சின்னராஜு

This entry is part [part not set] of 31 in the series 20091023_Issue

மலர்மன்னன்


“”சின்னராஜு, நீங்க க்ருஷ்ணரோட ஃப்ரெண்டா இல்ல க்ருஷ்ணரேயா?” என்று ஆயிரத்தோராவது தடவையாகக் கேட்டார், பெரியவர்.

சின்னராஜு வுக்கு அவர் கேட்பதன் பொருள் விளங்கியிருக்குமா என்பது சந்தேகந்தான். அவர் அப்படிக் கேட்கிற பொழுதெல்லாம் சின்னராஜு ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு ஓடி விடுவதுதான் வழக்கம்.

பெயரனுக்கு இட்ட பெயர் வேறு. பெரியவருக்கு மட்டுந்தான் சின்னராஜு. அது மாத்திரமல்லாமல் பெயரனை வாங்க, போங்க என்று மிகவும் மரியாதையாகத்தான் அவர் தொடக்க முதலே அழைக்கத் தொடங்கியிருந்தார். நரை கண்ட முடியும் தாடியுமாய் நிற்கிற முதியவர் சிறு குழந்தையை “நீங்க’ என்பதும் பதிலுக்குக் குழந்தை அவரை “நீ’ என்பதும் கேட்கிறவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

சின்னராஜுவுக்கு வயது இன்னும் இரண்டு நிறையவில்லை. ஆனால் பேச்சு மிகவும் ஆச்சரியப்படுமாறு வெகு விரைவிலேயே சரளமாக வந்துவிட்டது.

சின்னராஜு பிறந்து தலை ஸ்திரமாக உறைக்கத் தொடங்கியதுமே பெரியவர் சின்னராஜுவை இடையில் சுமந்துகொண்டு திரியத் தொடங்கிவிட்டார். அவரது இடப்புறத் தோள் முகட்டில் எந்நேரமும் சின்ன ராஜுவின் வாய் எச்சில் ஒழுகி நனைத்துக் கொண்டிருக்கும்.

பார்க்கிறவர்கள் எல்லாம் “ஜொள்ளு ரொம்ப வடியுதே! அப்ப பேச்சு சீக்கிரமே வந்துடும்’ என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் ஆயிற்று. ஒரு வயதாகு முன்பே குழந்தைக்குப் பேச்சு வந்துவிட்டது. எதற்காவது அதற்குரிய சொல் வாயில் வராவிட்டால் அதற்காகக் கவலைப் படாமல் தானாகவே ஒரு சொல்லை உருவாக்கிப் பயன்படுத்துகிற இயல்பும் வந்துவிட்டது. “மாபும்’ என்றால் மாடு. “ஆபும்’ என்றால் ஆடு. இரண்டும் சின்னராஜுவுக்கு முக்கியம். எப்போது வெளியே தூக்கிச் சென்றாலும் முதலில் அவற்றிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது பெரியவருக்குச் சின்னராஜுவின் நிரந்தரமான கட்டளை. வெளியில் தூக்கிச் செல்லப் போகிறார் என்று தெரிந்ததுமே “மாபும், ஆபும்’ என்று சின்னராஜுவிடமிருந்து உத்தரவு இடைவிடாமல் வரத் தொடங்கிவிடும். நல்ல வேளையாக அலைய வேண்டிய அவசியமின்றி அருகாமையிலேயே ஒரு மேய்ச்சல் நிலம் இருந்தது. அது ஏதேனும் பாகப் பிரிவினைத் தகறாறில் சிக்கியிருக்க வேண்டும்; எனவேதான் கண் களை உறுத்தும் கட்டிடமாக உருமாறாமல் வெற்றிடமாகவே நீடித்துக் கொண்டிருந்தது. அக்கம் பக்கங்களில் வசித்த பால்காரர்கள் தங்கள் பசுமாடுகளையும் எருமை மாடுகளையும் அங்கு மேயவிட்டிருப்பார்கள். சில ஆடுகளும் அங்கே மேய்ச்சலுக்கு வந்துவிடும்.

சின்னராஜுவுக்குப் பசு மாடுகள் மேய்வதைக் காண்பித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு மாட்டிற்கும் வெகு அருகாமையில் தூக்கிக் கொண்டு போக வேண்டும். தாத்தாவின் இடுப்பில் இருந்தவாறே சரிந்து தன் கையால் ஒவ்வொரு மாட்டின் நெற்றியிலும் தடவிக் கொடுப்பதற்கு உதவ வேண்டும். பிஞ்சுக் கரத்தால் சின்னராஜு வருடுகிறபோது பசுமாடுகள் சிலிர்த்துக் கொள்ளும். பெரியவர் “”சின்னராஜு, நீங்க க்ருஷ்ணரோட ஃப்ரெண்டா, க்ருஷ்ணரேயா?” என்று மிகவும் உண்மையான அக்கறையுடன் கேட்பார். அதற்கு சின்னராஜுவிடமிருந்து சிரிப்புதான் பதிலாகக் கிடைக்கும். “மாபும், மாபும்’ என்று தான் வருடிக் கொடுக்க வேண்டிய இன்னொரு பசு மாட்டை நோக்கிச் சின்னராஜுவின் கரம் நீளும். அதற்குள் அங்கே சின்னராஜுவின் வருடலுக்காக இன்னொரு பசு மாடு வந்திருக்கும். பெரியவர் அதைக் கவனித்திருக்க மாட்டார். ஆனால் இன்னும் தனது வருடலைப் பெற்றுக் கொள்ளாது, புதிதாக ஒரு மாடு மேய்ச்சலுக்கு வந்திருப்பது சின்னராஜுவுக்கு மட்டும் எப்படியோ தெரிந்துவிட்டிருக்கும். சின்னராஜு வைப் பெரியவர் மேய்ச்சல் வெளிக்குத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டால் அதற்கப்புறம் மாடுகள் வந்துகொண்டேயிருக்கும். சில சமயங்களில் சின்னராஜு பெரியவர் இடுப்பிலிருந்து திமிறிக் கொண்டு இறங்கி மாடுகளுக்கிடையே ஓடி வரத் தொடங்கிவிடுகிறபோது பெரியவர் பதறிப் போய் விடுவார். எந்த மாடாவது தப்பித் தவறிக் குழந்தையைத் தன் குளம்புக் கால்களால் மிதித்து விட்டால்…? இல்லாவிட்டால் கொம்புகளால் முட்டித் தள்ளிவிட்டால்…? ஆனால் அவர் பயப்படுகிற மாதிரி ஒரு தடவைகூட நேர்ந்ததில்லை.

சின்னராஜு க்ருஷ்ணரின் சினேகிதரா, க்ருஷ்ணரேயா?

பெரியவர் மீது தவறில்லை. கண்ணபிரானின் பெயர் சொன்னாலே அவருக்குக் கால தேச வர்த்தமானங்கள் மறந்து போகும். கால வெள்ளத்தை நீந்திக் கடந்து யுகங்கள் தாண்டிப் பின்னோக்கிய பயணம் செய்வது அவருக்கு நொடிப் பொழுதில் சாத்தியமாகிவிடும். எல்லைகளும் தொலைவுகளுங்கூட அவருக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. கண் சிமிட்டுகிற நேரந்தான். இன்னமும் கண்ணன் ஓடியாடிச் சீண்டி விளையாடிக் கொண்டிருக்கிற ஆயர்பாடி கோகுலத்து பிருந்தாவனத்திற்கு அவரால் வெகு சுலபமாகப் போய் விட முடியும். அவரைப் பொருத்த மட்டில் “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏங்க வேண்டிய அவசியமில்லை.

மதுராபுரி, துவரகை, குருட்சேத்திரம், இடம் எதுவானால் என்ன, கண்ணன் திருவடித் தடம் பதிந்த தலங்களுக்கெல்லாம் அந்தந்தச் சமயத்திற்குத் தக்கபடி, அவ்வப் போதைய பரவச எழுச்சிக்கு உகந்தபடி அவரால் போய் வந்துவிட முடியும்.

முன்பெல்லாம் எங்கிருந்தாவது “க்ருஷ்ணா’ என்கிற கூப்பாடு கேட்டாலே கல்லாய்ச் சமைந்துபோய்விடுகிறவராகப் பெரியவர் இருந்தார். ஒரு சமயம் வெகு மும்முரமான வாகனப் போக்குவரத்திற்கிடையே சாலையைக் கடந்து போகிறபோது அம்மாதிரி
நேர்ந்துவிட்டது. பச்சை விளக்கு எரியத் தொடங்கியபோதுதான் அவர் சாலையின் குறுக்கே நடக்கத் தொடங்கினார். ஆனால் சாலையை முழுவதுமாகக் கடந்து முடிவதற்குள்
அவருடன் நடந்தவர்கள் யாரோ காதருகில் கை பேசியை வைத்துக் கொண்டு “க்ருஷ்ணா எப்ப வரப் போறான்?’ என்று கேட்டது தமது காதிலும் விழுந்து, நட்ட நடுச் சாலையில் எடுத்து வைத்த அடி தொடரமல் அப்படியே நின்றுவிட்டார். சிவப்பு விளக்கு எரியத் தொடங்கிய பிறகும் அவர் நகரவில்லை. வாகனங்கள் எல்லாம் வித விதமாக ஒலியெழுப்பியும் அவர் அசையவில்லை. நிமிஷ நேரத்தில் அங்கு ஒரே களேபரமாகிவிட்டது. நாலைந்து பேராக அவரை உலுக்கி உலுக்கிச் சுய நினைவு வரச் செய்தார்கள். பிரத்தியட்ச உலகுக்கு மீண்ட பெரியவர் மிரள மிரள விழித்தார். “க்ருஷ்ணன் எங்க போயிட்டாரு?’ என்று சுற்றி நின்றவர்களைக் கேட்டார்.

“”உங்ககூட அப்படி யாராச்சும் வந்தாங்களா?” என்று அவர்கள் கேட்டார்கள்.

“”எப்பவும் கூட இருக்கறவர் தானே” என்றார் இவர்.

அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சரி, ஏதோ பிரமையில் இருக்கிறார் என்று கைத் தாங்கலாக அழைத்துச் சென்று சாலையோரம் விட்டுவிட்டுப் போனார்கள்.

சாலையில் நடந்த கூத்து சீக்கிரமே வீட்டுக்குத் தெரிந்துவிட்டது.

“”போதுமே இந்த மாய்மாலம் எல்லாம். குலசேகரம் போங்களேங்கறாங்க சிலபேர். கீழ்ப்பாக்கந்தான் சரிங்கறாங்க மத்தவங்க. தேவையா இதெல்லாம்? மானம் போகுது இப்படிப் பித்துப் பிடிச்சு நிக்கறதெல்லாம்” என்று பெரியவரின் வீட்டம்மா கொஞ்சம் கெஞ்சலும் கூடுதலாய் அதட்டலுமாக அங்கலாய்த்ததில், பெரியவர் வலுக்கட்டாயமாகச் சிறிது சிறிதாக அந்த நிலையிலிருந்து மீளலானார்.

அவர் மீண்டு வருவதற்குள் வீட்டில் இருக்கிறவர்களுகெல்லாம் போதும் போதும் என்றாகிவிட்டது.

சிறு பிள்ளைகளிடம் ஒரு விளையாட்டு உண்டு. ஒரு பையன் இன்னொரு பையனைப் பார்த்ததும் “அட்டாக்’ என்று சொன்னால் போதும். கேட்டவன் என்ன நிலையில் இருந்தாலும் மயிரிழைகூடப் பிறழாமல் அப்படியே இருந்த நிலையில் இருந்தாக வேண்டும். “அட்டாக்’ சொன்னவன் தானாக “ஓவர்’ சொன்னால்தான் உண்டு. அதுவரை தலையே போவதானாலும் அட்டாக் என்கிற உத்தரவைக் கேட்டபோது எந்த நிலையில் இருக்க நேர்ந்ததோ அதே நிலையில் இருந்து கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

பெரியவர் “க்ருஷ்ணா’ என்கிற பெயரைக் கேட்டாலே சிலையாகச் சமைந்து போகிறார் என்பதை எப்படியோ தெரிந்துகொண்டுவிட்ட விஷமக்காரச் சிறுவர்கள் அவர் தெருவோடு நடந்து போவதைக் கண்டால் “க்ருஷ்ணா’ என்று கூவிவிட்டு ஓடிப் போவார்கள். அவ்வளவுதான். பெரியவர் சிலையாகிப் போவார்.

அட்டாக் விளையாட்டிலாவது விடுவிப்புக்கு “ஓவர்’ உண்டு. இவருக்கு அதுவும் இல்லை. யாராவது அவரை அசைத்து அசைத்து சுய உணர்வுக்குக் கொண்டு வந்தாலொழிய அவருக்கு பிரக்ஞை மீள வழியில்லை.

மற்றவர்கள் சமாதி நிலைபெற யோக சாதனை செய்தார்கள் என்றல் இவர் சமாதி நிலை எய்தாமலிருக்க சாதனை செய்ய வேண்டியவரானார். பல நாட்கள் சிரமப்பட்டுத் தமது முயற்சியில் வெற்றி கண்டார்.

இதைப் பற்றி யாராவது விசாரித்தால் அவர் மிகவும் சலிப்புடன் விவரிப்பார்.

“”எனக்கென்னமோ அதிலே கொஞ்சங்கூட விருப்பமில்லேதான். என்ன செய்ய, வீட்டிலே தொந்தரவு தாங்கலே. சரி, நடக்கட்டும்னு விட்டுட்டேன். வீட்டம்மா பின்னாலேருந்து “க்ருஷ்ணா’ம்பாங்க. நான் உடனே மரத்துப்போயி நின்னுடுவேன். அவங்க என்னை உலுக்கி உலுக்கி எழுப்பிவிடுவாங்க. இப்படியே தினத்துக்கும் நாலைஞ்சு தடவை நடக்கும். ஒரு ஆறு மாசத்துக்கு இப்படியே போச்சு. அப்பறம் கொஞ்சங் கொஞ்சமா அப்படி மரத்துப் போயிடறது குறைஞ்சுக்கிட்டே வந்து இப்ப இல்லேன்னே ஆகிப் போச்சு” என்று சொல்வார். உதடுகளில் ஒரு சோகப் புன்னகை ஓடி மறையும்.

“”சைக்கியாட்ரிக் எம்பாங்காங்களாமே, மனசுக் கோளாறுக்கு வைத்தியம் பண்ணுற டாக்டர்… அவர் சொல்லிக் குடுத்த வைத்தியமாம் அது. அப்ப எனக்கு என்ன மனக் கோளாறு ஏதும் உண்டுமா? “க்ருஷ்ணா’ன்னதும் சந்தோஷமா அவங்கூட வெளையாட ஆரம்பிச்சுடறது மனக் கோளாறா? என்னமோ எனக்கு ஒண்ணும் புரியலே போங்க. எதுக்கு சங்கடம்னு வெளையாடப் போறதை நிறுத்திக் கிட்டேன்” என்று துயரத்துடன் மேலும் விளக்குவார்.

தம் ஒரே மகள் ஒரு மகனைப் பெற்றெடுத்ததுமே பெரியவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குழந்தை அவர் கண்களுக்கு க்ருஷ்ணனாகவேதான் புலப்பட்டது. அதிலும் நீலமேக சியாமள வண்ணக் குழந்தை.

ஆகாரம் செல்லும் நேரம் தவிர மற்ற பொழுதெல்லாம் குழந்தையைத் தம்மிடமே வைத்துக் கொண்டு க்ருஷ்ண ஜபம் செய்துகொண்டிருந்தார், பெரியவர். சூட்டிய பெயரிலும் வேறு செல்லப் பெயர்களிலும் மற்றவர்கள் அழைத்திருக்க, இவர் மட்டும் எப்போதும் “சின்ன ராஜு’ என்றே விளித்தார். குழந்தையை “வாங்க, போங்க’ என்று வேறு அவர் அழைத்தது, கேட்பவர்
களுக்கு வியப்பாகவும் விசித்திரமாகவும் பரிகாசமாகவுங்கூட இருந்தது. ஆனால் அவருக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.

குழந்தையை அவரேதான் தூளியிலிட்டு ஆட்டித் தூங்கப் பண்ணுவார். “ஹரே ராமா, ராம ராமா, ஹரே க்ருஷ்ணா, க்ருஷ்ண க்ருஷ்ணா’ என்று ஒரே ஸ்வரத்தில் திரும்பத் திரும்பப் பாடித் தூங்க வைப்பார். குழந்தைக்கும் அதைக் கேட்டுக் கொண்டேதான் தூக்கம் என்றாகிவிட்டதால் வேறு எந்தத் தாலாட்டுக்கும் மசிவதில்லை. அதேபோலத் தூளியி
லிருந்து உறக்கம் கலைந்து கண் விழிக்கிறபோதெல்லாம் “தாத்தா’ என்று கூப்பிட்டுக் கொண்டே எழுவதும் வழக்கமாகிப் போயிற்று.

சில குழந்தைகள் தவழாமல் முட்டுக் குத்தி நகர்ந்து அதற்கப்புறம் நேரடியாக உட்காரத் தொடங்கிவிடும். சில தவழத் தொடங்கியபின் அடுத்த கட்டமாக உட்காரும். ஆனால் பெரியவர் சீராட்டிய குழந்தை எல்லா நிலைகளையும் முறைப்படிக் காலா காலத்தில் செய்தே வளர்ந்தது. “எல்லா அழகையும் நான் பார்க்கணும்னே க்ருஷ்ணர் எல்லாத்தையும் செய்து காட்டிட்டார்’ என்று அக மகிழ்வார் பெரியவர்.

குழந்தை தவழத் தொடங்கியதிலிருந்தே விஷமம் தாங்கவில்லை. தரையில் எதுவும் இருக்க விடவில்லை. தவழ்ந்து தவழந்து வீடு முழுவதும் வெகு வேகமாய் சுற்றிப் படிகளைக் கடந்து வெளியே சென்றுவிடப் பார்க்கும் குழந்தைக்கு எப்போதும் ஒரு காவல் தேவைப்பட்டது. பெரியவர் அந்தப் பொறுப்பைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். குழந்தையின் குறும்பு எல்லை மீறிப் போய்விடுகிற போதெல்லாம், “”சின்னரஜு, நீங்க க்ருஷ்ணரோட ஃப்ரெண்டா, க்ருஷ்ணரேயா?” என்று பிரமிப்புடன் கேட்கலானார்.

குழந்தை சிறிது வளர்ந்தபின் காலையிலும் மாலையிலும் சிறு வண்டியில் இட்டு வெளியே அழைத்துச் சென்று திரும்பும் வழக்கம் ஆரம்பித்தது. இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலைகளில் குழந்தையை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு செல்வது பெரியவருக்கு மிகவும் பிடித்தமான பணியாக இருந்தது. குழந்தை உட்காரவும் பிறகு நிற்கவும் தொடங்கிய பின்னரும் அது தொடர்ந்தது. வண்டியில் படுத்தும் உட்கார்ந்தும் பயண சுகம் அனுபவிக்கும் குழந்தை, தான் காணும் புதுமைகளையெல்லாம், “தாத்தா, அதென்னது, இதென்னது’ என்று துøளைத்தெடுப்பதும் அதற்குப் பெரியவர் சளைக்காமல் பதில் அளிப்பதும் இருவருக்கும் இடையில் அலுப்பேயில்லாத நிரந்தர சல்லாபப் பேச்சாகிப் போனது.

குழந்தை நிற்கத் தொடங்கியபின் ஒரு தடவை பெரியவர் குழந்தையை வண்டியில் வைத்து ஒரு புதிய பாதையில் தள்ளிக் கொண்டுபோகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தை திடீரென வண்டியிலிருந்து எழுந்து நின்று அட்டகாசமாகச் சிரித்தது. அன்றிலிருந்து தினமும் அதே இடத்தை வண்டி கடந்து செல்கையில் குழந்தை வில்லிலிருந்து விடுபட்ட அம்பு மாதிரி எழுந்து நின்று சிரிப்பது வழக்கமாகிவிட்டது. நாள் பிசகாமல் எப்போதும் அதே இடம். அந்த இடத்தைக் கடந்து செல்கையில் குழந்தை எழுந்து நின்று சிரிக்கத் தவறுவதேயில்லை.

பெரியவர் முதலில் இதைக் கவனிக்க வில்லை. போகப் போகத்தான் சின்னராஜு இப்படி ஆரம்பித்திருப்பது புலப்படத் தொடங்கியது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அந்த இடம் வந்ததும் சொல்லி வைத்த மாதிரி சின்னராஜு வண்டியிலிருந்து எழுந்து நின்று சிரிப்பதால் அங்கு என்ன விசேஷம் இருக்கக் கூடும் என்று பெரியவர் யோசித்தார். சுற்று முற்றும் பார்த்தார். ஏதுவும் புலப் படவில்லை. அடுத்து வந்த நாட்களில் ஆர்வத்தை அடக்கிக் கொள்ள மாட்டாமல் அந்த வட்டாரத்தில் அங்கு ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று விசாரிக்கலானார். ஆனால் எவராலும் அவருக்கு உருப்படியான தகவல் எதுவும் தர இயலவில்லை.

ஒரு நாள் மாலைப் பொழுதில் பெரியவர் வழக்கப்படி வண்டியைத் தள்ளிச் செல்கையில்
அதே வழியில் நடைப் பயிற்சி செய்கிறவர்களில் அவர் வயதுக்காரர் ஒருவருடன் தற்செயலாகப் பேச்சுக் கொடுக்க நேர்ந்தது. பேச்சுவாக்கில் அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்தாம் என்றும் தெரிய வந்தது.

வழக்கம் போல அந்த இடம் வந்ததும் குழந்தை எழுந்து நின்று சிரித்தது. உடன் நடந்தவருக்கு அது வித்தியாசமாகத் தோன்றவில்லை. அனால் பெரியவருக்கு மனசு குறுகுறுத்தது.

“”இந்த இடத்தில் விசேஷமாக எதானும் உண்டா?” என்று அவரிடம் கேட்டார் பெரியவர்.

“” எதுக்குக் கேக்கறீங்க? என்ன பெரிய விசேஷம் இங்க? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே” என்று அசுவாரசியமாகப் பதிலிறுத்த அவர், சிறிது நேரம் கழித்து, “” பத்துப் பதினைஞ்சு வருஷம் இருக்கும், இந்த மரத்துக்குப் பின்னால குடிசை போட்டுக் கிட்டு ஒரு பெரியவர் இருந்தார். உஞ்சவிருத்தி பிராமணன். கையிலே சிப்ளாக் கட்டையை வெச்சுக் கிட்டு “ஜே ஜே விட்டலா’ன்னு எப்பப் பார்த்தாலும் குதிச்சுக்கிட்டே இருப்பார். அப்பறம் திடீர்னு ஒருநாள் ஆளைக் காணோம். பண்டரிபுரத்துக்கே போயிட்டாரோ என்னமோ” என்று சிரித்தார். “”அதை வேணா விசேஷம்னு சொல்லலாம்…” என்றார் ஒரு நொடிப் பொழுது இடைவெளிக்குப் பிறகு.

பெரியவர் பதில் பேசவில்லை. “” சின்னராஜு, நீங்க க்ருஷ்ணரோட ஃப்ரெண்டா, க்ருஷ்ணரேயா?” என்று அடுத்தவர் காதில் விழாதபடிக்கு ரகசியமாகக் கேட்டார்.

சின்னராஜு விடமிருந்து வழக்கம்போல அதற்கு ஒரு புன்சிரிப்பு பரிசாகக் கிடைத்தது. பிறகு முன் எப்போதும் இல்லாதவாறு திடீரென “”ரெண்டுந்தான்” என்ற பதில் சின்னராஜுவிடமிருந்து மின்னல் வெட்டியதுபோல வெளிப்பட்டது.

அதைக் கேட்ட மாத்திரத்தில் பெரியவருக்கு சாலையோரமிருந்த மரம், அதன் கிளைகளில் அமர்ந்திருந்த காகங்கள், மரத்தடியில் நின்ற குறத்தி, கை வண்டி நிறைய இளநீர்க் காய்களைக் குவித்து வைத்த்துக் கொண்டு வியாபரம் செய்கிறவன், இறைக்க இறைக்க ஓடிய தெரு நாய், அவருக்கு முன்னும் எதிரிலும் விரைந்த ஆண், பெண், சிறுவர்கள், சாலையின் மறுபுறம் கையேந்தி வந்த முடமான பிச்சைக்காரக் கிழவன், அவனிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லும் தாட்டியான பெண்மணி, எனச் சகலமும் க்ருஷ்ணனாய்த் தோன்றி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் முன்புபோலவே கல்லாய்ச் சமைந்து போனார்.

நல்ல வேளையாக இச்சமயம் அவர் சாலையோரமாகத்தான் மிகவும் பத்திரமாகச் சிலையாகி நின்றார்.

அவரை இன்னும் யாரும் கவனிக்கத் தொடங்கியிருக்கவில்லை.

+++++
Amudha Surabhi Deepavali Number 2009
malarmannan79@rediffmail.com

Series Navigation