களவு

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


ஒரேயொரு குட்டிக் கிராமத்தில ஒரேயொரு வாசிகசாலை இருந்துதாம். அங்க ஒரு மேசை நாலு கதிரை ஒரு இத்துப்போன அலுமாரி மீசை போல தேஞ்ச தும்புக்கட்டையும் இருந்துதாம். எங்க பாத்தாலும் கறப்பத்தான் ப+ச்சி. மங்கிப் போன கொஞ்சப் பழைய புத்தகம் அலுமாரியில பேருக்கு இருந்தது. அதை ஆரும் தொடுறேல்லை. ப+ட்டுப் போடேலாத உழுத்துப் போன கதவு.

அங்க வாறது வீரகேசரிப் பேப்பர் ஒண்டுதான். அதுவும் ஞுாயிற்றுக்கிழமையில மட்டும். எந்த நாளும் பேப்பர் வாங்க காசுக்கு எங்க போறது ? முந்தி எல்லாப் பேப்பரும் வாறதுதான். அந்தப் பகுதியில புலியள் நடமாடுது எண்டு குறுக்கால போனதுகள் குண்டு போட்டு செல்லும் அடிச்சதுகள். அதோட சனம் டவுனுக்கு ஓடிப் போயிற்றுது. கொஞ்ச நாள் கழிச்;சு இருபது குடும்பம் மட்டில திரும்பி வந்திச்சுது. நீர்ப்பாய்ச்சல் காணியள். கொஞ்சம் கொஞ்சமா தங்கட குடியேற்றப் பகுதியளுக்கு தண்ணியைத் திருப்பி விட்டுட்டாங்க. இதுகளுக்கு தண்ணியும் இல்லை. விதை நெல்லும் இல்லை. பசளை வராது. பிறகு என்னத்தைப் பிடிச்சு விதைக்கிறது ? இருந்ததை வித்துச் சுட்டுச் சீவியம்.. இந்தச் சீத்துவக்கேட்டுக்குள்ள பேப்பர் எப்பிடி வாங்கி வாசிக்கிறது ?

வந்த இருபது குடும்பத்தில பத்துக்கு சுட்டுப்போட்டாலும் எழுதப்படிக்க வராது. அடுத்த நாலு குடும்பம் எழுத்துக் கூட்டி வாசிக்கிறதுக்குள்ள விடிஞ்சு போயிரும்.. மிஞ்சின ஆறு பேர் தான் பொதுவில பேப்பர் எடுக்கக் காசு கொடுக்கிறது. அதில முத்துராசா முத்துராசா எண்டு பென்சன்ல போன போஸ்ட் மாஸ்டரும் இருந்தார். அவருக்குக் கொஞ்சம் அறளை பேந்து போனாலும் படிச்ச மனுசன். அவரை எல்லாரும் மாஸ்ரர் மாஸ்ரர் எண்டுதான் கூப்பிடுவினம்.. அவர் ஆறு ரூவா போட மிச்ச ஐஞ்சு பேரும் ஆளுக்கு ஒரு ரூவாப் போட்டு பேப்பர் வாங்குவினம்.. பேப்பர் வாங்கிறதும் அப்பிடி ஒண்டும் லேசான காரியமில்லை. கந்தப்போடி கந்தப்போடியெண்டு ஒரு தயிர்க்காரன் இருந்தான். கிழமையில மூண்டு நாள் டவுனுக்கு பதினைஞ்சு மைல் சைக்கிள் மிரிச்சு தயிர் கொண்டு போறவன்;. அவனிட்டை ஞுாயிற்றுக்கிழமை காலமை பதினொரு ரூவா குடுத்து விடுவினம்.. அதில ஒரு ரூவா அவனுக்குக் கொமிஸ். பின்னேரம் வரேக்குள்ள வாங்கிக் கொண்டு வருவான். சில நேரத்தில பேப்பர்ல தயிர் ஒட்டி அசிங்கமாயிருக்கும். இவையள் வாய் திறக்க மாட்டினம்.. அவனைக் கோவிச்சா பேப்பர் வாறது நிண்டு போயிரும்.

