கண் தூங்காமல் நாம் காணும் சொப்பனம்

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

பொ.கருணாகரமூர்த்தி


பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான்.
ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை.
எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின் குரலில் இருந்த சோகத்தைக் கேட்கத்தான் எமக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

” இந்தமுறையாவது ஓப்பிறேசனைச்செய்து விடுங்கோ”

” அவளைப்பார்கிறதோ இவளைப் பார்ப்பியளோ நல்லாய்த்தான் கரைச்சல் படப்போறியள்”.

” அப்படி என்ன பார்வை, என்ன கரைச்சல், சனம் எதுக்கு மூக்கால அழுகுது?’ ஒன்றுமாய் புரியவில்லை.
எட்டாவது தேறாததுகளே எமக்குக் குடும்பக்கட்டுப்பாடு அட்வைஸ் செய்யலாயினர்.
அத்தை மாத்திரம் மகளிடம் “அஞ்சு பிள்ளைதான்டி அதிஷ்டம்… இன்னுமொன்று பெத்துக்கோ” என்று உற்சாகம் தந்தார்கள்.
கால்நூற்றாண்டுப் போரிலும், இப்போது சுனாமிப் பேரலையிலும் எத்தனை குழந்தைச்செல்வங்களைக் காவு கொடுத்துவிட்டோம்?
எமக்கு இன்னும் இன்னும் மழலைகள் வேணும். மழலைகளைத் துய்க்கும் சுகிர்தம் வேணும்.
சிலவற்றைப் பூராவும் சொல்லிப்புரியவைக்க முடியாது. புரியாதவர்களை என்ன சொல்ல? அழகழகாக எத்தனை பெயர்கள் வைத்திருக்கிறோம் தெரியுமா? அவைகளுக்காகவேனும் குழந்தைகள் வேணும். அதற்கென இன்னும் பல ஜென்மங்கள் எடுக்கவும் நானும் சகி ரஞ்ஜினியும் தயார். இங்கத்தைய தமிழ் வட்டத்தில் யாருக்கும் குழந்தை பிறந்ததும் ‘ஒரு பெயர் சொல்லு’ என்று எனக்குத்தானே முதலில் போன் போடுகிறார்கள். என்ன நான் நயனிகா என்று சொன்னால் ‘அது நியூமொரலொஜிக்குப் பொருந்தேல்லை’ என்றுவிட்டு ஜோனிகாவென்றும், ஆரத்தி என்றால் அக்னக்ஷ¡ என்றும் மாற்றிவைத்து விட்டுப்போகிறர்கள். அதுவேறு விஷயம்.
எந்தப்பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேணும் என்கிறீர்களா? விடுங்கள் அர்த்தத்தை… மனிதன் செயல்களுக்கே அர்த்தம் இல்லாதபோது வெறும் பெயருக்கு ஏனுங்க அர்த்தம்?

1977ல் ஷியாம் பெனகல் ஒரு மராத்தி மொழியில் ஒரு படம் எடுத்திருந்தார். அதில் பல சமூக அவலங்களுக்காக அதிரடியாகப் போராடிப் புரட்சிகள் செய்யும் கதாநாயகியின் பெயர் பூமிகா. அத்திரைச்சித்திரத்தில் ‘பூமிகா’வாக ஸ்மீதா பட்டேல் வாழ்ந்திருந்தார். அப்படத்தைப் பார்த்த காலத்திலிருந்து எவருக்கும் தராமல் மனதில் பொத்தி வைத்திருந்து எம் கடைக்குட்டி பிறந்ததும் அவளுக்கு பூமிகா என்றே பெயர் வைத்தோம். பூமிகாவும் சரியான வால். ஒரு குட்டி விதூஷகி. அறம் சார்ந்த விஷயங்களின் உபாசகி. கறாரான ஒரு நீதிவாட்டி. குட்டி Rebel எனப்பல குணாதிசயங்களின் சமவிகிதக்கலவை அவள்.
‘குட்டி’ ‘கிட்டி’ என்பதெல்லாங்கூட அவளுக்குப் பிடிக்காது.
” நா…நா…நானென்ன ஆட்டின்ரை பில்லையா ‘குட்டி’ என்கிறியள்” என்பாள். மூன்று வயதிலேயே அவளுக்கு தமக்கையரைவிடச் சரளமாகத் தமிழ் வரும்.

பூமிகாவுக்கு நேர்மூத்த சகோதரி ஜெகதாவுக்கு 10 வயது. முன் பள்ளியில் அவளை ‘ஜெக்கி’ யாக்கிவிட்டார்கள். கொஞ்சம் விவகாரமான தமிழ்தான் கதைப்பாள். பெர்லினில் மயில்களின் சரணாலயமொன்று Pfauen Insel என்றொரு சிறுதீவில் ஓர் ஈரக்காட்டில் அமைந்துள்ளது. அத்தீவுக்கு அவளின் வகுப்பாசிரியை ஏனைய பிள்ளைகளோடு ஜெக்கியையும் சுற்றுலா கூட்டிக்கொண்டு போயிருந்தார். சுற்றுலாவிலிருந்து திரும்பியதும் தான் அத்தீவில் பார்த்தவற்றை மூச்சுவிடாமல் எம்மிடம் சொல்லிகொண்டிருந்தாள். ” அதுசரி…. அவ்வளவையும் தமிழில சொன்னாத்தான் ஜெக்கி மகாகெட்டிக்காரியாம்.” என்றேன். ‘ஓகே’ என்றுவிட்டு ஆரம்பித்தாள்:
” நாங்கள் பஸ்ஸோட Pfauen Inselக்கு ஓடின்னாங்கள். அங்க… சுத்திவரத்தண்ணி கிடக்கு. நடூவுல எல்லா ஆம்பிளைப்பிள்ளை மயிலுவளும் ஆட்டிக்கொண்டு நிக்கியினம்.”

” ஏய்… ஆடிக்கொண்டு நிக்கினமென்று சொல்லு.” பூமிகா திருத்துவாள்.

பூமிகா கைக்குழந்தையாக இருந்தபோது நல்ல புஷ்டியாக இருந்தாளாதலால் ஆறேழுமாதமாகியும் தரைவிரிப்பிலோ மெத்தையிலோ இருத்திவிட்டால் சரியாக உட்காரத்தெரியாது. அடுத்த வினாடியே குடைக்கடிச்சு மல்லாக்க வீழ்ந்து
விடுவாள். நாங்கள் ஏதோ பராக்காக இருந்த ஒருகணம் ஜெக்கி பூமிகா விழுவதை ரசிக்கவேண்டி அவளைத் தூக்கித் தரைவிரிப்பில் உட்காரவைத்தாள். எந்தத்தேவதையின் ‘ப்ரபை’ பட்டதோ பூமிக்குத் தான்விழாமல் உட்காரும் சூக்குமம் திடுப்பெனப் பிடிபட்டுவிட்டது. உடம்பை முன்நோக்கி ஒரு சாய்கோணத்தில் லேசாகச் சரித்து ஒரு நந்தி எழுந்து உட்கார்ந்ததைப்போல அமர்ந்துகொண்டு தமக்கையைப் பார்த்து வேறு பழிப்புக் காட்டுவதுபோலத் தலையை மேலுங்கீழும் ‘ஜூஜூஜூஜூ’ வென்றபடி ஆட்டிக்கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்தாள்.

ஏமாந்துபோன ஜெக்கி கூவினாள்:

“எடியே…பூமிகா நீ இன்னும் விழேல்லையாடி!”

எம் பிள்ளைகள் இங்கேயே பிறந்தவர்களாதலால் அவர்களுக்கு நாம் விண்ணப்பிக்காமலே ஜெர்மன் பிரஜாவுரிமையே கிடைத்தது. அதற்கான சான்றிதழை பிரஜாவுரிமைச் சிறகத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படி எம்மை அழைத்திருந்தார்கள் சென்றிருந்தோம். விஷயத்தை ஒரு காரியஸ்தர் ஜெக்கியிடம் விளக்கி அவளிடம் பிரஜாவுரிமைச்சான்றிதழைக் கையளிக்கவும் விழுந்துகிடந்து குளறினாள்:

” ஐயோ… இது வேண்டாம், நான் நெடுவலும் தமிழிலதான் கிடக்கப்போறேன்.”

சமீபத்தில் நான் ‘பிஸி’யாயிருந்த ஒருநாளில் ஜெக்கி நாம் நீந்தப்போகலாமென நச்சரித்தாள். நானும் ஏதேதோ சாட்டுகள் எல்லாம் சொல்லித் தட்டிக்கழிக்கப் பார்க்கவே தன் கடைசி அஸ்திரத்தைப் பாவித்தாள்: “Daddy அங்கே Hubschen Maedchen (வெகுஅழகான குட்டீஸ்) நிறையப்பேர் வருவினம்.”
எங்கள் பலவீனங்களையும் பொடிசுகள் தெரிந்துதான் வைத்திருக்குதுகள்.

ரஞ்ஜினி ஒரு முறை புடவைக்கடைக்குப் போனபோது பூமிகாவையும் கூட்டிச் சென்றிருந்தார். அங்கு தொங்கிய சேலைகளில் Bhumika என்றிருப்பதைக் கண்டுவிட்டு ” அல்லாம்…. என்னோடது… அல்லாத்தையும் வாங்கம்மா” என்று நின்றிருக்கிறாள். தாய்க்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஏனெனில் முன் பள்ளியிலும் அரிச்சுவடி சொல்லிக்கொடுத்திருக்க மாட்டார்கள்.
” எப்பிடியடி நீ வாசித்தாய்… உனக்கு யார் கற்றுக் கொடுத்தது?”

” கிண்டர்கார்டன் கார்ட்றோபில என்னுடைய பெயர் சரியா இப்பிடித்தானே எழுதியிருக்கு?” என்றாளாம்.

யாழ்ப்பாணத்திலே ஒரு பத்தர் இருந்தார். கூடவே வயலின் வித்வானுமான அவருக்கு இடையில் ஏதோவொரு நோய் வந்து பார்வையைக் கொண்டுபோய்விட ஆபரணத்தொழில் செய்யமுடியாதுபோய் வாழ்வு கஷ்டமாகி மாலைவேளைகளில் கட்டிய சாரத்தோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து வயலினை வாசிப்பதால் சேரும் சில்லறையில் தள்ள வேண்டியதாயிற்று ஜீவனம். அவரது வித்வத்வம் புரியாமல் ரசிகர்கள் யாராவது சினிமாப் பாடல் வாசிக்கச் சொன்னால் உதறிக்கொண்டு எழுந்து போய்விடுவார். எப்போதாவது மிகஅபூர்வமாக அவர் வயலினை வாசிக்கும்போது அதன் சுருதியோடு இயைந்துகொண்டு தானும் பாடுவார். அப்போதுதான் விளங்கும் அவர் அபூர்வமாகவே பாடுவதின் சூக்குமம். வெற்றிலைக்காவியோ அல்லது வேறேதுங்காரணமோ அவரது 32 பற்களும் சட்டிக்கறுப்பாகத் தெரியும். இந்த நினைவுகூரல் குறுக்கே எதற்கென்றால்…
எதனால் ஏற்பட்டதென்று தெரியவில்லை, பூமிகாவின் பாற்பற்கள் அத்தனையும் அப்படித்தான் சட்டிக்கறுப்பாகவே மாறிப்போயிருந்தன.
ஒருநாள் படுக்கையறையில் டிறெஸ்ஸிங் டேபிள் கண்ணாடிக்கு முன்னால் ஒரு அரை ஸ்டூலைவைத்து ஏறி நின்றுகொண்டு தலையைப் பெருந்தலைக்காகம் சரிப்பதைப்போல் பலகோணங்களிலும் சரித்துச் சரித்துப்பார்த்தாள். முன், பின், பக்கவாட்டில் உடலையும் திருப்பித் திருப்பி பலதடவைகள் பார்த்தாள். பின் வாயைத்திறந்து பற்களைப்பார்த்தவள் விசைத்துக்கொண்டு தாயிடம் போனாள்.

” அம்மா…என்னை வயித்துக்குள்ள வைத்து நீங்கள்தானே ‘அசெம்பிள்’ பண்ணினது …?”

” ஓம்…அதுக்கிப்ப என்ன?”

” அப்ப ஏன் பல்லை இவ்ளோ கறுப்பாய் பண்ணினீங்கள்…? மூக்கும் ஒரு சப்பை…உங்களுக்குச் சரியா அசெம்பிள் பண்ணத் தெரியாட்டா ஒரு schoene ஆன(அழகான) பேபியைப் பார்த்துச் செய்யிறதுதானே…?”

இந்தத் ‘தமிழ் ஆட்களும் ‘தானும்’ மாத்திரம் ஏன் இப்படிக் கறுப்பில் இருக்கிறோம்’ என்பதுவும் பூமிகாவுக்குப் பிடிபடாத மர்மங்களில் ஒன்று.
குடும்ப பல்டொக்டர்(பெண்) ‘இப்போது அவள் பற்களுக்கு என்னதான் வைத்தியம் செய்தாலும் பலனளிக்காது…புதிய பற்கள் முளைக்கும்போது எல்லாம் சரியாகவே இருக்கும்’ என்று நம்பிக்கையூட்டினார். ஆனால் சில பற்கள் ஆட்டங் கண்டபோது சாப்பிடமுடியாது கஷ்டப்பட்டாள். எனது பற்களின் ‘செக் அப்’புக்குக்காக டாக்டரிடம் போன ஒரு நாளில் அவளையும் கூட்டிப்போனேன். மனமிலாமல்தான் முனகியபடிதான் வந்தாள். ஆனால் அங்குபோய் சோதனைக்கான கதிரையில் அமர்ந்ததும் டாக்டரிடம் கதைக்கலானாள்:
” Hello Doctor டாடி என்னை ஆலோசிக்காமல் தன்பாட்டுக்கு Termin (நியமநிட்டை) வைச்சிட்டு என்னை இங்கே கூட்டிவந்திட்டார், ஆனால் இன்றைக்கு நான் யாருக்கும் பல்லைக்காட்டுற ‘மூட்’டில இல்லை. இன்றைக்கு நீங்கள் என்னை மன்னிக்கவேணும்…”
குழந்தைகள் என்றாலும் இங்கே நோயாளி விரும்பாத எதையும் செய்யமாட்டார்கள்.

” அப்போ பல் வலிக்கவில்லையா?”

” Nicht so schlimm ” (அத்தனை மோசமாக இல்லை)

” அப்ப என்னதான் செய்யலாங்கிறீங்க… மிஸ்?”

” நாளைக்குப் பார்க்கலாமே.”

” நாளைக்கு முடியாது ரொம்ப பிஸியாயிருக்கும்… ஒரு கிழமை தள்ளிப்பார்க்கலாமா?”

” டபிள் ஒகே!”

ஒரு வாரம் தள்ளி அடுத்த நியமநிட்டைக்குப் போனோம்.
இவள் பெயர் கூப்பிட்டானதும் தானாகவே போய் சோதனைக்கதிரையில் ஏறி அமர்ந்தாள். டொக்டர் என்னவெல்லாம் செய்யப்போகிறோமென்பதைச் திரும்பவும் சொல்லவும் அவரைக்கையமர்த்தி ” தெரியும், நன்றி” என்றாள்.
விறைப்பு ஊசி போடுகையில்மட்டும் கண்களால் தண்ணீர் தாரையாக வழிகிறது. ஒரு முனகலின்றித் தாங்கிகொள்கிறாள்.ஆனால் சற்றுநேரம் கழித்து பல்லை கொறட்டால் இழுத்துப் பிடுங்ககையில்தான் வலியை அவளால் தாங்கமுடியவில்லை அலறியேவிட்டாள். கண்ணீர் இப்போது எங்களுக்குந்தான்.

அவளுக்கு எப்போ என்ன விஷயத்தில் சந்தேகம் வருமென்று சொல்ல முடியாது. டிஸ்கவரி சானலில் ஒரு பிரசவத்தைப் பார்த்தபின்னால் கொஞ்சம் குழப்பம் வந்துவிட்டதுபோலும் ரஞ்ஜினியைக் கேட்டாளாம்:

” அம்மா என்னை எப்படிச் செய்தனீங்கள்?”

ஒரு நாள் இரவு திறந்திருந்த எங்கள் குளியலறை ஜன்னலூடாக யார்வீட்டதோ மஞ்சள்நிற வளர்ப்புக்குருவி ஒன்று வந்தது. எவருக்கும் வெகுளாமல் மிகப்பரிச்சயமான பறவை மாதிரி எமக்கு அணுக்கமாகவெல்லாம் வந்தது. சிறுதானியங்கள், வெல்லம் என்பன கொடுத்தோம் சாப்பிட்டது. பூமிகா ஆசையாசையாய் அதன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தாள். மறுநாள் காலைவெளிச்சம் பரவவும் அது திரும்பவும் பறந்துபோய்விட இவள் சோகந்தாளமுடியவில்லை.
” பாத்றூமுக்கு வந்துதே…… அந்த மஞ்சள் குருவி. அதைப்போலந்தான் நீயும் ஒரு நாள் வந்தாய்…….. பிடிச்சுவைச்சு நல்லாய் சோறு போட்டமா பூமிகாவாய் வளர்ந்திட்டியாம்.”

” அப்போ வயித்தில வைச்சிருந்து பெக்கேல்லயா?”

” பின்ன என்ன வானத்தில இருந்தாடி குதிச்சாய்?”

” சரி… வயித்துக்க எப்படி வைச்சனீங்கள்?”

” சாமி கோயில் தீர்த்தம் குடிச்சமா… வயித்தில தானாய் வந்தாய், பெருமாள் தந்தது”

” இல்லை. செக்ஸ் செய்தால் பேபி வருமாமே…. லீனா சொல்றா.”

இன்னொரு நாள் ரஞ்ஜினி குசினியில் சமையல்மாதிரி ஒன்றைச் செய்துகொண்டிருக்கப் போய் கேட்டாளாம்:

“அம்மா நான் சேயோனையா Heiraten (கல்யாணம்) செய்யிறது?”
(லீனா, சேயோன் இருவரும் இவளுடைய முன்பள்ளித்தோழர்கள்.]

” க்கும்…இனி நான்தான் அவனுக்கும் சேர்த்து அடிக்கழுவவேணுமாக்கும்?”

” ஏன்டி யாரடி அப்பிடிச்சொன்னது?”

” அப்ப… அவர் எனக்கு வாயில கொஞ்சிட்டார்!”

ஒருமுறை நான் அஞ்சல் அலுவலகத்துக்குப் போகப்புறப்பட்ட பூமிகா வந்து ‘நானும் நீங்கள் அங்கே என்ன செய்கி
றீர்களென்பதைப் பார்க்கப்போறேன்’ என்றாள். சரி, வந்துதான் பார்க்கட்டுமேயென்று கூட்டிப்போனேன். அங்கே வாடிக்கையாளரின் வசதிக்காக ஏராளம் ஊற்றுப்பேனாக்கள் வைத்திருப்பார்கள். அதிலொன்றை எடுத்து பணவிடைப் படிவம் ஒன்றை நிரப்பிவிட்டு அனிச்சையாக என் பொக்கெட்டில் வைத்துக்கொண்டு விட்டேன். இதை அவதானித்த பூமிகா கத்தினாள்:
” டாட்… அது போஸ்ட்காரங்களோட பேனை. வீட்டுக்குக் கொண்டுவரப்படாது.”

” அட… மறதியாய் பொக்கட்டில் வைத்துவிட்டேன் கண்ணா. வேணுமென்றே அப்பிடிச்செய்யேல்லை… சொறிடா, ஏது…நீயே என்னை மாட்டவைத்திடுவாய் போலிருக்கே?”

” மன்னிப்பொன்றுங்கிடையாது… அதைஇருந்த இடத்திலே உடனே வைக்கலாம்.”

சத்தமாக உத்தரவு பிறப்பித்தாள்.

என் தாய்வழிப்பாட்டி அன்னப்பிள்ளை வாசித்தது ஐந்தாவதுவரைதான், ஆனால் ஆனானப்பட்ட ராணி அப்புக்காத்துமாருக்கே கோதாவில் தனித்துநின்று ‘வகை’சொல்ல வல்ல வாக்குச் சாதுர்யம் கொண்டவர். பூமிகாவுக்கும் இந்தச்சாமர்த்தியம் அவரிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.
ஒரு மாலையில் இவளது முன்பள்ளி ஆசிரியை மெலீட்டாவைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். அவர் பிறப்பால் இத்தாலிக்காரர், மெல்லிய சொக்கோ-பிறவுண் நிறத்தில் வெகுஅழகாக இருப்பார். பூமிகாவும் தன் நிறத்தையே கொண்டிருப்பதாலும், அவள் துடுக்குத்தனத்தாலும் இவள்மீது அவருக்குக் கொள்ளை பிரியம். எப்போதும் ‘என்னுடைய சொக்கிளேட் மவுஸ், என்னுடைய மில்க் சொக்கிளேட்’ என்றுசொல்லி வைத்துக்கொஞ்சிக் கொண்டிருப்பார்.
நாங்கள் மெலீட்டாவுடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்படும் நேரம்; மற்ற எல்லாச் சிறுவர்களுமே வீட்டுக்குச் சென்றுவிட்டிருந்தனர். நாமும் திரும்பி வந்துகொண்டிருக்கையில் கீழே மாடிப்படிகளில் யாரோ தங்கள் ஜேர்க்கினை விட்டுவிட்டுப் போயிருப்பதைப் பார்த்தேன்.

” பூமி இங்கே பார்… பாவம் யாரோ ஜேர்க்கினை மறந்துபோய் விட்டுவிட்டுப்போட்டாங்கள்” என்று அவளுக்குக் காட்டினேன்.
” அதெல்லாம் மறந்தவை நாளைக்குத் திரும்ப வந்து எடுப்பினம்… நீங்கள் ஒன்றுந் தொடத் தேவையில்லை” என்றாள் போலீஸ் கண்டிப்புடன்.
அப்படியே அவளுடன் பேசிக்கொண்டு முன்வளவின் பூந்தோட்டத்தினூடு வருகையில் ஏதோ நினைவில் அங்கே கொஞ்சம் எச்சிலைத் துப்பிவிட்டேன். பூமிகா கடுப்பானாள்.
” டாட்… இவடத்திலயெல்லாம் குழந்தையள் விளையாடுறவை… எப்படி நீங்கள் இங்கை துப்பலாம்?…ஹாவ் எ ஹார்ட்” என்றாள். அதற்கும் அவளிடம் மன்னிப்புக்கேட்க வேண்டியதாயிற்று.

இவ்வாறான பொதுஒழுங்குகளை மீறுவதையடுத்து அவள் வெறுக்கும் விஷயங்களில் ‘சண்டை’ முதன்மையானது.
‘எரிமலை’ பத்திரிகையில் வந்திருந்த குமுதினிப்படகில் இலங்கைராணுவம் குத்திப்போட்ட குழந்தைகளின் படங்களை வெகு நேரம் பர்த்துக்கொண்டிருப்பாள். பின் பெருமூச்சு வரும்.
சுனாமி அழிவின் நேரம் பொம்மைகளைப்போல அங்குமிங்குமாய் கடற்கரை முழுவதும் இறைந்து கிடந்த குழந்தைகளையும் டிவியில் கண்டு அதிர்ந்தே போய்விட்டாள் பூமிகா.

” உந்தச் சுனாமி அலைகள் ஏனிப்ப வந்தது?”

” அது கடலுக்கடியில் கொஞ்சம் பூமி உடைந்துபோனதால் வந்தது.”

“பூமி ஏன் அங்கே உடைஞ்சது?”

” அந்த இடம் கொஞ்சம் மெல்லிசாய் பலமற்று இருந்திருக்குப்போல”

” ஸ்ரீலங்காவில ஆமிக்காரர் ஏன் குழந்தையளைக் கொண்டவை?”

” அவங்கள் தமிழர்களை வெறுக்கிறாங்கள் போல.”

” ஏன் வெறுக்கோணும் நாங்கள் ஒன்றுஞ்செய்யேல்லையே அவங்களுக்கு……… பின்னை ஏன் குத்தினவை?”

” ஏதோ தெரியாமல் குத்திப்போட்டினம்.விடு.”

” ஏன்? ஏன்? ஏன்?”
இவையெல்லாம் யாரும் பதிலிறுக்கவல்ல கேள்விகளா? அந்தந்த நேரத்துக்கு ஏற்றாப்போல ஏதோ ஒன்றைச் சொல்லிச் சமாளிப்போம்.
‘ சண்டைபோடுகிறவர்கள் யாராயிருந்தாலும் எனக்குப் பிடிக்காது’ என்பாள்.

ஒரு நாள் இலங்கை நிலவரங்களைப் பேசிக்கொண்டிருக்கையில் விளையாடிய Lybyrinth போட்டைக் கீழேவைத்துவிட்டு வந்து ” இலங்கையில் ஏன் சண்டை நடக்குது?” என்றாள்.

” நீயரு சின்னப்பாப்பா உனக்கு விளங்கப்படுத்திறது கஷ்டமடா” என்றேன்.

” சரி எப்படித் தொடங்கினதென்று சொல்லுங்கோ… நான் புரிஞ்சுவன்” என்றாள்.

” சரி… இலங்கையில இரண்டுவகை இனம் இருக்கிறது.”

“இனமென்றால்…?”

” இரண்டு வெவ்வேறுமொழிகள் பேசுகிற மக்கள்.”
நான் சொல்லிகொண்டிருக்கையில் எனது ஷெற்றிக்குப் பின்னால் இருந்து கேட்டுக்கொண்டிருந்தவளை Lybrinth விளையாட்டு அதிகமாக ஈர்க்கவும் மீண்டும் அவள் அதில் பிஸியாகிவிட்டதைக் கவனியாமல் நானும் ‘எம் இனங்களுக்குள் என்னவென்ன விஷயங்களில் பாகுபாடுகள் பாரபட்சங்கள் வந்தது, பின் பகையாய் மாறியது, எமது சில உரிமைகளுக்காக நாங்கள் ஆரம்பத்தில் சாத்வீகவழிகளில் போராடியது, அவைகளால் எதுவுமே முடியாதுபோய் பின்னால் போர் வந்த கதை…’ என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். அவளிடமிருந்து எதிர்க்குரல் எதுவும் வராதிருக்கவே என்னதான் செய்கிறாளென்று திரும்பிப்பார்க்கவும்
” டடா… இன்னும் என்னோடவா கதைக்கிறியள்?” என்றாள்.

ஒருநாள் எம் கடிதப்பெட்டியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டுவந்தாள்.
” பொன்னையருக்கு ஒரு கடிதம் வந்திருக்கு எப்பிடித்தான் நான் அதை அவருக்குச்சேர்பிப்பேன் Shade… (பரிதாபம்) அவங்கள் அவர் சாகமுதலே அதை அனுப்பியிருக்கலாம்” என்றாள் பெருங்கவலையுடன். (பொன்னையர் வேறு எவருமல்ல எனது அப்பாதான்)
” அவர் உன்னுடைய தாத்தாவல்லடா… பொன்னையர் என்கிறாய்.”

” சரி…..தாத்தா பொன்னையர். ”

” அது அவருக்காய் இருக்காதே… அவர் செத்து இருபத்தைந்து வருஷங்கள் கண்ணா” என்றேன்.
” இல்லை இது அவருக்குத்தான்…பொன்னையர் என்றிருக்கு” என்றுவிட்டு என்னிடம் தராமல் அதைக்கொண்டு ஓடித்திரிந்தாள்.
ரஞ்ஜினி வாங்கிப்பார்த்தார். அக்கடிதத்தில் என் முழுப்பெயர் Ponniah karunaharamoorthy என்று இருந்தது. அவள்
கிண்டர் கார்டனிலிருந்தோ, சுகாதாரப்பகுதியிலிருந்தோ, டாக்டரிடமிருந்தோ அவளுக்கென வரும் கடிதங்களில் Bhumika Karunaharamoorthy என்றுதானே இருக்கும்?
விலாசத்தில் முதல் பெயர் பொன்னையா, எனவே அவருக்குத்தான் அக்கடிதம் என்பது அவளுடைய தீர்மானம்.
” இல்லை….இது தாத்தா பொன்னையருக்குத்தான். தரவேமாட்டேன்” என்று தானே வைத்துக்கொண்டாள்.
அவள் தூங்கும்வரையில் கடிதத்தைப்படிக்கவே முடியவில்லை.

விடுதலைப்புலிகள் தயாரித்து அநேகமாக இங்கே எல்லாத்தமிழர்கள் வீடுகளிலும் விநியோகித்திருக்கும் அகலமான தாள்களுடைய தினக்கலண்டர் ஒன்று. அக்கலண்டரின் ஒவ்வொரு தாளிலுமே அவ்வத்தேதியில் பிறந்த இறந்த உலகத்து மாமனிதர்கள், தலைவர்கள் ,மேதாவிகள் மற்றும் தேசியமாவீரர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஒரு ஏப்ரல் மாசத்தில் ஒரு நாள் பூமிகா அக்கலண்டரைத் தூக்கிக் கொண்டு படித்துகொண்டிருந்த மூத்த தமக்கையிடம் போய் ” என்னுடைய பிறந்த தேதியை இதில காட்டு, காட்டு” என்று நச்சரித்தாள்.
பூமிகா பிறந்ததோ ஜனவரியில். எனவே தமக்கையும் ” உன்னுடைய பிறந்தநாள் ஜனவரியில எப்பவோ போயிட்டுது அந்தத்தாள் கிழிச்சாச்சு போடி” என்று விரட்டிவிட்டாள். பெரும் ஏமாற்றமாய்போய்விட்டது பூமிகாவுக்கு.
கொஞ்ச நேரம் மன்னையை இறக்கிவைத்துக்கொண்டு இருந்தவள் திரும்பவும் தமக்கையிடம் போனாள்.

“பிறந்ததேதி இல்லாட்டி… அப்ப நான் சாவுற தேதி இருக்குமே அதைக்காட்டன்.”

முன்பள்ளி முடிந்ததும் தன்னை வீட்டுக்கு அழைத்துவர எப்போதும் என்னைத்தான் வரவேண்டும் என்று அடம் பிடிப்பாள்.
இரவுப்பணி உள்ள நாட்களில் அவ்வேளையில் சற்றுத்தூக்கம் போட்டாலே எனக்குப் பணியில் தூக்கியடிக்காது. சௌகரியமாக இருக்கும். அது அவளுக்குப் புரிந்தால்தானே?
என்னையே வரச்சொல்லிக் கோருவதற்கு அவளுக்கும் இரண்டு தனியான காரணங்கள் இருந்தன.
நான்தான் வழியில் அவள்கேட்கும் ஐஸ்கிறீம் வகையெல்லாம் வாங்கித்தருவேன். மற்றையது நாங்கள் ஒரு பூங்காவை ஊடறுத்து வரவேண்டியிருக்கும். அப்படி வந்துகொண்டிருக்கையில் அங்கிருக்கும் ஊஞ்சலில் குறைந்தது நூறு தடவைகளாவது அவள் ஆடவேண்டும். பின்னர் அதற்குள் கீசிக்கொண்டிருக்கும் அத்தனை குருவிகளையும் , குட்டையில் நீந்தும் மீன்களையும் அவள் நின்று நின்று குசலம் விசாரிக்கவேண்டும். ரஞ்ஜினிக்கு இவளுடன் வினைக்கெடப் பொறுமை கிடையாது, இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்.
ஒருநாள் இவள் குருவிகளைத் துரத்தித் துரத்தி வெகுநேரம் விளையாடிக்கொண்டிருக்கவே தூக்கம் கலைந்த எரிச்சலில் எனக்கும் வாயில் வந்து விட்டது:

” நான் செத்துப்போனால் நீ யாருடன் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவாய்?”

அவளுக்கு கண்கள் ‘பொல’க்கென்று முட்டிக்கொண்டுவிட்டன.
” நான் ஒருநாளும் Heiraten (கலியாணம்) செய்யமாட்டன். நீங்களுஞ் சாகக்கூடாது” என்றாள் உடைந்த குரலில்.

” நீ கலியாணம் செய்தால் நான் ஏண்டி சாகப்போறேன்?”

” எனக்குத்தெரியும் அம்மா சொன்னவ… நான் கலியாணம் செய்தால் நீங்கள் செத்துப்போடுவீங்கள்.”

எனக்கு அவளது தர்க்கம் பிடிபடவில்லை. வந்து ரஞ்ஜினியிடம் விபரம் கேட்டேன்.
” அட அதுவா… நாங்கள் நீரஜாவின்ட றிசெப்அனுக்குப் போனமப்பா… அங்கே ‘அவள் கட்டிருந்தமாதிரியே இளவயலெட் சாறியும் , நீளக்கைவைச்ச பிளவுஸ§ம் தன்னுடைய கல்யாணத்துக்கும் வாங்கித்தாறியளோ’ என்று கேட்டாள்… ‘உன்னுடைய கல்யாணத்துக்கு நாங்கள் இருப்பமோ தெரியாது கிளி……..டாட் இருந்தால் நிச்சயம் வாங்கித்தருவாரென்று’ சொன்னேன். அதைத்தான் அவள் அப்பிடி விளங்கிக்கொண்டுவிட்டாள் போல.” விளக்கம் சொன்னார்.

