கடிதம் ஜனவரி 6, 2005 – சோதிப் பிரகாசத்தின் தொடர்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

பா.ரெங்கதுரை


திண்ணை வாசகனான நான் அமெரிக்க பசிபிக் நேரப்படி ஒவ்வொரு வியாழன் இரவும் திண்ணை வலையேறியதும் முதலில் படிப்பது சோதிப் பிரகாசம் அவர்களின் மெய்மையின் மயக்கம் கட்டுரைத் தொடரையே. இந்தத் தொடரை அவர் 32 வாரங்களில் முடித்து விட்டது சற்று ஏமாற்றம் தருகிறது என்றாலும் விரைவில் அவர் வேறு ஒரு தொடரை எழுதுவார் என்று எதிர்பார்ப்போமாக.

இத் தொடரின் பகுதி 25-ல் சோதிப் பிரகாசம் தம் இளம் வயதில் நடந்த சம்பவங்களைச் சுவைபட எழுதியுள்ளார். குறிப்பாக திராவிட இயக்கம் ஆட்சியைப் பிடித்த பின்னர் அதை விமர்சித்து அவர் எழுதிய கவிதைகள் மிகவும் நயமானவை.

‘பாட்டாளி மக்கள் எங்கள் கூட்டாளி என்று சொல்லிக்

கோட்டை பிடித்தோர்தம் குறுக்கு வழி நாடறியும் ‘

‘உதிக்கின்ற சூரியன் போல் ஒளியூட்ட வந்ததுவாய் – இருள் மூட்டி

இருட்டினில் மறைந்திருந்து பணம் திரட்டும்

திருட்டு மதியோரை நாமறிவோம்; நாடறியும்! ‘

– மேற்படி கவிதைகளைத் தவிர அவர் எழுதிய பிற சுவையான கவிதைகளை, குறிப்பாகச் சொல்வதானால் திராவிட இயக்கங்களை விமர்சித்து அவர் எழுதிய கவிதைகளை அறிய என் போன்ற வாசகர்கள் ஆவலாய் இருக்கின்றோம். எனவே, சோதிப் பிரகாசம் அக் கவிதைகளை திண்ணையின் கவிதைப் பக்கங்களில் வெளியிடுவார் என்று நம்புகிறேன். மேலும், அவர் திராவிட இயக்கங்களைப் பற்றிய தொடர் ஒன்றையும் எழுத வேண்டுகிறேன்.

இவை தவிர வழக்கறிஞர் சந்துரு ஒரு கூட்டத்தில் சோதிப் பிரகாசத்தைப் பேச விடாமல் தடுத்தது போன்ற சம்பவப் பதிவுகள் மிக முக்கியமானவை.

‘கோவை ஞானி, இன்குலாப், அஸ்வ கோஷ் போன்றவர்களுக்கு அறிவாண்மையோ, துணிச்சலோ அல்லது நாணயமோ இருந்திடவில்லை ‘ என்று அத்தகைய போலிகளை சரியாக இனம் கண்டிருக்கிறார் சோதிப் பிரகாசம்.

சில ஆண்டுகளுக்கு முன் ‘ மார்க்சிய அழகியல்வாதி ‘ ஒருவருக்கு விருது கொடுத்து இமாலயத் தவறிழைத்ததன் மூலம் சோரம் போய் விட்ட விளக்கு இலக்கிய அமைப்பு, வரும் ஆண்டிலாவது தன் தவறைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாவிடில் சாகித்திய அக்காதமி விருதுக்கு கிடைக்கும் மரியாதை கூட விளக்கு விருதுக்கு கிடைக்காது என்பதனை அதன் பொறுப்பாளர்கள் உணர வேண்டும்.

பா.ரெங்கதுரை

சியாட்டல், அமெரிக்கா

rangaduraib@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

பா. ரெங்கதுரை

பா. ரெங்கதுரை