கடிதம் ஜூலை 8 , 2004

This entry is part [part not set] of 41 in the series 20040708_Issue

பாஸ்டன் பாலாஜி


டிக்-மொழியைக் குறித்து பிகேஎஸ் எழுதியவுடனேயே பதில் கொடுக்க ஆசையிருந்தாலும், அவர் சொன்னதில் என்ன தவறு, எங்கே தவறு என்று பிறகு ஆராயலாம் என்று ஒத்திப் போட்டிருந்தேன். இப்பொழுது, வாசித்த நியுஸ்வீக்கின் கடைசி பக்கம் என் சிந்தையைக் கவர்ந்தது. இந்தப் பதிவு அதன் தாக்கமே.

இரு கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். ஒருவர் போர் வீரர். நாட்டிற்காக படையில் பணிபுரிந்தவர். கொண்ட கொள்கைக்காக, அந்த வியட்நாம் போரை, கடமையை முடித்தபிறகு எதிர்த்தவர். எதிரணி வேட்பாளரோ ப்ராக்ஸி ‘உள்ளேன் ஐயா ‘ போட்டுவிட்டு, குட்டிச்சுவரில் உட்கார்ந்து கொண்டு திருட்டு தம் அடித்துக் கொண்டு, அப்பாவின் செல்வசெழிப்பில் உல்லாசபுரியில் திரிந்தவர். முதலாமவர் கல்லூரியிலும் நன்றாகப் படித்து, கூடவே ஹாக்கி, கால்பந்து என்று விளையாட்டிலும் ஜொலித்தவர். எதிரணியில் இருப்பவர்களுக்கோ, எழுத்தாளர் சுஜாதாவை மிஞ்சும் இதய அறுவை சிகிச்சைகள், ஆன்ஜியோகிராம், பேஸ்மேக்கர் நிறைந்த நோயாளி தோற்றம்.

அமெரிக்காவின் ஜனாதிபதிக்குப் போட்டியிடுபவர் ஜான் கெர்ரி. (இவருக்குத் துணையாக நேற்று ஜான் எட்வர்ட்ஸ் அறிவிக்கப் பட்டார்). எதிரணியில் ஆளுங்கட்சியான புஷ் + சேனி கூட்டணி. குடியரசு கட்சியைச் சேர்ந்த துணை ஜனாதிபதிக்கு இதயம் பலவீனமாக இருப்பது யூகி சேது போன்ற அமெரிக்க நையாண்டி தர்பார்களுக்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கும் அவருடைய பலம் குன்றியதாக தோன்ற ஆரம்பித்துள்ளது. பொருளாதாரமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஜிடிபி, ஜிஎன்பி, என்று பல குறியீடுகளில் புள்ளி புள்ளியாக முன்னேற்றம் காணப்பட்டாலும், பக்கத்து வீட்டு ராதாவுக்கோ, எதிர்த்த வீட்டு ராமுவுக்கோ சம்பளம் அதிகரிக்கப் பட வேண்டாம்; இருக்கும் வேளையிலும் ஸ்திரத்தன்மை இல்லாமல், இழந்த வேலையோ திரும்பவும் கிடைக்கப் பெறாமல் சோற்றுக்கே லாட்டரி அடிக்கும் நிலைமை தொடர்ந்தது.

நான்கு மாதத்தில் எலெக்ஷன். அப்பொழுது பார்த்து புஷ்ஷும் இன்ன பிற குடியரசு கட்சிக்காரர்களும் செய்த லூட்டிகளையெல்லாம் படம் பிடித்து மைக்கேல் மூர் டாகுமெண்டரி என்று சொல்லி ஃபிலிம் திரையிடுகிறார். தமிழ்நாடாக இருந்தால், சரத்குமாரை வைத்து சமத்துவபுரத்தையும், பானுப்ரியாவை வைத்து பண நடமாட்டத்தை குறை சொல்லும் படத்தையும் எடுக்க வைக்கலாம். மேலும் ஒருபடி சென்று, புஷ்ஷையே கதாநாயகனாக்கி அமெரிக்காவில் இருந்து பறந்தோடும் தீவிரவாதிகளை டடாரா-டடாராவில் சுற்றி சுற்றி அடிப்பதாக காட்சியமைக்கலாம். அப்படியே, ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தைகளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு எழுச்சிப் பாடல் கொடுக்கலாம். தன்னந்தனியாக உள்நாட்டு குள்ளநரி எதிரிகளின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தும் திடுக்கிடும் திருப்பம் வைக்கலாம்.