பெரியவர்களுக்கும் குழந்தைகளுடன் உரையாடுவதற்குப் பயிற்சிவேண்டுமென்று உளவியலாளர் சொல்வது சும்மாவா?

ஒரு சனிக்கிழமை நான் இரவுப்பணி முடித்துவிட்டு வழியில் பிள்ளைகளுக்குப் பிடித்தமான ‘சீஸ்பன்’னும், ‘பன்கேக்’கும் வாங்கிகொண்டு காலை 7 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். அன்று பள்ளிவிடுமுறையாதலால் ரஞ்ஜினி உட்பட அனைவரும் இன்னும் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
நான் சத்தமாக ” யார் எழும்பி Zahn putzen ( பல்லை விளக்குதல்) பண்ணிவிட்டு வருகிறீர்களோ அவர்களுக்கு சூடாகச் சீஸ்பன்னும், பன்கேக்கும், தேநீரும் கிடைக்கும்.” என்று அறிவித்தேன்.
பூமிகா உடம்பை முறுக்கிச் சோம்பல் முறித்துக்கொண்டு ஒருவாறாக எழுந்து கண்ணைத் திறந்தும் திறவாமலும் என்னிடம் வந்து ” எழும்பியாச்சு டாட்… ஆனால் ஒரு பல்லை மினுக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம்.” என்றாள். அப்போதான் புரிந்தது நான் Zaehne என்று பன்மையில் சொல்லாமல் (தமிழில்போல்) ஒருமையில் தவறுதலாகச் சொன்னது.

ஒருநாள் அவளிடம் ” நான் உனக்கு ஒரு கையில ஒரு அப்பிளும்,மற்றக்கையில அஞ்சு அப்பிளும் தந்தால் மொத்தம் எத்தனை அப்பிள் வைச்சிருப்பாய்?” என்று கேட்டேன்.

” ஒன்றுதான்.”

” ஏண்டா?”

” நான் எப்பிடி ஒரு கையில அஞ்சு அப்பிள் வைச்சிருப்பேன், கீழேபோட்டிடுவன் டாடி…”

நானும் வேறுவிதமாகக் கேட்பதான நினைப்பில் மாற்றி ஒரு கையில் 5 விரல்களையும், மறுகையில் தனியாக ஒரு விரலையும்காட்டி ‘எத்தனை?’ என்றேன்.

” பதினைந்து ” என்றாள்.

” எப்பிடி?”

” ஒன்றுக்குப் பக்கத்தில அஞ்சு இருந்தாப் பின்னே எத்தினையாம்?”

தான் இல்லாத சமயங்களில் ஜெகதா தனது வாட்டர்-கலர்ப் பெட்டியை எடுத்துப் பாவிப்பதை நுட்பமாக கண்டுபிடித்துவிட்ட பூமிகாவுக்கு அவள் அவ்வாறு அதை எடுப்பது தனக்கு இஷ்டமில்லை என்பதை ஜெகதாவுக்குத் தெரியப்படுத்தவேண்டும். வன்முறையும் சச்சரவுமின்றி அச்செயல் நிறுத்தப்பட்டாகவேணும்.
உடனே ஒரு A4 வெளிளைத்தாளை எடுத்து ஜெகதா கலர்ப்பெட்டியை மேசையிலிருந்து தூக்குவதைப்போல் ஒரு காட்டூன் வரைந்தாள். (தூக்குகின்ற கையானது மற்றைய கையைவிட இரண்டுமடங்கு நீளமானதாகவும், 3 விரல்களையும் மாத்திரம் கொண்டிருந்தது.) மேற்படி செயலானது தடுக்கப்பட்டிருப்பதான அர்த்தத்தில் சிவப்பு மையினால் அக்கையின்மேல் பெரிய பெருக்கல் குறியையும் வரைந்து தன்மேசை எதிரில் ஒட்டிவிட்டாள்.

சதா கழுத்தைக் கட்டிக்கொண்டும் ‘டடா’ ‘டாடி’ ‘டாட்’ என்று காலைச்சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எல்லோருமே வளர வளர தங்கள் பள்ளிக்கூடம் , வீட்டுவேலை, செய்முறைப்பயிற்சி, கணினி, இணைவலை என்று பிஸியாகி சிறிதுகாலத்துள் சீரியஸான வேற்றுமனிதர்களாக அவர்கள் ஆகிப்போவதுதான் மனதுக்குக் கஷ்டமான காரியம்.
கண் தூங்காமலேயே நாம் காணும் சொப்பனம். எம் கடைக்குட்டி இவளும் மெல்லத்தன்னை மாற்றிக்கொண்டு பெரிய மனுஷியாய்விடுவாளே என்ற நினைப்பே என்னவோ மாதிரியிருக்கிறது. மழலையும் குறும்பும் துடுக்குமாக எப்போதும் முன்பள்ளிக்கே போய்க்கொண்டு எமது கனவு கலைந்துபோகாமல் இருக்கவேணுமென்பதுவும் எம் பேராசை தோய்ந்த கனவுகளில் ஒன்று.

எங்கள் வீட்டுக்கு அண்மையில் ஒரு கிருஷிக பாடசாலை இருக்கிறது. அங்கு குதிரைக்குட்டிகள், கோவேறுகழுதைகள், கம்பளி ஆடுகள், மலையாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என்று பல ஜாதி ஆடுகள் நிற்கும்.
வீட்டில் எஞ்சிய காய் கறிகள், பாண், ரொட்டி என்பவற்றை மாலை வேளைகளில் கொண்டுபோய் அவைகளை வேலியால் அழைத்துத் தின்னக்கொடுப்போம். அப்படிப் பழக்கிய பிறகு நாங்கள் அவை மேயும் அந்த கிறவுண்டைத்தாண்டிச் சும்மாதான் போனாலும் அத்தனையும் ஓடிவந்து எம்மைப் பார்க்கும். ஒருமுறை பூமிகா கொண்டுபோயிருந்த வாழைப்பழத்தை அவள் எடுத்துக் கொடுக்க முதலே மலைஆடு ஒன்று பிடுங்கிக்கொண்டு விடவும் அவள் நிலத்தில் உதைத்துக்கொண்டு அழவாரம்பித்தாள்:
” என்னடி என்ன?” என்றால்…

” ஐயோ…அந்த ஆடு…அந்த ஆடு.”

அவளுக்கு அதிர்ச்சியில் பேசமுடியவில்லை.

” அந்த ஆட்டுக்கு என்னடி? ”

” அது வாழைப்பழத்தைத் தோலோடை தின்னுட்டுது… சாகப்போகுது… ஐயோ டொக்டரைக் கூப்பிடுங்கோ.” துடித்தாள்.

ஒருமுறை ரயிலில் பயணம் செய்தபோது ஒரு பெண் ஒரு கூண்டில்வைத்த ஒரு ஜோடிக் குருவிகளுடன் வந்து ஏறினாள். பூமிகாவின் சந்தோஷத்தைக் கேட்கத்தான் வேணுமா? அவற்றை அதிசயத்துடன் சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அவளைக்கேட்டாள்:

” இந்தக் குருவிகளோட அம்மா எங்கே?”

எதுவும் புரியாத அவளோ விழிக்கவும்

” அம்மாவை விட்டுட்டு ஏன் இவைகளைத் தனியே எடுத்து வருகிறாய்?”

கேள்வியின் ‘த்வனி’ புரியவே நான் சமாளித்தேன்.
” அவளுடைய அப்பா அம்மாக்குருவியைக் குளிக்கவார்த்துத் தூங்கவைச்சிட்டு அடுத்த டிரெயினிலே எடுத்து வருவாராம்.”

” Ach…..so…(அப்படியா)!”

பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு பூமிகாவோடு போயிருந்தபோது இறைச்சிப் பக்கமாகவும் போக நேர்ந்தது. அங்கே கூல் கேஸினுள் ஆட்டுத் தலைகளை உரித்து அடுக்கி வைத்திருந்தார்கள். அவளுக்குத் தாங்கமுடியவில்லை. நெற்றியில் அடித்துக்கொண்டு சொன்னாள்: ” கடவுளே கடவுளே…எல்லா இடத்திலும் என்னுடைய Liebling Tier (செல்லப்பிராணி) ஐத்தான் சாவக்கொல்லுறாங்கள்… Idioten! அந்த ஆடுகளைப் பல்லுக்கூட மினுக்க விடவில்லைப் போல கிடக்கு…எல்லாம் மஞ்சளாயிருக்கு” என்றும் வருந்தினாள்.
அவள் வீட்டில் இருக்கும்போது நெய்த்தலி மீன்கூட வெட்டமுடியாது.
” ஐயோ… அதுக்கு ‘அவ்வா’ செய்யும் (வலிக்கும்) வெட்ட வேண்டாம்!” என்று கத்தி ரகளைபண்ணுவாள்.

ஒரு நாள் பூமிகாவின் கவனம் குசினிப்பக்கம் திரும்பாதபடி அவளுக்கு நான் பராக்கு காட்டிக்கொண்டிருக்க குளிர்சாதனத்தில் வைத்திருந்த கோழியை ரஞ்ஜினி எடுத்துச் சமைக்கலானார். நான் அயர்ந்த ஒரு கணத்தில் குசினிக்குள் நுழைந்துவிட்ட பூமிகா கேட்டாளாம்:

” அம்மா…இந்தக்கோழி யார்?”

சித்தர்களும், அசித்தர்களும், ஞானிகளும், போகிகளும் விடைதேடிய கேள்வி அல்லவா…?

” என்னடி கேட்கிறாய்?”

” இந்தக்கோழி அதுன்ர வீட்டில யார்…… அம்மாவா… அப்பாவா…பிள்ளையோ?”

” சரி…அம்மாவென்று வையன்.”

” அப்ப அதின்ரை பிள்ளையள் தேடுவினமல்லோ… அம்மாவைக் காணேல்லயென்று?”

‘பிள்ளை’ என்றிருந்தால் ” அப்போ அதின்ரை அம்மாவும் அப்பாவும் அழப்போகினமல்லோ ‘பிள்ளை’யைக் காணேல்லையென்று” என்றிருப்பாள்.
” இஞ்சார்… இவளை உங்கை கூப்பிடுங்கோவப்பா… இங்கே Funny Funny யாய் கதைச்சுக்கொண்டு நிக்கிறாள்.”

பூமிகா எந்த சாப்பாட்டிலும் மாமிசம் கலந்திருக்கென்று தெரிந்தால் சாப்பிடவேமாட்டாள். ஆனால் Ham , Salami என்பவற்றை மட்டும் விரும்பிச்சாப்பிடுவாள். அவை அரைத்த இறைச்சியை நீராவியில் வேகவைத்துப் பக்குவமாகத் தயாரிக்கப்படுவதல் வாய்க்கு மிகவும் மெதுமையாக இருக்கும். மணமும் எதுவும் இல்லாதிருப்பதால் அவையும் அப்பளம்போல் ஒரு பண்டம் என்பதே அவள் எண்ணம்.
ஒரு முறை பூமிகா தும்மவும் என் கோட்டுப்பாக்கெட்டிலிருந்து ஒரு டிஸ்ஸ¤வை எடுத்து மூக்கைத் துடைத்துக்கொள்ளக் கொடுத்தேன்.
அது சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் தினுசில் இல்லாமல் வேறுநிறத்தில் கோல்ட் லைனிங்குகளோடு முக்கோணமாக மடிக்கப்பட்டும் இருக்கவும் கேட்டாள்:

” டாடி இந்த டிஸ்ஸ¤ எங்கே கிடைச்சது?”

நானும் விகற்பமில்லாமல் உண்மையைச் சொன்னேன்.

” அது ஒரு றெஸ்டோரெண்டில் கிடைச்சது.”
அவளுக்கு வந்ததே கோபம்.
” என்னிய விட்டிட்டுத் தனியப் போட்டாய் என்ன?”

அவளைச் சமாதானம் பண்ண அன்று எம்பகுதியில் பிரபலமான அர்ஜென்டீனிய ஸ்டேக் ஹவுஸ் ஒன்றுக்கு எல்லோருமாகப் போனோம். நான் வரவழைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை என்னவென்று கேட்டாள் பூமிகா.
நான் ‘ஸ்டேக்’ என்றேன்.
”அது எதில சமைச்சது?”
சும்மாதானும் ”சோயா ரோ·பூ” என்றேன்.
” ஆனால் பார்க்க இறைச்சிமாதிரியிருக்கே” என்றாள் சந்தேகத்துடன்.
உடனே ஜெகதா:
” இவ்வளவு சொல்றியே நீ சாப்பிடுற சாண்ட்விச்சோட Ham மாட்டை அரிஞ்சுதான் எண்டது (பண்ணியிருக்கு) தெரியுமோ?” என்று உண்மையை அகாலமாகப் போட்டுடைத்தாள்.
” Nein, Niemal ” (இல்லை, இருக்காது)

” Doch, Doch” (அப்பிடித்தான்)

” Nein”

” Doch”

” Nein”

” Doch”

“Nein”
இப்படியே விவாதம் முடிவற்றுச் செல்லவும் தன் கடைசி ஆயுதத்தை எடுத்த பூமிகா
அப்பளம் மாதிரி வட்டமாயிருந்த Ham Slice ஒன்றைத்தூக்கி ஜெகதாவின் முகத்துக்கு நேரே பிடித்துக்கொண்டு கேட்டாள்:
” அப்பிடியெண்டால்… அதோட கண்ணைக்காட்டு பார்ப்பம்.”

இங்கே நகரத்தின் மையப்பகுதிக்குள் ஏதாவது அலுவலாகப்போக நேர்ந்தால் காரில் செல்வது அத்தனை உசிதமல்ல.
வாகன நெரிசல், அத்தோடு தரிப்பிடச் செலவோ மிகஅதிகம் (1 மணிநேரத்துக்கு 2 இயூரோ!). அதனால் பூமிகாவையும் கூட்டிக்கொண்டு ஒரு நாள் பஸ்ஸில் போனேன். போகும் வழியில் பஸ்ஸில் கேட்டாள்:

” டடா… பஸ்போகிற இடத்துக்கு நாங்கள் போகிறோமோ, இல்லை நாங்கள் போகிற இடத்துக்கு பஸ்போகுதோ?”

” நாங்கள் போகவேண்டிய இடத்துக்குப்போகிற பஸ்ஸாகப் பார்த்து ஏறுகிறதுதானே.”

” அப்ப யார் அந்த பஸ்ஸை ஓட்டிறது?”

அது நவீனமான ஒரு பஸ். அதன் சாரதி Armored Car ஐப்போல ஒரு ஆழமான இருக்கையில்தான் புதைந்திருப்பார், கவனித்துப் பார்த்தாலன்றித் தெரியாது.
” நீ காணவில்லையா… முன் பக்கத்தில் தாடி வைத்த ஒருவர் ஸ்டியறிங்கில் இருந்தாரே…அவர்தான் ஓட்டுகிறார்”

அப்போது இன்னொரு தாடிக்கார இளைஞன் பஸ்ஸின் நடுக்கம்பத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான். அவனைக்காட்டி ” அவரா?” என்றாள். நான் ”இல்லை” என்றேன். பின் எமக்கான தரிப்பில் இறங்கி வீதியைக் கடப்பதற்கு நிற்கையில் சிக்னல் வந்ததும் வீதியின் எதிர்த்திசையிலிருந்து ஒரு தாடி இளைஞன் அவசரமாக வந்தான். அவனைக்காட்டி ” அவனா?” என்றாள் பூமிகா.
ஒரு நாள் பூமிகாவுடன் வெளியே உலாவப்போயிருந்தோம். அன்று காற்று பலமாக வீசிக்கொண்டிருந்ததால் நான் அவள் கையைப் பிடிக்கப்போனபோது ” ஒருவரும் என்னைப் பிடிக்கவேண்டாம்…….நான் aleine (என்பாட்டுக்கு) நடந்து வருவேன்” என்று அடம் பிடித்தாள். இரண்டு பெரிய கட்டிடங்களுக் கிடையேயாயான வெளியை நாம் கடக்கையில் விசையுடன் வந்தகாற்று அவளை உருட்டாத குறையாய் வேறுதிசையில் தள்ளிச்செல்லவும்

” இல்லை… இல்லை உந்தப்பக்கம் போறதில்லை. இங்கே வாடி.” கூப்பிட்டோம்.

” காத்து என்னை அந்தப்பக்கம் கூட்டிக்கொண்டுபோகுது… நான் என்ன செய்யிறது?” என்றாள் பரிதாபமாக.

என் முதுகில் பிடிக்கும் வேர்ப்பருக்களை ஒரு ‘சே·ப்டி பின்’னால் குத்துவது பூமிகாவுக்குப் பிடிக்கும். அப்படிக் குத்திக்கொண்டிருக்கையில் ஒருநாள் அவளுக்கு சந்தேகங்கள் Random ஆக ஜனித்தன.
” எனக்கு வளர்ந்தாப்போலயும் பூமிகாதான் பெயரோ… அல்லாட்டி வேற பெயர் வைப்பியளோ?”
(அகிலாண்டேஸ்வரி, சிவகாமசுந்தரி, சிவபாக்கியபூரணி தினுசில் ஏதாவது வைப்பீர்களோ என்ற அர்த்தத்தில்)
” இல்லை எப்பவும் நீ பூமிகாவேதான்.”
[முன்பொருமுறை என் சகோதரி வீட்டுக்கு வந்திருந்தபோதும் கேட்டாளாம்:
” அத்தே நான் பெரிசாய் வளர்ந்தாப்போலயும் நீங்கள் எனக்கு Tante (அத்தை) தானோ?”]

” ஹாம் அம்மன்கோவில்ல காவடி ஆடின மாமாவுக்கு என்ன பெயர்?”

” நான் கேட்கேல்ல… அடுத்தமுறை அவர் ஆடும்போது கேட்டுப் பிள்ளைக்குச் சொல்றன்டா.”

” சரி….யார் இந்த இரவையும் பகலையும் செய்யிறது?”

“வேறு யார் எல்லாம் இந்தச் ‘சூரியற்றை’ வேலைதான்” என்றேன்.

” யாரு…தமிழ்ப்படத்தில வருவாரே அந்த அங்கிளோ…?” என்றாள்.

பின் குரலில் ஏராளம் அனுதாபம் பொங்கக் கேட்டாள்:
” ஏன் டாடி உங்களுக்கு நடுமண்டையில மயிர் இல்லை?”

” எல்லாம் ஒவ்வொன்றாய் விழுந்துபோச்சுடா….”

” எங்கெங்கே விழுந்ததென்று சொல்லுங்கோவன்…நான் போய் எடுத்தாறன்.”

முன்பள்ளி கோடைவிடுமுறை விடுத்திருந்த நாளன்றின் ஒரு பகலில் மிக நீண்டநேரம் தூங்கியிருந்தாள். அன்றிரவு நான் கணினியில் அவசரமான கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டிருக்க என் மடியில் வந்தமர்ந்துகொண்டு என்னைக்குடைமானம் செய்யத் தொடங்கினாள். நான் எனது அவசரத்தைச் சொன்னதும் ” சரி அப்போ எனக்கு படம் ஒன்று போட்டுவிடுங்கோ….தூக்கம் வரும்வரைக்கும் பார்க்கிறேன்” என்றாள்.

” எப்பிடிப்படம்?”

” மியூசிக் உள்ளபடம்?”

” பிளாக் அண்ட் வைட்?”

” Egal (பரவாயில்லை).”
நாகேஷ்வரராவ் அஞ்சலிதேவி நடித்த அனார்க்கலிதான் VCD யில் கைவசம் இருந்தது. ஒவ்வொன்றும் 60 நிமிஷங்கள் ஓடவல்ல 3 குறுவட்டுக்கள். முதலாவது குறுவட்டைப்போட்டேன். முழுவதும் பார்த்து முடித்தாள். இரண்டாவதையும் போட்டேன். அதையும் முழுவதையும் பார்த்து முடித்தாள். தூக்கம் எதுவும் வரமாதிரியில்லை. மூன்றாவதையும் போடச்சொன்னாள். ” குழந்தைப்பிள்ளைகள் நீண்டநேரம் படம் பார்க்கக்கூடாது” என்றேன். ” உங்களைவிட பாதுஷாவே பெட்டர்” என்றாள். எனக்கு மூன்றாவதையும் போடவேண்டியதாயிற்று.
அனார்க்கலியை உயிருடன்வைத்துச் சமாதிகட்டும் காட்சிவரவும் அவளுக்குத் துக்கம் தாளவில்லை, கண்களால் வழிகிறது. படத்தை நிறுத்தினேன். அதற்குப்பிறகும் அவளுக்குத் தூக்கம் வருகிறமாதிரி இல்லை. பிளேட்டை மொண்ணை பண்ணிக்கொண்டு திரும்பவும் என்னிடமே வந்தாள்.

” ஏன் (அக்பர்)பாதுஷா… அனார்க்கலியை சிப்பாய் Heiraten பண்ண (கல்யாணம் செய்ய) விடுகிறாரில்லை?”

இதைச்சரியாகவே தமிழில் கேட்பதற்குப் பலதடவைகள் முயன்று பார்த்துவிட்டு, அவளது தமிழ்வார்த்தை வங்கியின் நிரலிகள் விநியோகத்துக்குத் தடுமாறியதால் ஜெர்மனிலேயே கேட்டாள்.
(சலீமை இளவரசனென்று புரியாமல் அனார்க்கலி பாதிப்படம் வரைக்கும் ”சிப்பாய்” ”சிப்பாய்” என்றுதான் அவனை அழைத்துக்கொண்டிருப்பாள்.)

” ஏன் அனார்க்கலியைக் கோவிலுக்கை வச்சு கட்டீயினம்?” (அவள் புரிதலில் கோவில்)

” அது…முந்தின காலத்திலை இளவரசர்கள் சாதாரண குடிமக்களைக் கல்யாணம் செய்யதுகொள்ள அரசகுடும்பத்துப் பெற்றோர்கள் சம்மதிக்கமாட்டினம்.”

” அனால் அவ (அனார்) ஒரு இளவரசன் Lieb (காதல்) செய்யக்கூடிய விதத்தில் அழகாத்தானே இருக்கிறா… பிறகென்ன?”

” அழகா இருந்தால்…?”

” அப்போ சாதாரண ஆட்கள் Lieb பெல்லாம் செய்யக்கூடாதோ?”

” காதல் செய்யலாந்தான்… ஆனால் யாரைக் காதல் செய்யலாம், யாரைத் தவிர்க்கவேணுமென்றிருக்கு” சமாளிக்கப் பார்த்தேன்.

” Na………Ja. ” (ஆமோதித்த மாதிரியும் இல்லையென்ற மாதிரியும்.)
தொடர்ந்து மூக்கைத் தேய்த்தபடி சற்றுத் தீவிரமாக யோசித்தாள். அந்த முடிவு அவளுக்கு மகா முட்டாள்தனமாகவே பட,
” Scheisse……….Dumme Leute und Ihre kommischen Regelungen!”

(முட்டாள் ஜனங்களும் அவர்களின் முட்டாள்தனமான சட்டங்களும்!) என்றாள் கோபத்துடன்.

சமாதான காலத்தில் சமீபத்தில் ஊருக்கு போயிருந்தோம். கட்டுநாயகா விமான நிலையத்தில் எங்கும் கறுப்புத் தலைகளைப் பார்த்ததுமே ” ஹையா…இங்கு முழுப்பேரும் தமிழாக்கள்…” என்று ஆர்ப்பரித்தாள்.
பின் ஒரு சுங்க உத்தியோகத்தர் சிங்களத்தில் பேசவும் ” என்ன டடா அவர் அராபிக் பேசுறார்… உங்களுக்கு விளங்கிதா?’ என்றாள் ஆச்சரியத்துடன்.
இவளைப் பார்த்த உறவினர்கள் எல்லோருமே தூக்கி வைத்துக்கொண்டு ஒருவர் தப்பாமல் முதலில் “உனக்கு என்ன பெயர்?” என்றுதான் அவளைக்கேட்டார்கள். எல்லோருக்கும் பெயரைச் சொல்லிச் சலித்துப்போன பூமிகா பிறகு பெயர் கேட்டவர்களிடம் சொன்னாள்:
” எல்லாருக்குமே பேரைச் சொல்லிச் சொல்லி எனக்கு அலகு அவ்வா செய்யுது…..நீங்கள் என்ரை பெயரைத்தான் கேட்கிறதென்றால் அதை அம்மாவிட்டைக் கேளுங்கோ, வேறேதாவது கேட்கிறதானால் என்னட்டைக் கேளுங்கோ.”

” இங்கே பார்டா…அன்னப்பிள்ளப்பேத்தி சுத்திக்கொண்டு தப்பாமல் உன்னட்டைதான் வந்து நிக்கிறா” என்றுதான் ஊரில் பெரியவர்கள் வியந்தார்கள்.
இவள் எங்களிடம் அதிகமாகக் கேட்டதுவும் பெயர்கள்தான், ஆனால் அவை ஒன்றும் மானுஷருடையதல்ல.

” பெரியத்தை வீட்டுக்கு போகையில ஆட்டோவுக்கு குறுக்க பாய்ஞ்ச நாய்க்கு என்ன பெயர்?”

” நல்லூர் முருகன் வாசலில காதுமடிஞ்சு நின்றுதே பிளாக் அண்ட் வைட்… அதுக்கு என்ன பெயர்?”

“ஆசையம்மா வீட்டுக்கோடித் தாவரத்தில் படுத்திருந்த பிறெளண் மறையனுக்கு என்ன பெயர்?”

நானும் றோஜர்-ஜிம்மி-நிம்மி-ரெக்ஸி என்று நாய்ப்பெயராகவே சொல்லித் தீராமல்… ஐஸ்வர்யா-பூஜா-தபு-கஜோல்-சிம்ரனோடு, நதியா-அம்பிகா-ஸ்ரீதேவி-அனுராதா-ஜோதிலக்ஷ்மி வரை றிவேர்ஸில்போய் கே.ர்.விஜயா-சாவித்திரி- பத்மினி-அஞ்சலி- சந்தியாவுக்குவந்து ராஜகுமாரி-அனுத்தமா- கண்ணாம்பா-அங்கமுத்து என்று ஆரம்பிக்கையில் அவளுக்கும் மெல்ல ‘விளங்க’ ரம்பித்தது.
இடையே கே.ர்.விஜயாவுக்கு வந்தபோதுதான் ஒரு விபத்து வரப்பார்த்தது.
” அது என்ன அதுக்கு மட்டும் இனிஷியல்?” பிடித்துக்கொண்டாள்.
” கல்வயல் ‘ராம நாய் அக்கர்’ என்று அதோட அப்பா ஒருமுறை லொறியில் அடிபட்டுடுத்து. அப்போ அதின்ர பெயர் பேப்பரில வந்தது… அதுதான் எனக்குத் தெரியும்… வேறேப்படி?” சமாளித்துவிட்டேன்.
உள்ளூர் தேனீர்க்கடையன்றில் நாம் நுழைந்து தேனீரோடு பருத்தித்துறையின் பிரசித்தமான தட்டைவடையும் சாப்பி ட்டுக்கொண்டிருக்கையில் பூமிகா திடீரென கடையின் மரவாங்கிலேறி நின்றுகொண்டு ” எல்லாரும் ஓடியாங்கோ….இஞ்ச பாருங்கோ… குட்டி டைனொசோர் ஒன்று வருகுது… இனிப் பெரிசுகளும் வரப்போவுது” என்று கூவினாள் .
அவள் காட்டிய திசையில் பார்த்தால் பெற்றோமாக்ஸ் வெளிச்சத்துக்கு விழுந்த ஈசலைப்பிடிப்பதற்காக ஒரு பல்லி உடலை ‘எஸ்’ மாதிரி வளைத்து வளைத்து மெதுவாக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

(இப்படித்தான் இவளுக்கு இரண்டு இரண்டரை வயசிருக்கும்போது ஜெர்மனியில்) ஒருநாள் பண்ணைகள் அதிகமிருந்த ஒரு பிரதேசத்துக்கு காரில் போயிருந்தோம். வழியில் தீவனத்துக்காக முளைப்பயிர் ஏதோபயிரிடப்பட்டிருந்த ஒரு பண்ணைவயலில் திறந்து விடப்பட்ட ஏராளம் கோழிகள் சுதந்திரமாக மேய்ந்துகொண்டு நிற்கவும் அதைப் பார்த்துக் குதூகலித்த பூமிகா கூவினாள்:

“இங்கே பாருங்கோவன்… Zu viel(ஏராளம்) மாடுகளை!”

நாங்கள் எல்லோரும் சிரிக்கவும் அவளுக்குப்பெரிய வெப்பிகாரமாய்ப் போய்விட்டது.

ஊரில் நாங்கள் நின்றிருந்தபோது அச்சுவேலிச் சந்தைத்திடலில் கூடிய ஊர் நாய்களின் உச்சிமகாநாடொன்றையும் தற்செயலாக அவளுக்குப் பார்க்க நேர்ந்தது. முதலில் எல்லா நாய்களும் அமைதியாகத்தான் கூடிநின்றன. பின் அவர்களுக்குள் ஏதோ தத்துவ விரிசலோ- கோட்பாட்டு நெரிசலோ உண்டாகியிருக்க வேணும். தம் உடன்பாடின்மையைத் தெரிவிக்க ஒன்றுடனொன்று மூக்கைவிடைத்து, மேலுதட்டை வலிச்சு, வெட்டும் பல்லைக் காட்டி ஒரு தோரணையாக முறுகிக்கொண்டு நின்றன. பின் திடீரென மின்னல் பொறித்த மாதிரிப் பெருஞ்சமர் மூண்டது. ஒன்றின் மேலொன்று தெல்லுமாறிச் சட்டசபை றேஞ்சுக்குப் பாய்ந்து கடிபட்டன.
அவைகளின் சத்தத்தில் எரிச்சலடைந்த வியாபாரியருவர் வாழைக்குலைத் தாரொன்றைப் பிடுங்கி பி.எஸ்வீரப்பாவின் சுருள்வாள் மாதிரிச் சுழற்றவும் நாய்கள் எல்லாம் அத்தனை ஆக்ரோஷத்தையும் அதிலேயே போட்டுவிட்டு மாயமாய் மறைந்தேகின.
இவை எல்லாமே அவளுக்கு இங்கு காணரிய திவ்ய தரிசனங்கள். நேரடிச்சமரைப் பார்த்து அதிர்ந்ததிலும் பின் அவை ஓடியதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்ததிலும் அவளுக்குப் அவைகளின் ‘பெயர்’ விஷயம் மறந்துபோயிற்று. அல்லது அவை அனைத்துக்கும் பெயர்வைக்க நான் பொலிவூட்டுக்குள்ளும் கால்வைக்க வேண்டியிருந்திருக்கும்.

எங்களது வீட்டில் ஒரு ராணுவமேயர் குடி இருந்தானாம். அந்தத் தயாநிதியோ வீட்டை விட்டுப்போகும்போது எதற்குத் தமிழர்களுக்கு இத்தனை பெரியவீடென்று அதைத்தரை மட்டமாக்கிவிட்டுச் சென்றிருந்தான். அவ்வீட்டின் திறப்பு மாத்திரம் இன்னும் எம்மிடம் பத்திரமாகவே இருக்கிறது. ஆனால் வீடுமாத்திரமல்ல அதன் சுற்று மதிலோ, கிணறு , மா, பலா, மாதுளை , கமுகு , தென்னைகளோ எதுவுமில்லை.
முன்பு வீட்டுக்கு மேற்குப்பபுறக்கோடியில் ஒரேயரு மருதாணிச்செடியே நின்றது ஞாபகம். இப்போது வளவுபூராவும் அதுவே காடாக முளைத்திருக்கிறது. ஓங்கி வளர்ந்திருந்த மருதாணி, எருக்கலைச் செடிகளை நீக்கிக்கொண்டுபோய் ஒரு அகழ்வாய்வாளன்போல வீட்டின் அத்திவாரத்தைக் கண்டுபிடித்து ” இதிலேதான் டடா இருந்து படிப்பேனாம்; இந்த அறையில்தான் தாத்தா பொன்னையர் இருப்பாராம்; இதிலேதான் பாட்டி சமைப்பாராம்; இதிலேதான் எல்லோரும் சேர்ந்திருந்து கதைப்போமாம்; இதிலேதான் தூங்குவோமாம்” என்றெல்லாம் காட்டவும் அத்தரையை அதிசயத்தோடு பார்த்துப் பார்த்து,
” எங்கட வீட்டை யார் உடைச்சது… எதுக்கு உடைச்சவை?” என்று கேள்விமேல் கேள்வியாய் கேட்டாள் பூமிகா. முடிந்தவரைக்கும் சொன்னோம்.
பின் ஜெர்மனிக்குத் திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நட்பான தோரணையோடு அசப்பில் அர்விந்த்சாமி போலிருந்த ஒரு இளம் விமானப்படை அதிகாரி ஆசையோடு இவள் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டான்:

” Hey……….Sweety, What’s your name? ”

” No…….I won’t tell you.”

கைகள் இரண்டையும் நெஞ்சுக்குக்குறுக்கே கட்டிக்கொண்டு முகத்தை வேறுபக்கம் திருப்பினாள்.

” why…dear?”
விரலை அவனுக்கு நீட்டி

” You are the gang who broke our house!”

அவனுக்கு மூச்சு திணறியதைப் போலிருந்தது.

காலம்-கனடா- 27 வது வெளியீடு 2006 .

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி