சாதியும், கணக்கெடுப்பும் –

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

காயில் ஆம்வெட் – தமிழில் மணி


Caste And The Census By Gail Omvedt
”சாதிகள் பெருங்குற்றம், பாவச்செயல், அதைப்பார்க்காதே, கேட்காதே, பேசாதே” படித்த இந்திய மேட்டுக்குடி வர்க்கத்திற்கு சாதி என்கிற சொல்லே காந்தியின் மூன்று குரங்கு போலத்தான். சாதி என்பதேயில்லை. அப்படியிருந்தாலும் அவ்வளவு மோசமானதாகயில்லை. அதைப்பற்றி பேசவே கூடாது. அப்படி பேசுபவர்களும், அது சார்ந்த தளத்தில் இயங்குபவர்களும் வெறும் சாதிப்பற்றாளர்கள் மட்டுமே. அவ்வாறு அதன் முழுச்சுமையும் அந்த தளத்தில் இயங்குபவர்கள் மீது ஏற்றப்படும்.
இந்த மனப்போக்கே இந்திய அரசின் சட்ட திட்டங்கள் வகுப்பதிலும் வழிகாட்டியாய இருந்திருக்கிறது. 2011ல் மக்கட் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகும் இந்நேரத்தில் ”சாதியை மக்கள் தொகை கணக்கெடுப்பில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அப்படியே எடுத்தாலும், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள பரந்த மற்றும் (பெரும்பாலும் எதற்கும்) உபயோகமற்ற பிரிவினால் மட்டுமே சாதி குறிப்பிடப்படவேண்டும். என்பது போன்ற (மொக்கை)* வாதங்கள் எழுந்துள்ளன். கடந்த காலத்திலும் இந்த பிரச்சனை எழுப்பபட்டபோதெல்லாம், பெரும்பாலான தடவை, அது எதிர்கொள்ளும் அதீதமான எதிர்வினைகளால் குழப்பமான, கருத்து முரண்பட்ட வாதங்களால், கசப்பான ஓவ்வாமை ஆகியவற்றையே சென்றடைந்திருக்கிறது.
இப்போது கணக்கெடுப்பில் சாதி கேட்பது அரசியலாகிவிட்டாலும், இந்த மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு முறை ஆங்கிலேயே அரசாங்க காலத்திலிருந்தே கடைபிடிக்கபட்டு வந்திருக்கிறது மேலும் அப்போது அது எந்த விதமான பெரும் பிரச்சனைக்கும் இட்டு செல்லவில்லை (ஒரு சில வகுப்பார்கள் தங்களுக்கான புதிய அடையாளத்தை கண்டடைந்து அதற்கான உரிமை கோரியதை விடுத்து). ஓவ்வொரு கணக்கெடுப்பிலும் இனத்தை பற்றிய விவரங்களை சேகரிக்கும் அமெரிக்க அரசாங்கத்தை அந்த விவரங்கள் எந்த பெரிய பிரச்சனையை நோக்கியும் நகர்த்தி செல்லவில்லை. (நம்மூர் சாதியை போல அமெரிக்காவில் இனமும் ஓரு தீவிர பிரச்சனை)
ஒரு விசயத்தை அணுகுவதற்கு, ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு அதுபற்றிய முழுமையான தரவுகள் தேவை. திட்டங்கள் தீட்டும் முன் முழுமையான புரிதலும், ஆழமான பகுத்தறிதலும் தேவை. சாதி இல்லையென்று நம்புவதும் நடிப்பதும் அது தொடர்வதற்கான வாய்ப்பாகவே போய்விடும். ஒரு பக்கம் சாதியை(சமச்சீரின்மையை) கையாளுவதற்கான ஏராளமான சட்ட திட்டங்கள், மறுபக்கம் அதுபற்றிய மிகக்குறைவான புரிதல் மற்றும் உண்மை விவரங்கள். சாதியை பற்றிய முழுமையான ஆய்வுகள் நடத்த எந்த ஆதரவும், ஊக்குவிப்பும் இருப்பதில்லை. நடத்தப்படும் ஒரு சில ஆய்வுகள் கூட சமூகவியல் படிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்களை பற்றி தாங்களே ஆய்ந்து தங்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட முறையில் எழுதியது மட்டுமே. சாதி ஒரு அமைப்பாகி போனதை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இந்திய தேசிய மாதிரி கணக்கெடுப்பு(நேசனல் சாம்பிள் சர்வே), ஒரு பொதுவான சாதி தொகுப்பை/பிரிவை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. பெரும்பாலும் இத்தகைய தொகுப்பினால் எந்தப்பயனும் இருப்பதில்லை. உதாரணம் : ஓபிசி. இந்த தொகுப்பின் கீழ் பரந்துபட்ட, வெவ்வேறு அடுக்குகளிலிருக்கும் சாதிகளும், பிரிவுகளும் கூட ஒரே பிரிவின் கீழே வந்துவிடுகின்றன். சமூக விமர்சகர் சதீஸ் பாண்டே சொல்வது போல நமது சமூகத்தில் கண்டுகொள்ள முடியாத அளவு உயர்ந்திருக்கும் பிராமணர்களின் வளர்ச்சி எப்போதுமே கவனத்தில் கொண்டுவரப்படுவதில்லை. எல்லா உயர் வகுப்பினரும் “பொது” என்கிற பிரிவின் கீழ் தள்ளப்படுகின்றனர். அவர்களை பற்றிய எந்த திட்டவட்டமான புள்ளிவிவரங்களும் கிடைப்பதில்லை. சாதி கலப்பு திருமணங்களை பற்றிய விவாதங்களை ( எத்தனை சதவீதம் சாதிக்குள்ளே நடக்கிறது 95%ஆ இல்லை 99%ஆ) இன்னும் வெறும் அநுமானத்திலோ, திருமண விளம்பரங்களிலிருந்தோ அல்லது நமது சொந்த அநுபவத்திலிருந்தோ மட்டுமே விவாதிக்கமுடிகிறது.
ஆகவே சாதியை பற்றிய விவரத்தை கணக்கெடுப்பில் சேர்ப்பது மிக இலகுவான ஓன்று. தனது சொந்த அடையாளத்தை குறிக்கும் ஒரு தரவாக அது அமையட்டும். அவர்கள் விரும்பும் படியே தங்களது சாதியை அவர்கள் குறிப்பிடட்டும். விரும்பினால் “சாதியற்றவன்” என்றோ “ கலப்பு சாதி” என்றோ குறிப்பிட்டு கொள்ளட்டும். இது ஒரு முக்கியமான தரவு. “சாதியற்றவன் “ என்று குறிப்பிடுபவர்கள் வெறும் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவே இருப்பார்கள் என்பது என் எண்ணம். பின்பு மாநில அளவிலான செயற்குழுக்கள் தங்கள் கையிலிருக்கும் தரவுகளிலிருந்து பொதுவான சாதிப்பிரிவுகளை உருவாக்கி கொள்ளலாம்.
இது ஒரு பகற்கனவே. ஆனால் ஒரு பிரச்சனைய அணுகுவதற்கு, அதற்கு தேவையான தரவுகளை தேடுவதற்கான முயற்சியில் ஒரு நேர்மையான ஆரம்பமாக இது அமையும். சந்தேகத்திற்கு இடமின்றி, நவீன இந்தியாவில் சாதிகள் பெரும் மாற்றத்தை அடைந்து விட்டபோதிலும், குறிப்பிட்ட தலித் சாதியினர் மட்டும் மனிதக்கழிவுகளை எடுக்கும் முறை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. முன்னேறிய, இடதுசாரி மாநிலங்களான கேராளாவில் கூட சித்ரலேகா போன்ற நிகழ்வுகள் ( வேறு சில நிகழ்வுகள்: திண்ணியம், காயர்லாஞ்^) – குறிப்பிட்ட சாதியினர் மீதான வன்முறையை காட்டுகிறது. ஜாஜ்மணி போன்ற பழம் முறைகள் பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன. எனினும், சாதிக்கும் பொருளாதாரத்திற்குமான தொடர்பு சங்கிலி இன்னும் பலமாகவே வேருன்றியிருக்கிறது. படிப்பும் தொழிலும் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளது.
கடுமையான, வேறெங்கும் காணப்பட்டாத இந்தியாவிற்கே உரித்தான் சமூக அமைப்பை கணக்கிலெடுக்காமல் இன்னொரு கணக்கெடுப்பு முடியப்போகிறது. (சாதி விவரம் சேர்க்காத நிலையில்) இதுவே கடைசியாய் அமையட்டும்.

Series Navigation

மணி

மணி