ஆனால், ஜார்ஜ் புஷ்ஷும், ஜெயலலிதாவின் பாதையில் திரும்பியிருக்கிறார். (அல்லது ஜெயலலிதா தேர்ந்த தேர்தல் சூட்சுமங்களைப் பின்பற்றுகிறார்). கலைஞரை எதிர்த்து அறிக்கைவிட ஓ. பன்னீர் செல்வத்தைப் பயன்படுத்துவது; திமுக தலைவர் அட்டெண்டன்ஸ் கொடுக்காதத்தை சபாநாயகர், விதியை வைத்து மிரட்டுவது; அரசு செய்த தவறுக்கு மந்திரிகளை பலிகடா ஆக்குவது; அதிகாரிகளை மாற்றி பிரச்சினைகளை எதிர்கொள்வது என்பது போல், அமெரிக்கத் தேர்தலை வெல்ல புஷ்ஷின் டாம் சில திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.

  • ஈராக்கில் அணுகுண்டுகள் காணோமா ? பழியைத் தூக்கி உளவுத் துறையின் மேல் போடு.
  • எல்லா வேலைகளும் வெளிநாட்டுக்கு செல்கிறதா ? உதவித் தொகை கொடுத்ததோடு நிற்காமல், நிதியமைச்சரையும் மாற்று.
  • வயதானோர்க்கு எட்டும் வகையான சிகிச்சை கிடைப்பதில்லையா ? கனடாவில் இருந்து மருந்துகளை வருவிப்பதோடு நிற்காமல், வித்தியாசமான நலத்திட்டங்களைக் கொடுத்துக் குழப்பு.
  • துப்பாக்கிக் கலாசாரம் அதிகரிக்கிறதா ? சாமி கும்பிடாத நாத்திகர்களின் மேல் பழியைத் திருப்பு.
  • போதை மருந்து எங்கும் கிடைக்கிறதா ? ஓரினச் சேர்க்கைத் திருமணங்களைத் தடை செய்வதின் மேன்மையைப் பரப்பு.
  • மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வம் குறைகிறதா ? தணிக்கை செய்யப்படாத ஊடகங்களினால், சமுதாயம் சீரழிவதாக குற்றம் சொல்லு.

    போன தடவை ஜார்ஜ் புஷ் தேர்தலுக்கு நின்றபோது ஊடகங்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தது. அவரின் குறைகளை அதிகம் பெரிதுபடுத்தாமல், சாதாரண மனிதனின் பிரதிபலிப்பாக அவரை உருவாக்கியது. இன்றும் ஜார்ஜ் புஷ், குறைவாகப் படித்து, கல்லூரியில் ஊர் சுற்றி, அவ்வப்போது சில தவறுகளை செய்து, நிறைய ஆசைப்படும் அதே சாதாரண அமெரிக்கர்தான். அதையே இன்று குறையாக சில பத்திரிகைகள் அலசும்பொழுதுதான் குடியரசு கட்சிக்குக் கோபம் வருகிறது. ஜான் கெர்ரியை வல்லவர், போர்முனையை சந்தித்தவர், கோட்பாடுகளுக்காகப் போராடுபவர் என்று சொல்லும்பொழுது செய்வதறியாமல் திகைக்க ஆரம்பித்தார்கள்.

    கவனத்தைக் கவர பல வழிகள் உண்டு. தமிழ் சினிமா என்றால் ‘வைப்பாட்டியாக இருந்தாலும் மருமகளாக ஏற்றுக் கொள்வேன் ‘ என்று கஸ்தூரிராஜா அறிக்கை விடுவார். அதற்குப் பின்புலமாக மகன் செல்வராகவனின் ‘7G ரெயின்போ காலனி ‘ நன்றாக ஓட வேண்டும் என்னும் எண்ணம் இருக்கலாம். ‘டெண்டுல்கர் என்னிடம் திணறுவார் ‘ என்று ஷேன் வார்ன் சொல்லலாம். படம் புக் ஆகாத நமிதா, குமுதத்தைக் கூப்பிட்டு போஸ் கொடுக்கலாம். மார்க்கெட் இழந்த ஜோதிகாவின் பிஆர்ஓ, அவருக்குத் திருமணம் திருப்பதியில் நடந்தேறியதாக கிசுகிசுக்கலாம்.

    அமெரிக்காவிலும் இதே நிலைதான். போட்டி அதிகமானதால் இருபது வயதுப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ், லாஸ் வேகாஸ் சென்று திருமண நாடகத்தை அரங்கேற்றலாம். கிட்டத்தட்ட அதே ரசிகப் பெருக்களை சென்றடைய விரும்பும், புதிய ஆல்பம் வெளியிடும் நாற்பது+ ஜானெட் ஜாக்ஸன் ஆடை கிழிக்கலாம். விவாகரத்து செய்யலாம். வீடியோவில் மக்களை உறைய வைக்கலாம். இவர்கள் எல்லாருக்கும் போதிய அளவு ஊடகத்தில் பத்திகளும், கிலோபைட்களும், கதிர் அலைகளும், கவனிப்புகளும் கிட்டிய பின், ‘தெரியாமல் செய்துவிட்டேன்… மன்னிக்க ‘ என்று சொல்லி விடலாம். அல்லது, ‘சாரி ‘ கேட்காமல், இன்னும் கவன ஈர்ப்புத் தீர்மானங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

    அரசியல்வாதிகளுக்கு பேப்பரில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிது இல்லை. கலைஞர் அறிக்கையை சன் டிவி செய்திகள் மட்டுமே காட்டினாலும், அப்பொழுது ரத்தத்தின் ரத்தம் தவிர அனைவரும் ‘காமெடி டைம் ‘ஆக ரசிக்கிறார்கள். இருட்டடிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நெடுஞ்செழியன் போன்ற ஒருவர், ஜெயா முதல் பிபிசி வரை வருவது எப்படி ? இளைஞர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது எவ்வாறு ? இருதய நோயை வைத்துக் கொண்டு அஞ்சாநெஞ்சன் என்று பெயர் வாங்குவது எவ்விதம் ?

    சொன்னார் ஒரு வார்த்தை…. A Very, Very Dirty Word

    இதில் ஆணின் ஆணவம் இருக்கலாம். ஹாலிபர்ட்டன் சமாசாரத்துக்கும், இந்த அலட்சியப்படுத்தலுக்கும் சம்பந்தம் கிடையாது. தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு எப்போது, எவ்வளவு கோபப்பட வேண்டும் என்பது தெரியும். உணர்ச்சிவசப்படாமல் கோபப்படுவது ஒரு கலை.

    போலீஸுக்கு முரண்டு பிடிக்கும் கலைஞர், வேட்டி அவிழ்ந்து கண்ணாடி நொறுங்கி நடக்கும் மாறன், சேலைக் கிழிசலோடு துரத்தலை அரங்கேற்றிய எதிர்க்கட்சித் தலவர் ஜெயலலிதா, எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தில் ஜெயலலிதா என்று உதாரணம் காட்டுவேன்.

    கட்சியை விட்டு முன்னாள் மந்திரிகள் நான்கு பேர் விலகி விட்டார்கள். அவர்கள் போனதால் ஒரு இழப்பும் இல்லை. அதை குறித்து, இதை விட எளிய மொழியான ‘உடலில் இருந்து உதிர்ந்த ரோமங்கள் ‘ என்று ஜெயலலிதா அன்று சொன்னதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இங்கு டிக் சேனி சொன்ன மொழிக்கு பலத்த கண்டனம் எதுவும் கிளம்பவில்லை. நெருங்கியவர்களுடன் அன்றாட வாழ்வில், சர்வ சாதாரணமாக பயிலும் வார்த்தை. அமெரிக்கர்களில் பலரும் கெட்ட கெட்ட வார்த்தையை வைத்தே சொற்சிலம்பம் நடத்தி வயிற்றைப் புண்ணாக்கும் ஜார்ஜ் கார்லின் முதல் டென்னிஸ் மில்லரின் ரசிகர்கள். இதில் கட்சிப் பாகுபாடும் கிடையாது, வயது வித்தியாசமும் கிடையாது. ஆனால், ஆண்பாலுக்கு பெண்பாலுக்கும் சம அந்தஸ்து இருக்கிறதா என்று எழும்பும் கேள்விக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.

    E-Tamil

    Series Navigation

  • author

    பாஸ்டன் பாலாஜி

    பாஸ்டன் பாலாஜி

    Similar Posts