சார்பு

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

எஸ் ஜெயலட்சுமி


சாரதாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவளால் ஒரு முடிவு எடுக்க முடிய வில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். ‘’சாரதா உனக்குத் தைரியமே போறாது. நீயோ தொடை நடுங்கி. ஒரு கரப்பான் பூச்சியையோ பல்லியையோ பார்த்தால் கூட ஓடிவிடுவாய். உனக்கு ஒரு இடத்துக்கும் தனியே போய் பழக்கம் கூடக் கிடையாது. நீ போய் எப்படித்தான் வேலை பார்க்கப் போறியோ! உன் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே’’ என்று ஒரு பாட்டம் அழுதாள் அம்மா.
அவள் சொல்வதிலும் உண்மை யில்லாமல் இல்லை. சாரதா ரொம்பவும் பயந்த சுபா வம் உள்ளவள்தான். கூச்ச சுபாவமும் உண்டு. தயக்க மில்லாமல் எல்லோரிடமும் போய்ப் பேச மாட்டாள்.
புகுந்த வீட்டில் போய் எப்படித்தான் சமாளிக்கப் போகி றாளோ என்று அம்மா ரொம்பவே கவலைப் பட்டாள்.
ஆனால் இதுவரை அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவள் கணவன் வீட்டிலும் அவளை எங்கே யும் தனியாக அனுப்பியதில்லை. அதனால் எந்தப் பிரச்சனையையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் சாரதாவுக்கு எழவில்லை.
சாரதாவின் கணவன் சுந்தரமும் அவளிடம் எந்தப் பொறுப்பையும் கொடுத்ததே யில்லை. வரவு செலவு எல்லாமே அவன் தான். பாங்க் கடை களுக்கும் சுந்தரமே போய் வந்ததால் சாரதாவுக்கு ரொம்ப சௌகரியமாக் இருந்தது. ஊருக்குப் போகும் போது கூட அவன் தான் கதவுகளைத் தாழ்ப்பாள் போட்டுப் பூட்டுவான். சாரதா சரியாகப் பூட்ட மாட்டாள் என்ற எண்ணம். சாரதாவும் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. கடைகளுக்குச் செல்லும் போதும் அவன் தான் பணத்தை வைத்துக் கொள்வான். நீ ஜாக்கிரதை யாக வெச்சுக்க மாட்டே. உனக்குக் கவனம் போறாது. நீ பேசாமல் வா’’ என்பான். ரொம்ப நல்லதாகப் போச்சு
என்று நினைப்பாள் சாரதா.
சாரதாவின் தங்கை மீனா கூட
‘’உனக்கென்ன மகாராணி மாதிரி நீ பாட்டுக்குக் கவலை
யில்லாமல், பொறுப்பும் இல்லாமல் வளைய வருகி றாய். என்னைப்பார் எங்க ஊர்ல நான் தான் எல்லாம் செய்யணும். இவருக்கு ஒண்ணும் தெரியாது. நேரமும் கெடையாது. கார்த்தால ஏழு மணிக்குப் போனா ராத்திரி ஏழு மணியாகும் வர. அவர் உண்டு அவர் ஆபீஸ் உண்டு. சம்பள செக் வந்தால் கூட நான் தான் பாங்கில் போய் கலெக்‌ஷணுக்குப் போடணும். கொழந்தைகள ஸ்கூல்ல சேக்கவும் நான் தான் போகணும். அது களுக்கு உடம்புக்கு வந்தா நான் தான் டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்.

ஏன், ஊருக்கு வரணும்னா டிக்கட் புக் பண்ணவும் நான் தான் போகணும். ஒவ்வொரு தடவையும் நாக்பூர் லேர்ந்தும் கல்கத்தாவிலேர்ந்தும் திருநெல்வேலி வரதுக் குள்ள போறும் போறும்னு ஆயிடும். சில சமயம் டிக்கட் கன்ஃபர்ம் ஆயிருக்காது. சிலசமயம் வெயிட்டிங்
லிஸ்ட், சில சமயம் R.E.C. தான் கிடைக்கும் மெட் ராஸ்ல ரயில் மாத்தி, திருநெல்வேலி வந்து கருங் குளம் வரதுக்குள்ள வேண்டவே வேண்டாம்னு தோணும். கொழந்தைகள் வேற ரயில்ல ரொம்ப படுத்து வார்கள். அவ்வளையும் சமாளிக்கணும் ஆனாலும் ஊருக்கு வரணும் எல்லாரையும் பாக்கணுங்கற ஆசைல தான் வரேன்.’’ என்பாள். சாரதாவுக்கு இதையெல்லாம் கேட்கவே ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.
சாரதாவுக்கு இப்படி யெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் தனியாக ரயில் பிரயாணம் செயும் படி நேர்ந்ததேயில்லை. அவள் கணவன் சுந்தரம் ஊரும் திருநெல்வேலி ஜில்லாவிலேயே பக்கத்திலேயே இருந்தது. சுந்தரத்திற்கும் திருநெல்வேலி கலெக்டர் ஆபீசிலேயே வேலை. அவனுடன் பிறந்தவர்களும் திருநெல்வேலியைச் சுற்றியே இருந்ததார்கள். ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் மட்டும் மதுரையிலும்
நாக்ர்கோவிலிலும் இருந்தார்கள். ஒன்றிரண்டு தடவை சாரதா தெரிந்தவர்களுடன் போக நேர்ந்தபோதும் சுந்தரம் 10 தடவைகளாவது ஜாக்கிரதையாகப் போ. பர்ஸை பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று சொல்லி
அனுப்பி வைப்பான்.
வாழ்க்கை அப்படியே போயிருந்தால் சாரதா இன்று இப்படிக் கவலைப் பட்டுக் குழம்ப வேண்டாமே! அவளை ஜாக்கிரதையாக இரு, பத்திர மாகப் பார்த்துப் போ என்று சொன்னவனால் தன்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடியவில்லை! நண்ப னோடு ஸ்கூட்டரில் போய்க் கொண்டிருந்த போது
எதிரே வந்த லாரிக்கு வழிவிட அவன் வண்டியைத் திருப்பிய போது பின்னால் உட்கார்ந்திருந்த சுந்தரம் தூக்கி யெறியப்பட்டதில் தலையில் அடிபட்டு அகால மரணமடைந்தான்.
சாரதாவின் தலையில் இடி இறங்கியது! அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டு எழ முடியவில்லை. குழந்தை ப்ரியாவுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. அதனால் சாரதாவுக்கே அந்த வேலை கிடைக்கும் என்றார்கள். ’’சாரதாவுக்கு 35 வயது தானே ஆகிறது. இன்னும் 23 வருடங்கள் வேலை பார்க்க லாமே’’ என்றார்கள் உறவினர்கள் மற்றும் சுந்தரத்தின் அலுவலக நண்பர்கள். அண்ணாவும் மீனாவும் வீட்டில் சும்மா உட்கார்ந்து வெட்டிப் பொழுது போக்க வேண் டாமே என்றார்கள். அம்மாவும் அப்பாவும் எங்களுடன் ஊருக்கு வந்து இரு என்றார்கள். ஆனால் சாரதாவுக்கு அம்மா அப்பாவுடன் ஊருக்குப் போகவும் பிடிக்க

வில்லை. ஆனால் என்ன செய்வது என்றும் புரிய வில்லை. ப்ரியாவோடு தனியாக இருக்கவும் மனம் ஒப்ப வில்லை.
மீனா வந்து லீவில் குழந்தைகளுடன் இருந்து விட்டுப் போனது கொஞ்சம் ஆறுதலாக இருந் தது. அண்ணாவும் மீனாவும் ரொம்பவும் வற்புறுத்திச் சொன்னதன் பேரில் வேலை வேண்டும் என்று அரசுக்கு விண்ணப்பித்திருக்கிறாள். அப்பா வழக்கம் போல் மௌனமாக இருந்தார். அவர் எப்பவுமே அப்படித்தான். எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். அபிப்பி ராயமும் சொல்ல மாட்டார். இரண்டு மூன்று தடவை ஊருக்கு வாயேன் என்று சொன்னார். ஆனால் சுந்தரத்
தின் ஆபீசிலிருந்து வரவேண்டிய பணமெல்லாம் வர வேண்டியிருப்பதால் அதைப்பற்றி பின்னால் யோசிக்க லாம் என்று அண்ணா சொல்லிவிட்டான். பென்ஷனும், பிராவிடெண்ட் ஃபண்ட் பணமும் வரவேண்டும்.
சாரதாவுக்கு வேலைக்குப் போக தயக்கமாக இருந்த்து. கூச்ச சுபாவம் ஒரு காரணம். எப்படி வேலை பார்ப்போம் என்ற பயம் ஒரு காரணம்.
சரியாக வேலை செய்யவில்லை என்றால் எல்லோரும் கேலி செய்வார்களே என்ற எண்னம் ஒரு புறம். உனக்கு ஒன்றும் தெரியாது ஜாக்கிரதை போறாது என்று சுந்தரம் வேறு சொல்லிச் சொல்லி சாரதாவுக்கும் தனக்கு ஒன்றுமே தெரியாது என்ற எண்ணம் மனதில் நன்கு
பதிந்து போயிருந்தது. அண்ணா, மன்னி, மீனா பக்கத்து வீட்டுக் காரர்கள் எல்லோரும் எவ்வளவோ சொன்ன போதிலும் அவளால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை. வேலைக்கு ஆர்டர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலையில் தான் இருந்தாள்.
அன்று காலை அப்பா செய்திக் கண்ணோட்டம் கேட்டு விட்டு டி.வி,யை அணைக்க மறந்து விட்டு வெளியே போய் விட்டார். டி.வி யை அணைக்க வந்த சாரதா அந்தக் காட்சியைப் பார்த்து அப்படியே பிரமித்து நின்று விட்டாள். அந்தப் பெண் நிமிர்ந்து படுத்துக் கொண்டிருந்தாள். அவள் வயிற்றின் மேல் குறுக்காக ஒரு பலகை போட்டிருந்தது. அதன் மேல் மோட்டார் சைக்கிள்களை ஒவ்வொன்றாக ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். இது என்ன மாயமா? மந்திரமா? தந்திரமா? பொதிகைச் சேனலில் ‘இன்றைய விருந்தினர் நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் திருமதி பானுமதி. கின்னஸ் புத்தகத் தில் அவரது சாதனை இடம் பெறப் போவதாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
பேட்டி கண்டவர் ‘’நீங்கள் எந்த
வயதில் எந்தச் சூழ் நிலையில் இந்தப் பயிற்சியை மேற்
கொண்டீர்கள்? ’’நான் என்னுடைய 32வது வயதில் கராத்தே கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். மிகுந்த மன உளைச்சலில் இருந்தபோது கற்றுக் கொள்ளத் துவங்கி
னேன். அப் பொழுது என்னுடைய எடை 80 கிலோ. இப் பொழுது 20 கிலோ குறைத்துவிட்டேன். கராத்தேயில் எல்லா நிற பெல்ட்டுகளும் வாங்கிய பிறகு இப்பொழுது கறுப்பு நிற’பெல்ட்டும் வாங்கியிருக்கிறேன்.’’
இரண்டு கிலோ எடை குறைப்பதற்கே தான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதை நினைத்துப்
பார்த்தாள் சாரதா.
‘’இம்மாதிரி சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்த என்னுடைய மூச்சுப் பயிற்சியும், யோகாவும், தியானமும் தான் காரணம். அதோடு விடா முயற்சியும் வேண்டும்’’ என்றாள் பானுமதி.
அதன் பின் கராத்தே பயிற்சி யால் எப்படி ஒரு திருடனைப் பிடிக்க முடிந்த்து என்ப
தையும் விவரித்தார். ’’ஒருநாள் கையில் 10,000 ரூபாயோடு வந்து கொண்டிருந்தபோது என் பையைப்
பிடுங்க முயன்றான். எனக்குக் கராத்தே பயிற்சி உண்டு
என்பது அவனுக்குத் தெரியாதே! நான் அவனது கையைப் பிடித்த விதத்தில் அவன் அசந்தே போனான். சமயம் பார்த்து நான் என் கை முஷ்டியால் அவனைத் தாக்கினேன்’’ என்று அபிநயத்தோடு காட்டியதைப்
பார்த்த சாரதாவுக்கு ஒரே வியப்பாக இருந்த்து. ஒரு பெண்ணால் இப்படியெல்லாம் செயல் பட முடியுமா?
பானுமதியைப் பார்த்தால்
சாதாரணப் பெண்ணாகத்தான் தெரிந்தாள். பேட்டி கண்ட வரிடம், ”எல்லாம் சாதிக்க முடியும். மன உறுதிதான் வேண்டும். என்னால் இது செய்ய முடியும் என்று நம்ப வேண்டும். நானும் ஒரு குடும்பப் பெண்தான். குழந்தை
கள் இருக்கிறார்கள். வயதான தகப்பனார் இருக்கிறார். இவர்களையெல்லாம் நான் தான் கவனித்துக் கொள்கி றேன். யோகா வகுப்புகளும் நடத்துகிறேன். முதலில் என்னையும் எல்லோரும் கேலி செய்தார்கள். இந்த வெயிட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்? என்று கேலி பேசினார்கள். நம்மால் முடியாதது எது வுமேயில்லை. தன்னம்பிக்கை யிருந்தால் எதையும் சாதிக்கலாம்’’ என்றார் பானுமதி.
பேட்டி கண்டவர் ’’கடைசியாக
இக்காலப் பெண்களுக்கு நீங்கள் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?’’
’’பெண்கள் எப்பொழுதும் பிறரைச் சார்ந்து இருப்பதை விட்டு விட்டு சுயமாகச் சிந்திக்க வேண்டும். முதலில் தந்தையையும், பின் கணவனையும் அதன் பின் மகனை
யும் சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சேர்ந்து இருப்பது தவறில்லை. சார்ந்து இருப்பது தான்
வறு.’’ என்று முடித்தாள்.
பானுமதியின் பேட்டி சாரதாவை
மிகவும் பாதித்தது. பானுமதியின் வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக் கொண்டே யிருந்தது. இரவு பூராவும்
சாரதா யோசித்துக் கொண்டே யிருந்தாள். மறுநாள் மத்தியானம் சென்னையிலிருந்து சாரதாவின் அண்ணா சிவராமன் பேசினான்.’’சாரதா இன்னும் இரண்டு நாளில் வேலையில் சேர உனக்கு ஆர்டர் வந்து விடும். இங்க
ஆபீசில் கேட்டேன். தபாலில் அனுப்பி விட்டார்களாம்.
கட்டாயம் வேலைக்குப் போ அதுதான் ஒனக்கு நல்லது’’
என்றான்.
‘’போன்ல யாரு? என்றார் அப்பா.
“அண்ணா தான் பேசினான். நான் வேலைல சேரணும். ரெண்டு நாள்ள ஆர்டர் வந்துடுமாம். நீங்க ஊர்ல போய் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு வந்துடுங்கோ. கொழந்தை
ப்ரியாவுக்குத் துணையா கொஞ்ச நாள் இருங்கோ. நாம
கொஞ்ச நாள் சேர்ந்து இருப்போம். ஆனா நான் ஒங்களச்
சார்ந்து இருக்க மாட்டேன். ப்ரியாவுக்குக் கொஞ்சம் விவரம் தெரிஞ்சப்பறம் அவளை நான் பாத்துப்பேன்
என்றாள் தீர்மானமாக.
இந்த மாற்றம் எப்படி வந்தது என்று அம்மா, அப்பா இருவரும் ஒருவரை ஒருவர் கேள்விக் குறியுடன் பார்த்துக் கொண்டார்கள்.

vannaijaya@hotmail.com

Series Navigation

எஸ் ஜெயலட்சுமி

எஸ் ஜெயலட்சுமி