சிறுகதை – அதன் அகமும் புறமும்

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

சுந்தர ராமசாமி


சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம் இருந்தால் எழுதலாம். எல்லோரும் அதைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. அப்படியொரு கட்டாயம், சமூகத் தேவை எதுவுமே இல்லை. சிறுகதை எழுதாமல் சிறந்த பிரஜையாக வாழமுடியும். சிறுகதை எழுதுபவர்களைவிட, படிப்பவர்களைவிட உயர்ந்த மனிதர்களாக அவர்கள் இருக்கவும் கூடும். சிலர் சிறுகதைகள் படிக்காமல் வேறு அற்புதமான நூல்களைப் படித்திருப்பார்கள். சிலர் திருக்குறள் படித்திருப்பார்கள். சிலர் சிலப்பதிகாரம் படித்திருப்பார்கள். கம்பராமாயணம் படித்திருப்பார்கள். நமது தலைவர் திரு. ஹமீத் அவர்களின் தகப்பனார் ஆன செய்க்குத்தம்பிப் பாவலர் இருக்கிறார். மிகப்பெரிய புலவர். இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரிய புலவர்களில் ஒருவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் சிறுகதையை விரும்பிப் படித்திருப்பாரா என்பது சந்தேகம் தான். அதை வைத்து ஒருவரை நாம் மதிப்பிட முடியாது.

சிறுகதையைப் படைக்க வேண்டும் என்ற அவா இருந்தால் யாரும் அந்தத் திறனை வளர்த்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை, சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்ளலாம். சிறுகதையையே படிக்காமல் யாராலும் சிறுகதையை உருவாக்கிவிட முடியாது. அநேகமாக எனக்குத் தெரிந்த வரை சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் எல்லாரும் சிறந்த சிறுகதை வாசகர்களும் கூட. அதுபோல் சிறுகதை எழுதுபவர்கள் சிறுகதையை மட்டுமே படிக்க வேண்டும் என்றும் கிடையாது. நாவல்கள் படிக்க வேண்டும். கவிதைகள் படிக்க வேண்டும். ஆராய்ச்சி நூல்களைப் படிக்க வேண்டும். சினிமா பற்றி படிக்க வேண்டும். வாழ்க்கைக்கு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. எது சாத்தியமோ, எது அவனது அறிவிற்கு எட்டுமோ, என்னென்ன விஷயங்கள் சூழல் இன்று புரிந்து கொள்ள முடியுமோ அந்த விஷயங்கள் எல்லாம் படிக்க வேண்டிய ஒரு கட்டாயம் உருவாகிவிட்டது. நாம் படைக்கப்போவது சிறுகதைதானே, எனவே சிறுகதைகளை மட்டும் படித்து வந்தால்போதும் என்று நம் படிப்பைச் சுருக்கிக் கொண்டால் காலத்தை ஒட்டிய படைப்புக்களைத் தரமுடியாமல் தேய்ந்து போவதற்கு வழிவகுக்கும். இன்னொரு முக்கியமான விஷயம் கதைகள் வேறு சிறுகதைகள் வேறு. இது என் தனிப்பட்ட நம்பிக்கை. கதைகளை எழுதிக் கொண்டிருப்பவர்களை கதாசிரியர் என்று ஏற்றுக் கொள்வேனே தவிர சிறுகதை ஆசிரியர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். சிறுகதை பற்றி நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் சிறுகதை பற்றிய என் அபிப்ராயங்களை விரிவாகத் தெரிவித்திருக்கிறேன். 1930லிருந்து 1990 வரையிலான 60 வருடங்களில் மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர்களின் சிறந்த கதைகளை மட்டும் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அது மிகவும் கடினமாக காரியம். ஆனால் இந்தக் கட்டுரையில் என்னை நானே தயார்படுத்திக் கொள்ளும் வகையில் சில விஷயங்களைச் சொல்லியிருந்தேன். அதில் 60 வருட காலத்தில் வெளிவந்திருக்கக் கூடியவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறேன். முதலாவது கலைப்படைப்பு, இரண்டாவது சிறுகதை, மூன்றாவது கதை என்று பிரிக்கிறேன். கலையாற்றல் கொண்ட சிறுகதைகள் தான் என்னுடைய அபிப்ராயத்தில் மிக முக்கியமான படைப்புகள். இரண்டாவது சிறுகதையாக இருக்கிறது. ஆனால் கலையாற்றல் கொண்டிருக்கவில்லை. இதை சிறுகதை என்கிறேன். சிறுகதையாகவில்லை வெறும் கதையாக மட்டுமே இருப்பதைக் கதைகள் என்று சொல்கிறேன்.

