ஒரு ராஜா ஒரு ராணி

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கௌரிகிருபானந்தன்


அமெரிக்காவில் இருக்கும் அருணாவுடன் சாட்டிங் செய்துகொண்டே விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள் ராதிகா. பக்கத்திலேயே இருந்த மியூசிக் சிஸ்டத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு தரையை அதிர வைத்துக் கொண்டிருந்தது.
“அரைமணி நேரமாக கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். காதில் விழவில்லையா?” கத்திக்கொண்டே வந்த வசுந்தரா பாட்டை நிறுத்திவிட்டு “தோசையை சாப்பிட வா. மணி பத்தாகிவிட்டது. இன்னும் எப்போ சாப்பிடப் போகிறாய்? ஞாயிறுக்கிழமை வந்தாலே எல்லா வேலைகளையும் தாமதப்படுத்த வேண்டுமா என்ன?” என்று மகளைக் கடிந்துகொண்டாள்.
“ஜஸ்ட் ஹா·பனவர் மம்மீ!” என்றாள் ராதிகா.
“ஹா·பும் இல்லை. ·புல்லும் இல்லை. எழுந்து வா. எல்லோரும் சாப்பிட்டாச்சு. உனக்கு தோசை வார்த்துவிட்டு மாமி சமையல் வேலையை ஆரம்பிக்கணும். இன்னிக்கு உங்க அப்பாவுக்கு தயிர்வடை சாப்பிடணும்னு மசக்கை. லஞ்சில் உனக்கு என்ன வேணுமோ சீக்கிரமாக சொன்னாயானால் ஒரு வேலை முடிந்து விடும்.”
“ஏதோ ஒன்று செய்யச் சொல்லுங்க மம்மீ” என்று சொல்லிக் கொண்டே உணவு மேஜையின் முன்னால் வந்து உட்கார்ந்தாள் ராதிகா.
சமையல்கார மாமி ராதிகாவின் முன்னால் தேங்காய் சட்னியையும், ஆவி பறக்கும் சாம்பார் கிண்ணத்தையும் வைத்து விட்டு தோசை வார்த்துக் கொண்டு வருவதற்காக சமையலறைக்குள் விரைந்தாள். ஐந்து நிமிடங்களில் தோசைத் திருப்பியின் மீதே தோசையைக் கொண்டு வந்து பரிமாறிவிட்டு, “சாப்பிடும்மா. இது முடிந்த பிறகு இன்னொரு தோசை கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஸ்டவ் அருகில் போய் நின்று கொண்டாள்.
வசுந்தரா மகளுக்கு எதிரே வந்து உட்கார்ந்து கொண்டாள். “வருகிற வியாழக்கிழமை அன்று உன்னைப் பெண் பார்க்க வரப் போகிறார்கள். புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு ஊர்வசி ப்யூட்டி க்ளினிக்கில் அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருக்கிறேன், ·பேஷியலுக்காக. ஆ·பீஸிலிருந்து நேராக அங்கே போய்விடு. எந்த டிரெஸ் பொருத்தமாக இருக்குமோ இப்பவே பார்த்து வைத்துக் கொள். புடவையைக் கட்டத் தேவையில்லை. நல்ல சூடீதாராக பார்த்து எடுத்து வை. சொன்னதெல்லாம் நினைவு இருக்குமா? மறந்தே போய் விட்டேன் மம்மீ என்பாயா? ஒரு மாதமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன், இந்த மாதத்தில் ஒரு நாள் லீவுக்காக சொல்லிவை என்று.”
அம்மா பேசும் போது குறுக்கே பேசுவது, மாற்றங்களை சொல்வது எதுவுமே சாத்தியம் இல்லை. எல்லாமே ஆணைகள்தான்.
“அப்படியே செய்கிறேன் மம்மீ!”
