காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ஞாநி


மத்தியில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி- அடுத்த தேர்தலில் டெல்லியையும் பிடித்துவிடலாம் என்று நம்பி வந்த கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக மூன்று மாநிலங்களில் ஆட்சி பறி போய் விட்டது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கக் காரணம் என்ன ? பல்வேறு அம்சங்களின் தொகுப்பாக இந்தத்தோல்விகள் இருந்தாலும், சில முக்கியமான காரணிகளை மட்டும் பார்ப்போம்.

மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய் சிங் ஆட்சியில் 12 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கிராமங்களில் தினசரி 15 மணி நேரமும் நகரங்களில் 5 மணி நேரமும் மின்வெட்டு.விவசாயிகளுக்கான மின் கட்டணம் 600 சதவிகிதம் உய்ரத்தப்பட்டது. 50 சத விவசாயிகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ராஜஸ்தானில் அசோக் கெலாட்டின் ஆட்சி ஜாதிப் பிரச்சினையில் சிக்கியது. காங்கிரசின் ஆதரவு ஜாதியான ஜாட்டுகள் ஏற்கனவே பி.ஜே.பி அளித்த இட ஒதுக்கீட்டினால் அந்த பக்கம் போய்விட்டார்கள். ராஜ்புத், பிராமண ஜாதிகளின் புதிய அரசியல் அமைப்பான சமாஜிக் நியாய மஞ்சின் பிரவேசம் வழக்கமான ராஜ்புத், பிராமண ஆதரவும் காங்கிரசுக்குக் கிட்டாமல் செய்துவிட்டது.

சட்டிஸ்கரில் முதல்வர் அஜித் ஜோகியும் அவர் மகனும் ஊழல்களில் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டு மக்களிடம் முக்கியத்துவம் பெற்றது. தவிர ஜோகி அசலாக பழங்குடியினரா இல்லையா என்பதை பி.ஜே.பி பிரச்சினையாக்கியது. காங்கிரசின் செல்வாக்குள்ள பிராமண பிரமுகர் வி.சி.சுக்ளா கட்சியிலிருந்து விலகி தேசியக் காங்கிரசில் சேர்ந்துஜோகியை எதிர்த்தது இன்னொரு காரணம்.

காங்கிரசுக்கு கிடைக்கும் என்று நம்பப்பட்ட முஸ்லிம் ஓட்டுகள் மத்தியப்பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கணிசமாகக் குறைந்திருக்க வாய்ப்பேற்பட்டது. திக்விஜய் சிங்கும், அசோக் கெலாட்டும் பிஜேபியின் இந்துத்துவா கோஷத்தின் செல்வாக்கைக் குறைக்க தாங்களே ஒரு மென்மையான இந்துத்துவ நிலை எடுப்பது சரி என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தார்கள். இது முஸ்லீம்களிடம் அவநம்பிக்கையையே எற்படுத்தியது.

டெல்லியில் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் மறுபடியும் ஆட்சியைப் பிடித்ததற்கான முக்கியமான காரணங்கள் – நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி, மத சார்பற்ற ஆட்சி என்று பரவலாகப் பெயர் எடுத்திருந்ததுதான்.

பி.ஜே.பி இந்த முறை தேர்தலில் இந்துத்துவ கோஷத்தை முன்னிறுத்தாமல், மக்களின் அசல் பிரச்சினையான நல்ல நிர்வாகம் என்பதை இந்த மாநிலங்களில் பிரசாரத்துக்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் அது இந்துத்துவாவைப் பின் தள்ளிவிடும் என்று அர்த்தமில்லை. எங்கே, எப்போது, எது செல்லுபடியாகுமோ அதை பயன்படுத்துவது என்ற அணுகுமுறை மட்டுமேயாகும்.

புதிதாக இரண்டு பெண் முதலமைச்சர்கள் – மத்தியப் பிரதேசத்தில் உமாபாரதி, ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியா – வந்திருப்பது வட இந்திய அரசியலில் புதிய மாற்றம் என்பதால் வரவேற்கப்பட வேண்டியதுதான் என்றாலும், இந்தப் பெண்கள் இருவரும் சனாதனிகள் என்பதை கவனிக்கத் தவறக்கூடாது.

காங்கிரசை மக்கள் நிராகரித்ததற்கு வெளி நாட்டவரான சோனியா காந்தியின் தலைமையே காரணம் என்று பி.ஜே.பி இனி கடுமையான பிரசாரம் செய்யத் தொடங்கும். ஆனால் காங்கிரசுக்குள் தற்போதைக்கு சோனியாவுக்கு மாற்றான தலைமை இல்லாத நிலையில், காங்கிரசில் இது எந்த பிளவையோ மாற்றத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலை எந்த அளவுக்கு பாதிக்கும் ?

பி.ஜே.பியிடமிருந்து கழற்றிக் கொள்ள தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.கவுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்திந்திய அளவில் இனி காங்கிரசுடன் செல்வது புத்திசாலித்தன்மாக இருக்காது என்று தி.மு.க தலைமை கருதக்கூடிய வாய்ய்ப்பு இருக்கிறது. அதிலும் பி.ஜே.பி அரசு அடுத்த பொதுத்தேர்தலை முன்கூட்டியே அறிவிக்க முடிவு செய்தால், தி.மு.க அந்தக் கூட்டணியிலேயே தொடரவே முடிவு செய்யும்.

ஜெயலிதாவைப் பொறுத்த மட்டில், இந்தத் தேர்தல் முடிவுகள் அந்நியரான மைய்னோவுக்கு எதிரானது என்ற அத்வானி குரலைத் தொடர்ந்து எதிரொலிப்பார். தி.மு.கவை காங்கிரசுடனும் போக விடாமல், பி.ஜே.பியுடனும் நீடிக்க விடாமல் தடுத்துத் தனிமைப்படுத்த வியூகம் வகுப்பதே அடுத்து அவருடைய செயலாக இருக்கும்.

முன்கூட்டி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், ஜெயலலிதா , லோக் சபாவுக்கு மட்டும் பி.ஜேபியுடன் கூட்டு அல்லது தொகுதி உடன்பாடு என்ற நிலைக்குக் கூடச் செல்லலாம். ஹிந்து பத்திரிகை விழாவுக்கு வந்த பிரதமர் வாஜ்பேயியை வரவேற்க விமான நிலையம் செல்லாத ஜெயலலிதா, மாறனுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது மட்டும் சென்று வரவேற்றதும், சட்டமன்றத்திலேயே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அலட்சியமாகப் பேசியவர் அண்மையில் ஆந்திரம் சென்று நாயுடுவை நேரில் சந்தித்ததும், ஏற்கனவே அவர் வகுக்கத் தொடங்கி விட்ட வியூகத்தின் அடையாளங்கள்தான்.

ம.தி.மு.க, பா.ம.க போன்ற கட்சிகள் பி.ஜே.பி தங்களுடன் உடன்பாடு வைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் ஜெயலலிதாவுடனும் வைத்துக் கொண்டால் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம். இடதுசாரிகளின் தலை(மை)விதி தி.மு.க அல்லதுஅ.தி.மு.கவுடன் கூட்டு வைத்தேயாக வேண்டும் என்று இருந்து வருவதால், பாஜ.க இல்லாத அணி என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே அவர்களுக்கு போதுமானது. ரொம்ப அவசியமானால் அதையும் தளர்த்திவிட்டு ம.தி.மு.க, பா.ம.க பாணியைப் பின்பற்றலாம்.

எல்லா அணி மாற்றங்களும் முன்கூட்டி பொதுத்தேர்தலை நடத்துவது என்று பி.ஜே.பிமுடிவு செய்வதைப் பொறுத்தாகும். அப்படிச் செய்ய மாட்டோம் என்று பி.ஜே.பி அறிவித்திருக்கிறது. சொல்லுவதற்கு நேர்மாறாக செய்வதும் இரண்டு விதமாகப் பேசுவதும் அதன் வழக்கம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

Series Navigation