சிறுகதை என்பது வெகு சமீப காலத்தில் உருவாகி வந்த இலக்கிய உருவம். உலகத்திலே உள்ள எல்லா மொழிகளிலும் முதன்முதலாக உருவாக்கி வருவது கவிதையாகத்தான் இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமான விஷயம். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பலவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றைப் படித்துவிட்டு நீங்கள் அவர்கள் சொல்வது சரிதானா என்று சிந்தித்துப் பார்க்கலாம். எனவே தான் ஜோசியம், தத்துவம், தச்சுக்கலை, மருத்துவம், வானவியல் என எந்தத் துறை பற்றியதாக இருந்தாலும் அது கவிதை வழியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டு 17ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழில் புரட்சி உலகில் ஏற்பட்ட பின்னர்தான், அச்சுக்கலை தோன்றிய பிறகுதான் உரைநடை, வசனம் உருவாக ஆரம்பிக்கிறது. அது தோன்றிய பிறகுதான் சிறுகதை என்னும் இலக்கிய உருவம் தோன்ற ஆரம்பிக்கிறது. இது அநேகமாக 200 வருஷத்துக்குள்ளேதான் எல்லா மொழிகளிலும் தோன்றியிருக்கிறது. எல்லா மொழிகளிலும் சிறுகதைகள் தோன்றுவதற்கு முன்னால் நாவல் தோன்றியிருக்கிறது. 18ம் நூற்றாண்டிலேயும் 19ம் நூற்றாண்டிலேயும் அடைந்த நாவலின் சிகரங்களை 20ம் நூற்றாண்டிலோ அதற்குப் பிந்தைய காலகட்டத்திலோ யாரும் தாண்டிவிடவில்லை. அந்த அளவிற்குப் பிரம்மாண்டமான நாவல்கள் எல்லாம் 19ம் நூற்றாண்டிலேயே வெளிவந்திருக்கிறது. இவையெல்லாவற்றுக்குப் பின்னால்தான் சிறுகதை என்ற இலக்கிய உருவம் உருவாகிவருகிறது. இது ஏன் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். புறச்சூழல் மாறும்போது வாழ்க்கையிலுள்ள பழைய நம்பிக்கைகளெல்லாம் தகர்ந்து போகிறது. இதன் மூலம் ஒரு மிகப்பெரிய நெருக்கடி வாழ்க்கையில் ஏற்படுகிறது. அந்த நெருக்கடியை மொழியில் சொல்வது அவ்வளவு சுலபமானதல்ல. அதை அவர்கள் உணருகிறார்கள். கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஜாதி சம்பந்தப்பட்ட விஷயங்கள், சமூகப் பழக்க வழக்கங்கள் முதலானவை கேள்விக்குட்படுத்தப்படுகிறது. விதவையை மணம் செய்து கொடுக்கலாமா, கூடாதா ? பெண்ணிற்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டிய வயது ஏழா, ஒன்பதா, பதிமூன்றா, இருபத்தியொன்றா ? இப்படி பல விஷயங்களில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் மீது ஒரு அவநம்பிக்கை புது சமுதாயத்திற்கு வருகிறது. இந்த அவநம்பிக்கைக்கும் சிறுகதை என்னும் கலைக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இதுபோல் புதிய கலை வடிவங்கள் உருவாகி வரக்கூடிய சமயத்தில் நம் சமூகத்தில் இருக்கும் சிலர் – நம் சமூகத்தில் மட்டுமல்ல அவர்கள் எல்லா சமூகங்களிலும் இருக்கிறார்கள் – அது போன்ற கலை வடிவமானது அவர்களது மொழியில் முன்பே இருப்பதாகச் சொல்ல ஆசைப்படுவார்கள். சிறுகதை என்பது புதிய வடிவம் ஒன்றும் அல்ல. கதைகள் பைபிளில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. உபநிஷத்துக்களில் இதுபோன்ற கதைகள் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. மகாபாரதத்தில் ஏகப்பட்ட உபகதைகள் இருக்கின்றன. அவை சிறுகதைகள்தானே என்று சொல்லுவார்கள். மகாபாரதத்தில் ஏகப்பட்ட உப கதைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவை ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டவை அல்ல.