ஒரு பேப்பரை வைச்சு எல்லாரும் ஒரு கிழமைக்குச் சமாளிப்பினம்.. ஒரே நேரத்தில ஆக்கள் கூடாற்றா ஆளுக்காள் ஒரு பக்கத்தை வைச்சுக் கொண்டு மற்றாள் முடிச்சிற்றானா எண்டு எட்டி எட்டிப் பாப்பினம். முழுப்பேப்பரை வைச்சு தனிய வாசிக்கிற செளகரியம் லேசில கிடைக்காது.

அவையள் முதலில பாக்கிறது எப்ப சண்டை நிக்கும் எங்க குண்டு போட்டது ஊருக்கு எப்ப பஸ் விடுவான் கப்பல் போகுதா எண்டுதான். பிறகு ரஜினிலயிருந்து டயானா வரைக்கும் தாவி ஆறுதலா எழுத்துக் கூட்டி வாசிச்சு முடிக்க கிழமையும் முடிஞ்சு பேப்பரும் ஈஞ்சு போயிரும்.. இடைக்கிடை தங்களுக்கு எல்லாம் விளங்கின மாதிரி ஆரோக்கியமில்லாத வாக்குவாதத்திலயும் இறங்கீருவினம். கைகால் தர்க்கமும் நடந்திருக்கு.

பிறகு அடுத்த ஞுாயிற்றுக்கிழமை பேப்பர் வர திரும்பித் துவங்குவினம். இப்பிடியே தயிர்க்கார கந்தப்போடியின்ர புண்ணியத்தில அகில உலக சமாச்சாரங்களை அறிஞ்சு கொண்டு காலத்தை ஓட்டேக்குள்ளதான் எதிர்பாராம அந்த சம்பவம் நடந்திச்சுது.

ஒரு திங்கக்கிழமை நாத்து வாசிகசாலை மேசைல இருந்த வீரகேசரிப் பேப்பர் காணாமப் போயிற்றுது.

இரவில ஒருவரும் பேப்பரை வீட்டுக்கு கொண்டு போகக் கூடாது எண்டது வாசிகசாலைச்சட்டம்.. போஸ்ட் மாஸ்றர் மேசைல வைச்சிற்றுப் போயிற்றார். திங்கக்கிழமை காலமை பல்லுத்தீட்ட முதலே பேப்பர் பாக்கிற பொச்சத்தில மூத்ததம்பி வந்திருக்கிறார். பேப்பரைக் காணேல்லை. அவருக்கு விசர் பிடிச்சிற்றுது. எல்லாருக்கும் ஆள் விட்டார். அவையளுக்கும் வீட்டில வெட்டி முறிக்கிறதுக்கு வேலை ஒண்டும் இல்லை. மட மடவெண்டு முகங் கழுவாம வந்திற்றினம். வந்தவயள் ஆரெண்டா முத்துராசா மாஸ்ரர் சூரியலிங்கம் லட்சுமணப்பெருமாள் பாலசிங்கம். ஒரு ஆள் மட்டும் வரேல்லை. அது தேத்தண்ணிக் கடை சித்திரவேலு. வந்தவையளின்ர வாயில பொன்மொழிதான்.

“மாஸ்ரர்> மேசைல தான் வைச்சனீங்களோ அல்லது”……….எண்டு ஒரு மாதிரி சூரியலிங்கம் கேக்க மாஸ்ரருக்கு சினம் வந்திற்றுது. “எனக்கு வாயில வந்திரும்….அல்லது என்ன அல்லது…….நான் வீட்டை கொண்டு போனதெண்டு சொல்றீரோ”

“இல்லை மாஸ்ரர்……எங்கயும் கை மாறி வைச்சீற்றீங்களோ எண்டு”…….சூரியலிங்கம் பின்வாங்கினான்.”

“கை மாறி வைக்கிறதுக்கு எனக்கென்ன கொள்ளையா……..இந்தா இங்க தான் வைச்சனான்” …..மேசையைத் தொட்டும் காட்டினார் மாஸ்ரர்.

“அப்ப ஆர் எடுத்திருப்பாங்கள் ?”ஸஸஸஸ..லட்சுமணப்பெருமாள் பெரிய சிஐடி மாதிரி அலுமாரியை முன்னுக்குத் தள்ளி பின்னுக்குப் பார்த்தார். அங்க பேப்பரில்லை. ஆரோ எடுத்துப் போட்டாங்கள் எண்டு புதுசா கண்டு பிடிச்சுச் சொன்னார்.

