சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
‘சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் பூங்கா கெய்ஸர் [Yellowstone Park Geysers] நீர் ஊற்றுகள் போல தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள ஓர் புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது! ‘
லிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]
‘சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி ‘
வெஸ்லி ஹன்ட்டிரஸ் [Wesley Huntress, NASA Scientist]
‘இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது ‘
டாக்டர் ஆன்ரே பிராஹிக் [Dr. Andre Brahic, Professor at University of Paris]
‘பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக் கோளின் டிடான் துணைக்கோள்! முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்! ‘
டாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]
‘நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது ‘.
ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]
‘விண்சுற்றி செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்ற வைக்கும் பணி நெஞ்சைத் தவிக்க செய்யும் சிரமமான வேலை. விண்கப்பலின் எதிரியங்கு ராக்கெட்கள் சுடப்பட்டு, வேகத்தைக் குன்றச் செய்து, செவ்வாயின் ஈர்ப்பு விசை அதைக் கவ்வித் தன்வசம் கவர்ந்து கொள்ளா விட்டால், விண்கப்பல் தவறி நேரே பரிதி மண்டலத்தைச் சுற்றச் சென்று, நாசாவின் 720 மில்லியன் டாலர் திட்டம் நாசமாகி விடும். இதற்கு முன்பு அவ்விதமிரு விண்கப்பல்கள் செவ்வாய்க் கோளைச் சுற்றாமல் நழுவித் தப்பிச் சென்று விட்டன!
ஜேம்ஸ் கிராஃப் [James Graf Mars Orbiter Project Manager (March 10, 2006)]
முன்னுரை: நாசா 2006 மார்சு மாதத்தில் விண்வெளி வரலாற்றில் இரண்டு மகத்தான விஞ்ஞானப் பொறியியல் சாதனைகளை வெளியிட்டது! முதலாவதாக சனிக்கோளின் துணைக்கோள் என்செலாடஸின் தென்துருவத் தளத்திலிருந்து திரவ நீர் ஊற்றுகள் பீறிட்டு எழுந்ததைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் படமெடுத்து அனுப்பியுள்ளது. அக்கண்டுபிடிப்பு அண்டக் கோள்களான பூமி, செவ்வாய் தவிர, பரிதியின் பிற அண்டங்களிலும் நீரிருக்கிறது என்பதை மெய்ப்பித்தது! நாசாவின் அடுத்த சாதனை பூமியிலிருந்து 2005 ஆகஸ்டில் அனுப்பிய செவ்வாய் விண்சுற்றி [Mars Orbiter] செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் நெருங்கி நுழைந்து, சிறு ஆரம் 250: மைல், நெடு ஆரம்: 30,000 மைல் கொண்ட நீள்வட்டத்தில் வெற்றிகரமாகச் சுற்றத் துவங்கியது! இம்முறையில் விண்ணூர்தி துருவ முனைகளின் வழியே நெருங்கிச் சுற்றி துருவப் பனிப் பாறைகளை ஆராயும். மேலும் செவ்வாய்த் தளத்தில் மனிதர் தடமிடப் போகும் எதிர்காலத் திட்டத்துக்கு ஏற்ற இடங்களைத் தேர்ந்தெடுக்கும்.
நாசா 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] என்னும் இரண்டு விண்கப்பல்களை ஏவியது. பிறகு ஈரோப்பில் ஈசா [ESA-European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது. ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது. விண்சுற்றி 2006 மார்ச் 10 ஆம் தேதி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, மற்றுமோர் அசுர சாதனையைச் செய்தது! அந்த பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்! முதலிரண்டு வருட காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித்தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனையும். நாசாவின் ஆர்பிட்டர் செவ்வாயைக் கோளை அண்டி சுற்றத் துவங்கி, ஆய்வுகள் செய்து பல விஞ்ஞானப் புதிர்களை விடுவிக்கப் போகிறது! அத்துடன் விண்வெளி வீரர்கள் செவ்வாயில் தடம்வைக்கும் இடங்களும் தீர்மானிக்கப்படும்.
சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள்
2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது! பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது! தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள்! 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது!
2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது! சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 31 சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது!
2006 மார்ச் மாதம் நாசா சனியின் வெண்ணிறச் சந்திரன் என்செலாடஸில் ஒருவேளை திரவமா யிருக்கலாம் என்று கருதப்படும் உட்தளக் குளத்திலிருந்து நீர் ஊற்றுகள் எழுவதைப் படமெடுத்துக் காட்டியது. சனிக்கோள், மற்ற துணைக் கோள்களின் ஈர்ப்பாற்றல் விடும் துடிப்புகள் [Gravitational Pulses] உட்குளத்து வெள்ளத்தைத் திரவ வடிவத்தில் எப்போதும் வைத்திருக்கலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் காஸ்ஸினி விண்ணூர்தி என்செலாடஸ் சூழ்வெளியில் கார்பன் பின்னப்பட்ட மூலக்கூறுகள் [Carbon Based Molecules] தென்படுவதையும் காட்டி யுள்ளது! அண்டக் கோள்களில் உயிர்ப்பயிரின வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய அடிப்படை மசாலா நீர்மை, வெப்பம், கார்பன் மூலக்கூறுகள் போன்றவையே! எஞ்சி யிருக்கும் ஆயுள்வரை காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் துணைக் கோள்களை உற்று நோக்கிக் குறிப்பாக என்செலாடஸில் உயிரின வளர்ச்சிகள் தங்கி யிருந்த வரலாற்றை உளவ வாய்ப்புக்கள் உள்ளன. 2008 இல் காஸ்ஸினி விண்கப்பல் 217 மைல் அருகில் தணிவாகப் பறந்து என்செலாடஸினின் துருவ நீர் ஊற்றுக்களின் பண்புகளை உளவும் என்று அறியப் படுகிறது.
செவ்வாய் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கிய விண்சுற்றி
720 மில்லியன் டாலர் செலவில், 310 மில்லியன் மைல் தூரத்தைக் கடந்து செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் விண்சுற்றி, தக்க சமயத்தில் வேகம் குறைக்கப்பட்டு, செவ்வாய் ஈர்ப்பு மணடலத்தில் கவரப்படாமல் போனால், அது நழுவி வீணாகப் பரிதி மண்டலத்தைச் சுற்றத் துவங்கிவிடும்! 2006 மார்ச் மாதம் 10 ஆம் தேதி செவ்வாய் விண்சுற்றி உளவியைப் [Mars Reconaissance Orbiter (MRO)] பொறி நுணுக்கவாதிகள் பரிதி ஒளிமின்தட்டு ஆற்றலி லியங்கும் ஆறு 38 பவுண்டு எதிருந்து ராக்கெட் எஞ்சின்களை [Solar Powered Six Retro-Rocket Engines] உயிர்ப்பித்துப் பூதளச் சமிக்கை மூலம் 4800 பவுண்டு விண்கப்பலை அரை மணிநேரம் ஓட்டி, அந்த அசுர சாதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டினார்கள். அத்தகைய நுணுக்க சமிக்கைகள் பூமியிலிருந்து செவ்வாய்க் கோளை அடைய சுமார் 12 நிமிடங்கள் எடுக்கின்றன! செவ்வாயிக்கு 325,000 மைல் தூரத்தில் உள்ள போது, மணிக்கு 6400 மைல் வேகத்தில் பயணம் செய்யும் விண்கப்பல் மணிக்கு 2200 மைல் குறைக்கப்பட்டு, சுமுகமாக ஈர்ப்பு மண்டலத்தில் கவரப் பட்டது! கடந்த 15 ஆண்டுகளில் நாசா அந்த நுணுக்கப் பணியில் தவறவிட்டு இரண்டு விண்கப்பலை பரிதி மண்டத்தில் வீணாக நழுவ விட்டு இழந்திருப்பது, பெருத்த நிதி விரையத்தைக் காட்டுகிறது!
‘விண்சுற்றி செவ்வாய்க் கோளை நெருங்கிச் சுற்ற வைக்கும் பணி நெஞ்சைத் தவிக்க செய்யும் சிரமமான வேலை. விண்கப்பலின் எதிரியங்கு ராக்கெட்கள் சுடப்பட்டு, வேகத்தைக் குன்றச் செய்து, செவ்வாயின் ஈர்ப்பு விசை அதைக் கவ்வித் தன்வசம் கவர்ந்து கொள்ளா விட்டால், விண்கப்பல் தவறி நேரே பரிதி மண்டலத்தைச் சுற்றச் சென்று, நாசாவின் 720 மில்லியன் டாலர் திட்டம் நாசமாகி விடும். இதற்கு முன்பு அவ்விதமிரு விண்கப்பல்கள் செவ்வாய்க் கோளைச் சுற்றாமல் நழுவித் தப்பிச் சென்று விட்டன! அதே சமயத்தில் உறுதியான நம்பிக்கையில் நாங்கள் வெற்றியை எதிர்பார்க்கிறோம். ஏனெனில் எங்கள் விண்கப்பல் திறமை வாய்ந்தது, சிறப்பாய் இதுவரை ஒழுங்காய்ப் பணிசெய்தது. மேலும் பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளும், பொறி நுணுக்காளரும் கப்பலைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வருதால் வெற்றி கிடைப்பது நிச்சயம் ‘ என்று திட்ட மேலாளர் ஜேம்ஸ் கிராஃப் கூறினார்.
நீர் சேமிப்புள்ள செவ்வாய்த் துருவ பனிப்பொழிவு
செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது! இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது! எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது!
செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது! குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது! வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!
செவ்வாய் விண்சுற்றியின் பணி
விண்கப்பலின் வேகம் குறைக்கப் பட்டு, கப்பல் செவ்வாயின் பின்புறத்தில் சென்றதால் சிறிது நேரத்தில் பூமியுடன் பின்னியிருந்த வானொளித் தொடர்பு அறுந்து விட்டது! விண்கப்பல் அப்போது செவ்வாய் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்படா விட்டால், மீட்க முடியாத பரிதி மண்டலச் சுற்றில் மாட்டிக் கொள்ளலாம். நல்ல வேளையாக, விண்கப்பல் பின்புறம் போய்த் திரும்பி முன்புறம் வந்ததும் நாசா விஞ்ஞானிகளும், பொறியாளரும் கைதட்டிப் பெருத்த ஆரவாரம் செய்தனர். விண்கப்பல் மீண்டு வந்து செவ்வாய்க் கோளை ஒழுங்காக 35 மணிக்கு ஒருமுறைச் சுற்ற ஆரம்பித்ததும், அனைவருக்கும் உயிர் வந்தது! நாசா பொறி நுணுக்கவாளரின் குறிக்கோள் விண்கப்பல் சிறு ஆரம்: 250 மைல், நெடு ஆரம்: 27,340 மைல் கொண்டு நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] சுற்ற வைப்பது. அம்முறையில் விண்ணுளவி செவ்வாயிக்கு 250 மைல் உயரத்தில் பறந்து விளக்கமாகப் தளப்பரப்புகளை உளவு செய்யும்.
விண்கப்பலின் காமிராக்கள் படமெடுக்கத் துவங்கி சோதிக்கப் பட்டபின் உளவுக் கருவிகள் ‘வாயுத்தடை ‘ [Aerobraking or Atmospheric Braking] முறையில் கப்பல் கட்டுப்படுத்தப்படும் வரை வசந்த, வேனிற் காலங்களில் ஓய்வில் வைக்கப்படும்! முடிவாக விண்கப்பல் செவ்வாய்க் கோளை நெருங்கி ஏறக்குறைய வட்ட வீதியில் 160-200 மைல் உயரத்தில் சுற்றும் நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும். செவ்வாயின் வாயு மண்டல உராய்வில் வாயுத்தடை முறையில் நீள்வட்ட வீதி, சிறுகச் சிறுக வட்ட வீதிக்கு குறுக்கப்படும். அந்த உயரத்தில் விண்ணுளவிக் கருவிகள் செவ்வாய்த் தளத்தை நெருங்கி, நுட்பமாக நோக்கி ஆய்வு செய்து படமெடுத்துப் பூமிக்கு அனுப்பும். அதன் முக்கிய முதற்பணி மனிதர் 2020 இல் பயணம் செய்து செவ்வாயில் தடம்வைக்கப் போகும் தளங்களை உளவிக் கண்டுபிடித்துத் தீர்மானிப்பது! அடுத்த பணி துருவப் பரப்புகளைத் துருவி ஆய்ந்து பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீர்வளத்தைச் சீராக உளவிக் கண்டுபிடிப்பது! செவ்வாய் விண்சுற்றி சுமார் இரண்டு வருடங்கள் பணியாற்றி 2008 டிசம்பர் வரை பூமிக்கு மின்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.
****
தகவல்கள்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Astronomy Magazine.
1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3. Water on Mars -Polar Ice Caps By: Elisabeth Ambrose
4. Mars Polar Caps – Martian Pole Reveals Ice Age Cycles [Feb 25, 2005] Encylopedia of Astrobiology, Astronomy & Spaceflight.
5. Mars Rovers Advance Understanding of the Red Planet.
6. Twin Mars Rovers Still Exploring After Two Years [Jan 24, 2006]
7. Mars Rovers Explore Hints of Salty Water By: Robert Roy Britt [Feb 19, 2004]
8. Rovers Still Exploring Mars After Two Years By: Associated Press [Jan 2, 2006]
9. Cornell University Scientists to Lead NASA ‘s 2003 Mars Mission By: David Brand
10 2001 Mars Odyssey Space flight Now [October 24, 2001]
11 Mars Surveyor Orbiter [April 7, 2001]
12 Special Report Odyssey Mission to Mars
13 Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
14 Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
15 Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
16 Science & Technology: ESA ‘s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
17 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
18 http://www.thinnai.com/science/sc0925031.html
18A http://www.thinnai.com/sc0203062.htmlAuthor ‘s [Article on Mars Missions]
19 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
20 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
21 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
22 Making A Splash on Mars By: Charles W. Pitt National Geographic [July 2005]
23 Scientist Sees Water in Martian Sand Dunes, Similarities to Antarctic Formations Noted [Sep 5, 2005]
24 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
25 Science of Water found on One of Saturn ‘s Moons [www.cnn.com] March 14, 2006
26 Cassini Spacecraft finds Evidence of Water on Saturn ‘s Moon Enceladus By William Harwood [March 9, 2006]
27 NASA Orbiter Arrives at Mars, Universe Today [March 10, 2006]
28 Mars Reconnaissance Orbiter Nears Arrival at the Red Planet By: William Harwood & Justin Ray [Mar 8, 2006]
29 http://www.thinnai.com/science/sc0815035.html http://www.thinnai.com/author1001.html [Cassini-Huygen Spaceship to Saturn -Author ‘s Articles (Aug 14 2003 & Jul 10, 2004)]
****
jayabarat@tnt21.com [March 16, 2006]
- கடிதம் – ஆங்கிலம்
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- நம்மாழ்வார்
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சுனாமி வைத்தியம்!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
- வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006
- கடிதம்
- குளமும் ஊருணியும்
- உண்மை தெய்வமான க(வி)தை
- கடிதம்
- திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை
- சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி
- சுந்தரமூர்த்திகளுக்கு….
- சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…
- செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:
- நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்
- கடிதம் – ஆங்கிலம்
- பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!
- உயிர்மெய் முதலாவது இதழ் வெளிவந்துவிட்டது
- சூட்டுக் கோட்டு சூடு கோடு
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)
- கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அப்பாவின் மனைவி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- யதார்த்தம்
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சொல் இனிது சொல்வது இனிது
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாழன் ஆதி கவிதைகள்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- உலகம் என்பது வண்ணம்
- வன்மழை
- மனிதனாய் தவிர்த்து
- எல்லம் வாத்துக்களே
- டான் கபூர் கவிதைகள்
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )