This entry is in the series 20071220_Issue

கீதாஷங்கர்


முட்டிக்கு மேலேறிய
முக்கால் சட்டையுடன்
திண்ணையின் மேல்
காலாட்டியவாறு
குந்திய போதெல்லாம்
கடிந்து கொண்ட ஆத்தாவே!
“காலாட்டி காலாட்டி
கடல் கடந்து போயிடுவே.
காலாட்டாதடி-
களவாணிச் சிறுக்கிப் பெண்ணே!”

பருவம் வந்து பருவும் வந்து
கனவாய் பார்த்த கண்ணாலம்
கட்டியதும் தெரிஞ்சுகிட்டேன்.
தாய் சொல்லை மந்திரமாய்
நினச்ச நான் பாவி மகள்.!

சவுதியில வாழுகிற
ஆசாரி அயித்தானைக் கட்டிகிட்டும்
கடல் கடக்க முடியாமல்
இத்திண்ணையிலே இருக்கிறது
காலாட்டாம இருந்ததுனால்தானோ?
காலையில இருந்து நடுசாமம் வரை
காலாட்டி காலாட்டி
காலே நொந்துதான் போவுது.
ஆனாலும் பரவாயில்லை.

அடுத்த முறை வரும் அயித்தான்
கடல் கடந்து கூட்டி போக
கடுகாவது முயற்சி செய்ய மாட்டாரோ?


geethashanker67@hotmail.com

Series Navigation