வீட்டில ஆறுதலா பாயில படுத்துக் கொண்டு வாசிக்கிறதுக்குத்தான் ஆரோ கொண்டு போயிருக்கிறான் ஆரெண்டு கண்டு பிடிக்க வேனும் எண்டார் பாலசிங்கம்.

சரி சரி ஒரு நாள் விட்டுப் பாப்பம்.. வாசிச்சுப் போட்டு கொண்டு வந்து வைப்பாங்கள் தானே எண்டு அவசரத்தில எழும்பினார் மாஸ்ரர். காலமை எழும்பினதுக்கு இன்னம் வெளிக்குப் போகேல்லை அவர். வயித்துக்குள்ள கறபுறவெண்டு சத்தம் கேட்டுது.

“அது சரி சித்திரவேலு ஏன் வரேல்லை…..ஒருவேளை!”ஸஸஸ..சூரியலிங்கம் கேட்டான்.

“சீ சீ தெரியாமக் கதைக்கக் கூடாது”

“கூப்பிட்டா வர்றதுக்கென்ன”

“தேத்தண்ணிக்கடையை விட்டுட்டு எப்பிடி உடன வாறது”

“கண்டறியாத கடை….ஒரு முட்டாசிப்போத்திலும் ரெண்டு ஊத்தைக் கிளாசும் தானே அங்க கிடக்குது. எனக்கு சமுசியமாக் கிடக்கு”

அதுக்குப் பிறகு எல்லாரும் கலைஞ்சு போய் பல்லுத்தீட்டி முகங் கழுவிச்சினம். அண்டு பின்னேரம் சூரியலிங்கம் தேத்தண்ணிக்கடைக்குப் போனான். காலமை ஏன் வரேல்லை பேப்பரல்லோ களவு போயிற்றுது எண்டு சித்திரவேலுட்ட சொன்னான்.

எடுத்தவங்கள் வாசிச்சிப்போட்டு நாளைக்கு வைப்பாங்கள் தானே அதுக்கேன் கூட்டம் வைச்சு ஊரைக்;கூட்டிறியள் எண்டு சித்திரவேலு சொல்ல………………….அப்ப இவன்தான் எடுத்திருக்கிறான் எண்டு தீர்மானம் பண்ணினான் சூரியலிங்கம்.

அடுத்த நாள் விடிஞ்சோடன மூண்டு பேர் வாசிகசாலைக்கு வந்து பேப்பர் இருக்கா எண்;டு பாத்தினம். அண்டைக்கும் இல்லை.

இது சரி வராது……இனித் தாங்கேலாது……….பொறுமையின்ர எல்லைக்கு வந்திற்றார்; பாலசிங்கம். அண்டைக்கு மாஸ்ரர் வரேல்லை. மூண்டு பேரும் மந்திராலோசினை செய்திச்சினம்.

“இனிமே பேப்பரை வாசிகசாலையில வைக்காம வீட்டுக்குக் கொண்டு போய் வாசிச்

சுப் போட்டு மற்றாளிட்டை குடுத்தா என்ன ? முதல்ல மாஸ்ரர் வாசிக்கட்டும். அவர் தானே ஐஞ்சு ரூவாக் குடுக்கிறவர்”

“அவர் முன் பக்க செய்தியில துவங்கினாரெண்டா கடைசிப்பக்கத்தில இங்கே அச்சிடப்பட்டது வரைக்கும் வாசிச்சுக் கிளிச்சுப் போடுவார். பிறகு நாங்க வாசிக்க விடிஞ்சிரும்…..பேப்பரண்டா சுடச்சுட வாசிக்ே;கானும் ”

“ஒரு யோசினை சொல்லட்டே…..வெளிய என்ர பெயர் தெரியக்கூடாது…….இண்டைக்கு பெருமாளும் சித்திரவேலுவும் மாஸ்ரரும் இங்க வரேல்லை. இதில ஏதோ விசயம் இருக்கு. வராத ஆக்களின்ர வீட்டை ஒரு சின்னப்பிள்ளையை விளையாடப் போறவன் போல விட்டுப் பாப்பம் ”

“ஆரை விடுறது ? ”

“பாலசிங்கத்தின்ர சின்னவனை விடுவமே.”……சூரியலிங்கம் சொன்னான்.

“ஏன் உன்ர மகனை விடன் ….என்ர பிள்ளைதானா கிடைச்சான்”

இல்லை பாலசிங்கம்…..உன்ர மகன் சின்னப்பிள்ளை. ஆரும் சமுசியப்பட மாட்டாங்கள். ஆளும் நல்ல புத்திசாலி எண்டு மூத்ததம்பி சொன்னார். புத்திசாலி எண்டு வாத்தியார் சொன்னதும் ஒப்புக் கொண்டான் பாலசிங்கம்.

பாலசிங்கத்தின்ர மகனுக்கு எட்டு வயசு. சரியான துடியாட்டம். பள்ளிக்கும் போறேல்லை. மூத்ததம்பியும் பாலசிங்கமும் எப்பிடித் துப்புத் துலக்கிறது எண்டு படம் போட்டுக் குடுத்து அனுப்பி விட்டினம். முதல்ல லட்சுமணப்பெருமாள் வீடு அடுத்தது சித்திரவேலுவின்ர தேத்தண்ணிக் கடை பேந்து வாத்தியார்ர வீடு. சும்மா தெருப்புழுதி கட்டித் திரிஞ்ச பொடியனுக்கு நல்ல புழுகம். வில்லில இருந்து விட்ட அம்பு மாதிரி அடுத்த நிமிசம் லட்சுமணப் பெருமாள் வீட்டை போய் நிண்டான். பெருமாள் என்னடா வந்தனீ எண்டு சந்தேகப் பார்வை பார்த்தார். சும்மா விளையாட வந்தனான் எண்டு சொன்னான் பொடியன்.

பொம்பிளைப் பிள்ளையள் இருக்கிற இடத்தில உனக்கென்னடா கண்டறியாத விளையாட்டு எண்டு அவனைத் திரத்தி விட்டார் பெருமாள். பொடியன் வெளிய போறது மாதிரிப் போய் விறாந்தை மேசையை எட்டிப் பாத்தான். என்னடா இன்னம் போகேல்லையா………எண்டு பெருமாள் சத்தம் போட பொடியன் வெலவெலத்துப் போனான். முகமெல்லாம் வேத்துப் போச்சு. என்னடா ஏதும் களவெடுக்க வந்தனியே…டேய் சொல்லிப் போடு இல்லாட்டி முருங்கை மரத்தில கட்டி வைச்சு கொச்சிக்காய் தீத்திப் போடுவன் எண்டு கத்தினார். பிள்ளை கதிகலங்கிப் போயிற்றுது.

“வீரகேசரிப் பேப்பர் இங்க இருக்கா எண்டு பாத்திற்று வரச் சொன்னவயள்”

“ஆா;ரா சொன்னது”

“மூத்ததம்பி மாமாவும் அப்பாவும் ”

“ஓஹோ…..அப்பிடியா சங்கதி…..உங்களை துப்பறிய அனுப்பியிருக்கினமோ துப்புக் கெட்ட நாயள்”

பெருமாள் பொடியனைப் பிடிக்கப் பாய அவன் பிடிபடாம தப்பி ஓடிப் போயிற்றான். சித்திரவேலுவின்ர கடைப்பக்கம் பொடியன் தலைவைச்சும் படுக்கேல்லை.

துப்புத் துலக்க பொடியனை அனுப்பின விசயம் வெளிய வந்திற்றுது. அதோட வாசிகசாலைப் பகுதி உறங்கிப் போச்சு. நாலு நாளா மாஸ்ரர் வீட்டில வட்ட மேசை மகாநாடு நடந்துச்சு. எல்லாரும் மாஸ்ரர்ர வெத்திலையைச் சப்பித் துப்பினவயளேயொழிய முடிவு கண்டு பிடிக்கேல்லை. அதுக்குள்ள அடுத்த ஞுாயிற்றுக்கிழமை வந்திற்றுது.

மாஸ்ரர்ர கடைசி மகன் வெற்றிவேலு பனையாட்டம் வளந்த தொக்கைப் பொடியன். எல்லார்ற வீட்டுக்கும் பேப்பர் காசு வாங்கப் போனான். பெருமாள் தூஷனத்தால சத்தம் போட ஓடி வந்திற்றான்.

பேந்து வாத்தியார் ஆறு ரூவா குடுக்க மிஞ்சின நாலு பேரும் சதக் கணக்குப் பாத்து ஐஞ்சு ரூவா போட்டு கந்தப்போடியிட்டைக் குடுத்திச்சினம். அண்டு இரவு வானம் பிளந்து போச்சு. கந்தப்போடி அடுத்தநாள் காலமைதான் வந்தான். பேப்பர் நல்லா நனைஞ்சும் போயிற்றுது. அண்டும் மழை விடேல்லை. செவ்வாய்க்கிழமை காலமை வானம் கொஞ்சம் வெளிச்சுக் கிடந்தது.

வாத்தியாரும் மூத்ததம்பியும் பாலசிங்கமும் பேப்பர் பாக்க ஒரே நேரத்தில வாசிகசாலைக்கு வந்திச்சினம்.

மேசைல அந்தப் புதுப் பேப்பரையும் காணேல்லை!!!

பாலசிங்கத்துக்குக் கடுப்பாப் போச்சு….எந்தக் கொண்டோடியள் இந்த வேலை செய்யிறது….நேற்று ஹெலி அடிச்சதெண்டு சொன்னவங்கள்…..இன்னம் ஒரு வரிகூட வாசிக்கேல்லை. இனி பாவ புண்ணியம் பாக்கேலாது. மாரியம்மனுக்கு இளக்கட்டுவமா ? கள்ளப்பயல் ரத்தம் ரத்தமா சத்தியெடுத்துச் சாகட்டும்

“ஒரு பேப்பருக்காக”……பயந்து போன மூத்ததம்பி ஒரு மாதிரி இழுத்தார்.

உமக்கென்ன ஒரு ரூபாப் போடுறீர் நான் ஆறு ரூவா குடுத்திற்று நிக்கிறன். எனக்குத்தான் அந்த அலுப்புத் தெரியும் எண்டு வாத்தியாரும் கத்த சரியெண்டு எல்லாரும் ஆமோதிச்சினம்

அண்டு பின்னேரம் மாரியம்மனுக்கு இளக்கட்டிற விசயத்துக்கு ப+ரண விளம்பரம் கோவிலடிச் சந்தியில வைச்சுக் கொடுத்திச்சினம்.

“வெள்ளிக்கிழமை காலமை ஐஞ்சு மணி மட்டும் பாப்பம். அதுக்குள்ள காணாமப் போன ரெண்டு பேப்பரும் வராட்டி மத்தியானப் பசையில மாரியம்மனுக்கு இளக்கட்டுறது நிச்சயம்”

கிராமத்துச் சந்து பொந்தெல்லாம் இளக்கட்டுற கதை கலகலத்துப் போச்சு….

“ஒரு பத்து ரூவாப் பெறாத பேப்பருக்காக இளக்கட்டிறதே! கண்டறியாத வாசிகசாலையும் இவையளும்……ஆரும் செத்துப் போனா மறுமொழி சொல்லுவினமே!”

“அவங்கள் கஷ்டப்பட்டு பேப்பர் வாங்கிறாங்கள்…அதைக் களவெடுத்தா என்ன செய்யிறது….இளக்கட்டத்தான் வேனும்”

“அது சரிதான் இளக்கட்டத்தான் வேனும்.”

இப்பிடி சனம் கதைச்சிது. அந்த வெள்ளிக்கிழமையும் வந்திற்றுது. மாஸ்ரரும் மற்ற ஐஞ்சு பேரும் காலமை ஐஞ்சு மணிக்கு வாசிகசாலைக்கு வந்திச்சினம். திருவிழாவுக்கு வர்ற மாதிரி சனமும் முஸ்பாத்தி பாக்க சுத்தி வளைச்சுக் கொண்டு நிண்டுது. மாஸ்ரர் சும்மா சாத்தி வைச்சிருந்த கதவைத் திறந்து உள்ள போனார்.

அங்க மேசைல காணாமல் போன ரெண்டு வீரகேசரிப் பேப்பரும் கிடந்தது!

பகிடி என்னன்டா ரெண்டு பேப்பரும் துண்டு துண்டா கிளிச்சுக் கிடந்தது!!!

வீரகேசரி – 11.08.9

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்