சாதி இரண்டொழிய….

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

(ராமசந்திரன் உஷா)


கோவிலைவிட்டு வெளியே வந்தவுடன் வெய்யில் மண்டையைப் பிளந்தது.

நானும் பிருந்தாவும் வேகமாய் நடக்கத் தொடங்கினோம்.அப்பொழுது அங்கே தெரு ஓரத்தில்மயங்கி இருந்தவனை இரண்டொருவர் எழுப்ப முயற்சி செய்துக் கொண்டிருந்தனர்.அவனும் எழுந்து உட்கார்ந்தான்.தற்செயலாய் அவனைப் பார்த்தப்போது அவனும் என்னை பார்த்துவிட்டான்.

இவனா! எப்படி இருந்தவன் இப்படி ஆகிவிட்டானே!என்று யோசிக்கும் போது,தள்ளாடியவாறு எழுந்து ,தெரு திருப்பத்தில் வேகமாய் மறைந்தான்.அதே நேரம் அந்த சினிமா போஸ்டர் என் கண்ணில் பட்டது. உணர்ச்சியின் வேகத்தில் உடல் தள்ளாடியது.பிருந்தா பிடித்துக்கொண்டாள்.பேசாமல் வீடு வந்து சேர்ந்தோம்.

தலைவலிக்கு மாத்திரைப் போட்டுக்கொண்டு படுத்திருந்தேன். பிருந்தா அமிர்தாஞ்சனை தலையில் தடவியவாறு, ‘ யார் அது,தெரிஞ்சவனா ? ‘ என்று கேட்டாள்.

தலை ஆட்டியவாறு,மெதுவாய் ஆரம்பித்தேன்.

‘இரண்டு வருஷத்துக்கு முன்ன நாங்க துபாயில் நடந்த சம்பவம். சலீம்பாபுங்கர பையன் வாரம் ஒருமுறை வந்துவீடு,பாத்ரூம் சுத்தம் செஞ்சிதருவான். ஒரு ஸ்கூல்ல பஸ் டிரைவராகவும்இருந்தான். முதல்தடவை அவனைபார்த்தப்போ, ஆச்சரியப்பட்டு போனேன்.ஆள் பார்க்க ஜம்முனு இருப்பான்,போடற உடுப்புகளும் நல்லா இருக்கும்.அதே நேரம் அனாவசியபேச்சோ,பார்வையோ இல்லாமல் அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருப்பான்.மத்த வீட்டு வேலைகளும் செய்ய அவனுடைய சொந்தக்கார பொம்பள கதீஜாவ ஏற்பாடு செஞ்சோம்.

அந்த அம்மா இருபதுவருஷமா துபாய்ல இருக்கிறவ,அவளோட அண்ணன் மக பாத்திமாவும் ஒரு வீட்டுல,வீட்டோட தங்கி வேலசெய்றதாகவும்,அந்த பொண்ணும்,பாபுவும் லவ் பண்ணுவதாகவும் சொன்னா!அந்தப் பொண்ணுக்கு கொஞ்சம் கடன் இருக்கு,அத தீர்த்துட்டு,அடுத்த வருஷம் கல்யாணமுனு சொன்னா!சலீம்பாபுவ புகழ்ந்து ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா!சிக்கனமான பையன்,மூணு தங்கச்சிகளுக்கு கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டான்.இன்னும் ஒருத்தி பாக்கி,அத படிக்க வெச்சிக்கிட்டு இருக்கான்,இப்படி தினத்துக்கு ஒண்ணு!

துபாய்ல ரூல் என்னநா,ஸ்கூல் பஸ்டிரைவர், டாச்சர்,நர்ஸ் இவுங்க எல்லாம் சம்பளம்கொறைவா இருந்தாகூட பேமிலிவைத்துக்கொள்ளலாம்.மத்த வேலைல இருக்கிறவங்க,ஏறக்குறைய நாலாயிரம்திராம்ஸ் சம்பளம் வாங்கினாதான் பேமிலி கொண்டுவரமுடியும். மெயிட்டா இருக்கிறவங்க கல்யாணம் கட்ட முடியாது.ஆனா பாபுவுக்குதா பேமிலி வைத்துக்கலாமே! கல்யாணம் ஆனா இவ மெயிட் விசாவ கேன்சல் பண்ணிட்டு,அவனோட விசாவுக்கு மாறிடலாம்.

இப்படி அவுங்க லவ் ஒருபிரச்சனையும் இல்லாம போய்கிட்டிருந்தது.அதே சமயம், எனக்கு இங்க சென்னைல ஒரு பிரண்டு,என்னோட காலேஜ்மெட்.பேர் ஜெயஸ்ரீ.ரொம்ப ஆர்தோடக்ஸ் பேமிலி.அவ அப்ப டைரக்டர் ஆறுமுக ராஜாவை லவ் பண்ணிக்கிட்டு இருந்தா!

‘யாரு!யாரு! அயோத்தியா டைரக்டரா ? ‘ என்று ஆச்சரிய கேள்வி எழுப்பினாள்

பிருந்தா.

‘ஆமாஆமாம்! காலேஜ் மாக்கசினுக்கு இண்டர்வியூ எடுக்க பிலிம் இன்ஸ்ட்டியூட் போனபோது பழக்கமாயிருக்கு!இது சரிப்பட்டு வராதுனு நாங்க எல்லாரும்எடுத்துச்சொல்லியும் அவ கேக்கல! காதலுக்குதா கண் இல்லையே! ‘

இவளும் சி.ஏ படிக்கிறேன்னு வீட்டுல நடக்கிற கல்யாணப்பேச்ச ஒத்திப் போட்டுருந்திருக்கா!நா துபாய் போனபிறகு,அவ அடிக்கடி எனக்கு ஈ-மெயில் பண்ணுவா!அந்தநேரம்தா ராஜா தன்னோட முதல் படம்அயோத்தியாவ டைரக்ட் பண்ணிகிட்டு இருந்தாப்ல!படம் முடிஞ்சி,சக்ஸஸ் ஆனாதான் கல்யாணப்பேச்சு எடுக்க முடியும்ன்னுட்டார். வீட்டுலையோ அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, எப்படி விஷயத்த சொல்லப்போரேன்னு ஒரே புலம்பலாக மெயில் அனுப்புவா!

நானும் பொறுமையா இரு,தப்பான முடிவு எடுத்துடாதேன்னு பதில் அனுப்பிகிட்டுஇருந்தேன்.அவ மெயில படிச்சாலே நா மூடு அப்சட் ஆயிடுவேன்.லவ் பண்ணறதுக்கு முன்னே எல்லாத்தையும் யோசிச்சி இருந்திருக்கணும், இந்தபாபு,பாத்திமா மாதிரி ஒரே சாதி,குலமா இருந்தா இப்படி அவஸ்தை படவேண்டாமேன்னு எனக்கு தோணும்.

இந்த சமயத்துல ‘அயோத்தியா ‘ ரீலிஸ் ஆச்சு! சூப்பர் ஹிட்,எல்லா பத்திரிக்கைகளிலும் ரொம்ப புகழ்ந்து எழுதியிருந்தாங்க! ஜனாதிபதி விருதுக் கிடைக்கும்ன்னு பேச்சும் அடிப்பட ஆரம்பிச்சுது!

இந்த நேரத்துல ஜெயஸ்ரீகிட்ட இருந்து மெயில் வருவது நின்னுப் போச்சு!

என்னுடைய எந்த மெயிலுக்கு பதில் இல்லை.போன் பண்ணலாம்னா, மத்தவங்க மத்தியில அவளால என்ன சொல்லமுடியும் ?இப்படி கவலப் பட்டுக்கிட்டு இருக்கிறப்போ,ஒரு நாளு, தமிழ் பேப்பர் வெப் சைட்ல ‘அயோத்திய டைரக்டர் காதல் திருமணம் ‘ ன்னு இருந்துச்சு! கிளிக்பண்ணிப்பார்த்தா,ஆறுமுகராஜாவுக்கு முதல்வர் முன்னிலையில் திருமணம்.இது காதல்,கலப்புதிருமணம்.மண மகள் பெயர் ஜெயஸ்ரீ ன்னும் இருந்துச்சு!அப்புறமா அவகிட்டஇருந்து மெயிலும்,போனும் வந்துச்சு!கல்யாணமும் தடபுடலா நடந்துச்சு! ராஜா அடுத்த சூப்பர் ஹிட்டும் குடுத்து பீல்டுல நல்லா நெலச்சிட்டாரு!

இப்படி ஒழுங்கா நடக்குமான்னு பயந்தக் காதல் நல்ல விதமா கல்யாணத்துல

முடிஞ்சுது!ஆனா எந்த வித குழப்பமும் இல்லன்னு நெனச்ச பாபு,பாத்திமா லவ்

என்ன ஆச்சு தெரியுமா ? ‘ பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

ஒருநா கதீஜா போன்ல, கொஞ்சம் பிராப்ளம்,சப்யூஸ்டா ஒரு சிங்கள பெண்ண அனுப்புரேன். ஒரு பத்துநாளு,கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்கனுட்டா!மத்த

விஷயங்கள நேர்ல சொல்றேனுட்டா!

வந்தப்பொண்ணுக்கு சிங்களமும்,அரபியும் தவிர எந்த பாஷையும் தெரியாது.

ஒருநா,கதீஜாவும் வந்தா! பாத்திமாவுக்கு கல்யாணமாயிடுச்சு, அவ வேல பாக்குற வீட்டு ஆணுக்கு அவ மேலே விருப்பமாம்.அவனோட முதல் மனைவி சம்மத்தோட சட்டப்படி கல்யாணமாயிடுச்சாம்.ஒரே மதம்,அதனால எந்த பிரச்சனையும் இல்ல!எக்கசக்க நகை,துணிமணி, சாமான்கள்,பணம் எல்லாம் கொடுத்தார்களாம்.

அந்தப் பொண்ணு பாத்திமா எப்படி இதுக்கு ஒத்துகிச்சுன்னு நா கேட்டதுக்கு,

அவ மொதல்ல மறுத்தாலும்,நாங்க எல்லாரும் இதனால அவளுக்கு,ஊர்ல அவ

பேமலிக்கு கிடைக்க போறத வாழ்வ எடுத்துச்சொன்னோம்,அப்புறம்தா ஒத்துகிட்டா!ங்கறா!

‘அந்த பையன் பாபுன்னு நா இழுத்ததும்,அதுக்கு அவ,அவனுக்கு என்ன வேறப் பொண்ணா கெடைக்காதுன்னுட்டா அலட்சியமா! ‘

இன்னைக்கு பார்த்தா,அந்த சலீம் பாபு, இப்படி பிச்சக்காரமாதிரி,தெருவுல கெடக்கிறான்.காதல் தோல்வியா!அந்தப்பொண்ணு,அவனோட சொந்தக்காரங்களோட நம்பிக்கை துரோகமா ?என்றுக் கசப்புடன் கேட்டேன்.

நீங்க என்ன பேர் வேணா வைங்க!அவனோட இந்த நிலமைக்கு காரணம்

வாழ்க்கையோட யதார்த்தம் அவனுக்கு தெரியல! உலகத்துல எப்போதும்

ரெண்டே சாதிதான்.பணக்கார சாதி,ஏழைசாதி.இதுல பணக்கார சாதிதான் எப்போதும் ஜெயிக்கும்! ‘ என்று முடித்தாள் பிருந்தா.

————————————————

*மெயிட்டாய் வீட்டு வேலை செய்பவர்கள்,தங்கள் ஸ்பான்ஸர் அனுமதியுடன்

திருமணம் செய்யலாம்.ஆனால் இது நடைமுறையில் நடப்பதில்லை.

நன்றி-அமீரகத் தமிழிணைய நண்பர்கள்

ஆண்டு விழா மலர்-2003

ramachandranusha@rediffmail.com

Series Navigation

author

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா

Similar Posts