“எழுந்திரு. பீரோவில் நல்ல டிரெஸ் என்ன இருக்கோ பார்க்கலாம். இல்லாவிட்டால் மாலையில் புதுசா ஒன்று வாங்கிவிடலாம். இப்பொழுதே எழுந்துகொள்ளாதே. மாமி இன்னொரு தோசையை எடுத்துக் கொண்டு வருகிறாள் பாரு” என்றவள், “மறுபடியும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகொள்ளாதே. தோசை சாப்பிட்டு முடித்ததும் ரூமுக்கு வா. கழுத்துக்கும் காதுக்கும் என்ன போட்டுக்கொள்ளணுமோ, எந்த வளையல்கள் நன்றாக இருக்குமோ பார்த்து வைப்போம்” என்றாள் வசுந்தரா.
தோசை சாப்பிட்ட தட்டை எடுத்துக் கொண்டு போகச் சொல்லி வேலைக்காரப் பெண்ணிடமும், ·பிரிஜ்ஜிலிருந்து ஆரஞ்சு சாற்றை எடுத்து ராதிகாவிடம் தரச்சொல்லி சமையல்கார மாமியிடமும் ஒரே நேரத்தில் ஆணைகளை பிறப்பித்தாள் வசுந்தரா.
சமையல்கார மாமி கொண்டு வந்த பழச்சாற்றை கடகடவென்று குடித்துவிட்டு ‘இனி போகட்டுமா?’ என்பது போல் பார்த்தாள் ராதிகா.
“எழுந்து வா. பீரோவைத் திறந்து பார்ப்போம்” என்று மகளை இழுத்துப் போகாத குறையாக அறைக்குள் தள்ளிக் கொண்டு போனாள் வசுந்தரா. கழுத்திற்கும், காதிற்கும் என்ன போட்டுக் கொள்ள வேண்டுமோ தானே தேர்வு செய்து, புது சூடீதார் ஒன்றை வெளியில் எடுத்தாள். “இது வெளியிலேயே இருக்கட்டும். இன்னொரு தடவை அயர்ன் செய்து வாங்கி வைக்கிறேன்” என்றவள் “இனி நீ போகலாம்” என்று மகளுக்கு விடுதலை தந்தாள்.
மறுபடியும் அம்மா லஞ்சுக்கு அழைக்கும் வரையில் நிம்மதியாக சாட்டிங் செய்யலாம். லஞ்சுக்கு அரைமணி நேரத்திற்கு முன்னால் குளியலை ஒப்பேற்றிவிட்டு சாப்பாட்டு கந்தாயத்தை முடித்து விட்டால் மாலை தேநீர் நேரம் வரையில் அம்மா தன்னைத் தொந்தரவு செய்ய மாட்டாள். ‘ஞாயிறுதானே, போகட்டும்’ என்று விட்டு விடுவாள் என்று நினைத்துக் கொண்டே ராதிகா மறுபடியும் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து சாட்டிங்கைத் தொடர்ந்தாள்.
அதற்குள் வசுந்தரா மறுபடியும் உள்ளே வந்து மஞ்சள் நிற ஸ்டிக்கர் காகித்தின் மீது ‘புதன்கிழமை மாலை ஐந்து மணிக்கு ப்யூட்டி பார்லர், வியாழன் காலை பத்து மணிக்கு பெண் பார்த்தல்’ என்று எழுதி கம்ப்யூட்டர் பக்கத்தில் ஒட்டி வைத்துவிட்டுப் போனாள்.
ராதிகாவுக்கு பத்து நாட்களுக்கு முன்னால்தான் இருபத்து மூன்று வயது முடிந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னால்தான் வேலை கிடைத்தது. மூன்று மாதங்களுக்கு முன்னால்தான் இன்ஜினியரிங் பட்டம் கையில் கிடைத்தது. நான்கு மாதங்களுக்கு முன்னாலலேயே வேலை கிடைத்தது என்றால் காம்பஸ் இன்டர்வ்யூவில் கிடைத்தது என்று அர்த்தம். இப்பொழுது வரன் ஒன்று வந்திருக்கிறது. அம்மாவின் கண்ணணோட்டத்தில் ரொம்ப நல்ல இடம்.
“உங்க அம்மாவுக்கு பிடித்திருக்கிறது என்றால் இனி மறுபேச்சு இல்லை” என்றார் அப்பா.
போட்டோவில் பார்க்க பையன் நன்றாகத்தான் இருந்தான்.

“சதீஷ்! இந்த நான்கு ·போட்டோக்களையும் பாரேன். இதில் எது பிடித்திருக்கிறதோ சொல்லு” என்றாள் அம்மா.
“அவர்களுக்கு ஒரே மகள். ரொம்ப பிரில்லியண்ட். உன்னைப் போலவே சிறு வயது முதல் கான்வென்ட் படிப்பு. அதற்குப் பிறகு இன்ஜினியரிங் என்ட்ரன்ஸில் நல்ல ரேங்க். காம்பஸ் இன்டர்வ்யூவிலேயே வேலை. முகத்தில் நல்ல களை. எங்களுக்கு இந்தப் பெண்ணை ரொம்பப் பிடித்திருக்கிறது.” அம்மாவும் அப்பாவும் ஒரே பெண்ணுக்கு ஓட்டு போட்டார்கள்.
“ஆமாம். அவர்களுக்கும் சொந்த வீடு இருக்கிறது. அந்தம்மாள் மகளை படிக்க வைப்பதற்காகவே வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டாளாம். அவருக்கும் பென்ஷன் வரும் வேலை. நன்றாகவே செட்டில் ஆகிவிட்டார்கள். நமக்கோ வரதட்சணை எதுவும் தேவையில்லை. கல்யாணத்தை கிராண்டாக நடத்தித் தந்தால் போதும். என்ன சொல்கிறாய்?” அப்பா கேட்டார்.
சதீஷ¤க்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
“உனக்கு பயாலஜி வேண்டாம். உன்னால் படிக்க முடியாது. எம்.பி.சி.க்கு அப்ளிகேஷன் வாங்கி வந்திருக்கிறேன். உனக்காக நானே ·பில் கூட செய்து விட்டேன். பாரு” என்று அப்பா சொன்ன போது “எனக்கு டாக்டராக வரணும்னு ஆசையாக இருக்கு டாடீ!” என்று சொல்ல நினைத்தாலும் “போகட்டும். அதில் சீட் கிடைக்கவில்லை என்றால் அப்பாவுக்குக் கோபம் வரும்” என்று நினைத்து எம்.பி.சி. குரூப்பிலேயே சேர்ந்தான் சதீஷ்.
“மேத்ஸ¤க்கு உன்னை நரசிம்மன் சார் வகுப்பில் சேர்த்திருக்கிறேன். நாளை முதல் போகணும்” என்று சொன்னால் சரி என்று சொன்னான்.
“உங்க மகனுக்கு ஐ.ஐ.டி.யில் சீட் கிடைத்திருக்கிறதாமே” என்று உறவினர்கள் பாராட்டு தெரிவித்தபோது “முதலிலிருந்தே கைடன்ஸ் எல்லாம் என்னுடையதுதான்” என்றார் அப்பா. இனி அம்மாவோ படிக்கும் பசங்கள் என்ன சாப்பிடணுமோ, என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யணுமோ விடாமல் சொல்லிக் கொண்டே இருப்பாள். ஐ.ஐ.டி.யில் சேர்ந்தாலும், அமெரிக்காவுக்கு போனாலும் அம்மா, அப்பா காதில் குடியிருக்காத குறையாய் அறிவுறைகளை வழங்கிக் கொண்டே இருந்தார்கள்.
ஒரே மகன் இல்லையா! அவர்களை எந்த விஷயத்திற்கும் நோகடிப்பது சதீஷ¤க்குப் பிடிக்காது. அதோடு அவர்கள் என்ன சொன்னாலும் தன்னுடைய நல்லதற்காகத்தானே. இப்பொழுது தான் இவ்வளவு பெரிய பொசிஷனில் இருக்கிறோம் என்றால் அது அவர்களுடைய ஆசிகள்தானே. சரி, அந்தப் பெண்ணையே பார்ப்போம். இருபத்தி மூன்று வயதாம். போட்டோவில் பார்த்தால் பத்தாம் வகுப்பு படிக்கும் கான்வென்ட் சிறுமியைப் போல் இருந்தாள்.

“வரதட்சிணைக்கு என்ன வந்தது? இந்தக் கையால் வாங்கினால் அந்தக் கையால் செலவாகி விடும். அதெல்லாம் எதுவும் வேண்டாம். நல்ல மேரேஜ் ஹாலாகப் பார்த்து புக் செய்து விடுங்கள். ஏ.சி. கட்டாயம் இருக்கணும். காடரிங் நம்பர் ஒன்னாக இருப்பவர்களாக பாருங்கள். சீர் வரிசையைப் பற்றி உங்களுக்குகே தெரியும். நான் சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய அந்தஸ்துக்கு குறை வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.”

நள்ளிரவு நேரத்தில் ·போன் மணி ஒலித்ததும் பதற்றத்துடன் ரிசீவரை எடுத்தாள் வசுந்தரா.
“மாமீ! ஆனாலும் உங்க மகளுக்கு இவ்வளவு திமிரு ஆகாது. ஒரு வார்த்தை சொன்னால் கேட்டுக் கொண்டால்தானே. வீட்டு வேலை எதுவும் தெரியாது என்றால் போகட்டும். கற்றுக் கொள்வோம் என்ற ஆர்வம் கூட இல்லை அவளுக்கு. இனியும் என்னால் சமாளிக்க முடியாது. மூன்று நாட்களாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். இந்தியாவுக்கு போகணும் என்றால் சென்னைக்கும் ஹைதராபாதுக்கும் போவது போல் உடனே நடக்கக் கூடிய காரியமா?”
சதீஷ் உரத்தக் குரலில் கத்திய போது வசுந்தராவில் தூக்கக் கலக்கம் பறந்தோடிவிட்டது.
“அவளிடம் ·போன் கொடு சதீஷ்! நான் பேசுகிறேன்” என்றாள்.
மறுமுனையில் அழுகையும் விசும்பல் சத்தமும் கேட்டது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. இந்தக் காலத்துப் பசங்கள் மேலுக்கு பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருப்பார்கள். உள்ளே எப்படி என்று யாருக்குத் தெரியும்? ரொம்ப துன்புறுதத்துகிறானோ என்னவோ. வரதட்சணை வேண்டாமென்று சொல்லிக்கொண்டே பத்துலட்சத்திற்கு செலவு வைத்தார்கள்.
இப்போ ஏதாவது பேசினால் இன்னொரு ·போனில் கேட்டுக் கொண்டிருப்பானோ என்னவோ.
“இப்போ உங்களுக்கு மணி என்ன?” என்ன கேட்டுவிட்டு “சதீஷ் ஆபீசுக்கு போன பிறகு போனில் கூப்பிடு” என்றாள் வசுந்தரா. ராதிகாவும் அதே போல் செய்தாள்.
“நான் என்ன செய்தாலும் சதீஷ¤க்குப் பிடிக்கவில்லை. அவங்கம்மா செய்தாற்போல் இல்லையாம். படுக்கையை உதறிப் போடவில்லை என்பான். சமையல் மேடையைத் துடைக்கவில்லை என்று குறை சொல்லுவான். துணிகளை என்னையே வாஷிங் மெஷினில் போடச் சொல்கிறான். நண்பர்களை பார்ட்டீகளுக்குக் கூப்பிடுவான். என்னையே சமைக்கச் சொல்கிறான். கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருந்தவளை இப்படி அமெரிக்காவுக்கு துரத்தி விட்டு விட்டீங்களே? டிரைவிங் லைசன்ஸ் இல்லை. பப்ளிக் ட்ரான்ஸ் போர்ட் இல்லை. இந்த இடம் வெறும் ஜெயில் மம்மீ!” புலம்பினாள் ராதிகா.
“என்ன பேச்சு இது? அங்கே அருணா இல்லையா? பிரசாந்தி இல்லையா? நீ ஒருத்தி மட்டும் தான் வேலையை விட்டு விட்டு அங்கே போயிருக்கிறாயா? வீட்டு வேலைகளை கொஞ்சமாவது செய்ய வில்லை என்றால் எப்படி? கொஞ்சம் பழக்கப்படுத்திக் கொள்.”
“மம்மீ! நீங்க என்னிக்காவது என்னை காபியாவது கலக்கவிட்டிருக்கீங்களா? அட்ஜெஸ்ட் செய்துகொள், பழக்கப்படுத்திக்கொள் என்று புதிதாக சொல்றீங்களே? நீங்கள் எல்லோரும் எனக்கு வேண்டிய விதமாக அட்ஜெஸ்ட் செய்துகொள்வதுதானே வழக்கம்?”
வசுந்தராவுக்கு தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. உடனே சம்பந்தியம்மாளுக்கு ·போன் செய்தாள். அந்தம்மாள் தன் மகனுக்கு ·போன் செய்து “அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய். அமெரிக்காவில் எல்லோரும் அப்படித்தான் செய்வார்களாமே?” என்றாள்.
“என்னால் முடியாது மம்மீ! நான் ஒருநாளும் வீட்டு வேலைகளை செய்தது இல்லை. இருந்தாலும் வேலைகளை செய்துக்கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்திருந்தால் ஆபீஸ் வேலையில் எப்படி முன்னுக்கு வரமுடியும்? அதோடு இந்த வேலைகள் எல்லாம் செய்ய பிடிக்காமல்தானே நான் இந்தக் கல்யாணத்திற்கு இவ்வளவு சீக்கிரமாக சம்மதித்தேன். வேலைக்கும் போகாமல் வீட்டு வேலைகளையும் செய்யாமல் இந்த மகாராணி என்ன செய்வாளாம்? உங்களுக்குத் தெரியுமா மம்மீ? பக்கத்தில் டெட்டிபேர் இல்லாமல் பாப்பாவுக்கு தூக்கம் வராதாம்.”
அந்தம்மாள் மறுபடியும் வசுந்தராவிடம் பேசினாள். “எங்க பையனிடம் பேசினேன். அவன் ஒரே புலம்பல். உங்க மகள் காபி மேக்கரில் கூட தண்ணியை ஊற்ற மாட்டாளாம். எப்போ பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்திருப்பாளாம். உங்க மகளுக்கு இந்தியாவில் இருக்கும் பையனாக பார்த்திருக்கலாம். வீட்டு வேலைகள் செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டாக ஆட்கள் இருந்திருப்பார்கள்.”
“ஆமாம் ஆமாம். சுளையாக இருபதாயிரம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவள் வேலையை விட்டு விட்டு அமெரிக்காவுக்கு போனாள். இந்த தவறெல்லாம் என்னுடையதுதான்” என்றாள் வசுந்தரா கோபத்தை விழுங்கிக்கொண்டே.
இதுவே இந்தியாவிலேயே இருந்திருந்தால் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட்டு வருவதற்காக ஒரு நடை போய்விட்டு வந்திருக்க முடியும் இல்லையா? விட்டு வேலைகளை செய்து தருவதற்காக ஒரு குட்டியையாவது அனுப்பி வைத்திருப்பாள். யோசிக்க யோசிக்க வசுந்தராவின் கோபம் முழுவதும் தன் தாயின் மீது திரும்பியது. ராதிகா பிறந்த போது ஒத்தாசைக்கு வந்த அவளுடைய தாய் “கைக்குழந்தையுடன் உன்னால் வேலைக்கு எப்படி போக முடியும்? நான் எடுத்துக் கொண்டுபோய் வளர்க்கிறேன். எனக்கு மட்டும் வீட்டில் என்ன வேலை இருக்கிறது? பொழுதும் நன்றாக போகும். உனக்கும் நிம்மதியாக இருக்கும். மாப்பிள்ளையிடமும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள்.
அம்மாவுக்கு வீட்டிலும் யாரும் இல்லை. வீட்டு வேலைகளுக்கு ஒத்தாசையாக எப்போதும் விட்டில் ஒரு குட்டியிருப்பாள். கைக்குழந்தையையும் தூக்கிக் கொள்வாள். அம்மாவுக்கு சிரத்தை அதிகம். கண்ணும் கருத்துமாக குழந்தையைப் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்து சரி என்று சொன்னாள்.
குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரையில் கூடவே இருந்துவிட்டு போகும் போது குழந்தையையும் அழைத்துக் கொண்டு போய்விட்டாள். பத்து வயது ஆகும் வரையில் பேத்தியை தானே வளர்த்தாள். தண்ணி குடிக்கணும் என்றால் டம்ளரை எடுத்து மொண்டு கொள்ளணும் என்று தெரியாத வகையில், குடித்த டம்ளரை அதன் இடத்தில் வைக்கணும் என்ற தேவையில்லாத விதமாக வளர்ந்தாள் ராதிகா. யாருக்காவது சின்ன ஒத்தாசை செய்யலாம் என்ற நினைப்பு கூட வராத அளவுக்கு பாட்டியின் செல்லம்.
“நீங்கதான் அவளை கெடுத்து வைத்திருக்கீங்க.” ·போனில் தாயின் மீது பாய்ந்தாள் வசுந்தரா.
“நான் வளர்த்தது பத்து வயது வரையில். நீ வளர்த்தது பதிமூன்று வருடங்கள். நான் வளர்த்தபோது அவள் சிறு குழந்தை. நீ வளர்க்கும் போது அவள் விவரம் தெரிந்தவள். நான் ஏன் உன் மகளைப் பார்த்துக் கொண்டேன் தெரியுமா? எனக்கு இல்லாத படிப்பும், வேலையும் உனக்கு இருந்ததால். நீ சுதந்திரமாக வாழணும் என்றும், குழந்தைக்கும் வேலைக்கும் உன்னால் நியாயம் வழங்க முடியாது என்பதாலும். சமைக்கத் தெரியவில்லை என்றால் வந்த நஷ்டம் எதுவும் இல்லை. முதலில் அவர்களிருவருக்கும் நடுவில் சமாதானம் ஏற்படும்படியாக செய். இல்லையா அங்கே போய் சமைத்துப் போடு. நடுவில் என் மீது கத்துவானேன்?” என்றாள் அந்தம்மாள்.

“உனக்கு சமைத்துப் போட்டு எல்லா வேலைகளையும் செய்யும் பெண்தான் வேண்டும் என்றால் படித்த பெண்ணை ஏன் பண்ணிக்கொண்டாய்?” சதீஷின் தாய் சலித்துக் கொண்டே கேட்டாள்.
“எனக்கு என்ன தெரியும்? முதலிலிருந்து நீங்க தானே எனக்கு என்ன வேண்டுமோ, எப்படி இருந்தால் நான் சுகமாக இருப்பேனோ சொல்லிக்கொண்டு இருக்கீங்க. நீங்க சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டேனா இல்லையா? நீங்க அந்தப் பெண்ணை செலக்ட் செய்தீங்க. நானும் சரி என்று சொன்னேன். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமே என்று நினைத்துக் கொண்டேன்” என்றான் சதீஷ்.
“முன்னைப் போல் இந்தக் காலத்துப் பெண்களை உனக்கு சமைக்க தெரியுமா? வீட்டு வேலைகள் செய்யத் தெரியுமா என்று கேட்பது மரியாதை இல்லை. இருந்தாலும் எத்தனை பெண்கள் அமெரிக்காவுக்குப் போய் வேலைகளை கற்றுக்கொள்ள வில்லை? இதெல்லாம் எதற்கு? அங்கே இந்தியன் ரெஸ்டாரெண்டுகளும், இந்தியன் க்ரொஸரி ஸ்டோர்களும் நிறையவே இருக்குமாமே. வெளியில் சாப்பிட்டுக் கொள்ளுங்களேன் கொஞ்ச நாட்களுக்கு?” என்றாள் சதீஷின் தாய்.
“நன்றாகத்தான் இருக்கு உங்களுடைய அறிவுறை. சாப்பாடு விஷயம் இருக்கட்டும். வீடு ரொம்ப ஊழலாக இருக்கு.” எரிச்சலுடன் சொல்லிவிட்டு ·போனை வைத்துவிட்டான் சதீஷ்.

“அவனுடன் எனக்கு கொஞ்சம் கூட ஒத்துப் போகவே இல்லை அருணா! டிபிகல் இந்தியன் மிடில் கிளாஸ் மேல்” என்றாள் ராதிகா.
“எங்கேஜ்மென்ட் முடியும் வரையில் உங்களுக்கு ஒருவரைப் பற்றி ஒருவருக்கு அதிகமாக எதுவும் தெரியாதே, சர்டிபிகேட்ஸ் பற்றி தவிர. பின்னே இப்படித்தான் இருக்கும். போகட்டும், கொஞ்ச நாள் இந்தியாவுக்குப் போயேன்” என்றாள் அருணா.
“அதுவும் முடிந்துவிட்டது. கல்யாணத்திற்கே நிறையவே செலவு செய்து விட்டானாம். இப்போ உடனே தன்னால் டிக்கெட்டுகளுக்காக செலவு செய்ய முடியாதாம். சொல்லிவிட்டான்.”
அருணாவுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை போலும். டெலி·போன் மறுமுனையில் நிசப்தம்.
“நல்ல பிராஜெக்ட் செய்துகொண்டிருந்தவள் நடுவில் வேலையை விட்டு விட்டு வந்தேன். ரொம்ப இன்டரெஸ்டிங்காக இருந்தது. இன்னும் ஆறுமாதங்கள் போயிருந்தால் நானே பிராஜெக்ட் லீடராகியிருப்பேன். அவன் என்னை வெறும் ஹோம் மேக்கராக பார்க்கிறான். எனக்கு அவனுடன் பிரண்ட்ஷிப் ஏற்படுவது அசம்பவம். அருணா! அவனுக்கு எதிராளியைப் புரிந்துகொள்ளும் குணம் கொஞ்சம் கூட இல்லை. சின்ன உதவி கூட செய்ய மாட்டான். உனக்குத் தெரியுமா அருணா? எப்பொழுதாவது சமையல்கார மாமி வராமல் போனால், அம்மா எங்கேயாவது போக வேண்டியிருந்தால் அப்பாவும் நானும் வெளியிலேயே சாப்பிட்டு விடுவோம். ஜாலியாக ஏதாவது சினிமாவுக்கு போவோம்.”
“நமக்கு அம்மா அப்பா சுத்தமாக இருப்பது, அழகான, மிடுக்கான தோற்றத்துடன் காட்சி தருவது, நல்ல ரேங்குகளை பெறுவது எல்லாம் கற்றுத் தருவார்கள். பிறந்தநாள் பார்ட்டீகளைக் கொண்டாடுவது, நல்ல சாப்பாடு போடுவது, நல்ல கணவனைத் தேடுவது எல்லாம் ஏற்பாடு செய்வார்கள். நமக்கு யோசிக்கும் தேவை ஏற்படும் விதமாக செய்வது, சுதந்திரமாக சிந்திக்கும் சக்தியைத் தருவது, பிரச்னைகள் வந்தால் மிரண்டு போய்விடாமல் எதிர்த்து நிற்கக் கூடிய தன்னம்பிக்கையைத் தருவது .. இதெல்லாம் செய்ய மாட்டார்கள். அவர்களுடைய பார்வைக்கு இவையெல்லாம் வரவே வராது. எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவது போலவே, நமக்காக அவர்களே யோசிக்கவும் செய்வார்கள். சமீபகாலத்தில் இந்தப் போக்கு ரொம்ப அதிகமாகிவிட்டது. உனக்கு மட்டுமே இல்லை. சதீஷ் விஷயத்திலும் இதேதான் நடந்திருக்கிறது. உங்களுக்கு என்ன தேவையோ இது நாள் வரையில் யோசிக்க வேண்டிய அவசியமே உங்களுக்கு வந்ததில்லை. அதான் கரையில் விழுந்த மீன்களைப் போல் துடிக்கிறீங்க. நீங்க இருவரும் போய் கௌன்ஸிலிங் எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே இது ரொம்ப சகஜம்.”
“என்ன கௌன்சலிங்கோ என்னவோ. அருணா! உண்மையைச் சொல்லணும் என்றால் எங்க வீட்டில் நான் ஒரு நாளும் காபி டம்ளரை கூட கழுவியதில்லை. குறைந்தபட்சம் சிங்கில் கூட போட்டதில்லை நான். வேலைக்காரப்பெண் கையிலிருந்து டம்ளரை வாங்கிக் கொண்டு போய்விடுவாள். இங்கே என்னடாவென்றால் பாத்ரூம்களை கழுவவில்லைன்னு சதீஷ் ஒரே ரகளை. போகட்டும், அந்த வேலைகளை எல்லாம் எப்பொழுதாவது அவனே செய்யலாம் இல்லையா? அந்த வேலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் கல்யாணம் செய்துகொண்டேன் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் என்னிடமே சொல்லிவிட்டான்.”
“இதோ பாரு ராதிகா! என் பேச்சைக் கேளு. நீங்க இருவரும் கௌன்ஸிலிங் எடுத்துக் கொள்ளுங்கள். அவன் வர மாட்டேன் என்று சொன்னால் நீ மட்டுமாவது போய் வா. இல்லாவிட்டால் உனக்கு டிப்ரெஷன் வந்து விடும்.”

“குழந்தையை நான் அழைத்துக் கொண்டு போகிறேன். அவளை உன்னால் வளர்க்க முடியாது. குழந்தையைப் பார்த்துக் கொள்வது எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. சமையல்கார மாமி, வீட்டு வேலைக்கு வேலைக்காரி, உங்க அப்பா மற்றும் நான் இத்தனை பேர் இருக்கிறோம். உனக்கு வர்க் பர்மிட் கிடைத்து விட்டதாக சொன்னாய் இல்லையா. வேலைக்குப் போ. இல்லையா மேற்கொண்டு ஏதாவது படி. ஆரம்பத்தில் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிவிட்டது உனக்கு. குழந்தையை நாங்க பார்த்துக் கொள்கிறோம். நீ நிம்மதியாக வேலைக்குப் போகலாம். சதீஷ் இப்போ ரொம்ப மாறிவிட்டான். நாம்பளும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்” என்றாள் வசுந்தரா ராதிகாவிடம்.
“இன்னொரு இளவரசியைத் தயார் செய்யுங்கள்.” சதீஷ் ·போனில் சொல்லிக் கொண்டிருந்தான்.
மறுமுனையில் சதீஷின் தந்தை போலும். ஸ்பீக்கர் ஆனில் இருந்தது. அவர் சொல்வதும் கேட்டுக் கொண்டிருந்தது.
“குழந்தையை சம்பந்தியம்மாளுடன் அனுப்பி வை சதீஷ். சில நாட்கள் நாங்களும் பார்த்துக் கொள்கிறோம். இதே ஊர்தானே. முழுவதுமாக அவங்க பொறுப்பிலேயே விட்டுவிட மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“இந்தப் பக்கம் ஐந்து பேர், அந்தப் பக்கம் ஐந்து பேர் மொத்தம் பத்து பேராக சேர்ந்து குழந்தையை வளர்க்கப் போறீங்களா? வண்டர்·புல் டாடீ! இப்போ கூட நாங்க என்ன செய்யணுமோ, எப்படி செய்யணுமோ சொல்வதை நிறுத்த மாட்டீங்களா? எங்களையும் கொஞ்சமாவது யோசிக்க விடுங்கள். இப்பொழுதாவது எங்களை சுதந்திரமாக, தனித்தன்மையுடன் வாழவிடுங்கள். நல்லது கெட்டதை யோசிக்கும் தேவை எங்களுக்கு வர விடுங்கள். யோசிக்கும் வாய்ப்பை எங்களுக்கும் கொடுங்கள்” என்று ·போனை வைத்துவிட்டான்.
“ஒன்றுமில்லை. இரண்டு பேரும் வேலை பார்த்தால் சீக்கிரமாக வீடு வாங்கலாம்.” வசுந்தரா மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“ஏதோ ஒன்று செய்வோம் அம்மா! நீங்க கூல் ஆக இருங்கள். சதீஷ் அவங்க அப்பாவிடம் சொன்னதை கேட்டீங்க இல்லையா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டாள் ராதிகா.
“இதென்ன?” வியப்புடன் நினைத்துக் கொண்டாள் வசுந்தரா. இது போல் எதிர்த்துச் சொன்னது இது வரையில் இருந்தது இல்லையே.

தெலுங்கில் P.Sathyavathi sathyavathi.pochiraju@gmail.com
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்