கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

அரவிந்தன் நீலகண்டன்


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

திரு.பித்தன் அவர்களின் கருத்துகள் குறித்து:

வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி-நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை.

‘கடவுள் நினைய கல் ஓங்கு நெடுவரை

வட திசை எல்லை இமயம் ஆக,

தென்அம் குமரியொடு ஆயிடை ‘

தேசத்தின் பண்பாட்டு ஒருமை சங்ககாலத்திலேயே உணரப்பட்டுவிட்ட ஒன்று. இன்று பாரதம் சின்னாபின்னப்பட்டு சிறுமைப்படாமலும், பல்வேறு இன மொழி மக்கள் ஒருவரை ஒருவர் கொலைவெறி கொண்டு அழிக்காமலும் இருக்க உதவுவது இந்த ஒற்றுமையே. இப்பண்பாட்டு ஒருமையின் வலிமையான நூலிழையாக நம் பன்மை வளங்களை அழியாது இணைக்கிறது சமஸ்கிருதம். எங்கெல்லாம் பாரதத்தில் இந்த அடிப்படை ஒருமை அழிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் இனவெறியும், இனங்களை அழித்தொழித்தலும் நடைபெறுவதை காணலாம். உதாரணமாக திரிபுராவினை எடுத்துக்கொள்வோம். அங்கு ஜமாத்தியாக்களும் வங்காளிகளும் பிற வனவாசிகளும் காலம்காலமாக வாழ்ந்து வந்துள்ள நிலைக்கும், இன்று ஜமாத்தியா வனவாசிகள் தங்கள் கிராமங்களை இழந்து சொந்த நாட்டில் அகதிகளாக இருப்பதற்கும் இடையே நடந்தது என்ன ? ஐரோப்பிய இனவாத அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகள் மிஷினரிகளால் பரப்பப்பட்டன. ஜமாத்தியாக்கள் தங்கள் இறுதிச்சடங்குகளை கூட செய்யக்கூடாதெனவும், பெண்கள் ‘ஆரியர்களால் ‘ புகுத்தப்பட்ட அடிமைச்சின்னங்களான திலகம், வளையல்கள், பூவைப்பது ஆகியவற்றை நிறுத்தவேண்டுமெனவும் பத்வாக்கள் NLFTயினரால் சுமத்தப்பட்டன. மிஷினரிகள் ஆரிய இனவாதத்தை தமிழ்நாட்டிலும், பல வனவாசி பிரதேசங்களிலும், எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதும் இதிலெல்லாம் அந்தணர்களை அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இனரீதியில் ‘மற்றவராக ‘ எவ்வாறு மாற்றிக்காட்டினர் என்பதும் குறித்த விரிவான ஒரு ஆராய்ச்சி நூல் விரைவில்-ஒரு வருடத்தில்- வரவுள்ளது. இதில் முக்கியமான ஒரு பகுதி ஈவெராவின் பல கருத்துகள் -சமுதாய சமத்துவம் உட்பட- எவ்வாறு அச்சாக ஹிட்லர் மற்றும் ஹிட்லருக்கு முன்னாலிருந்த ஐரோப்பிய இனவாத அடிப்படையிலேயே அமைக்கப்பட்டவை என்பதை குறித்தது. இதில் ஒரு பாகம் தான் சமஸ்கிருதம் அன்னிய மொழி என்பது. (எனவே இது குறித்து இப்போதைக்கு அதிகம் சொல்வதற்கு இல்லை.) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்து வைத்தியர் கற்கக்கூடிய அளவு இந்த நாட்டு பண்பாட்டோடு ஒன்றிப்போயிருந்த ஒரு மொழி நமக்கு அன்னியமாம். கரிகாலன் போன்ற தமிழ் மன்னர்களால் அவர்கள் குடும்பத்துடன் செய்யப்பட்ட வேத வேள்விகள் அன்னியமாம். ஆனால் வரலாற்றடிப்படையற்ற ஒரு இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட போலி தனித்துவத்தை நம் வரலாறென்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம். சமஸ்கிருதம் அன்னியம் என்னும் எண்ணப்போக்குதான் அன்னியமே ஒழிய சமஸ்கிருதம் அன்னியமல்ல.

இது ஒரு புறமிருக்க முதுநூல் என்று சொல்லப்பட்டதை எப்படி வேதம் என்கிறாய் என வினவுகிறார்.

‘ஒன்று புரிந்த ஈர்-இரண்டின்

ஆறு உணர்ந்த முதுநூல் ‘ என்பது நான் மேற்கோள் காட்டிய ஆவூர் மூலங்கிழார் பாடல். ஆறு அங்கங்களோடு திகழும் நான்மறை என்பது இதன் பொருள். ( ‘அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ‘ என்பது ஆழ்வார் மொழி.)

தமிழரின் தனிப்பெரும் தெய்வமான முருகப்பெருமானின் திருமுகமே ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ‘ ஏற்குமெனில் வடமொழி தமிழருக்கு அன்னியமானதல்ல என்பதற்கு வேறெந்தச் சான்றும் தேவை இல்லை. நிச்சயமாக கபடப்பகுத்தறிவு வேடதாரிகள் மற்றும் ஐரோப்பிய இனவாத எச்சங்களை தங்கள் மூளைகளில் நிரப்பிக் கொண்ட வெறுப்பு வியாபாரிகளின் சான்றிதழ்கள் அவசியமே இல்லை.

2.நான் மேற்கோள் காட்டிய பாரதி பாடலைக்காட்டிலும் தெளிவான பாரதியின் வரி, திரு.பித்தனுக்கு தேவைப்பட்டால்,

‘வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி ‘ என்கிற வரிகளை எடுத்துக்கொண்டும் சிந்திக்கலாம். யாரும் வணங்கிடும் தெய்வம் பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று என பாரதி கூறும் சமய ஒருமை ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேத சிந்தனை மரபிலிருந்தே நம் அனைவருள்ளும் ஊறிப்போயிருக்கும் விஷயம். மாறாக ‘நீ கல்லை கும்பிடுகிறாய், நீ பேயை கும்பிடுபவன் ‘ என்று தொடங்கி ‘நீ இனத்தால் திராவிடன். உன்னுடைய உண்மையான திராவிட சமயம் ஆபிரகாமின் சமயமாக்கும். ஏசுதான் உண்மை கடவுள் ‘ அல்லது ‘இலங்கையில்தான் ஆதாம் படைக்கப்பட்டான். ‘ போன்ற உளறல்களை மதமாற்ற வியாபாரிகள் விற்பதும் அதற்கு பகுத்தறிவுகள் துணை போவதும் நாம் அனைவரும் அறிவோம். திராவிட இனம், ஆரிய இனம் என்பதே போலியான கருத்தாக்கம். பகுத்தறிவுக்கு புறம்பானது. இதை பாரதியும் கூறியுள்ளார். ஜீவா காலத்தில் வெளியிடப்பட்ட தாமரையில் இது குறித்த பாரதியின் கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். கிடைத்தால் எடுத்து தட்டச்சு செய்கிறேன்.

3. ஐரோப்பியர்கள் சொன்னதற்காகவே இங்கு எதையும் யாரும் மறுக்கவில்லை. டார்வினும், டாவ்கின்ஸும், ஹெய்ஸன்பர்க்கும் ஐரோப்பியர்கள்தான். ஆனால் முழுக்க முழுக்க ஐரோப்பிய இனவாதத்தாலும் கிறிஸ்தவ மூடநம்பிக்கைகளாலும் உருவாகியது ஆரிய-திராவிட இனவாதம். ஜூலியன் ஹக்ஸிலி ‘ஆரிய இனம் ‘ என்பது அறிவியல் அடிப்படை அற்றது என கூறியது தெரிந்திருக்குமே! ஆரிய-திராவிட இனவாதத்தை ஏற்றெடுத்து அதன் அடிப்படையில் உருவாக்கிய வெறுப்பியல் சமுதாய இயக்கம்தான் ஈவெரா மற்றும் சி.என்.அண்ணாதுரை முதல் திருவாளர்.மஞ்சள்-துண்டு-பகுத்தறிவு, கள்ளத்தோணி கோவாலு வரை நடத்தும் கீழ்த்தர கூத்தடிப்பு. இதற்கு பெயர் சமுதாய புரட்சியாம், கலகமாம்! ஆனால் டாக்டர்.அம்பேத்கர், ஸ்ரீ நாராயணகுரு, அய்யன்காளி ஆகியோர் செய்ததையெல்லாம் விட இந்த கபட பகுத்தறிவுகள் நடத்திய வக்கிர தெருகூத்துகள்தான் முற்போக்கு உடையது போல செய்யும் பிரச்சாரத்தை போல அயோக்கியதனம் வேறெதுவுமில்லை. எனவேதான் சுவாமி விவேகானந்தர், டாக்டர்.அம்பேத்கர், ஸ்ரீ நாராயண குரு, அய்யன்காளி ஆகியோர் முன்வைத்த சமுதாய சீர்திருத்த அமைப்பினை ஏற்கிறோம். அதனை செயல்படுத்துகிறோம். மிஷினரிகளை நிழல் எஜமானர்களாக கொண்டு ஹிந்து தர்மத்தை திட்டுவதை சமுதாய முற்போக்காக காட்ட முனையும் கீழ்த்தரங்களை எதிர்க்கிறோம்.

4.சுவாமி விவேகானந்தருக்கு உபநிஷதங்கள் பிடிக்கும் எனவே அவை இருக்கும் சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்க வேண்டுமென கூறியிருப்பார் என்பது சுவாமி விவேகானந்தரின் எழுத்துக்களை திரு.பித்தன் அவர்கள் மீண்டும் படிக்க வேண்டுமென என அவரிடம் கோர வைக்கிறது. மிகத்தெளிவாகவே சுவாமிஜி சமூக நீதிக்கான வழிமுறையாக சமஸ்கிருதம் படிப்பதை முன்வைக்கிறார். தாழ்த்தப்பட்ட அந்தணரல்லாதவர்களுக்கு அவர் கூறுகிறார், ‘சமஸ்கிருதத்தை நீங்கள் படியுங்கள் ; உங்களை யார் தடுப்பார்கள் ? அனைத்து சாதியினருக்கும் சமஸ்கிருதத்தை கற்றுக்கொடுங்கள். அதுவே நம் மக்களை உயர்த்துவதற்கான நிச்சயமான வழி. ‘ ஸ்ரீ நாராயணகுருவின் பிரத்யட்ச உதாரணம் நம்முன் உள்ளது. நினைத்துப்பாருங்கள். ஒரு மிகவும் தாழ்த்தப்பட்டு தம் சாதியின் பெயரால் மிகவும் அவமானப்படுத்தப்பட்ட ஒரு மேதை உள்ளம் டாக்டர்.அம்பேத்கரது. இந்த தேசத்தில் சமுதாய தாழ்விற்கான காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்தறிந்தவர் அவர். ஹிந்து மதத்தின் மீது மிகக்கடுமையான விமரிசனங்களை வைத்தவர் டாக்டர்.அம்பேத்கர். புராணங்களை மிகக் கேவலமானவையாக காட்டி அவர் எழுதிய எழுத்துக்களை நாம் அனைவரும் அறிவோம். அதே டாக்டர்.அம்பேத்கர் பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சராகவும், அதற்கு வெளியே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் போராளியாகவும் சமஸ்கிருதத்தை ஏன் ஆட்சிமொழியாக்க வேண்டுமென்றார் ? சமஸ்கிருத அறிவு இந்த சமுதாய சூழலில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயம் மேலெழ மிகவும் உறுதியான வழிமுறை. ஆபிரகாம் லிங்கன் விவிலிய பற்றற்றவர். விவிலியத்தில் பலஇடங்களில் அடிமை முறை நியாயப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் விவிலியமே அடிமை அமைப்பினை நியாயப்படுத்தும் நூலாகவும் பல நூற்றாண்டுகள் விளங்கிவந்துள்ளது. ஆனால் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ் அதே விவிலியத்தினால் பெற்ற மதிப்பீடுகளின் அடிப்படையில் எழுதிய ‘அங்கிள் டாம்ஸ் கேபின் ‘ அடிமை ஒழிப்பிற்கு ஏதுவாகியபோது எந்த அடிமை ஒழிப்புவாதியும், ஆபிரகாம் லிங்கன் உட்பட, விவிலியத்தின் அடிப்படையில் எழுந்த அடிமைஒழிப்பு உத்வேகத்தை குறைகூறவில்லை. மிகவும் தர்க்கரீதியில் அவ்வாறு கூறி முட்டுக்கட்டைகள் எழுப்பியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் அது உண்மையில் எந்த சக்திகளுக்கு உதவியிருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. அதைப்போலவே சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்களின் அடிப்படையில் சாதியம் நிலைபெற்றிருக்கலாம். மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள சில நூல்கள் கூட சாதியத்தை உருவாக்கியிருக்கலாம். ஆனால் சமஸ்கிருத அறிவு கொண்டு சாதியம் வேரறுக்கப்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணங்களாக நம்முன் திகழ்பவர்கள் டாக்டர்.அம்பேத்காரும் ஸ்ரீ நாராயண குருவும், சுவாமி விவேகானந்தரும். மாறாக சமஸ்கிருத வெறுப்பை வைத்து சமுதாய முன்னேற்ற பாவ்லாக்கள் காட்டி பிழைப்பு நடத்தும் தெருக்கூத்து கும்பல்களால் ஏற்படும் இறுதிவிளைவு திண்ணிய நிகழ்வுகள்தான் என்பதும் உண்மை. அப்புறம் டாக்டர்.அப்துல்கலாம் கற்பனை. இதேதையா அநியாயமாக இருக்கிறது! டாக்டர் அப்துல்கலாம் போன்ற ஒரு ஞானி, பாராளுமன்ற வளாகத்தில் இந்த நாட்டின் ஆட்சிமொழியாக தமிழ் விளங்கவேண்டுமென கூறுவாரெனில் கட்டாயமாக அது குறித்து நாம் சிந்தித்தேயாக வேண்டும்.(ஆனால் மஞ்சள்துண்டு பகுத்தறிவுகள், சிவப்பினிலூறி சிறியனவன்றி வேறு சிந்திக்கும் திறனிலாதோர் கூறுவதை கவலையேயின்றி ஒதுக்கிவிடலாம்.) ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த சமுதாய விடுதலையாளர் தன் தனிப்பட்ட கருத்தாக அல்லாது, ஒரு கருத்தியல் வெளிப்பாடாக கூறிய விஷயத்தை ஒதுக்கும் அளவுக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட மனிதர் இப்படி ஒரு ‘ஹைப்போதட்டிக்கல் ‘ சூழ்நிலையை கூறி பதில் சொல்லு என்று கட்டாயப்படுத்துவது வேடிக்கையான விஷயம்.

5.இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். டாக்டர் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ நாராயணகுரு ஆகிய மூவரும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களில் டாக்டர் அம்பேத்கரும், ஸ்ரீ நாராயண குருவும் சாதியத்தின் விளைவுகளை மிகக்கடுமையாக தங்கள் வாழ்வில் அனுபவித்தவர்கள். இம்மூவருமே பாரத தத்துவ மரபுகளையும், வரலாற்றையும் நன்கு ஆராய்ந்தறிந்தவர்கள். இவர்களது பாரத சமுதாயம் மற்றும் மரபுகள் குறித்த ஆழ்ந்த அறிவின் அடிப்படையில் சமுதாய முன்னேற்றத்தில் இவர்கள் வடமொழிக்கு அளித்த ஏற்பு ஒரு புறம். மற்றொரு புறம் ஈவெரா. ஈவெராவைப் பொறுத்தவரை பாரத தத்துவ மரபுகளை குறித்த அவரது அறிவு ஒரு தெருமுனை கிறிஸ்தவ பிரச்சாரகனின் கீழ்த்தர வசவுகளுக்கு அப்பால் ஏதும் கிடையாது. மூன்றாம்தர கிறிஸ்தவ பிரச்சாரத்தின் ஹிந்துமத வசைப்பாடலை பகுத்தறிவென விற்றுப்பிழைத்த ஒரு மனிதரின் மற்றும் அவரது கும்பலின் கருத்தியலில் இருக்கும் சமஸ்கிருத காழ்ப்புணர்ச்சியைதான் சில வாரங்களாக நாம் திண்ணையில் சமஸ்கிருத எதிர்ப்பு என்கிற பெயரில் நாம் காண்கிறோம்.

– அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation