கடவுச் சொற்களும் வரிசை எண்களும்

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

மு. இராமனாதன்


இந்தக் கணினி யுகத்தில் தகவல்கள் எல்லாம் கையெட்டும் தூரத்தில் அல்லது கை சொடுக்கும் கால அவகாசத்தில் உள்ளன. ஆனால், அவற்றை அடைவதற்குக் காவலாக நிறுத்தப்பட்டிருக்கும் கடவுச் சொல்லை (password) முதலில் கடந்தாக வேண்டும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் கோவை தொழில்நுட்பக் கல்லுரி(Coimbatore Institute of Technology- CIT) மாணவர்களாக இருந்தபோது உலகம் கணினிமயம் ஆகவில்லை. இணையம் உருவாகவில்லை. ஆதலால் கடவுச் சொற்களும் இல்லை. ஆனால், CIT-யில் எங்கள் எல்லோருக்கும் வரிசை எண் (roll number) இருந்தது. கடவுச் சொற்களுக்கும் வரிசை எண்களுக்கும் சில தொடர்புகள் உண்டு. என்றாலும், வேறுபாடுகளே மிகுதி.

எனது அலுவலக computer network-இல் பிரவேசிப்பதற்குக் கடவுச்சொல் வேண்டும். அது எட்டு எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் இரண்டு Capital எழுத்துக்களும் இரண்டு எண்களும் ஒரு குறியீட்டெழுத்தும் இருந்தாக வேண்டும். இந்தச் சிக்கலான அர்த்தமற்ற சொல்லை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சொல்லை மீண்டும் பயன்படுத்தலாகாது.

என்னுடைய இன்னல்கள் அலுவலகத்தோடு முடிவதில்லை. நான் வசிக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தின் மின்கதவிற்கு ஒரு கடவுச்சொல் இருக்கிறது. இதை என்னோடு ஆலோசிக்காமல் நிர்வாகம் இரண்டு மாதங்களுகு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்கிறது. மேலும் ஹாங்காங்கில் வசிப்பதற்கு ஒரு குடியுரிமை எண் உண்டு. இன்னும் வங்கிக் கணக்கு எண், கடன் அட்டை எண், தானியங்கிப் பணப்பட்டுவாடா எந்திரத்தின் கடவு எண் என்று பட்டியல் நீள்கிறது. இதைத் தவிர இணையச் சேவைக்கான கடவுச் சொல், அதைக் கடந்து உள்ளே போனால் மின்னஞ்சல்களுக்கான கடவுச் சொற்கள். கடந்த சில ஆண்டுகளாக வங்கிக் கணக்குகள் காகிதத்தில் அச்சடித்து வருவதில்லை. இணையத்தில்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். தொலைபேசி, இணையம், தண்ணீர், மின்சாரம் போன்ற சேவைகளுக்கான கணக்குகளையும் அவ்வண்ணமே பார்த்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். ஒவ்வொன்றிற்கும் கடவுச்சொற்கள் தனித்தனியானவை; எல்லாவற்றையும் நானே நினைவில் கொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் வேண்டப்பட்டவர்களின் தொலைபேசி எண்கள் நினைவில் இருக்கும். இப்போது ஒருவருக்கே பல எண்கள். வீட்டிற்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று, செல்பேசிக்கு ஒன்று; ஒன்றுக்கு மேற்பட்ட செல்பேசி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் அவரவர்களின் தொலைபேசி எண்களே நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை.

நாள்தோறும் புழங்குகிற எண்களை நினைவில் நிறுத்துவதில் இத்துணை சிரமம் இருக்கிறது. என்றாலும், இப்போதும் என் நினைவில் தங்கியிருக்கும் ஓர் எண் உண்டு. CIT-யில் என்னுடைய வரிசை எண்- 1130. CIT-யில் எல்லோருக்கும் அவரவரின் வரிசை எண்கள் பிரியமானது. ஏனெனில், அது வெறும் எண் மட்டுமில்லை, அதில் CIT-யின் மணம் கவிந்திருக்கிறது. எனது எண் மட்டுமல்ல. இன்னும் பலரது எண்கள் எனக்கு நினைவிருக்கிறது. கோதண்டராமன் பரோபகாரி. தனக்ககாக மட்டுமின்றி எனக்காகவும் பாடங்களைப் படித்தவன், அவனது எண் 1081. 1981ஆம் ஆனண்டு வெளியேறிய மாணவர்களின் சந்திப்பை இந்த வருடம் நடத்தியவன் சந்திரசேகரன், அவனது எண் 1047. ரமேஷ் எனது அயல்வாசி. தேர்வுகளின் போது எனக்கு அருகாமையிலிருந்து மாங்கு மாங்கு என்று எழுதிக் குவிப்பான், ஆனால், ஒரு அட்சரம் போலும் எனக்குக் காட்டாத கருமி, அவனது எண்: 1131. ஆதியும் அந்தமும் இல்லாதவன் அனந்தன். ஆனால் எங்கள் செட்டில் அனந்தனே ஆதி. அதாவது ஆரம்பம். பிரிவுகளில் அகரவரிசைப்படி முதலாவது இயற்பியல் (Chemical). அதில் முதலாமவன் அனந்தன் – அனந்த நாரயணன். அவனது எண்:C301

இந்த இடத்தில் இன்னொரு அனந்தனைப் பற்றியும் சொல்லவேண்டும். அனந்த கிருஷ்ணன். அனந்த கிருஷ்ணன் அழகாயிருப்பான். அது முக்கியமில்லை. அவனுக்குப் பொங்கல் பிடிக்காது. அது முக்கியம். செவ்வாய்க் கிழமை காலைதோறும் அவன் மெஸ்ஸில் போடப்படும் பொங்கலைப் புறக்கணித்து காண்டீனுக்குப் போவான். மெஸ்ஸில் பொங்கல் unlimited, எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அது அவரவரின் மனோதைரியத்தையும், ஆரோக்கியத்தையும் பொறுத்தது. பொங்கலோடு வடையும் பரிமாறப்படும். மற்றவர்களுக்கு முன்னால் மெஸ்ஸிற்குப் போய் அவனது வரிசை எண்ணைச் சொன்னால் ஒரு வடை உபரியாகக் கிடைக்கும்.

எமது கல்லூரி நகருக்கு வெளியே இருக்கிறது. நண்பர்கள் அவ்வப்போது ஊர் சுற்றவோ சினிமாப் பார்க்கவோ நகரத்திற்குப் போவார்கள். சாப்பிடுகிற நேரத்திற்குத் திரும்ப மாட்டார்கள். அது வெள்ளிக்கிழமை இரவாய் இருந்தால் அவர்களின் எண்கள் ஒரு தட்டு மட்டன் வறுவலைக் கூடுதலாகத் தருவிக்கும். புதன்கிழமை மாலையாயிருந்தால் கேக் கிடைக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை மதியம் சினிமாவிற்குப் போகிறத் தவறை யாரும் செய்ததில்லை. CIT-யில் ஞாயிறு மதியம் பரிமாறப்பட்ட பிரியாணி-சிக்கன் கறிக்கு இணையான சினிமா கோடம்பாக்கத்திலும் ஹாலிவுட்டிலும் அப்போது எடுக்கப்படவில்லை.

சினிமாவிற்குப் போவதெல்லாம் செலவு பிடிக்கிற காரியமில்லை. அப்போது CIT-யிலிருந்து உப்பிலிப்பாளையத்திற்குப் பேருந்துக் கட்டணம் 35 காசுகள், டவுன் ஹாலுக்கு 40 காசுகள், வடகோவைக்கு 50 காசுகள். சென்ட்ரல், கீதாலயா, ரீகல் திரையரங்குகளில் இரண்டாம் வகுப்பிற்குக் கட்டணம் இரண்டு ரூபாய் சொச்சம். மலையாளப் படங்களுக்கென அறியப்பட்ட ஸ்ரீனிவாஸா திரையரங்கில் அதுவே முதல் வகுப்புக் கட்டணம். கடைசிப் பேருந்திற்கு அவகாசம் இருந்தால் கெளரிசங்கரில் சாம்பாரில் முக்கிய இட்லிகள் சாப்பிடலாம். அவகாசம் இல்லையென்றால் CITக்கு முந்தின நிறுத்தமான ஹோப் காலேஜில் இறங்கி, சேலம் ரெஸ்டாரண்டில் முட்டை புரோட்டா சாப்பிடலாம். நட்சத்திர உணவகங்களில் உயர்தரப் பரிசாரகர்களால் தயாரிக்கப்பட்டு கைபடாமல் பரிமாறப்படும் எந்த உணவு வகையும் அதற்குப் பக்கத்தில்கூட வர முடியாது.

பீளமேடு வசந்தி டாக்கீஸ் ஒரு டெண்ட் திரையரங்கம். இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு நடந்து போய்ப் படம் பார்த்துவிட்டு வந்து விடலாம். ‘நாடோடி மன்னன்’ மாதிரிப் படங்களுக்கு மூன்று இடைவேளைகள் விடுவார்கள் என்பதைத் தவிர வேறு குறை சொல்ல முடியாது. திரும்புகிற போது மெல்லிய பனி பெய்து கொண்டிருக்கும். மாலை நேரம் கைலி கட்டிய CIT மாணவர்களால் நிரம்பி வழியும் நாயர் கடையும், TB என்று அழைக்கப்பட்ட மருத்துவக் கல்லுரிக்கு முன்னாலிருக்கும் தேநீர்க் கடையும் அப்போது மூடியிருக்கும். ஆனால் மணீஸ் கபே திறந்திருக்கும். தேங்காய் பன் சாப்பிடலாம்.

ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதம் களை கட்டிவிடும். திருவிழாக் கோலாகலம் நிறைந்துவிடும். நாடக விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், தமிழ் மன்றத்தின் பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள், Sports Day, மாணவர் யூனியன் ஆண்டு விழா, விருந்தினர்கள் நிரம்பி வழியும் Hostel Day, இளையவர்கள் சீனியர்களுக்கு வழங்கும் Farewell விருந்து. முத்தாய்ப்பாக வருவது இறுதியாண்டு மாணவர்கள் விடைபெறும் At-home Party. இப்போதும் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடல் எங்கே ஒலித்தாலும், ஒரு நிமிடம் நின்று கேட்காமல் எந்த CIT மாணவனாலும் கடந்து போக முடியாது.

நான் CIT-யைப் பற்றிப் பேசுகிற போதெல்லாம் எனது கண்களில் வீசுகிற ஒளி, வீட்டுக் காரியங்களைப் பற்றிப் பேசுகிற போது மங்கி விடுவதாக எனது மனைவி எப்போதும் புகார் சொல்கிறார். CITயில் மாணவர்கள் உள்ளபடியே படித்தார்களா என்பதும் அவரது சந்தேகங்களுள் ஒன்று.

CITயில் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும் கற்றோம். வாழ்க்கையை ரசித்தோம். அதை மகிழ்ச்சியோடு நேரிட்டோம். எங்களுக்கு ஒரு வருடம் முன்பு வரை படித்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தேர்வு எழுதினார்கள்- Integrated System. பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் முறை எங்கள் செட் முதற் கொண்டுதான் அறிமுகமானது. நாங்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறவரை காத்திருந்த பல்கலைக்கழகம், அதற்குப் பிற்பாடு பொறியியற் படிப்பை நான்காண்டாகக் குறைத்துவிட்டது. அதாவது எங்களுக்கு முன்னால் படித்தவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் தேர்வு எழுதினார்கள். எங்களுக்குச் சில ஆண்டுகளே பின்னால் படித்தவர்கள் நான்காண்டுகளில் பட்டம் பெற்றார்கள். நாங்களோ ஐந்தாண்டுகள், ஆண்டிற்கு இரண்டு முறை தேர்வு எழுதினோம். ஆனால் தேர்வுகள் எங்களுக்கு அச்சமூட்டவில்லை. வகுப்பறைகள் களைப்படையச் செய்யவில்லை. ஆசிரியர்களில் பலரும் எங்களை நண்பர்கள் போலவே நடத்தினார்கள். கல்வி போதிப்பதை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள். விசாலமான வகுப்பறைகளிலும் சோதனைக் கூடங்களிலும் மெல்லிய காற்றுப் போல் பொறியியல்க் கல்விப் பரவிக் கிடந்தது. உணர்ந்தும் உணராமலும் நாங்கள் அதை சுவாசித்தோம். ஆனால் முழுமூச்சாக உள்வாங்கிக் கொண்டது தேர்வுகளுக்கு முன்னால்தான் என்பதையும் சொல்ல வேண்டும். பகலிரவாகப் படித்தோம். நள்ளிரவிற்குப் பல மணி நேரங்கள் பின்னாலும் விடுதி அறைகளில் விளக்குகள் எரியும். திருவண்ணாமலை கார்த்திகை தீபம், சபரிமலை மகர ஜோதி மாதிரி அப்போது பழனி, திருமலை, மருதமலை என்றழைக்கப்பட்ட CIT விடுதிகள் எல்லாம் ஒளிப்பிழம்பாக விளங்கும். Thermodynamics-உம், Theory of Structures-உம் எங்களுக்கு வெகு அருகாமையில் வருவதும் அப்போதுதான்.

வகுப்பறைக்கு உள்ளே பொறியியலையும் வெளியே வாழ்வியலையும் கற்றோம். அந்தக் கல்விதான் கர்ணனின் கவச குண்டலம் போல எங்களைக் காக்கிறது. காரியாபட்டியிலிருந்து கலிஃபோர்னியா வரை விரவிக்கிடக்கும் CIT மாணவர்களின் பலமாக விளங்குகிறது. இப்போது ஒன்று புரிகிறது. CIT-யின் வரிசை எண், வெறும் எண் மட்டுமல்ல, அதுவே ஒரு கடவுச்சொல், வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கான கடவுச்சொல்; வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான கடவுச்சொல், எந்தக் கட்டாயங்களும் இல்லாமல் மனசில் நிற்கிற மந்திரச் சொல்.

[இணையதளம்: www.muramanathan.com; மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com]

நன்றி: யுகமாயினி, பிப்ரவரி 2011

Series Navigation

author

மு இராமனாதன்

மு இராமனாதன்

Similar Posts