பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

கற்பக விநாயகம்


****

காசி விசுவ நாதர் கோவில் இடிக்கப்பட்டதற்கு எந்த மதக்காரணமும் இல்லை.

ஒளரங்கசீபின் பரிவாரங்கள் காசி நகரில் தங்கி இருந்தபோது அவரது அந்தப்புரத்து மகளிரில் சிலர் காசி விசுவ நாதரை வணங்கிடச்சென்றனர். அவர்களில் ஒரு பெண் திரும்பவில்லை. தேடத்தொடங்கினர். இறுதியில் அப்பெண்ணின் பிணம் விசுவநாதர் கோவிலில் உள்ளே கண்டெடுக்கப்பட்டது. நீதி விசாரணையில் அக்கோவில் பூசகர்கள் அப்பெண்ணைப் பாலியல் வன்முறை செய்து கொன்றது தெரிய வரவே அப்புரோகிதர்கள் தண்டிக்கப்பட்டு, ஆணையின்பேரில் புனிதம் இழந்துவிட்ட கோவில் இடிக்கப்பட்டது.

கஜினி 18 முறையும் ஜிகாத் தா நடத்தினான் ? அவ்வாறெனில் அவனின் படையில் இந்து வீரர்களும் இருந்தனரே!! அவனின் தளபதியாய் ஓர் இந்துதான் இருந்தார். அவரும் சோம நாதபுரத்தினைத் தாக்கிய படையில் இருந்தார்.

18 முறையும் வந்தது எல்லாம் ‘டப் ‘புக்காகத்தான்.

அக்காலத்தில் கோவில்கள் பொன்னும் பொருளுமாய் செல்வக் களஞ்சியமாய்த் திகழ்ந்தன. தென்னாட்டில் இதனை பண்டாரம் எனும் சொல்லால் குறித்தனர். பொன்னும் பொருளும் சேர்ந்த அவ்விடங்களைக் கொள்ளையிடவே மன்னர்கள் தாக்கினர். அர்த்த சாஸ்திரம் சொல்லும் அரசின் வருவாய் வழிகளில் கோவில்களைக் கொள்ளையிடுவதும் ஒன்றே.

காஷ்மீரத்தை ஆண்ட ஹர்ஷனிடம் இக்கொள்ளை நிறைவேற்றிடவே தனியொரு மந்திரி இருந்தார். எல்லா மதத்து மன்னர்களும் மக்களை நிலவரி எனும் பேரிலும் கொள்ளை அடித்தனர். கோவில்களையும் கொள்ளை அடித்தனர். இதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட்டு விசம் விதைப்பது எந்த வகை நாகரீகம் எனத் தெரியவில்லை.

மத நம்பிக்கையின் அடிப்படையிலான முடிவுகள் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டதென்றால், கணவன் இறந்து விட்டால் மனைவியை சதி மாதா ஆக்கிட உயிரோடு கொளுத்துவது, தீண்டாமையை முறையாய் அனுசரிப்பது (தீண்டாமை ஷேமகரமானது – சந்திரசேகேந்திரர்), தீட்டு, பெண்ணை அடிமையாக நடத்துவது, கோவிலுக்கு பெண்ணைப் பொட்டுக்கட்டி அவளை விபச்சாரி ஆக்குவது, கலப்புத் திருமணம் செய்த உயர்குலப்பெண்ணை மொட்டை அடித்து ஊர்வலம் விடுவது என்பதெல்லாம் கூட மத நம்பிக்கைகள்தான். நீதிமன்றம் எல்லாம் இதில் தலையிட்டால் மலர்மன்னன் புண்படுவார்தானே!!!

குஜராத்தில் இனியும் மக்கள் எப்படி தட்டிக்கேட்பர் ? பல லட்சம் இஸ்லாமியரை விரட்டி விட்டு அகதி முகாமில் அடைத்து பல கிராமங்களை சுத்திகரித்தாயிற்று. இசுலாமியரை வாக்காளர் பட்டியலில் இருந்து துடைத்தாயிற்று.. ஹிட்லரின் காலத்தில் ஹிட்லருக்கும் அம்மக்கள் பெரும்பான்மை தந்தார்கள்தான். ஹிட்லரின் தத்துவத்தை விதந்தோதும் கோல்வர்க்கர் பரம்பரைக்கு இது உறைக்காதுதான்.

தமிழகத்தில் வர்ணாசிரமத்தின் 4 பிரிவுகளும் அப்படியே பொருந்தி வந்ததாய் வரலாறில்லை.

விஜய நகரப்பேரரசுக்குப் பின்புதான் 4 வாயிலுள்ள கோவில்கள் பெருகின. இருப்பினும் மன்னர்களைப் புரோகிதர்கள் க்ஷத்திரியர்களாய்ப் பார்க்கவில்லை. (சூத்திரனான சிவாஜியை சத்திரியனாக மாற்றும் சடங்கைச் செய்து அவனை ஓட்டாண்டி ஆக்கிய காகப்பட்டர் கதையை அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியத்தில் காணலாம்)

பொன்னாலான பசுவின் வயிற்றுள் மன்னனை நுழையச்செய்து பின் அப்பொன்னைப் பெற்றபின் (ஸ்வாஹா) மன்னர்களுக்கு க்ஷத்திரிய ஞானஸ்னானம் வழங்கி புல்லும் புனலும் உள்ளவரை கங்கை காவிரி உள்ளவரை வாழச்சொல்லி, மாறுபட்டால் கங்கைக்கரையில் காராம்பசுவைக்கொன்ற பாவத்திற்கு ஆளாக சபித்து சுபிட்சமடந்தனர் பார்ப்பனர்.

தென்னாடுடைய சிவனைப் போற்றிய வெள்ளாள அப்பரே சற்சூத்திரர்தான்.

படி நிலை வரிசையில் பார்த்தால் தென்னாட்டில் சத்திரிய வைசிய வருணம் கறாராய் இருந்தது கிடையாது.

கோவில் நுழைவு வழக்கில் நாடார்களின் வாதம் தாம் சத்திரிய குலத்தோர் என்பதாய் இருந்தது. ஆனால் இந்து நீதி நூல் பிரகாரம் இது சரியில்லை என்றே தீர்ப்பானது. வன்னியரும் தம்மை சத்திரிய குலத்தோர் எனக் கருதிக்கொண்டனர். ஆனால் ஏற்கப் பட்டதில்லை.

எனவே பெரியார் மிகச்சரியாகத்தான் தமிழ்சாதி அமைப்பைக் கணித்தார்.

வலங்கை இடங்கை எனும் வழக்கத்தில் சத்திரிய வைசிய வருணத்தின் இடம் யாது என்பதை விசயம் தெரிந்த மலர்மன்னன் விளக்கினால் எம் வரலாற்று அறிவு சற்றே தெளிவுறும்.

****

vellaram@yahoo.co

Series Navigation

கற்பக விநாயகம்

கற்பக விநாயகம்