முன் காலத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் ஆயுளைக் கூட்ட வேண்டுமென்றால், காலத்தின் சோதனைகளைக் கடந்து அது நீடித்து நிற்க வேண்டுமென்றால் அப்போது பரவலாக, பிரபலமாக இருக்கும் ஏதாவது காவியத்திற்குள் நாம் எழுதுவதைத் திணித்து விடக்கூடிய போக்கு இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக ஒருவர் மரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து பல விஷயங்களைக் கண்டடைந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை அவரால் தனி ஏட்டில் எழுதி வைத்துப் பாதுகாத்து வரமுடியாது. அழிந்து போய்விடும். எனவே அவர் என்ன செய்வார் என்றால், மகாபாரதத்தில் ஒரு முனிவர் தனது சிஷ்யனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பதாக எழுதுவார். ‘உன்னை ஐந்தாறு மாதங்களாகக் காணவில்லையே ? எங்கே போயிருந்தாய் ? காட்டுக்குப் போயிருந்ததாகக் கேள்விப்பட்டேன். அங்கே என்னென்ன மரங்களைப் பார்த்தாய்’ என்று கேட்பார். சிஷ்யன் எண்ணற்ற மரங்களின் பெயர்களைச் சொல்வான். உண்மையில் இது இடைச்செருகல் மரங்களைப் பற்றி ஆராய்ந்த செருகல் தனது ஆராய்ச்சி காலத்தால் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அந்தந்த தகவல்கள் மகாபாரத்திற்குள். இப்படிச் செருகப்பட்ட விஷயங்களைத் தாங்கியபடி மகாபாரதம் காலத்தைத் தாண்டி வந்து கொண்டிருக்கிறது. யாராவது ஒரு இளைஞன் பெண்கள் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பான். இளைஞர்கள் பெண்கள் பற்றி ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் இயற்கையான விஷயம்தானே. . . எந்தெந்த விதமான பெண்கள் இருக்கிறார்கள் ? என்னென்ன தோற்றங்கள் கொண்டிருக்கிறார்கள் ? அவர்களது தோற்றத்திற்கும் குணத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் என்னென்ன ? அவர்களது அவயவங்கள் எப்படி இருக்கின்றன ? அது எந்த குணத்தைக் காட்டுகிறது ? என்று இளைஞன் யோசித்து சில விஷயங்களைக் கண்டு பிடித்து வைத்திருக்கலாம். இதை தனியாக ஒரு ஏடு ஒன்றில் எழுதி வைத்து அதைக் காப்பாற்ற முடியாது. மகாபாரதத்தில் ஒரு முனிவர் ‘நீ வெளியூர் போயிருந்தாயாமே. பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ததாகக் கேள்விப்பட்டேன். என்ன பண்ணினாய் சொல்லு’ என்று கேட்பது போல் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கிறான். உடனே இளைஞன் பெண்களைப் பற்றி சொல்லுவான். எத்தனையோ உப கதைகள் மகாபாரதத்திற்குள் இருக்கின்றன. பைபிளில் உள்ள கதைகள், உபநிஷத்துக்களில் உள்ள கதைகள், காலங்காலமாக வழங்கி வரும் பஞ்சதந்திரக் கதைகள், அரேபியக் கதைகள், ஈசாப் கதைகள் இவற்றிற்கும் சிறுகதை என்னும் தனிப்பெரும் கலை வடிவத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சிறுகதை படிக்க ஆரம்பிப்பவன் இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கதை எழுதி அதை சிறுகதை என்று சொல்லக்கூடாது. இந்திய மொழிகளில் இந்த உருவம் முன்பு கிடையாது. அது இல்லாமல் இருந்ததில் குறை ஒன்றும் இல்லை. வெளிப்படையாக ஒப்புக் கொள்வது கெளரவமான விஷயம்தான். அதுதான் பெருமையான விஷயமும் கூட.

ஆங்கில எழுத்தாளர்கள் மூலமாக அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட படைப்புகள் வழி நாம் அறிய நேர்ந்த கலை வடிவம்தான் சிறுகதைகள். நாம் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் இது. அங்கு அது முதலில் உருவானதற்கான காரணம், வாழ்க்கை சம்பந்தமான நெருக்கடிகள் நமக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு வந்துவிட்டதுதான். முக்கியமான நெருக்கடி நேரமின்மை. மிகக் குறைந்த காலத்திலேயே பல முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரம். ஒரே காலகட்டத்திலேயே பொழுது என்பது நமக்கு ஒன்றாகவும் அவர்களுக்கு வேறொன்றாகவும் இருக்கிறது. நமக்கு பொழுது எப்போது தீரும் என்பது பிரச்சனை. அதே நேரத்தில் அவர்களுக்கு பொழுது போதவில்லையே என்ற பிரச்சனை. குறுகிய வடிவங்களுக்குள்ளேயே ஆழ்ந்த அனுபவங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஒரு கட்டாயமானது மேற்கத்திய வாழ்க்கையில்தான் முதன்முதலில் ஏற்பட்டது. அதற்கு சிறுகதை வடிவம் தேவையான ஒன்றாக, முக்கியமான ஒன்றாக இருந்தது. சஞ்சிகைகள் வரத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் 100, 120 பக்கங்கள் கொண்டதாக வெளிவந்திருக்கின்றன. டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸகி போன்றோர் எழுதிய நாவல்கள் தொடராக 30, 40 பக்கங்கள் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. பின்னால் சஞ்சிகைகளின் பக்கங்கள் குறைய ஆரம்பித்தது. சஞ்சிகைகளில் பல்வேறுபட்ட விஷயங்கள் இடம்பெற்றதால் சிறுகதைக்கு 10 அல்லது 20 பக்கங்களே ஒதுக்கினார்கள். குறைந்த பக்கங்களில் சொல்லப்பட வேண்டும். அதே சமயம் வாசகனைப் பாதிக்கக்கூடியதாகவும், சிந்தனையைக் கிளறக்கூடியதாகவும் ஆழ்ந்த அனுபவத்தைத் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற சமுதாயத் தேவை அப்போதுதான் எழுகிறது. அத்தகைய தேவை வந்ததற்குப் பின்னால்தான் சிறுகதை என்ற வடிவம் உருவாகிறது. அதுபோன்ற ஒரு நெருக்கடி நமது சமுதாயத்தில் வந்தபோதுதான் நம்மிடையேயும் சிறுகதை என்ற வடிவம் உருவாக்கப்பட்டது. இங்கே வ.வே.சு.ஐயர் என்ற ஒருவர். பாரதியின் நண்பர், மிகப் பெரிய புலவர். கம்ப ராமாயணம் உலகத்திலேயே மிகப் பெரிய காவியம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இலக்கிய விமர்சனம் சார்ந்து தர்க்கப்பூர்வமாக நிறுவியவர் அவர் ஒருவர்தான். அவர் ஒரு சுதந்திரத் தியாகி. மேற்கத்திய இலக்கியத்தை நன்கு கற்றறிந்தவர். அவர்தான் தமிழ்ச் சிறுகதையின் தந்தை என்று சொல்வது ஒரு இலக்கிய விமர்சன மரபு. அவர் பல கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் 1919ல் வெளிவந்த ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்ற தொகுதியில் இடம் பெற்ற அவரது ‘குளத்தங்கரை அரசமரம்’ என்பதுதான் தமிழ் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று பல விமர்சகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என்னளவில் ‘குளத்தங்கரை அரச மரம்’ எழுதப்பட்ட காலத்திற்கு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்னால் பி.எஸ்.ராமையா என்பவர் ‘நட்சத்திரக் குழந்தை’ என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று ஒருவர் சொன்னார். அதில்தான் சிறுகதைக்குரிய லட்சணங்கள், அதற்குரிய தனிக்குணங்கள் இருக்கின்றன என்று சொன்னார். அது ராமையாவின் சொந்தப் பார்வையில் தோன்றிய கதை. தமிழ் நாட்டு வாழ்க்கையிலிருந்து பெற்ற அனுபவத்தில் தோன்றிய கதை. அதுபோன்ற சில காரணங்களை முன்னிட்டு அதுதான் தமிழில் தோன்றிய முதல் கதை என்று அவர் சொன்னார்.

சிறுகதை என்பது சமூக மதிப்பீடுகளை ஆதரிக்க மறுக்கிற ஒரு இலக்கிய உருவம். அது சமூக விமர்சனம் சார்ந்தது. அது அப்படித்தான் இருக்கும். உண்மை வெல்லும் என்பதை வலியுறுத்தும் என்பது ஒரு கதையாக இருக்கும்போதுகூட அது ஒரு சிறுகதையாக இருப்பதில்லை. இது அறவியல் சார்ந்த ஒரு கதை. ஆனால் சிறுகதை அறவியலை வற்புறுத்தாது. நேற்றைய நம்பிக்கைகளை அது வற்புறுத்தவில்லை. வாழ்க்கை சம்பந்தமான போதாமைகளைச் சொல்கிறது அது. நெருக்கடிகளைச் சொல்கிறது அது. உண்மையைச் சொல்லியும் தோற்றுப் போனேனே என்று முடிவடைவது ஒரு சிறுகதையாக இருக்க முடியும். ஆனால் உண்மை இறுதியில் வெல்லும் என்று முடிவடைவது பெரும்பாலும் சிறுகதையாக இராது. கதையின் முடிவாக அது இருக்கலாம். சிறுகதையினுடைய முடிவாக அது இருக்க முடியாது. பழைய சம்பிரதாயங்கள், பழைய மரபுகள் இவற்றை யார் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறாரோ, யார் எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்களோ, இதுவரை நாம் சரி என்று நம்பிய ஒன்றை, இதுக்கு மேல் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டு வந்த ஒன்றை, மேலானது என்று சொல்லபட்டு வந்ததை இன்றைய வாழ்க்கை ஏற்கவில்லை என்ற உண்மையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் சிறந்த சிறுகதை என்ற உருவத்தை அறிந்தவர்கள்.

அடுத்ததாக, என்ன விஷயங்களை சிறுகதையின் கருவாக நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் கிடையாது. ஒருவன் அவனது வாழ்க்கை அனுபவங்கள் சார்ந்து, அவனுக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ, எந்த நெருக்கடி அவனுக்கு முக்கியமானதாக இருக்கிறதோ, எந்தத் துக்கம் அவனை ஓயாது வாட்டிக் கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவன் கதை எழுதலாம். ஜாதியைப் பற்றி எழுதியிருக்கிறாய், ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தியிருக்கிறாய் அதற்கு உனக்கு உரிமை கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. அந்த விஷயங்களை அவன் என்னவிதமாக எழுதியிருக்கிறான், அவன் எழுதியவை வாசகர்களால் எந்தவிதமாகப் பகிர்ந்து கொள்ள முடியக்கூடியதாக இருக்கிறது, என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, இவை பற்றி பேச வேண்டுமே தவிர உன் தனிப்பட்ட அனுபவத்தை வைத்து நீ எப்படி எழுதலாம் என்று யாரும் கேட்க முடியாது. உன்னுடைய அனுபவம் உன்னுடைய அனுபவம் தான். அதை சுதந்திரமாக எழுதவதற்கு உனக்குப் பரிபூரண அதிகாரம் இருக்கிறது. இதை ஏற்றுக் கொண்டுதான் இலக்கிய விமர்சனம் செய்ய வேண்டும். சிறுகதையை விமர்சிக்க வேண்டும். உன்னுடைய பிரச்சனை ஜாதிப் பிரச்சனையாக இருக்கலாம். பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கலாம். வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கலாம். ஒரு பெண்ணைக் காதலித்துவிட்டு, அவளைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போன துக்கமாக இருக்கலாம். இதைப் பற்றி நீ சொல்லலாம். அதற்கான உரிமை உனக்கு இருக்கிறது. அதேசமயம் ஒரு விஷயத்தை முற்போக்கான பார்வையில் சொல்லியிருக்கிறேன். அப்படிச் சொன்ன காரணத்தினாலேயே அது சிறந்த கதை என்ற வாதத்தை இலக்கிய விமர்சனம் ஏற்றுக் கொள்ளாது. அந்தக் கதை எப்படி அமைந்திருக்கிறது ? அந்த விஷயம் குறித்து உங்களுடைய பார்வை என்ன ? கதையின் கூறுகள் அதில் எப்படி இயங்கியிருக்கின்றன இதுபோன்ற விஷயங்களையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவிஷயத்தை எத்தனையோ கோணத்தில் எழுதலாம். ஜாதியை ஆதரித்து எழுதலாம். ஜாதி இன்னும் அதிக காலத்திற்கு இருக்கப் போகிறது என்று அவநம்பிக்கை கொண்டு அதை கதையாக எழுதலாம். ஜாதியை உடனடியாகக் கொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அது சாகும் என்று தோன்றவில்லை, என்ற கோணத்தில் எழுதலாம். எந்தப் பார்வையில் கதை எழுதலாம் என்பது உன் சொந்த முடிவு சார்ந்தது. படைப்பு மனிதனை வெகுவாகப் பாதிக்கிறது. இலக்கியத்தோடு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தால் ஜாதி பற்றி, பெண்கள் பற்றி, மதத்தைப் பற்றி, கடவுளைப் பற்றி என்னிடம் இருந்த எல்லா அபிப்ராயங்களும் உடைந்தன. தாயின் மூலமோ, தந்தையின் மூலமோ, சகோதர சகோதரி மூலமோ உடையவில்லை. ஆனால் சிறுகதைகள் பெரும் அளவுக்கு மனிதனுடைய பார்வையை மாற்றியிருக்கிறது. கலை வடிவங்கள் மனித மனதிற்குள்ளே மிக நுட்பமான மாற்றங்களை உருவாக்கும் வலிமை கொண்டவை என்று நம்புகிறேன். அத்தகைய வலிமை கொண்டவைதான் கலைப்படைப்புக்கள் என்றும் நம்புகிறேன்.

இந்த விளைவுகளை உருவாக்குவதற்கு நீங்கள் மொழியை எப்படிக் கையாள வேண்டும் என்பது முக்கியமான விஷயம். நான் தமிழ் எம்.ஏ. படித்திருக்கிறேன். தமிழ் பி.ஏ. படித்திருக்கிறேன். தமிழில் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறேன் என்பதெல்லாம் சிறுகதைகள் எழுதுவதற்கான தகுதிகள் அல்ல. நிறைய புத்தகங்கள் படித்திருப்பதும் கூட ஒரு தகுதியாக ஆக முடியாது. பொதுவாக சிறுகதை எழுதுவதற்கு அவனுக்குச் சொந்தமான ஒரு படைப்பு மொழி உருவாக வேண்டும். அந்தப் படைப்பு மொழி தமிழ் என்னும் பொது மொழி அல்ல. ஒருவனுடைய குணங்கள், இயல்புகள், வருத்தங்கள், விமர்சனங்கள், மனோபாவங்கள் ஏறிவிட்ட நுட்பமான மொழி. ஒருவன் கூடுமானவரை அத்தகைய ஒரு மொழியை வைத்துத்தான் சிறுகதை என்னும் நுட்பமான கலைவடிவத்தை உருவாக்க முடியும். அந்த மொழி உன்னுடைய தனிப்பட்ட குரல். உன்னுடைய குரல் என் காதில் விழுகிறது. ‘நான் அன்று நிலாவைப் பார்க்க தெருவழியாகப் போய்க் கொண்டிருந்தேன்.’ அப்படி கதையை ஆரம்பித்த உடனேயே உன்னுடைய குரல் என் காதில் கேட்கிறது. ஏதோ முக்கியமான விஷயத்தை, அந்தரங்கமாகச் சொல்ல போகிறாய் என்ற ஆவல் பிறக்கிறது. ஒரு கூட்டத்தின் முன் பகிரங்கமாக ஒலிபெருக்கி முன்னால் நின்று கொண்டு சொல்வது மாதிரி இல்லை. தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாகச் சொல்வது. அவனும் நானும் மட்டும்தான் அந்த இடத்தில் இருக்கிறோம் என்பதுபோல் அந்தக் கதை சொல்லப்படுகிறது. இந்த அந்தரங்க மொழி கூடாத வரையில் சிறுகதையை உருவாக்குவது கடினம் என்றே நினைக்கிறேன். ஆனால் தனிமொழி கூடிவருவது சிரமமான விஷயம். முதலில் சிறுகதை எழுதுவது கடினமானது என்று நம்ப வேண்டும். ஏனோ தானோ என்று சில கதையை எழுதினால் கதையும் அந்த லட்சணத்தில்தான் இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம் சிக்கனம். சிக்கனமாகத்தான் கதையைச் சொல்ல வேண்டும். ஒரு வார்த்தை கூட அதிகப்படியாக இருக்கக்கூடாது என்கிறார்கள் சிறுகதை விமர்சகர்கள். ஒரு வார்த்தையை எடுத்தால் கதை மூளியாகிவிட வேண்டும் என்பார்கள்.

உதாரணமாக மனிதனுக்கு காது இருக்கிறது. அதை வெட்டி எடுத்துவிட்டால் அவனுடைய குறை எப்படித் தெரியாமல் இருக்கும். சிறுகதையில் அப்படி ஒவ்வொரு விஷயமும் கச்சிதமாக இருக்க வேண்டும். ஏன் இவ்வளவு இறுக்கமாக இருக்க வேண்டும் ? நாலு வார்த்தையை எடுத்தாலும் ஒன்றும் குறைவுபடாத மாதிரியாக கொஞ்சம் வழ வழ வென்று இருந்தால் என்ன என்று சிலர் கேட்கக்கூடும். அது என்ன நோக்கத்தில் ஒருவன் சிறுகதை எழுத முற்படுகிறான் என்பதைப் பொறுத்தது. பலர் நம் சிறுகதைகள் நீண்ட காலம் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். என் கவிதையை, என் சிறுகதைகளை அதற்கான முனைப்போடுதான் எழுவேன் என்பதில் பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். தனக்கு இறப்பு உண்டு. தன் படைப்புகளுக்கு இல்லையென்று படைப்பாளி நம்ப ஆசைப்படுகிறான். உலகத்தில் எல்லாச் சிறந்த எழுத்தாளர்களுடையவும் அடிப்படை நம்பிக்கை இதுதான். அப்படியான உத்வேகத்துடன் தான் சிறுகதைகளை உருவாக்க வேண்டும்.

தமிழாலயமும் அகில இந்திய வானொலி நிலையமும் இணைந்து மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் பயிலரங்கில் ஆற்றிய உரை – 25.03.95

Series Navigation