குறிப்புகள் சில-19 ஜீன் 2003 (அக்னி சிறகுகள்-சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம்-திரைப்படப் பிரதியும்,அதற்கு அப்பாலும்-மனிதம்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஒரு லட்சம் பிரதிகள் விற்று அக்னி சிறகுகள் ஒரு சாதனை படைத்துள்ளது.ஒரு சாதனையாளரின் சுய சரிதம் என்பதையும் தாண்டிய முக்கியத்துவம் அதற்கு உள்ளது.ஒரு தலைமுறைக்கு எழுச்சியூட்டும் நூலாக அது விளங்குகிறது.குடியரசுத் தலைவர் கலாம் இன்று இளைஞர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக் திகழ்கிறார்.ஒரு வித்தியாசமான குடியரசுத் தலைவராக உள்ளார். பலர் அவர் வாழ்க்கை ஒரு முன் மாதிரி என்று கருதி அவரை ஆதர்ச மனிதராக நினைக்கிறார்கள்.நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை அவர் சிறுவர்,சிறுமியருக்கு ஊட்டுகிறார்.அவரிடம் சராசரி அரசியல்வாதியின் வாய் ஜாலம் இல்லை, அறிவியல்,கனவு,உழைப்பு குறித்த அவரது அறைகூவல் புதியதாக உள்ளது.

அவரது அக்கறை ஒட்டுவங்கி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக காணப்படுகிறது. தேசப்பற்று,அறிவியல் தொழில்நுட்பம் மீது நம்பிக்கை,தற்சார்பு ஆகியவற்றில் அவரை நேருவுடன் ஒப்பிடலாம்.குறிப்பிடத்தக்க வியக்தி அவர் என்பதில் ஐயமில்லை.ஆனால் வழிபாட்டு மனோபாவம் காரணமாக அவரது கருத்துக்கள் புரிதல்/அலசல் இன்றி வெறும் கோஷங்களாக/வாய்ப்பாடுகளாக மாற்றப்படும் அபாயமும் உள்ளது.

***

சேவைத்துறை குறித்த பொது வணிக ஒப்பந்தம் குறித்த ஒரு கருத்தரங்கினை சில தன்னார்வ அமைப்புகள் சென்னையில் நடத்தியுள்ளன. உலக வர்த்தக அமைப்பு குறித்த விழிப்புணர்வு பரவலாக இல்லை.திண்ணையில் நீர் தனியார்மயமாக்கம் குறித்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன. பல துறைகளில் நாடுகள் சேவைத்துறையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.இது குறித்து பல ஆய்வுகள், விவாதங்கள் நடைபெற்று வந்தாலும் வெகு சில அமைப்புகளே இதன் முக்கியத்துவதினை உணர்ந்துள்ளன.

உலக வர்த்தக அமைப்பில் பல விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தைகள்,அரசுகளின் நிலைப்பாடுகள்,குழுக்கள் பரிசீலிக்கும் ஒப்பந்த நகல்கள் குறித்து தொடர்ந்து வரும் தகவல்களை அறிவது,இவை குறித்து ஆய்வது என்பது எளிதல்ல.சர்வ தேச வணிகம் குறித்த ஒரு விஷயத்தினைப் பற்றிய பேச்சுவார்த்தைகள்,நிலைபாடுகளை தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில் இதனை பரவலாக, புரியும் விதத்தில் விளக்குவது,இது குறித்து தொடர்ந்து எழுதி/பேசி வருவதில் உள்ள சிரமங்களை நான் அறிவேன். (1990 களில் தமிழில் GATT குறித்து எழுதும் போது இந்த நூலைப் படியுங்கள், இதில் அடிப்படைத் தகவல்கள் உள்ளன என்று ஒரு தமிழ் நூலைக் கூட குறிப்பிட முடியவில்லை.இப்போதும் அதே நிலைதானா என்று தெரியாது. உலக வர்த்தக அமைப்பு குறித்து எத்தனை நூல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன ?.) இந்த தன்னார்வ அமைப்புகள் இதில் தொடர்ந்து அக்கறை காட்ட வேண்டும்,விழிப்புணர்வு உண்டாக்க முயல வேண்டும்..

