசவதி.. ராஜகிரிப் பொண்ணு..பாட்டி வீட்டுக்கு குருகுல விடுமுறைக்காக

வந்திருந்துச்சே..ஓ..அதுக்கா இந்தக் கதி.. ‘

வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் சொன்னார்.. ‘அச்சச்சோ..இப்படி நமது மன்னர் ராசேந்திர சோழ தேவர் ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்கிறதே.. என்ன செய்வது.. ‘.

இன்னொருவர் , ‘ மன்னர் என்ன செய்வார்..போர் போர் என்று முனைப்பாக இருக்கிறார்..உள் நாட்டில் இருக்கும் பிரச்னைகளைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்..கேட்டால் கடாரத்தின் மீது போர் கொண்டு அங்குள்ள பொன்னைக் கொள்வது தமிழ் நாட்டுக்கு நலன் பயக்கும் என்கிறார் ‘ என்றார்.

அந்தக் கூட்டத்தில் புகுந்து கீழே கிடக்கும் பெண்ணருகில் சென்றாள் நீலாய தாட்சி..அவளது கண்கள் கலங்கியிருந்தன..விலாசவதி..இனிமையான பெண்.. கோவில் செல்லும் போது பழக்கம்.பாரபட்சமில்லாமல் ஆண்,பெண் எல்லோரிடமும் சகஜமாகப் பழகும்பெண்..அவளுக்கா இப்படி..

சற்றே விலகியிருந்த சேலையை முழுவதும் மூடினாள் நீலா. கூட்டத்திலிருந்த ஒருவர், ‘ஏ பொண்ணு..ஒண்ணும் தொடாதே..ஏற்கெனவே காவலர் தலைவனை அழைத்து வர ஆள் போயிருக்கிறது.. ‘

அங்கிருந்த வயதான மாது, ‘யாருப்பா இதச் செஞ்சது..பாக்கற எனக்கே பகீர்ங்குதே.. ‘ எனக்கேட்க அருகிலிருந்தவர் சொன்னார்..

‘மரகதப் பாட்டிம்மா.. இது நம்ம பெரிய தனக்காரர் அம்பலவாணர் இருக்காரில்ல அவரோட பையன் அழகம் பெருமாளோட சுத்திக்கிட்டு இருந்துச்சு.. நான் பாத்திருக்கேன்..கூடிய சீக்கிரம் கல்யாணம் கட்டிக்கப் போறதா பேச்சு இருந்துச்சு ‘

‘என்ன அந்தப் பொறுக்கிப் பயலோடயா சுத்திக்கிட்டு இருந்துச்சு ‘ எனக் கேட்டாள் கிழவி..

சுவாரஸ்யத்துடன் அந்த முதல் நபர், ‘ அழகம் பெருமாள் பொறுக்கியா பாட்டி ?.. ‘

வற்றலான உடலுடன் வேஷ்டியும் அங்கவஸ்திரமும் தரித்திருந்த இன்னொரு நபர் ‘அவன் பொறுக்கின்னு ஊருக்கே தெரியுமே..ராவேளைன்னா பனந்தோப்புல்ல போய் கள் குடிச்சுட்டுப் பண்ணுற அக்கிரமம் இருக்கே… ‘

மரகதம்மாள் சொன்னாள், ‘ஆமா..புலவரே, அவனோட அப்பா பேரக் கெடுக்கறதுக்குன்னே பொறந்துருக்கான் இவன். சாயந்திரமானா குடி ,கூத்தி தான் அவனுக்கு..அடப்பாவமே..அப்ப அவனே தான் எதுனாச்சும் பண்ணியிருப்பான் போல.. ‘

புலவரே என விளிக்கப் பட்ட சங்கரலிங்கம் சொன்னார், ‘ அப்படி அவன் தான் செஞ்சான்னு தெரிஞ்சா தக்க தண்டனை வாங்கித் தரணும் ‘

மரகதம்மாள் ‘ நம்மால எல்லாம் முடியாது புலவரே, பெரிய இடத்துப் பொல்லாப்பு நமக்கெதுக்கு.. அம்பலவாணர் தனது பொண்ணை தஞ்சை அமைச்சரோட பிள்ளைக்குக் கொடுத்துருக்கார் தெரியும்ல..கொஞ்சம் கம்னு இருங்க..அதோ காவல்காரங்க வராங்க.. ‘ என்றாள். இந்த உரையாடல்களை எல்லாம் கேட்ட வண்ணம் நின்றிருந்த நீலாய தாட்சியின் கவனம் தடதட என வந்த குளம்பொலிகளால் கலைந்தது.

பத்துப் புரவிகள் வந்து நிற்க சரேலெனக் காவலர்கள் குதித்தனர். ‘யார் இந்த ப் பெண் ?.. ‘

சங்கரலிங்கம் முன்வந்தார் ‘இவள் பெயர் விலாசவதி. இவளது தாத்தா மணிசேகரனுக்கு ஏற்கெனவே தகவல் கொடுத்தாகி விட்டது.. ‘

‘இதற்குக் காரணம் யார் என்று தெரியுமா.. ‘ விலாசவதியைப் பார்த்தவண்ணம் கேட்டான் காவலர் தலைவனாகத் தெரிந்தவன்.. ‘பெண் கிடக்கும் நிலையைப் பார்த்தால் மானபங்கம் செய்திருப்பார்கள் போல.. ‘. அவன் சொல்லி முடிக்கவும் ஓலமிட்டுக் கொண்டு விலாசவதியின் தாத்தா வரவும் சரியாக இருந்தது..

‘அடப்பாவிப் பொண்ணே..உனக்கா இந்தகதி.. எப்படி எல்லாம் உன்னை வளத்தோம்..இப்படிப் பார்க்கறதுக்கா.. ‘ அழுது அரற்றியவரைப் பிடித்து ஆறுதல் சொன்னது ஒரு கூட்டம்..

சங்கரலிங்கம் ‘இதற்குக் காரணம் அம்பலவாணரின் மகன் அழகம் பெருமாள் என நினைக்கிறேன்.. ‘ என்றார்.

‘உறுதியாகத் தெரியுமா..உமக்கு.. ‘

‘இதோ இந்த கிராமம் முழுமையும் இங்கு கூடியிருக்கிறது..அவனோ இந்தப் பெண்ணுடன் பழகியிருந்தவன்..இது வரை வந்திருக்கலாமே..எங்கு போனான் ?.. ‘

‘அவன் இந்தப் பெண்ணுடன் சுற்றினான் என்பதற்கு என்ன சாட்சி ?.. ‘

‘நானே ஒரு சாட்சி..அவன் பொறுக்கி என்று பலருக்குத் தெரியும்..இந்தப் பெண்ணின் நிலையைப்பார்க்கப் பார்க்க ஆறமாட்டேன் என்கிறது எனக்கு..

காதலாய் வந்திருந்த காரிகையைக் கொன்றுவிட்ட

பாதகா நீயே பரிதவிக்க உன்னுடலைத்

தாக்கித் தயங்காமல் தக்கபடி உள்நுழைந்து

பூக்கட்டும் நன்றாய் புழு ‘

‘புலவர்ங்கறது சரியாத்தான் இருக்கு ‘ என்றான் ஊர்க்காவலர் தலைவன். ‘பாட்டுல்லாம் அப்புறம் வெச்சுக்கலாம்..முதல்ல ஆக வேண்டியதைப் பார்க்கலாம்.. ‘ . அதற்குள் அங்கிருந்த மற்ற காவலர்கள் அந்தப் பெண்ணைப் பனை ஓலையில் சுருட்டி முகம் தெரியுமாறு ஒரு மூலையில் வைத்தனர்.

அதற்குள் தடதடவென சத்தம் போட்டவண்ணம் தேர் ஒன்று வந்து நிற்க அதனுள்ளிருந்து இறங்கினார் அம்பலவாணர்.

‘என்ன..என்ன ஆச்சு..என்ன இங்கே கூட்டம். ?. ‘

ஊர்க்காவலர் தலைவன் அவரைக் கூட்டிச் சென்று ஏதோ சொன்னான்.

‘அடடா..சின்னப் பெண்..ஏன் ராத்திரி வேளையில் தனியாப் போகுது.. சுத்து வட்டாரங்கள்ல தான் கள்ளர் பயம் இருக்குன்னா இப்ப நம்ம ஊருக்கும் வந்துட்டாங்களா. எந்தெந்த நகை குறையுதுன்னு அந்தப் பெண்ணோட தாத்தாக் கிட்டக் கேளுங்க.. இதை க் கண்டிப்பா நான் மன்னர் கிட்ட சொல்றேன் ‘ என்றதும் சஙகர லிங்கம் பொங்கினார்..

‘அம்பல வாணரே.. உன் பையன் செய்த தவறை மறைக்க எண்ணாதீர்கள்.. ‘

ஊ.கா.த. ‘அப்ப பிடிச்சு இந்த ஆள் ஏதோ சொல்லிக்கிட்டிருக்கான் தலைவரே ‘

சங்கரலிஙக்ம், ‘ நான் சும்மா சொல்லவில்லை ‘ என்றவண்ணம் தன் இடுப்பிலிருந்து ஒரு பொருளை எடுத்தார்.. ‘இதைப் பாருங்கள்..இதனுள் இருக்கும் ரத்தக் கறையைப் பாருங்கள் ‘

வாங்கிய அம்பலவாணர் அதிர்ந்தார்..இது இது..புலி நகச் சங்கிலி..என் பையனுடையது.. இது எப்படி உமக்கு.. ‘

‘இது அந்தப் பெண்ணின் மேல் இருந்தது.. வெளிப்படையாக இருந்தால் இந்தக் காவலர்கள் மறைப்பார்கள் என எண்ணியதால் நான் எடுத்து வைத்திருந்தேன்.. ‘

‘புலவரே..வீணாக ஏன் பொய் சொல்லுகிறீர்கள்..அந்தப் பெண்ணுக்கும் உமக்கும் என்ன தொடர்பு..மரியாதையாகச் சொல்லும். என் பையனின் சங்கிலியை எங்கிருந்து எடுத்தீர்.. ‘ என்றார் அம்பலவாணர்.

சுற்றியிருந்த கூட்டம் கொஞ்சம் சுவாரஸ்யமேற்பட, அம்பலவாணரிடம் இருந்த பயத்தாலும், சங்கரலிங்கத்திடம் இருந்த மரியாதையாலும் மேற்கொண்டு எதுவும் பேசமால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

‘அபாண்டமாய்ச் சொல்லாதீர் அம்பலவாணரே.. ‘

‘எது பொய் எது நிஜம் என்று கண்டுபிடிக்க ஊர்மன்றம் இருக்கிறது சங்கரலிங்கம்.. நீர் என்ன செய்கிறீர் என்றால் என்னுடன் வாரும்..ஊர்க்காவல் தலைவன் வீட்டில் இது பற்றித் தொடர்ந்து பேசுவோம்.. ‘

சங்கரலிங்கம் தயங்கினார்..

‘என்ன தயக்கம்.. பயமா ?.. ‘

‘பயமா..எனக்கா..ஹ ‘ எனச் சொல்லி அம்பலவாணரின் தேரில் ஏறிக்கொள்ள, அம்பலவாணரும் ஏற, தேர் புறப்பட்டது. ஊ.கா.தவும் தொடர்ந்து புரவியில் பறந்தான். சிறிது நேரத்தில் ஒரு மாட்டுவண்டியில் விலாசவதியின் உடல் ஏற்றப்பட,தாத்தாவும் உடன் ஏற அந்த வண்டியும் சென்றது..சுற்றியிருந்த கூட்டம் முணுமுணுத்தவண்ணம் கலைந்தது..

******************

மதிய வேளை..

எட்டுக்கட்டு வீட்டின் ஆறாவது கட்டில் இருந்த முற்றத்தில் ஒரு தூணின் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருந்தாள் நீலாயதாட்சி. அவள் கண் அங்கு வெய்யிலில் காய்வதற்காகப் போடப் பட்டிருந்த மிளகாய் வற்றல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட மனக் கண்ணில் விலாசவதியே ஆடிக் கொண்டிருந்தாள்..

எப்படிப் பட்ட பெண் அவள்..எப்பொழுதும் இன் முகம்..ஒரு நாள் உடல் நலமில்லாமல் இவள் கோவிலுக்குச் சென்றிருந்தபோது இவளது முகவாட்டத்தை கவனித்து வந்து விட்டாள் அவ்ள்..

‘என்ன நீலாக்கா..என்ன கவலை.. ‘

‘ஒன்றுமில்லை விலாசவதி.. ‘

‘ச்ச்.. அதான் முகத்திலேயே தெரியுதே.. அக்கா நீங்க என்ன செய்யணும்னா..

சவலைக் குழந்தையாய்ச் சங்கடஞ் செய்யும் கவலைக் கரப்பை அடிக்கணும்க்கா.. ‘

‘போடி எதுக்கெடுத்தாலும் எதுகை மோனையோட ஏதாவது சொல்லிக்கிட்டே இரு.. ‘

ம்க்கும் என்ற கனைப்பு நீலாவின் சிந்தனையைக் கலைத்தது.. நிமிர்ந்தாள்.. மரகதக் கிழவி..வாயில் வெற்றிலை நிறைய மென்றதாலோ என்னவோ இளம்பெண்ணின் உதட்டைப் போல அவளுதடும் சிவந்திருந்தது..

‘என்ன யோசனை..நீலா.. ‘

‘ஒன்றுமில்லை சித்தி.. ‘ மரகதம் அவளுக்கு உறவுமுறையெல்லாம் இல்லை..இருந்தும் அவளை சித்தி என்று தான் அழைப்பாள் நீலா..

‘சரி..இன்னிக்கு சாயந்தரம் ஆரம்பிச்சுடலாமா.. ‘

‘இன்னிக்கேவா..எனக்குக் கொஞ்சம்… ‘

‘அதான் இந்த ஊருக்கு வந்ததுலருந்து நல்லாத் தானே இருக்க.. நாமெல்லாம் நாடோடிக் கும்பல்..கொஞ்சம்.. ‘எனச் சொல்லிக் கொண்டே வந்த மரகதம் நீலாவின் பார்வையைப் பார்த்து நிறுத்தினாள்..

‘சரி..சித்தி.. ‘ என நீலா சொன்னதும் ‘அப்படிச் சொல்லு.. சரி நான் சொல்லி விட்டுர்றேன்..ஆமா குளிகைல்லாம் சாப்பிடறாயா ஒழுங்கா.. ‘

‘அப்பாடி..இப்பவாவது கேக்கணும்னு உனக்குத் தோணிச்சே சித்தி..ஆமா.. வேற ஏதாவது விசேஷம்.. ‘

‘வேறென்ன விசேஷமா… அந்தச் சங்கரலிங்கத்தைக் கொண்டு போனாரில்லையா அம்பலவாணர்… ‘

‘என்ன ஆச்சு சித்தி ‘

‘இன்னும் என்ன ஆகணும்…மனுஷனுக்கு உடம்பு பூரா அடி.. அவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டுத் தான் வர்றேன்.. ‘

‘ஏன் ‘

‘எல்லாம் அந்த அம்பலவாணரோட வேலை தான்..ஏய்கிழவா… ஒழுங்கா வாய் மூடிக்கிட்டு இரு..இல்லைன்னா அந்தப் பொண்ணோட கதி தான் திருவாரூர்ல இருக்கற உன் பேத்திக்கும் ஏற்படும்னு பயமுறுத்தியிருக்கார்… சங்கரலிங்கம் மனசு நொந்து உடல் நொந்து படுத்துருக்கார்… ‘

‘இதுக்கெல்லாம் முடிவே இல்லையா.. ‘

‘எங்க இருக்கு முடிவு…அதான் அவர்..அம்பலத்தார் பெரிய ஆட்களைக் கைக்குள்ள வச்சுருக்காரே…சரி சரி..உடம்பப் பார்த்துக்கோ..சாயந்தரம் வேலை இருக்கு ‘ என்று எழுந்தாள் மரகதம்..

***********

இன்னும் காலையில் ஏற்பட்ட அதிர்ச்சி கரையாததாலோ என்னவோ சிவந்த முகத்துடன் தூங்கப் புறப்பட்டுக்கொண்டிருந்தான் ஆதவன்.

செம்மணல் கிராமத்தின் இறுதியில் இருந்தது மிகப் பெரிய ஏரி..அதை ஒட்டி சில ஆல்,அரசு,மா,வேம்பு என மரங்கள் நெடிதாக வளர்ந்திருந்தன..

அவற்றில் ஒரு வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தவண்ணம் கையிலிருந்த பானையிலிருந்த கள்ளைச் சிறிது சிறிதாக வாயில் விட்டுக் கொண்டான் அழகம் பெருமாள்.. அவனது கண்களும் சூரியனுக்குப் போட்டியாக இருந்தன..]

மடக்..

‘உனக்குக் கொஞ்சமும் அறிவுகிடையாது ‘ தந்தையின் வார்த்தைகள்..

இரண்டாம் மடக்…

‘இப்படியா கொலையெல்லாம் பண்றது.. நீ ஆசைப்பட்டா இணங்கறதுக்குத் தான் தஞ்சாவூரில் கணிகை மடமே இருக்கிறதே… ஏன் தான் என் பேரைக் கெடுக்கறதுக்குன்னே பொறந்தேன்னு தெரியலை..நல்ல வேளை.. அந்தச் சங்கரலிங்கம் என்கிட்டயே வந்து கேட்டான்.. அதனால நாலு தட்டுத் தட்ட முடிஞ்சுது..இனிமேலாவது ஜாக்ரதையா இரு… ‘

மூன்றாம் மடக்…

‘ச்ச்ச்.. என்ன இது.. பேசலாம் என்று வந்த இடத்தில்ல் இப்படியா தொடுவது… ‘

‘இதில் என்ன இருக்கிறது விலாசவதி… குருகுலத்தில் படிக்கும் தைர்யமான பெண் நீயே பயப்படலாமா… ‘

‘ம்ம்.. நீங்கள் இன்று சரியில்லை..பார்வை..பேச்சு எல்லாம் ஒருமாதிரி இருக்கிறது..ம்ம் வேண்டாம்.. விடுங்கள்… ‘ என்றவள் ஒரு வேகத்தில் வெடுக்கென்று கைகளைக் கடித்து விட…

உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த கோப,காம வெறியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் சின்னவயதில் ஆசிரியர் கற்றுக் கொடுத்த வர்ம அடியை அவளது கழுத்தில் பிரயோகிக்க….

‘விலாசவதி…விலா… ‘ ம்ம்ம் பயனில்லை…பேச்சும் மூச்சும் இல்லை…வேறெங்காவது போட்டு விடலாம் எனத் திண்டாடி மாட்டு வண்டியில் எடுத்து வரும் போது கீழே சரிந்து விட, தொலைவில் யாரோ வருவது போலிருக்க படக்கென மாடுகளை விரட்டிச் சென்று விட்டான்…

மடக்க்..

அழகம் பெருமாள் காலிப் பானையைத் தரையில் எறிந்தான்.. அதிகம் குடித்தால் அனுபவிக்க முடியாது எனத் தெரியும்..எனவே இப்போது ஒரு போதை முடிந்து விட்டது..தேவை மறு போதை.. என்ன செய்யலாம்..எனக் கண்களைச் சுழற்றிச் சுழற்றிப் பார்த்ததில் தொலைவில் புளிய மரத்தடியில் நிற்பது யார்….ஒரு வேளை பேயோ..சே.. நாம் இருப்பது பதின்மூன்றாம் நூற்றாண்டு..இதில் பேயாவது பிசாசாவது…

அருகில் சென்று பார்த்தால்… பெண் தான்.. சிகப்பு நிறச் சேலை.. கிராமியக் களை.. நல்ல முக வெட்டு…

‘ஏய் யாரது… ‘

‘கும்புடறேங்க.. ‘

‘யாருன்னு கேக்கறேன்ல… ‘

‘ எனக்கு சொந்த ஊர் தெற்கு மாங்குடிங்க…. இங்க இருக்கற சித்தப்பாரு வீட்டுக்கு வந்திருக்கேன்..இப்படியே ஏரியப் பாத்துக்கிட்டு இருந்ததுல உச்சி வந்துடுச்சு… ‘

அவள் சொன்ன போது உதடுகள் சுழித்த பாவனை, விழிகளில் தெரிந்த அப்பாவித் தனம்…நல்ல மாநிறம் தான்…நல்லவேளை..கழுத்தில் மாங்கல்யம் எதுவும் இல்லை…

அழகம்பெருமாள் அவளது கைகளைப் பற்றினான்…

‘ஏய் வா.. ‘

‘அய்யா..சாமி.. ‘ அவள் சீறினாள்.. ‘நா..அப்படிப்பட்ட பொண்ணில்லை.. ‘

‘நீ எப்படிப்பட்டவளாயிருந்தாலும் சரி…எனக்கு இப்போது நீ வேண்டும்.. என்ன வேண்டும் உனக்கு ‘

‘பணத் திமிராய்யா உனக்கு ‘

‘மரியாதை கொடுத்துப் பேசு பெண்ணே..இது என்ன தெரிகிறதா ‘ பொன்முடிப்பைக் காட்டினான்..குறைந்தது ஐம்பது பொன்னாவது இருக்கும்.. தஞ்சைக்குச் சென்றால் ஐந்து பொன்னில் முடிவது..என்ன செய்ய..அவசரம்…

அவள்கண்களில் கொஞ்சம் மாற்றம் வந்தது.. ‘எவ்ளோ பொன் இருக்குய்யா இதிலே ‘

‘என்ன ஒரு அம்பது இருக்கும்… இன்னும் வேண்டுமா..வேண்டுமானால் உன் பெயரில் ஒரு வேலி நிலம் எழுதித் தருகிறேன்… ‘ எல்லாம் வெற்று ஓலை வாக்குறுதி.. தாராளமாகவே கொடுக்கலாம்…

‘பார்த்தால் பெரிய இடம் மாதிரி இருக்கு.. செய்வதெல்லாம் நன்றாக இல்லை.. ‘ அவளதுகுரல் கொஞ்சம் தழைந்திருந்தது.. அழகம்பெருமாளுக்கு உற்சாகம் பிடிபடவில்லை.. மெல்ல அவளது கைகளைப் பற்றி அருகிலிருந்த அரசமரத்தின் பின் சென்றான்…

********************************

மிக்ப் பெரிய கிணறு அது..கொஞ்சம் அந்தி மங்கிக் கொண்டிருந்ததை மெல்லியதாக உள்ளிருந்த நீர் பிரதிபலித்துக் கொண்டிருந்தது…

அதிலும் ஒரு நிழலாட்டம்…கிணற்றின் மேற்சுவற்றில் அமர்ந்தாள் நீலாயதாட்சி.. மரகதத்தின் குரல் பின் வந்தது..

‘நான் தான் சொல்லிக் கொண்டே இருந்தேனில்ல.. எங்க போயிட்ட நீ..சரி சரி..நேரமாகுது..வா… ‘

‘நான் எங்கும் வரவில்லை சித்தி…இந்தா ‘

‘ஏன் கொழுப்பாங்கறேன்… நாலு காசு பார்த்தாத் தானே … ‘ என்றவள் பணமுடிப்பைக் கண்டதும் நிறுத்தினாள்.. ‘இது எங்க..சரி சரி.. இது ஆறு மாசத்துக்குத் தாங்கும்.. அதுக்குள்ள வேற ஏதாவது செய்யலாம்.. ‘ என்ற மரகதம் ‘உள்ள வந்தாவது தூங்கு…உன்னோட நெல எனக்குப் புரியுது.. நல்ல பொண்ணு விலாசவதி…அவளைப் போய்… ம்ம்.. அந்த ஆண்டவன் தான் அவனைத் தண்டிக்கணும்..இன்னும் எத்தனை பொண்ணுங்களை பலி போடப் போறானோ… ‘

அவனால் யாருக்கும் இனி ஒரு தொந்தரவும் இருக்க முடியாது சித்தி… என மனதுக்குள் சொல்லிக் கொண்ட போது அடுக்கடுக்காய் இருமல் வர இருமி இருமி சிகப்பாய் உமிழ்ந்தாள். குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொப்பளிக்கையில் இடையில் ஏதோ உறுத்த எடுத்து,அந்த ரத்தம் தோய்ந்த கத்தியை ஒருமுறை பார்த்து விட்டுக் கிணற்றினுள் எறிந்தாள் நீலா..

kan_lakk@hotmail.com

Series Navigation

author

சின்னக் கண்ணன்

சின்னக் கண்ணன்

Similar Posts