கலாசார சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா ?

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ராமசந்திரன் உஷா


நம் சமுதாயத்தில் பெண்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்களா, மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றுப் பார்க்கும்பொழுது முன்னேற்றம் நன்றாக

தெரிகிறது. பெண் சிசு கொலை என்பது இன்னும் கிராமங்களில் இருக்கிறது என்றாலும், தொழிற்சார்ந்த பெண்கல்வி பெருகுவதால் ஹைவுஸ் ஒய்ப் என்ற கான்செப்ட்டும் இனி வரும் தலைமுறையில் இருக்குமா என்ற சந்தேகமும் எழுகிறது. வருடம் ஒருமுறை தமிழகம் வருவதால், பெண்கள் என்றால் வளர்ந்ததும் கல்யாணம் என்று மட்டுமே இல்லாமல், அவர்களின் படிப்பை குறித்த கருத்துக்களை, படிப்பறியாத பெற்றோர்கள் கூட கேட்கிறார்கள்.

ஆனால் இவை மட்டுமே போதுமா என்ற கேள்வியும், பெண்களின் சுயசிந்தனை என்பது முளையிலேயே மழுக்கடிக்கப்படுவதை பார்க்கும்பொழுது வேதனையாகத்தான் உள்ளது. படிப்பு வேலைக்கு என்றாலும் கணிணி வேலைக்கான ஐ.டியும், மருத்துவம் என்றாலும்

பெண்களுக்கான மருத்துவம், குழந்தை மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை மட்டுமே படிக்க வலியுருத்தப்படுகின்றனர்.

இன்னும் பெண் பெரியவள் ஆனதை ஊர் கூடிக் கொண்டாடுவதும், அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்ததும், படித்த படிப்பை ஓரம்

கட்டி வைத்து, பெரியவங்க நல்லதுதான் சொல்லுவாங்க என்று ஊர் கூடி பெண்ணை மூளை சலவை செய்வதும் அப்படியே

இருக்கிறது. பெண்களின் எந்த விஷயமும் சமூகம் சார்ந்தே முடிவெடுக்கப்படுகிறது. உறவினரில் இருந்து, பக்கத்து வீட்டார்

முதல் அறிவுரை சொல்லப்படும்.

பிரபல மகளிர் இதழ் ஒன்றில், தொலைக்காட்சி தொடரான ‘ கோலங்கள் ‘ , நாயகிக்கு இப்பொழுது விவாகரத்து கிடைத்துள்ளது.

அவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா என்று பள்ளி மாணவிகளைக் கேட்டால், அத்தனை பேரும் பெண்ணுக்கு இரண்டாம் கல்யாணம் என்பது நம் கலாச்சாரத்துக்கு ஒத்து வராது என்று கிளிப்பிள்ளையாய் சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு கட்டுரையில் கிராமங்களில் இன்னும் உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கும் இத்தகைய பழக்கங்களால்தான், நம் கலாச்சாரம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. ‘இந்த கலாசாரம் ‘ எது தெரியுமா ? பன்னிரண்டு வயது பெண்ணுக்கு ஊர் கூடி நடத்தும் மாராப்பு சேலை என்று வயது வந்ததும் நடத்தும் சடங்கு. அன்றைய காலக்கட்டத்தில் பெரியவள் ஆவது என்பது சுற்றத்தார்களுக்கு ஒரு அறிவிப்பு. என் மகள் தயாராய் இருக்கிறாள் என்று. அதிலும் சில பிரிவில் பெண் கேட்டுவர வேண்டும் என்று உள்ளது. ஆனால் இன்று இச்சம்பவம் நடந்த பிறகு வெளியுலகில் அச்சிறுமி கால் வைக்கும்பொழுது, பலவித மன உளச்சலுக்கும் ஆளாவாள் என்பதை நாம் கவனிக்க தவறுகிறோமே!

கலாசார சீரழிவு மற்றும் அதற்கான காரணங்கள் அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைத்துமே பெண்களை வைத்தே

சொல்லப்படுகிறது. இதில் எந்த இன, மதத்தைச் சார்ந்த ஆண்களின் பார்வை ஒன்றுதான். நம்கலாசாரம் என்ற பேச்சு எடுத்தால் உடனே ஆரம்பிக்கப்படும் முதல் விஷயமே, பெண்மைக்கு அழகான புடைவையும், நீண்ட கூந்தலும்தான்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நம்நாட்டில் ஆண்கள் அனைத்து பிரிவினருக்கும் குடுமியும், கடுக்கனும் இருந்தது. வேட்டியும் துண்டுமே உடையாகவும் இருந்தது. பின்பு செளகரியம் கருதி முடியை வெட்டிக் கொண்டார்கள். கடுக்கனும் போனது. ஆனால் இன்று நாகரீக போர்வையில் அங்கும் இங்கும் தென்படுவதை விட்டு விடலாம். வேட்டி மேல் கோட்டும், பின்பு சூட்டு கோட்டும், அதற்கு பின்பு பேண்டு சட்டையாய் மாறியது. வீட்டில் வேட்டி போய், லுங்கி வந்தது. இன்று லுங்கி போயே போச்சு. வீட்டிலும், தெருவிலும், ஏன் பொது நிகழ்ச்சியிலும் ஆண்கள் அரை டிரவுசர் அணிந்து வருகிறார்கள். ஆனால் இது கலாசார இழிவு என்று யாராவது பேசினார்களா என்ன ? உட்காரும்பொழுது, அரை டிரவுசர், தொடைக்கு மேல் ஏறி கால் டிரவுசராய் மாறி எதிரில் உட்காருபவர்களை நெளிய வைக்கும்.

பதினெட்டு வயதில் இருந்து வயதான கிழங்கள் வரை இந்த உடைதான்.

பெண்ணின் உடை, கண்ணியமாகவும், கவுரவமாகவும், எதிர்பாலினரின் உணர்ச்சியை உசுப்பேத்தும்படியும் இருக்கக்கூடாது என்று

சவுண்டு விடுபவர்கள், மத குருமார்கள் முதல் கொண்டு குருமூர்த்தி, சோ வரை இதை ஏன் கலாசார சீரழிவு என்றுச் சொல்லுவதில்லை ? அதிலும் இந்த அரை டிரவுசர் கலாசாரம் படித்த, நாகரீகமான, மேல்தட்டு ஆண்களின் உடையாக மாறிவிட்டது. பெண்களின் உணர்வுகளை உசுப்பேத்தும் விதமெல்லாம் இல்லை, இது என்ன கண்ராவி தரிசனம் என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டு எழுந்தோட வைக்கிறது.

ஆனால் புடைவையை விட செளகரியமான, உடல் முழுவதும் மூடும் சல்வார் கம்மீசும், வேலைக்குப் போகும் பெண் காலை அவசரத்தில் நேரத்தை மிச்சப்படுத்த வெட்டிய தலைமுடியும் இவர்கள் கண்ணுக்கு ஏன் உறுத்தலாய் இருக்கிறது என்று புரியவில்லை ? ஹவுஸ் கோட் என்பது இன்னும் கூட்டு மற்றும் மாமியார் மாமனார் வசிக்கும் வீட்டு பெண்கள் அணிவது சரியில்லை என்று சொல்லப்படுகிறது.

கலாச்சாரம் என்பது மாறிக் கொண்டிருக்கும் விஷயம். உணவு, உடை, பேச்சு, நடவடிக்கை அனைத்தும் சேர்ததுதான் காலசாரம். காலை கஞ்சி, கூழ் போன்றவைப் போய், இட்லி தோசை ஆனது இன்று ரொட்டியும், கார்ன் பிளேக்சுமாய் மாறிப் போனது. மாறி வரும் மொழிக்கு உதாரணம் வேண்டும் என்றால் ஐம்பது அறுபது வருடத்துக்கு முந்திய கதைகளைப் படித்தால் தமிழ் எப்படி மாறியிருக்கிறது என்று

தெரிய வரும்.

ஆக கலாசாரம் என்ற வெறும் பம்மாத்து வார்த்தை, ஆண்டாண்டு காலமாய் பெண்ணை அடக்கி ஆளும் ஆண்களுக்கு

கிடைத்த துருப்பிடித்துப் போன ஆயுதம். ஆனால் பெண்களின் சிந்தனையில் மாற்றம் வந்துக் கொண்டு இருக்கிறது. உதாரணம்,

தொலைக் காட்சி தொடரைப் பற்றி மேலே குறிப்பிட்டிருந்தேனே, அதில் இல்லத்தரசிகள் தொலைக்காட்சி தொடரின் நாயகிக்கு

மறுமணம் செய்து வைக்க சொன்னார்களாம். காலம் மாறுகிறது, பெண்களின் எண்ணங்களும் மாறுகிறது. வளரும் இளைய தலைமுறைக்கும்

சுயசிந்தனையை வளர்க்க வேண்டும். ஆனால் சுய சிந்தனை என்ற பெயரில் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை சொல்லவில்லை.

—-

ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா