காலத்தைச் செலவு செய்தல்

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

எஸ். ஷங்கரநாராயணன்



திடுதிப்பென்று போல இப்படி ஒரு குழப்பம் அவளில் வரலானது. அவள் எதிரே காத்திருந்தது காலம். வங்கியில் போட்ட பணத்தைப் போல, அவள் செலவு செய்ய அது காத்திருந்தது. திகைக்கிற அளவு ஏராளமான பணம். நிஜத்தில் இத்தனை பணம் அவளிடம் இருப்பதே அல்லவா அவளுக்குத் தெரியாதிருந்தது. அதை உணராமலேயே அவள் இத்தனை நாள் செலவழித்து வந்திருந்தாள் போலிருக்கிறது.
கவலையற்ற அந்த நாட்கள். திருமணத்துக்கு முந்தைய அழகான, கனவுகள் மிகுந்த நாட்கள். கனவுகள் வங்கியில் கையிருப்பில் சேமிப்பில் கிடத்திவைக்கப் பட்ட பணத்தைப் போல அல்லவா? பிக்ஸட் டெபாசிட்! எப்போது கனவுகள் பலிதமாகும், காலாந்தர சேமிப்பு ஒட்டுமொத்த மகிழ்ச்சியாய்க் கைக்கு வரும்… எதிர்பார்ப்புகள் சார்ந்தபோது வாழ்க்கை ருசிக்கிறது.
குதிரைக் குளம்பொலி. ராஜகுமாரன். அழகன். பரிசுத்த வீரன். இன்னல் இடர்களில் இருந்து அவளைக் கைச்சுடராய்க் காபந்து பண்ணுகிறவன். அவளது நேசப் பதி. சபாபதி. அரங்கத்தின் நாயகன். ஊர் சொல்லும் அவன் பற்றி. அவன் புகழ் பாடும் ஊர். உயர்ந்தெழும் அலைபோல அவன் நடை அழகு. பரபரப்பும் வேகமும்…. கனவுகள் அழகானவை.
திவாலான வங்கிபோல ஆகியிருந்தது நிலைமை. குதிரையில் இருந்து குப்புற விழுந்திருந்தாள். முட்டியில், காணமுடியா இடங்களில், ஆ மனதில் சிராய்ப்புகள். வங்கியில் பணம் இல்லாத பிளாங்க் செக். மீதம் இருந்தது வாழ்க்கை. இன்னும் ஓட்டியாக வேண்டியிருந்தது. வாழ வேண்டியிருந்தது. பயமுறுத்தியது அது. என்ன செய்ய என்று திகைப்பூட்டியது வாழ்க்கை.
வண்ணங்கள் அற்றிருந்தது அவன் வாழ்க்கை. வெள்ளைச் சட்டைப் பிரியன். தலையை உச்சிநோக்கிப் பின்சரித்துப் படிய வாரியிருந்தான். நடுவகிட்டுக்காரன். நகர மையத்தில் கடை வைத்திருந்தான். பேன்ஸி ஸ்டோர். எல்லா நவீனப் பொருட்களும் அவனிடம் விற்பனைக்கு வந்தன. விளையாட்டுப் பொருட்கள். செல்·போன்கள். விதவிதமான பூவேலைப்பாடுகளுடனான வாழ்த்து அட்டைகள். இப்பவெல்லாம் எல்லாத்துக்கும் வாழ்த்து அட்டைகள் வந்துவிட்டன. நண்பர் தினம். காதலர் தினம். அப்பா தினம். அம்மா தினம். வாழ்த்துகிற மனநிலையைத் திணிக்கிறார்கள். நேரில் கூட அல்ல, உள்ளூரிலேயே தபாலில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொள்கிறார்கள். செல்·போனில் வாழ்த்துப் படங்களும், வாசகங்களும் அனுப்பிக் கொள்கிறார்கள். வாழ்க்கை ஆடம்பரமாக ஆகிவிட்டது. எல்லாவற்றிலும் ஒரு அலட்டல். ஒரு ஹா! – இளமைக்கு அது வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையும் கொண்டாடு. குதிபோட்டு ஏற்றுக்கொள்…
நீ ஏன் எனக்கு வாழ்த்து அனுப்பவில்லை, என் செல்·போனுக்கு? சிணுங்கல்கள். என்ன தேவையோ? செல்·போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். பஸ் ஏறுகிறார்கள். பஸ்சிலும் பேசிக்கொண்டே. இறங்குகிறார்கள் பேசிக்கொண்டே. இளமை கொந்தளித்துக் கிடக்கிறது. ஆனந்த அலை. அனுபவிக்கிற ஆவேசம். வீடு வந்தால், பெற்றவர் முன் சமத்தாய் செல்·போன்கள் அடங்கி விடுமாய் இருக்கும். அவர்கள் உலகம் வெளியே இருந்தது. இளமையின் உலகம். பரந்து விரிந்து கிடந்தது உலகம். அவர்களின் உலகம்…
என் உலகம். வயிறு வீங்கிய சூணா வயிற்றுக் குழந்தை. பணம் இருக்கிறது. அவனைக் கேட்டுச் செலவு செய்ய வேண்டிய பணம்… தேவை தேவையின்மை பற்றி அவனோடு விவாதிக்க வேண்டியிருந்தது. அவளது தேவையை அவன் முடிவு செய்கிறவனாய் இருந்தான். நான்கு சுவர்களில் சட்டமிட்டு மாட்டப் பட்டு விட்டது அவள் உலகம். பூகம்பங்கள் சுனாமி நிறைந்த உலகம்…
சதா சர்வ காலமும் கடை, வேலை, வியாபாரம், பணம். வாழ்த்து அட்டைகளை விநியோகிக்கத் தெரிந்தவன், அதன் தாத்பர்யத்தை மறந்தவன். கணவன். கண் போன்றவன் கணவன். கண்ணைக் குத்திக் கையைப் பிடித்து அவளை அழைத்துச் சென்றான் அவன்…
இரவு தாமதமாய் வீடு திரும்புவான். பசித்து வருவான். அலுத்து வந்திருப்பான். வாழ்க்கை சார்ந்து அவன் மனதில் என்ன வியூகங்கள் இருக்கும் என்றே தெரியவில்லை. அவன் சட்டையைக் கழற்றி மாட்டுகிற சுவர்ஆணி போல அவளை நினைக்கிறானோ என்னவோ. புன்னகைக்க மறந்து போயிருந்தான். எதாவது வாடிக்கையாளரிடம் அதிக விலைக்கு ஒரு சாமானை விற்றால் அப்போது புன்னகைப்பானாய் இருக்கும். இறுகிக் கிடந்தது முகம். எப்போதாவது வியாபார தோரணையில் அது புன்னகைத்தபோது, நடிப்பற்ற இறுக்கமான முகம், அது தேவலைபோல் தோன்றியது.
வாழ்க்கை வாழ்வதற்காக. நடிப்பதற்காக அல்ல…
வாழ்த்து அட்டைகள் தேவையில்லை. ஒரு சின்னப் புன்சிரிப்பு. அதுவே அட்டையாய் வந்து ஒட்டிக்கொள்ளுமே.
கழுத்து குறுகிய, உட்பக்கம் தொடமுடியாத பாட்டில் போல அவளுக்கு வாய்த்திருந்தது வாழ்க்கை!
ஆனால் நற்கணங்கள் வராதா, வரமலே போய்விடுமோ என்று நினைத்தாள். அழுதாள்…. ஆனால் வாய்த்தன. சாளரம் திறந்து புதிய காற்று வந்தாப் போல.


சத்தம் கேட்டது. ஒரு குழந்தையின் மழலைக் குரல். என்னவோ பாஷை. எச்சில் தெறிக்கிற அதன் உச்சாடனங்கள். உ·ப். புள்ள். ·பர்ர்… உன்மத்த உளரல்கள். அதன் உலகத்தின் பிரத்யேக அர்த்தங்கள்… பக்கத்து விட்டுக்கு யாரோ புதிதாய்க் குடி வந்திருந்தார்கள். அடுக்குமாடியில் அடுத்த வீடு. காலியாய்க் கிடந்த வீட்டில் அவள் மனதை நிரப்ப யாரோ குடிவந்திருந்தார்கள்…
குழந்தை இல்லாத இல்லறம், சட்டென்று அவளுக்குப் புரிந்தது. குழந்தை, ஒரு குழந்தை… வெற்றிடங்களை அது நிரப்பி விடாதா, என்று உடனே மனசில் வந்தது. கல்யாணம். அதன் கனவுகள், அதுதாண்டி அது ஒரு குழந்தை வடிவில் கெட்டிப்பட வேண்டும். போனசுடன் திருப்பிக் கிடைக்கிற வங்கித் தொகை.
ம்மா, ம்மா… என்று முந்தானையைப் பிடித்துக்கொண்டு தத்தக்கா பித்தக்கா என்று கூட நடந்து வரும் ஜெட்டிபோடாத குழந்தை. மறைக்க என்று அரசிலை வடிவ டாலர். ஆச்சர்யங்கள் நிறைந்த அதன் உலகம். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகரமான அதன் கணங்கள். விநாடிக்கு விநாடி அலங்கரித்துக் கொள்ளும் அதன் மூளையின் சிந்தனையோட்டங்கள். சட்டென்று எதும் புரிந்து கொண்டதில் கண்விரிய அஸ்ஸோ அதன் சிரிப்பு. தா, போ, வா – ஒற்றை வார்த்தை ஆணைகள். தெரிந்ததே ஒரே வார்த்தை. இருந்தாலும் என்ன அழுத்தமாய்த் தெரிவிக்கிறது. நடக்கத் திணறும் குழந்தை. உதவி என்று கிட்டேபோய்க் கையைப் பிடித்தால்… போ! தள்ளி விடுகிறது. நீ தள்ளி நான் விழவா குண்டு புஸ்கி! நான் தள்ளினா உன் நிலைமை என்ன! புஸ்ஸென்று பூரியாய் அதன் தொப்பை. பப்பாய்ங், என அதை அமுக்க கை தவிக்கிறது. வயிறு முட்ட சாப்பிட்டு விட்டதா, என்று பார்க்க அம்மா அதன் தொப்பையில் ஒரு அமுக் – கெக் கெக் என்று அதன் சிரிப்பு. கொக்கரிப்பு போல இது கெக்கரிப்பு!
குழந்தை இல்லை எனக்கு, என்ற நினைப்பே முகத்தை இருட்டியது. தனியே கிடந்தன பொழுதுகள். நகர்வதாய் இல்லை. அவன் காலை எழுந்து குளித்து காலைக்கடன் முடித்து கடை என்று கிளம்பினால் மதியச் சாப்பாட்டுக்கே கூட வருகிறானில்லை. கடைப் பையன் வந்து கேரியரை எடுத்துப் போவான். நல்ல போஜனப் பிரியன். தனியே கெட்டித் தயிர் வை, என்பான். ரசத்தை கிண்ணத்தில் வாங்கிக் குடிப்பான்… என்னத்துக்குச் சம்பாதிக்கம், சாப்பிடத்தானே? – என்பான். சம்பாதிப்பதற்காக அதைச் சாப்பிட வேண்டுமா, என்று அவளுக்குத் தெரியவில்லை. சந்தோஷத்தில் கணக்குகள் தேவையா என்ன? சந்தோஷம் – அதுதான் முக்கியம்…
உடம்பும் இயல்பாய்ப் பசியெடுத்தபோது, அவன் முயங்கினான். அதில் காதல் இருந்ததா புரியவில்லை. வா, என்பான். எல்லாம் குழந்தையைப் போல பிடிவாதமான ஆணைகள். கட்டுப்படுதல் உன் தலைக்கடனே. அவள் கடனே என்று உடன்பட, அதைப்பற்றி அவன் எண்ணிப் பார்த்தானா தெரியவில்லை. கனத்த மூச்சுகளுடன் அவன் தூங்கிக் கொண்டிருப்பான். பெரிதும் நினைவோட்டங்கள் இல்லாதவனோ என்னவோ? அவள் பிறகும் வெகுநேரம் உறக்கங் கொள்ளாமல் படுத்துக் கிடப்பாள். முயக்கத்தின் முன்னும் பின்னுமான உரையாடல்கள். மனசு நெகிழ்ந்த கணங்கள்… ஸ்வீட் நத்திங்ஸ். பெரிதாய் அவன் குறட்டை. தனக்குத் தானே பேசிக் கொள்வது போல!
கனவுகளே இல்லதவனோ இவன்? அவன் கனவில் கட்டுக்கட்டாய்ப் பணம். அவன் எண்ண முடியாமல் தவிக்கிறானாய் இருக்கும். செலவு என்றில்லாத வெறும் சேமிப்புகள் அவை… பாதிக் கிணறு தாண்டுகிறாப் போல.
தலைமேல் மின்விசிறி இருக்கிற அனைத்தையும் உதறி நாலாபுறமும் வீசியெறிந்து கொண்டிருக்கும். மூர்க்கமான யானை காட்டை துவம்சம் செய்வது போல. அவளையே அது பிய்த்து பாகங்களாக உதறி வீச முற்படுகிறதா?
காலம் அவளைக் கேலி செய்தாப் போலிருந்தது.
அவனிடம் குழந்தைக்கான அந்த தாகம் இல்லை. ஹா அதுதான் விஷயம். ஏன் இல்லை தெரியவில்லை. அவள் எதிர்பாராதது இது… குழந்தை இருசாராரால் வரவேற்கப் பட வேண்டிய ஒன்றல்லவா? எதிர்பார்ப்பும் கனவும்… ஆசையும் கூட இல்லாத முயக்கம். காமாக்னி எரியத் துவங்க அதை நீரூற்றி அணைக்க அவசரப்படுதல்! கரும்புச்சக்கையைப் பிழிந்து சாறு தேடுவது போல. உணர்வுகள் சமனப்படு முன், அது கொந்தளித்து பிடிகிட்டுமுன் அடங்கி விடுகிறது… இன்னும் எதோ இருந்து குறைவு பட்டாப் போலிருந்தது…
கணிகைகளுக்கு ஆகவேதான் குழந்தைப் பேறு இல்லை, என்று அவள் கேள்விப் பட்டிருந்தாள். வரவேற்பு இல்லாத இடத்தில் குழந்தையே வர மறுக்கிறது. போ!


கதவைத் திறக்க அடுத்த வீட்டில் ஒரே சப்தக் களேபரம். ஒருவாய்ச் சாதம் வாங்கிக் கொள்ளுமுன் இங்கேயும் அங்கேயுமான ஓட்ட சாட்டம். புஸ் புஸ்ஸென்று அம்மாவுக்கு மூச்சிறைக்கிறது. என்னவோ பேசியபடி பேச்சு சுவாரஸ்யத்தில் அதை ஏமாற்றி வாயைத் திறக்கச் சொல்லி…. நெய்யூற்றிக் கைச்சூட்டில் பிசைந்த சாதம். மனசில் இங்கேயிருந்தே பார்க்க அதன் வாசனை தட்டியது. தலைமுடி பொங்கி வழிந்திருந்த நெற்றி. வாயில் ஈஷிய சாதம். திடும் திடும் என்று நிதானமற்ற ஓட்டம். சப்பென்று நிலைதடுமாறி உட்கார்ந்தது…
சாதம் கொடுத்துக் கொண்டிருந்த அம்மா நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தாள். ”குழந்தைக்குப் பேர் என்ன?” என்று இவளும் புன்னகைத்தாள். நல்ல குண்டுக் குழந்தை. ”காவ்யா” என்றாள் பெற்றவள். ”ஆனா கூப்பிடறது?” என்று மேலும் சிரித்தாள் இவள். ”புஸ்கி!” என்றாள் அந்த அம்மா சிரித்தபடி. குழந்தைகளுக்கு எப்படியோ சிறு வயதில் பட்டப் பெயர்கள் அமைந்துதான் விடுகின்றன. புஸ்கி, என்று காதில் விழுந்ததும் அந்தக் குழந்தை சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்து, அஸ்ஸோ சிரித்தது. பல் முளைக்கிற பருவம். அரிசிப் பற்கள் தெரிய கண் விரிய அந்தச் சிரிப்பு. ”புஸ்கி?” என்று இவள் கூப்பிட்டாள். வேத்து முகம் அற்ற குழந்தை. உடம்போடு ஒரு ஆட்டம். ம் ம் என்று சத்தம். தூ… என்று கையை விரித்துக் கூப்பிட்டது. அதன் அம்மாவுக்குப் பெருமை. ”தூக்கிக்கோ-ங்கறது…”
குழந்தையின் மெல்லிய ஸ்பரிசம் திகட்டியது அவளுக்கு. தொப்பையை அமுக்கிப் பார்த்தாள். அரை வயிறு நிரம்பியிருந்தது. உடம்பு கழுத்து முகம் எங்கெங்கும் சோத்துப் பருக்கைகளை ஈஷிக் கொண்டிருந்தது குழந்தை. ஒவ்வொரு தடவை சாப்பிட்டதும் ஒரு தடவை குளிப்பாட்டி விடணும் இதை, என்றாள் அம்மா. குளிக்க சுகமாய்க் காட்டும் போலிருந்தது. வாளித் தண்ணீரில் உள்ளே நின்றபடி சப் சப்பென்று நீரை அடித்து மேலே அது தெறிக்கத் தெறிக்கச் சிரிக்கும் என்று தோணியது… இப்படியெல்லாம் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கிறது என்பதே மறந்து போயிருந்தது.
குழந்தைகள் வாழ்வைப் புதுப்பிக்கின்றன.
லேசாய்க் கீழே போடுவது போல தொம் என்று சொல்லி கைத்தாங்கலாய்ச் சரித்தாள். திடீரென உடம்பு கீழிறங்கியதில் அடிவயிற்றுக் குளிர். ஹீ ஹீயென்று சிரிக்கும் குழந்தை. ம், என்று திரும்பச் செய்யச் சொன்னது. இப்பதான் சாப்ட்ருக்கு. வேணாம்… என்றாள் அம்மா.
திரும்ப தன் ஜாகைக்கு வர மனசே இல்லை.
புதியதாய்க் குடி வந்தவர்கள் இவளைப் போல வசதியாக இல்லை. சின்னதாய் ஒரு டி.வி. இருந்தது. மேசை நாற்காலிகள் பழையவை. மரம் அல்ல, இரும்பு நாற்காலிகள் அசைக்கும் தோறும் நாராசமாய்ச் சத்தம் வந்தது. அந்தச் சத்தத்துக்கு ஒரு ரசிகர் அங்கே… புஸ்கி! சதா நாற்காலிகளை இங்கும் அங்குமாக நகர்த்திக் கொண்டே யிருந்தது…. ”ஸ்” என்றது இவளைப் பார்த்து. புரியவில்லை. ஐஸ் வண்டி என்கிறது… என்றாள் பெற்றவள். அது எது செய்தாலும் அவளுக்குப் பெருமை. மார்பில் பால் பொங்குகிறது. குழந்தையின் பாஷைக்கு எல்லா அம்மாக்களும் அகராதி எழுதி விடுகிறார்கள். அதோடு அதன் பாஷையிலேயே அவர்கள் பேசவும் செய்கிறார்கள். ங்கா குச்சுடி செல்லோம்… நானாம். ம்பாய். காக்கா ஓஷ். குழந்தைகளின் உலகம்…
அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். புஸ்கி அம்மாவை முகத்தைப் பிடித்துத் திருப்பியது. நாம பேசப்டாது… அது என்ன செய்யறதோ அதை வேடிக்கை பாக்கணும். உடனே பாராட்டி முத்தா குடுக்கணும். நம்மப் பேச விடாது, என்றாள் அம்மா. எங்க தூக்கம் எனக்கு? அது தூங்கறச்ச நாம தூங்கணும். அது முழிச்சிண்டுட்டா நாம எழுந்துண்டாகணும்… இல்லாட்டி… அம்மான்னு மேல ஏறி உட்கார்ந்து முகத்துல அறையும்.
இதெல்லாம் ஒரு அறையா? குஞ்சு மிதிச்சி கோழி செத்துப்போகுமா என்ன, என்று நினைத்துக் கொண்டாள்.
அம்மா கூட இல்லை. அ அதற்கு வரவில்லை. ம்மா, தான். எதற்கெடுத்தாலும் அம்மாதான். ஓயாமல் அவள் கவனத்தை அது கோரிக்கொண்டே இருந்தது.
வெளியே கடைக்குப் போக என்று இவள் கிளம்பினாள். ஒரு ஆசை. குழந்தையைக் கூடக் கூட்டிப்போகலாமே என்று இருந்தது. ஆன்ட்டி டாடா, வா… என்றாள். சட்டென்று வந்தது. கையில் ஏந்திக்கொண்டு, என்ன கனம்டியம்மா இது, என்றிருந்தது.
தாகூர் சொல்வார் – குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டால் கை வலிக்கிறது. இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது…
மாடிப்படி இறங்குமுன் பயம் வந்து விட்டது அதற்கு. ம்மா, என்று கையை மேலே பார்க்கக் காட்டியது. சமாளித்து விடலாம், என்று வேடிக்கை காட்டிப் பார்த்தாள். அது அம்மாவின் வேடிக்கை யுக்திகளுக்குப் பழகியிருந்தது. இவளது யுக்திகள் பலிக்கவிலல்லை… ம்மா! ம்மா! … என்று நெஞ்சு நிமிர்த்தி பின்புறமாக விரைத்தபடி அழ ஆரம்பித்து விட்டது… கடைக்குக் கூட்டிப்போய் ஒரு சாக்லேட் வாங்கித் தரலாம் என்று பார்த்தாள். அம்மாதான் அதற்கு சாக்லேட் போலிருக்கிறது!
மாடியில் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு அம்மா குழந்தை அழுகையைப் பொறுக்காமல் ஓடீ வந்தாள். அவளிடம் ஒரே தாவாகத் தாவியது புஸ்கி. ”போ அசட்டுக் குட்டி நீ…” என்றபடி அதன் கண்ணைத்
துடைத்து விட்டாள். குழந்தை இவளைப் பார்த்து இப்போது ஆசுவாசப்பட்டுச் சிரித்தது.
பக்கத்து வீட்டுக்காரிக்கு நேரம் றெக்கை கட்டிப் பறந்தது. உள்ளே சமையல் பண்ண ஒழியவில்லை. பாத்ரூம் கதவைச் சார்த்திக் கொள்ள முடியவில்லை. குளியல் தெளியல் எல்லாம் குழந்தையைத் தூங்கப் பண்ணிவிட்டு அவள் கவனித்துக் கொண்டாள். பாதித் தூக்கத்தில் கலைந்து புஸ்கி விழித்துக் கொண்டால் அப்படியே பாதிக் குளியலில் கிடைத்த துணியை மேலே வாரிப் போட்டுக்கொண்டு ஓடி வந்தாள். தூளியை லுதுலுதுலாயி… என்று என்னவாவது உளறியபடி ஆட்டி அது திரும்ப உறக்கத்தில் உள்ளிழு பட்டதும் மீதிக் குளியலைத் தொடர்ந்தாள். பாட்டுக்கெல்லாம் இல்லை, அம்மாவின் குரல் கேட்டதும் நிம்மதியடைந்து குழந்தைகள் தூங்கி விடுகின்றன போலும்…
நிறைய நேரம் இருந்தது இவளிடம். நேரத்தை என்ன செய்ய தெரியவில்லை. அவனது உடைகளைத் துவைத்து உலர்த்துதல், சமையல் செய்தல்… என்று எல்லா வேலையும் முடித்தும் கூட நிறைய நேரம் கிடந்தது. தொலைக்காட்சித் தொடர்கள் அவள் பார்ப்பதில்லை. ரமணி சந்திரன் வாசிப்பாள். ராஜேஷ்குமார், பாலகுமாரன் பிடிக்கும். எவ்வளவுதான் படிப்பது. திரும்பத் திரும்ப ஒரே மாதிரி எழுதுகிறார்கள். தவிரவும் வாசிக்கிற ருசிக்காக என்று வாசிப்பது வேறு. நேரம் போகாமல் வாசிப்பது என்பது மனசு நிலைப்படாமல் தவித்தது…
இடையிடையே பக்கத்து வீட்டின் சப்த ரசளைகள் கேட்டவாறிருந்தன. ம்மா! குழந்தை பேசும் மந்திரங்கள். இரத்தத்தோடு சிலிர்க்கிறது அவளுக்கு. வீட்டில் இட்லி, தின்பண்டங்கள் என்று செய்தால் கட்டாயம் அவள் புஸ்கிக்கு என்று எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தாள். ரொம்ப விவரமேடிக் அந்தக் குழந்தை. எல்லாம் வாங்கிக்கும், நல்லா சப்புக் கொட்டிச் சாப்பிடும், கண்பூராச் சிரிக்கும். வெளிய கூட்டிப் போகிறேன் என்றால் விரைத்துக் கொள்கிறது, அம்மாவிடம் ஒடுங்கிக் கொண்டு. அம்மாவை முன்னே நடக்க விடாமல் முட்டி முட்டிக் கூட வரும் புஸ்கி.


அன்றிரவு அவன் அவளை அழைத்தான். புஸ்கிபோல ஒரே வார்த்தை – வா. குழந்தை வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டாள் அவள். தன்னை அவள் அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். தலையில் மல்லிகைச்சரம். முகங் கழுவிப் பளிச்சென்றிருந்தாள். புன்னகையுடன் அவன் பக்கத்தில் வந்தாள்.
இத்தனை அவசரம் எதற்கு தெரியவில்லை. எதோ ரயிலைப் பிடிக்க ஓடுகிறாப்போல. ரயில்ப் பயணம் போலத்தான் இருந்தது. தடக் தடக் தடக் தடக். கட்டில். பூகம்பம் வந்தாற் போலிருந்தது. மெல்ல ஆரம்பித்து வேகமெடுக்கும் ரயில். செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து… தடக் தடக் தடக் தடக். மேற்கூரையில் சகலத்தையும் உதறுகிறாப் போல மின்விசிறி…
வட்டமாய் நிலாவைக் கூறு போட்டாப்போல கடிகார முள். அதன் நகர்ச்சி. காலம் வழுகிக் கொண்டிருக்கிறது.
அப்போதுதான் புஸ்கி அழ ஆரம்பித்தது. என்னாச்சு தெரியவில்லை. இருட்டில் அல்லது கனவில் எதையாவது நினைத்துப் பயந்து கொண்டதா? பசிக்கிறதா?… என்னாச்சி?
சீச்சீ, என்ன ரோதனைடா இது, என்று அவன் சலித்துக் கொண்டான். குழந்தை அழுகையை அவன் இடைஞ்சலாய் நினைத்தாப் போலிருந்தது. உலகம் தனக்காகவே என நினைக்கிற மனசு. அதில் பங்கம் வந்தால் பொறுக்காத மனசு. விட்டுக்கொடுக்காத மனசு…
என்னாச்சி குழந்தைக்கு? அவள் மனம் தவித்தது. அவள் முகத்தைத் திருப்பி முத்தங் கொடுத்தான் அவன். அவள் மனம் படபடத்ததை உணர்ந்தானா தெரியவில்லை. கண்மூடியிருந்தான். தன்னுலகம் மாத்திரமே அறிந்தவன்…
குழந்தையின் அழுகை அதிகரித்திருந்தது. இவளுக்கு உட்படபடப்பாய் இருந்தது. ஏன் அந்த அம்மா எழுந்துகொள்ளவில்லை? தானறியாத தூக்க அசதியில் கிடக்கிறாளா? குழந்தை தவழ்ந்தேறி அவள் மேலே உட்கார்ந்து முகத்தில் அறைந்து அவளை எழுப்புமா?.. புஸ்கி! அவளக்கு உடனே போய்க் குழந்தையைத் தூக்க வேண்டும் போலிருந்தது.
கண்மூடிய வேகத்தில் இருந்தான் அவன். கண்மண் தெரியாத வேகம் என்பது இதுதானா?
”-ம்மா?”
சட்டென விலகிக் கொண்டாள்.
என்னடீ? – என்றான் அவன். அவள் பதில் சொல்லாமல் பின்புறமாகத் திரும்பி, அவளால் தாள முடியவில்லை. ஓவென்று அழ ஆரம்பித்தாள்…


ந ன் றி – அமுதசுரபி மே 2008
storysankar@gmail.com

Series Navigation

author

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

Similar Posts