***

1960 களில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்திய ஒரு ஆங்கிலப்படத்தினை மீண்டும், சமீபத்தில் பார்த்தேன்.மூன்றாவது DVD ல் படம் எடுப்பதில் எழுந்த பிரச்சினைகள்,படத்தின் வரலாறு, அது குறித்து வந்த செய்திகள்,பலரது பேட்டிகள் என்று பல சுவாரசியமான தகவல்கள் இருந்தன.சில படங்கள் வெளியாகும் போது பெரும் சர்ச்சை எழுகிறது.அதனை அப்போதிருந்த அரசியல்,சமூக சூழலில் பொருத்திப் பார்த்தால் ஏன் அத்தகைய எதிர்வினைகள் என்பது புலனாகிறது. பராசக்தி பற்றி எம்.ஸ்.ஸ்.பாண்டியன் எழுதிய கட்டுரை இந்த விதத்தில் குறிப்பிடத்தக்கது. இது போன்ற ஒரு செய்தித் தொகுப்பு/அலசல் VHS TAPE/CD/DVD ல் படத்துடன் இருந்தால் பார்வையாளர்கள் பயனடைவர். 16 வயதினிலே திரைக்கதை-வசனம், அது குறித்து பாரதிராஜா எழுதி வைத்திருந்த குறிப்புகள் (இருப்பின்),தொழில் நுட்ப கலைஞர்களின் குறிப்புகள் ஆகியவற்றுடன் அப்படம் குறித்த கட்டுரைகளுடன் ஒரு நூல் வெளியானால் ஒரு முன்னோடிப் படம் குறித்து அறிந்து கொள்ள,ஆய்வு செய்ய அது உதவும். இதனை பலவழிகளில் பயன்படுத்தலாம். நூலின் ஒரு பகுதியை CD/VHS/DVD ல் சேர்க்கலாம்.தமிழ் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க/முன்னோடி படங்கள் குறித்த ஒரு நூல் வரிசை வெளிவர வேண்டும்.

***

Our Post Human Future : Consequences of the biotechnology revolution – Francis Fukuyama நான் சமீபத்தில் வாசித்த நூல்களில் ஒன்று.மனித வரலாறு முடிந்துவிட்டது என்று பெர்லின் சுவர் வீழ்ந்த பின் எழுதிய இவர் அறிவியல் மனிதம் என்ற கருத்திற்கு சவால் விடுவதாக கருதி, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை இதில் ஆராய்கிறார்.இவர் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை, அதே சமயம் இவை பலரால் விரிவாக அலசப்பட்டுள்ளவை.இந்த நூல் மிக சிறப்பான நூல் அல்ல.நூலகங்களில் கிடைத்தால் படிக்கலாம்.

உயிரியல் தொழில்நுட்பம் மனிதம் என்ற கருத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.இதன் விளைவுகள் என்ன என்பது சரியாகத் தெரியவில்லை, எனவே எதை எப்படி ஒழுங்குபடுத்துவது/அனுமதிப்பது என்பது அரசுகளுக்கு பெரிய சவலாக உள்ளது.இனப்பெருக்க தொழில்நுட்பம் (reproductive technologies) எழுப்பிய கேள்விகளுக்கு Mary Warnock தலைமையில் ஒரு குழு அமைத்து பிரிட்டிஷ் அரசு, அதன் பின் HEFA என்ற அமைப்பினை ஒழுங்குபடுத்த, மேற்பார்வையிட அமைத்து. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், மனித உரிமை கமிஷனும் உயிரிய தொழில்நுட்பம்,அறம்,ஒழுங்கமைப்பு விதிகள் குறித்த ஆய்வினை ஆதரித்தன.சர்வதேச அளவில் UNESCO இதில் முக்கிய பங்காற்றி வருகிறது.ஆனால் கருத்தொற்றுமை பல விஷயங்களில் இல்லை.அறம் என்று பேசும் போது மத அமைப்புகளும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றன.மானுடம் குறித்த மத/ஆன்மிக கருத்துக்கள் மிக முக்கியமானவை என்பதால் அரசுகள் இவற்றை முற்றாக நிராகரிக்க முடியாது. அதே சமயம் ஒழுங்குபடுத்துவது அறிவியல் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை பல அரசுகள் விரும்பவில்லை.எனவே எந்த கட்டம் வரை எவற்றை அனுமதிப்பது என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

post human என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன ? cyborg,post human,trans human போன்றவற்றிக்கு பொருத்தமான தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்.கடந்த 50 ஆண்டுகளில் கணினி,cybernetics, செயற்கை அறிவாற்றல்,உயிரிய தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள், ஆய்வுகள் மனிதம் என்றால் என்பது குறித்து பல புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. இது குறித்தும், அறிவியல் புனைகதைகளில் இக்கேள்விகள் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன எனபதையும் ஆராயும் முக்கியமான நூல் How We Became Posthuman: Virtual Bodies in Cybernetics, Literature, and Informatics, காத்தரீன் ஹய்லெஸ் எழுதியது. இது குறித்த ஒரு சுருக்கமான விளக்கத்தினை http://online.kitp.ucsb.edu/online/colloq/hayles1/ ல் காணலாம்/கேட்கலாம்.

***

ravisrinivas@rediffmail.com

Series Navigation