‘காலையும் மாலையும் ‘

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

கரு.திருவரசு


காலைப் பொழுதே நீசிரித்தாய் – ஒரு
களங்க மில்லாக் குழந்தையைப்போல்!
மாலைப் பொழுதே நீசிரித்தாய் – புது
மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்!

குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க – எழில்
குமரி நகைப்பில் உயிர்சிலிர்க்க
இழந்தேன் மனத்தை இருபுறமும் – எனக்
கிருப்ப தென்னவோ ஓர்இதயம்!

முதுமைப் பருவம் அடைந்திருந்தால் – அந்த
முகையின் நகைக்கே மனமிழப்பேன்!
வதுவைப் பருவ வெறியிருந்தால் – அந்த
வாலைச் சிரிப்பில் விழுந்திருப்பேன்!

இரண்டும் கடந்த கவிதைமனம் – இது
எதிலும் அழகைத் தேடும்மனம்!
இரண்டு பொழுதும் அழகாக – எனை
இழுக்கும் நிலையான் எதுவாக ?

காலையின்றேல் மாலையில்லை – ஒரு
கன்னி இன்றேல் குழந்தையில்லை!
மாலை இன்றேல் காலையில்லை – ஒரு
மழலை இன்றேல் மங்கையில்லை!

பனியென மலரும் இளம்பொழுதே – சுவைப்
பதநீர் நிகரத்தே விழும்பொழுதே
இனியன இனியன இனியனவே – எங்கள்
இசைத்தமிழ் போல இனிப்பனவே!

thiruv@pc.jaring.my

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு