சமூகப்பணி

This entry is part [part not set] of 26 in the series 20011015_Issue

கோபிகிருஷ்ணன்.


ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘பேரென்ன ? ‘

‘சுசீ. ‘

‘வூட்டுல கூப்புடற செல்லப் பேரெல்லாம் சொல்லக் கூடாது. முழுப் பேரேச் சொல்லுங்க. ‘

‘சுசீலா தேவி ‘

‘என்ன சுசீலா தேவி ? ‘

‘சுசீலா தேவின்னா சுசீலா தேவிதான். ‘

‘உங்க இனிஷியல் என்னான்னு கேக்குறேன் ‘

‘ஓ ‘ ஏ ‘

‘ஓ.ஏ. சுசீலா தேவியா ? ‘

‘இல்ல இல்ல. ஓ–ன்னது உங்க கேள்வியப் புரிஞ்சிக்கிட்டதுக்கான அங்கீகார ஒலி. ஏ-தான் இனிஷியல். ‘

‘அப்ப ஏ.சுசீலா தேவி. ‘

‘மிஸ்ஸா மிஸஸ்ஸா ? ‘

‘மிஸஸ் ‘

‘அப்பா ‘ ஒரு வழியா முழுப் பெயரச் சொல்லிட்டாங்க ஒரு பெரிய சாதனெதான். பாராட்டுக்கள். ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘பேரென்னங்க ? ‘

‘மிஸஸ் ஸ்ரீதர். ‘

‘உங்க சொந்தப் பேரெயும் சேத்துச் சொல்லுங்க. ‘

‘வேணாங்க. கல்யாணத்துக்கப்பறம் என் சொந்தப் பேரெல்லாம் பறிபோயிருச்சி. ‘

‘பரவாயில்ல. சொல்லுங்க, நாங்க இருக்கோம். ‘

‘மிஸஸ் கமலா ஸ்ரீதர். ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘பேரென்னங்க ? ‘

‘காமாட்சி அம்மாள் ‘

‘அம்மாள நீங்களாச் சேத்துக்கிட்டாங்களா ? உங்க பேரெ மட்டும் சொல்லுங்க போதும். ‘

‘காமாட்சி. வயசாயிருச்சுன்னா அம்மாள்னு சேத்துப்பாங்க இல்லிங்களா ? அதான்….. சின்ன வயசுல காமூன்னு கூப்புட்டா, அப்பறமா காமாட்சி, இப்ப காமாட்சி அம்மாள். ‘

‘பக்திப் பரவசத்துல இருக்குறப்ப காமாட்சி அம்மனா மாற மாட்டாங்களே ? ‘

‘____ ‘.

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘சரி, பின்கோட் சொல்லுங்க. ‘

‘சின்ன கிராமமுங்க. அதுக்கெல்லாம் நம்பர் கெடெயாதுங்க. ‘

‘ ‘ ‘ ‘ ‘ ? ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘அட்ரஸ் சொல்லுங்க. ‘

‘ஜெகன்னாதபுரம். ‘

‘மொதல்ல வீட்டு நம்பர் சொல்லுங்க. ‘

‘வீட்டு நம்பருங்களா ? ‘

‘ஆமா, வீட்டு நம்பர்தான். ‘

‘அது வீடில்லீங்க. ‘

‘முக்காவாசிப் பேரோடது வீடு இல்லதான். சண்டெயும் சச்சரவுமா நரகமாத்தான் இருக்கும். இப்போதக்கித் தத்துவம் பேசாதீங்க. வீடு இல்லேன்னா நரகத்தோட நம்பர் சொல்லுங்க. நேரம் ஆகறது. உங்க பின்னால எவ்வளவு பேர் நிக்கிறாங்க பாருங்க. ‘

‘நா அந்த விதத்துல சொல்லலீங்க. என்னோடது வீடில்ல. குடிசைங்க. ‘

‘சரி குடிசெ நம்பர் சொல்லுங்க. ‘

‘குடிசெக்கி ஏதுங்க நம்பரு ‘ ‘

‘சரி, அப்ப அட்ரஸ் சரியாத் தெரியல்ல. ‘

‘இல்லீங்க. ஜெகன்னாதபுரத்துல வந்து எம் பேரெச் சொல்லி விசாரிச்சீங்கன்னா சொல்லிருவாங்க. ‘

‘சரி, நீங்க போங்க, விடிஞ்சது. ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘வீட்டுக்காரரு இருக்குறாருங்களா ? ‘

‘இல்லீங்க. ‘

‘எங்க ? ‘

‘வெளியூரு போயிருக்காரு. ‘

‘என்ன டூருக்குப் போயிருக்காரா ? ‘

‘இல்ல வீட்ட விட்டுட்டுப் போயிட்டாருங்க. ‘

‘எவ்வளவு வருஷமாச்சி ? ‘

‘ரெண்டு நாளாச்சிங்க. ‘

‘ ‘ ‘ ‘ ‘ ? ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘கணவனால கைவிடப்பட்டவங்களுக்கு இங்க உதவி செய்றாங்கன்னு சொன்னாங்க. அதான் கண்டுட்டுப் போகலாம்னு வந்திருக்கேன். ‘

‘விட்டுப் போயி எவ்வளவு வருஷமாச்சி ? ‘

‘முழுசா ஒரு மாசமாகுது. ‘

‘ஏம்மா ஒரு ஆறு மாசமாச்சும் டைம் குடுக்க மாட்டாங்களா ? இவ்வளவு உடனேயா வந்திரணும் ? என்னவோ எப்ப விட்டுட்டுப் போவார்னு காத்துக்கிட்டிருக்கற மாதிரி… ஒரு ரெண்டு மாசம் கழிச்சித் திரும்பி வந்துட்டார்னா என்ன பண்ணுவீங்க ? இன்னுமொரு ரெண்டு மாசம் பொறுத்துக்கிடுங்க. அப்புறமா வந்து பாருங்க சரியா ? ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘வீட்டுக்காரரு இருக்காரா ? ‘

‘இல்லீங்க ‘

‘இல்லேன்னா ? விட்டுட்டுப் போயிட்டாரா, இல்ல செத்துட்டாரா ? ‘

‘அவரு ஏங்க சாகறாரு ‘ குத்துக்கல்லாட்டமா இருக்காரு ஒரு சிறுக்கிய வச்சிக்கிட்டு. என்னெத்தான் விட்டுட்டுப் போயிட்டாரு.

( ‘விட்டுட்டுப் போனாலும் பாசம் போறதா, சனியன் ‘ ‘)

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘வீட்டுக்காரரு இருக்காரா ? ‘

‘இல்லீங்க. விட்டுட்டுப் போயிட்டாரு. இன்னொருத்தி மேலெ ஷோக்கு. ‘

‘சரி, அந்த அம்மா கிட்டேயும் சொல்லி வைங்க. அவங்கமேல இருக்கிற ஷோக்கு போனதுக்கப்புறம் அவங்களையும் இங்க வந்து விண்ணப்பம் குடுக்கச் சொல்லுங்க. உங்க வீட்டுக்காரரு அபலெங்கள உற்பத்தி பண்ணிக்கிட்டே இருப்பாரு போலயிருக்கு எங்களுக்கும் நெறய பேருக்கு உதவி பண்ற புண்ணியம் கெடெக்கும். ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

வீட்டுக்காரரு இருக்காரா ? ‘

‘இல்லீங்க. எறந்துட்டாரு. ‘

‘பிள்ளைங்க எத்தினி ? ‘

‘நாலு பசங்க. ‘

‘எதுனாச்சும் வேலெவெட்டி செய்றதா ? ‘

‘இல்லீங்க, எல்லாம் சின்னச் சின்னப் பசங்க. ‘

‘நீங்க என்ன வேலெ பாக்குறீங்க ? ‘

‘வீட்டு வேலெ. ‘

‘உங்க வீட்டுலயேவா ? ‘

‘இல்லீங்க ஒரு பங்களாவுல. ‘

‘எவ்வளவு வருது ? ‘

‘நூறு ரூபா தர்றாங்க, ரெண்டு வேளெ சோறு போட்டு. ‘

‘இருக்குறது வீடா குடிசெயா ? ‘

‘குட்செங்க. ‘

‘வாடகெ எவ்வளவு தர்றீங்க ? ‘

‘தொண்ணூறு ரூபா ‘

‘உங்களுக்கு யாருனாச்சும் உதவி செய்றாங்களா ? ‘

‘சாமி சத்தியமா வேற யாரும் உதவி செய்யலீங்க. ‘

‘குடிசெ வாடகெ போக பத்து ரூபாயில மாசம் பூராவும் நீங்களும் உங்க குழந்தெகளும் சாப்புட்றீங்க, அப்படியா ? ‘

‘ஆமாங்க ‘

‘ ‘ ‘ ‘ ‘ ‘ ? ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சா.

‘உங்க வீட்டுக்காரர் இதய அதிர்ச்சியில செத்துட்டாருன்னு விண்ணப்பத்துல எழுதியிருக்கீங்க. ‘

‘இல்லீங்க, அவரு ஹார்ட் அட்டாக்குலதான் போயிட்டாரு. ‘

‘ஓ. அப்ப விண்ணப்பத்துல தான் ஏதோ தப்பு இருக்கு. நா சரி பண்ணிக்கறேன். ‘

‘சரிதானுங்க. ‘

* * * * *

ஜாங்கு சக்குச் சஜக்கு சக்கு ஜாங்கு சக்குச் சமூகப்பணிச் சா.

ஜிங்கடி ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கடி ஜிங்கா.

ஜிங்கடி ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கடி சமூகப்பணி ஜிங்கா.

‘அடுத்தது வாங்கம்மா. ‘

* * * * *

Series Navigation

கோபிகிருஷ்ணன்.

கோபிகிருஷ்ணன்.