சிந்திக்க ஒரு நொடி – கற்பும் கற்பிதங்களும்

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

வாஸந்தி


தமிழ்த் தேசியம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது

தமிழ்ப் பெண்கள் இனி நிம்மதியுடன் இருக்கலாம். அவர்களது மானத்தை, கெளரவத்தைக் காப்பாற்ற,

பாதுகாக்க, வீரம் செறிந்த ஆண்கள் படை ஒன்று தமிழகத்தில் தயாராக இருக்கிறது. பெண் இனத்தைவிட அதிகமாகக் கவலைப் படுகிற பாதுகாப்புப் படை அது.ஏனென்றால் தமிழ் சமூகத்தின் மானம் மரியாதை கெளரவம் எல்லாமே பெண்ணின் யோனியில் பதுங்கியிருப்பதான அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட படை அது.இந்த நம்பிக்கை வசதியானது. அரசியல் தாத்பர்யம் கொண்டது. ஆண்-பெண் அதிகார சமன்பாடு மாறிவரும் நிலையை பொறுக்கமுடியாமல் பெண்ணுக்கு எதிராக சாட்டையடி அடிக்கவும், கற்பு பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை ஆண்கள் தாரை வார்த்துவிட்ட நிலையில் அவற்றைப் பேணிக்காப்பது பெண்களின் பொறுப்பு மட்டுமே என்று சுட்டிக்காட்டவும் பயன்படும் ஆயுதம். உலக மயமாக்கலில் சுறுங்கிப் போன தரணியில் தமிழ்ப் பெண் அடையாளம் தெரியாமல் போனால் தமிழ் இனம் காணாமல் போய்விடும் என்று அச்சுறுத்தத் தேவைப்படும் ஆயுதம்.

வெறும் வாயை மெல்லும் யத்தர்களுக்கு அவலும் கிடைத்தால் சும்மாவிடுவார்களா ? குஷ்பூ என்ற வேற்று மாநிலத்து, வேற்று மொழி பேசும் பெண், மாறி வரும் நவீனப் பெண்ணின் செக்ஸ் வாழ்வுபற்றி தன் சொந்தக் கருத்தைச் சொல்லப் போக, தாங்கள் கட்டிக்காத்துவரும் நம்பிக்கைத் தகர்ந்தது போல மிரண்டு சீறிப்பாய்ந்து விட்டார்கள் நமது பண்பாட்டுக்காவலர்கள். அவரது வாய்மொழியாக வந்த கட்டுரையில் குஷ்பூ தமிழ் பெண்ணைக் குறிப்பிட்டு ஏதும் சொல்லவில்லை. ‘பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்கவேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாகவேண்டும் ‘ என்று அவர் சொன்னதற்கு , கற்பு எனும் மதிப்பீடிற்குள் ஆண்களை நுழைக்க விரும்பாத இச்சமூகம் பெண்களின் கற்பு பற்றி உறுதியான எதிர்பார்ப்பை வைக்கலாகாது என்றே அவர் சொல்லவிரும்புவதாக எனக்குப் படுகிறது. பரந்த மனம் கொண்ட, கல்வி அறிவுள்ள எந்த ஆணும் இந்த வாதத்தை ஏற்காமல் இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் அவர் தெரிவித்த கருத்தும் தடம் புரண்டுவிட்டது. ‘ கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமாட்டான் ‘ என்ற வாக்கியத்துக்குள் இருப்பது ஒரு மொழிச் சிக்கல். மாறிப் போன syntax. தமிழ்ப் பண்பாட்டுக்காவலர்கள் அவரைப் பின்னிவிட்டார்கள் பின்னி. அவலை நினைத்து உரலை இடித்து முழந்தாளிடவைத்துவிட்டார்கள். கண்ணீர் மல்க குஷ்பு கேட்ட மன்னிப்பு அகில உலகமும் பார்த்தது. பண்பாட்டுக்காவலர்களின் அசுர வெற்றியின் அடையாளம், நிச்சயமாக.

பாவம் குஷ்புவுக்கு இத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்தும்,தமிழ் சினிமாவில் நடித்தும், தமிழ் நாட்டு ஆண் உலகத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளைப் பற்றித் தெரியவில்லை. அரசியல் களத்தில்

திராவிடப் பாரம்பர்யத்தில் பிறந்து வளர்ந்த ஆண்கள் போற்றிப் பாதுகாக்கும் துருப்புச்சீட்டுகளைப் பற்றித் தெரியவில்லை. முன்னவருக்கு தாலி சென்டிமென்ட்; பின்னவருக்குக் கற்பிற்கு இலக்கணமாகக் கருதப்படும் கண்ணகி.கண்ணகியும் தமிழும் தமிழ் பண்பாட்டுக் காவலர்களுக்குப் புனித தாயத்துகள்.

அந்த நம்பிக்கைக்குக் தமிழ்க் கலாச்சாரக் காரணம் என்று சொல்ல முடியாது. சங்ககால தமிழன் தூயத்தமிழன் என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால், களவிலும் ஒழுக்கம் கண்ட மரபு அவனுடையது. கைக் கோர்த்துத் தெருவில் நடந்த காதலர்களைக் கண்டு பரவசத்துடன் ‘வில்லேன் காலன கழலே, தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர் யார் சொல் ? ‘ என்று மகிழ்ந்த சமூகம் அது.

அந்தச் சமுகம் மறைந்து புகுந்த காரிருளில் அதிகாரம் ஆண் வசமாயிற்று. சமன்பாடு மாறிற்று. போரிலும் மண்ணாசையிலும் பொன்னாசையிலும் வெறிபிடித்த ஆணுக்கு தனது இனத்தின் தூய்மையைக் கட்டிக் காக்க ஒரே வழிதான் புலப்பட்டது. இனத்தூய்மை பெண்ணின் பாலின இச்சைகளுக்கு விலங்கிட்டாலே சாத்தியம். போடு விலங்கை. பூட்டு வாயை. படிதாண்டா பத்தினியின் புகழ் பாடு. மூளையை மழுங்கடி.

அந்த மூளை மழுங்கடிப்பு இன்னமும் தொடர்கிறது. அத்தனைப் பெண்கள் தங்களது அரசியல் தோழர்களுடன் சேர்ந்துஆக்ரோஷத்துடன் குஷ்புவின் கொடும்பாவி எரித்ததில் அது வெளிப்பட்டது. தமிழ் நாட்டு அரசியலில் இன்று காண நேர்ந்திருக்கும் சகிப்புத்தன்மையற்ற பாஸிஸ போக்கின் நிதர்சன அடையாளமும்தான். இதற்குப் பின்னணியில் இருப்பது கொள்கையுமில்லை புண்ணாக்குமில்லை.தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக் கொண்ட கற்பிதம். அதைக் கையில் ஏந்தி அவர்கள் அடிக்காத இடமில்லை. சமகால பெண்கவிஞர்கள் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று ஆபாசமான குற்றச்சாட்டு. சினிமாவின் தலைப்பு தமிழில் இல்லை என்று வன்முறை தாக்குதல். செக்ஸைப் பற்றி நீ சொன்ன கருத்து உன் சொந்தக் கருத்தாக ஏற்கமுடியாது– ஏனென்றால் அதைப் பேசப் பெண்ணான உனக்கு உரிமை யில்லை.

இத்தகைய எதிர்ப்பில் இருக்கும் போலித்தனத்தை வன்முறையில் மறைக்கப் பார்க்கிறார்கள்–பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர்கள் அல்லது வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்கள். பெரியார் ஈ.வே.ரா. அவர்களின் ஆச்சரியமான நவீனச்சிந்தனைக் கருத்துக்கள் இவர்களை இன்னமும் நெளியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘திருமணம் என்பது சட்டபூர்வமான ஒரு விபச்சாரமே ‘ என்றார் பெரியார்.ஹிந்துப் பெண்களுக்கான சாராம்சப் பண்புகளாகக் குறிப்பிடப்படும் அனைத்தையும் வெங்காயம் என்றார். தமிழ் பற்று என்ற முழக்கங்களை வெறித்தனம், காட்டுமிராண்டித்தனம் என்றார்.இந்த கோஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாயானால் அடிப்படை விசயங்களை கோட்டை விடுவாய் என்றார்.

அடிப்படை விசயங்களைப் பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. இந்தப் படிமங்களுக்குப் பின்னால் இருப்து ஒரு பூதம். அரசியல் என்னும் பூதம். அடுத்த மாநில அவைத் தேர்தல் எனும் பகாசுர பூதம் அருகில் நெருங்கும் சமயத்தில் யாதவர்களுக்குக் கோரைப் புல்லெல்லாம் வாளாக மாறிப்போனதுபோல,

கள்ளமில்லாமல் உதிர்க்கும் ஒரு சொல் கூட துப்பாக்கி ரவையாகிப் போகிறது.

தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு தற்கால வெற்றி கிடைக்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியும் தமிழ்ச் சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்துக்குத் தோல்வி.

—-

vaasanthi@hathway.com

Series Navigation

வாஸந்தி

வாஸந்தி