சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

சத்தியநாராயணன் ராமசாமி


சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும், மற்ற எந்த அறிதல் செயல் போல.
சம்ஸ்க்ருதம் தவறு, அழியவேண்டும் ஏளனப் படுத்தப்பட வேண்டும் என்ற முன் முடிவோடு பேசினால் பதில் பேச ஒன்றும் இல்லை. எதோ அந்த அளவிற்கு சம்ச்க்ருததால் அந்த சாராருக்கு பயன் என விட்டுவிட வேண்டியது தான்.
ஆனால் ஏராளமான கலை, அறவியல்,அறிவியல்,இலக்கிய,ஆன்மீக நூல்கள் இருக்கும் ஒரு மொழி என்ற ளவில் சம்ச்க்ருதத்தின் பயன்பாடு இருந்துகொண்டே தான் இருக்கிறது.
சமஸ்க்ருதத்தை எதிர்ப்போர் வாதிப்பது போல அது ஒன்றும் ப்ரோகிதம மட்டுமே பேசும் மொழி அல்ல.அதனை பிராமணர்கள் மட்டுமே பயன்படுத்தவில்லை.( சம்ஸ்க்ருதத்தில் மாபெரும் படைப்பாளிகளான வால்மீகி,வியாசர்,காளிதாசன் யாரும் பிராமணர் இல்லை.)
ஒரு காலகட்டத்தில் எழுத்து வடிவம் உன்னதம் பெற்ற போது அது அறிவாளிகளால் செம்மை படுத்தப்பட்டு தனி மொழி போல புழங்கியிருக்கலாம்.படைப்பாளிகளின் எழுத்து மொழியாக விளங்கியிருக்கலாம்.பொதுவான படைப்பு மொழியாகி வெவ்வேறு தாய் மொழியினரும் தத்தமது கருத்துக்ககளை பகிர்ந்துகொள்ள வசதியான ஏற்பாடகவுமிருக்கலாம்.
நெபோலியன் காலத்தே பிரெஞ்சு மொழி பொது மொழியாக பெரும் பலம பெற்றதைப்போல.( அமெரிக்க சுதந்திர பிரகடனம் கூட பிரெஞ்சில் தான் உள்ளது)
இப்போது பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் எழுதும் தமிழ் வடிவம் எங்காவது மக்களால் பேசப்படுகிறதா? (அப்போ அது கூட செத்த மொழி தானா?)
எழுத்து தமிழ் என்பது எங்கும் மக்களால் பேசப்படாத முகமற்ற மொழி என ( நாம் மிகவும் மதிக்கும் ) கி.ரா அவர்கள் கூறியிருக்கிறார். அப்போ முகமற்ற எழுத்து தமிழ் ( முண்டம் என்பதன் நாகரீக சொல்) அப்படித்தானா?

மதமும், மொழியும்,நாகரீகமும்,கலாச்சரமும் ஒன்றில் ஒன்று உள்வாங்கி,காலமாற்றமடைந்து, அரசியல், சமூக தேவைக்கேற்ப உருமாற்றப்பட்டு விடுகிறது. போதுமான வாசிப்பில்லாமல் போனால் பிரச்சாரத்தினால் சூட்டப்பட்ட புதிய முகத்தை சுய முகம் என நம்பி விடுகிறோம்.
ஏசுபிரான் பேசி வந்த அரமைக் மொழி கூட இன்று ஏறத்தாழ இல்லை. ஆனால் அதன் நஷ்டம் அவருக்கு இல்லை.

ஒரு விஷயம் தெரியுமா வெண்தாடி வேந்தரே? நாத்திகமும் கூட சார்வாகம் என்ற பிரிவில் சமஸ்ருதத்தில் பேசப்பட்டிருக்கிறது.அது ஒரு மொழி தானே தவிர நீங்கள் இப்படி பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? உள்ளே சென்று பார்த்து உங்களுக்கும் தேவை என்றால் எடுத்துக் கொள்ளலாம் தானே?

SATHIANARAYANAN.R,
sathiawin@gmail.com

Series Navigation

சத்தியநாராயணன் ராமசாமி

சத்தியநாராயணன் ராமசாமி