சாதனை

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

தேவமைந்தன்


மலைகள் ஏறி, சிகரம் தொடுகிறீர்கள்.
பனியில் சறுக்கி
வித்தை காட்டுகிறீர்கள்.
மாரதான், டிரையத்லான், அக்ரொபேட்டிக்ஸ்,
ஜ்ிம்னாஸ்ட்டிக்ஸ்.. இன்னும் இன்னும்
எத்தனை எத்தனைத் துறைகளில் எல்லாம்
நித்தமும் சாதனை! எல்லாம் எதற்காக ?
கின்னஸ், லிம்கா, ஏ.எக்ஸ்.என்., நேட்.ஜ்ியோ.,
இன்னம் பலவற்றில் இடமே பிடிக்க.
நாங்களோ என்றால் —
கீழை நடுத்தர வகுப்பில் ‘தோன்றி ‘
அரசுப் பள்ளி, கல்லூரி, பல்கலை
பரமபத வாழ்வின் பாம்புகள் தப்பியும்,
கொடுக்கும் சம்ப ளம் பெறவே நாளும்
கருக்கலில் எழுந்து, கிடைத்ததைத் தின்று,
காத்து நின்று, கருத்தாய்ப் பிடித்த
நகர நரகப் பேருந்தில் திணிந்து,
இடிபல வாங்கி, இளித்து முறைத்து,
நிறுத்தம் தாண்டி உமிழப் பட்டு,
பணியில் அவனிவன் ஏச்சும் பேச்சும்,
தோழர் தோழியர் ஏளனப் பார்வை,
விடலைப் பையன் கடலை உடைப்பு,
எல்லாம் கடந்து, மீண்டும் மாலை
இரும்பு வண்டியின் இமிசைகள் தாங்கி,
இல்லம் திரும்பினால் –
‘அம்மா! மிட்டாய் வாங்கி வந்தியா ?
ஏம்மா! மருந்து வாங்கி வந்தியா ?
அக்கா! நாளைக்கு ஃபீஸ் கட்டணும்! ?
என்ற நெருப்பு வளையங்கள் புகுந்து,
தண்ணீர் பிடித்து, சமைத்து வைத்து,
பரிமாறி, கழுவி, ஊற்றி மூடி –
‘பஞ்ச ‘ வாசப் படுக்கையில் படுத்து,
கனவில் மட்டும் ராஜாத்தி யாக
வாழ்கிற சாதனை
வெறுமே பூமியில் ‘இருத்த ‘லுக்காக.
சிகரம் தொட்ட சாதனை யாளரே!
எங்கள் அன்றாடம் தொடுகிற
தைரியம் உண்டோ உமக்கு ? சொல்வீரே.
* * * *
pasu2tamil@yahoo.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்