This entry is in the series 20100227_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


எழுதப்பட்ட விதி
பொறிக்குள் மணக்கிறது
சுட்ட கருவாடு
எழுதப்பட்ட விதி
எந்த எலிக்கோ?

குலைகள் மேலே
குழி கீழே
எழுதப்பட்ட விதி
எந்த யானைக்கோ?

புழுக்கள்
சொருகிய தூண்டில்
எழுதப்பட்ட விதி
எந்த மீனுக்கோ?

ஏக தவத்தில்
எட்டுக்கால் பூச்சி
எழுதப்பட்ட விதி
எந்தப் பூச்சிக்கோ?

இந்த
விதிகளே சூத்திரமாய்
சூதாட்டங்கள்
எழுதப்பட்ட விதி
எந்தெந்த மனிதருக்கோ?

யூசுப் ராவுத்தர் ரஜித்
rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation