எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

தமிழ் : எஸ் ஷங்கர நாராயணன்


—-

கொஞ்ச வருஷம் முன்னால் நான் கிராமத்தில் இருந்தபோது தினமும் எருதுகளைப் பார்க்கிறது உண்டு. இப்போது நினைக்கும் போதுகூட அவைகளின் பெரிய கண்கள்தான் பசுமையாக ஞாபகத்தில் பதிந்து போயிருக்கிறது. குளிர்காலத்தில் வெயில்க் கதகதப்புக்காக அவைகளைக் கதவில் கட்டிப் போட்டிருப்பார்கள். ஓயாமல் அசைபோட்டபடி அவை சாய்ந்து கிடக்கும். வேலையாய் இருந்ததைக் காட்டிலும் இப்போது அந்தக் கண்கள் பெரிதாய் எனக்குத் தோன்றும். வெள்ளைப்பாகமான கடூரமான கண்கள். ஏன் கடூரமான என்று சொல்கிறேன்… ரத்த நாளங்கள் சோகையாய் வரியோடிய கண்கள் எனக்கு அப்படித் தெரிந்தன. அந்த நிறங்களின் சேர்க்கைக்கு உவமானம் சொல்வதானால் – நிசப்தமாய்க் கிடக்கும் பிணத்தின் பக்கத்தில் தனியே ஒருத்தன் ஓவென்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறாப்போல, என்று சொல்லலாம்.

எருதின் கண்கள் பூதாகரமாயும் உப்பியும். அவ்வளவில் என்னை ரொம்ப பயமுறுத்துகிறதாகவும் இருக்கின்றன. நான் எப்போது களத்துமேட்டுப் பக்கம் போனாலும், அதைத் தாண்டிப் போகும்போது, என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிற வெளிப்பிதுங்கிய அந்த இரண்டு பெரிய கண்களைப் கவனித்தபடியேதான் போவேன். அது அப்படி வெறித்துப் பார்ப்பது, எந்நேரமும் எழுந்து கொண்டு அது என்னை முட்ட வந்துவிடும் என்று எண்ண வைக்கும். நிஜமாகவே ஒரு வெறுப்பை அந்தக் கண்களில் நான் உணர்ந்தேன். அது ஏன் அப்படி வெறிக்கிறது என நான் அறிவேன். அதனிடம் இருந்து தள்ளியே ஒதுங்கியே எப்போதும் நான் போய்வந்தேன். தாண்டிப் போகையில் அது அசைகிறதா என எச்சரிக்கையுடன் அவ்வப்போது பார்த்துக் கொள்வேன். ஆனால் ஊமைக்கோட்டானாய் என்னையே அது வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும். இன்றைக்கும் அந்தக் கண்ணில் நம்மை இம்சைப் படுத்தும் எதோவொரு விஷயம் இருக்கிறாப் போலவே உணர்கிறேன்.

களத்து மேட்டில் நிறையப் பையன்கள். துறுதுறுவான, நல்லது கெட்டது புரிபடாத விஷமக்கார விடலைப் பையன்கள். வசந்த ருதுவில் அவர்கள் பட்டாம்பூச்சி பிடித்தார்கள். கோடையானால் தவளைகளுக்குக் கொக்கி போட்டார்கள். புல் செழித்து வளர ஆரம்பித்ததும் கொழுத்த வெட்டுக்கிளிகள் நடமாட்டம் ஆரம்பிக்கும். பையன்கள் ஒற்றை அமுக்காய் அவற்றை அமுக்கி, கம்பியில் கோர்த்து சுட்டுத் தின்றார்கள்… குளிர்காலம் சின்னப் பிராணி எதும் சிக்காவிட்டால் அவர்கள் எருதுடன் விளையாட வந்தார்கள்.

அவர்கள் எருதைக் கோபப்படுத்தி சீண்டிக் கொண்டிருப்பதை நிறைய் கவனித்திருக்கிறேன். கட்டியிருந்த கம்பத்தை அது சுத்திச் சுத்தி வட்டம் அடிக்கும். தலையைக் கீழ் தாழ்த்தி, கொம்புகளை ஒருச்சாய்த்து, கீழே வெறிக்கும் கண்களுடன் அது வானத்தையும் பூமியையும் கீழ் மேலாய்ப் புரட்டிப் போடும் அளவு பாயத் துடிப்பு காட்டும்.

பையன்கள் அதனுடன் இப்படி விளையாடினார்கள் – சற்று தள்ளி நின்றுகொண்டு சின்னக் கற்களாய்ப் பொறுக்கி அதைப் பார்க்க விட்டெறிந்தார்கள். கல் அதன்மீது விழுகையில், நடுக்கத்தில் நம் உதடுகள் துடிக்கும்தானே, அதைப் போல அது தோலை சிலிர்த்துக் கொள்ளும். அப்புறம் கற்கள் பெரிதாய் விழ ஆரம்பிக்கும்போது, தலையைத் திருப்பிப் பார்க்கும். இருக்கிறதில் துணிச்சல்காரப் பையன் கம்பு தேடி மூங்கில் குத்துக்குள் போவான். எவ்வளவு துீரம் தள்ளியிருக்க முடியுமோ அத்தனை துீரத்தில் இருந்து அந்தக் கம்பை நீட்டி, எருதின் வால்ப்பக்கமோ பின்னம்புறமோ குத்தி விடுவான். ஆனால், முகத்துக்கு நேரே அதைக் குத்துகிற யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லை. இவர்கள் சின்னப் பிள்ளைகள், அதனால் பயந்தோணிகள் என்று சொல்ல முடியாது. பெரிய அந்த ஜோடிக் கண்கள்… அவைகளைப் பார்க்க அவர்களும் திகில் அடைந்தார்களோ என்னவோ ?

அவர்கள் விளையாட்டு இப்படி முடியும் – அவர்கள் இம்சையைப் பொறுக்க முடியாமல் எருது எழுந்து கொள்ள, பயல்கள் ே ?ாவென்று கோஷம் எழுப்பியபடியே சிதறியோடிப் போனார்கள்! அதற்குமேல் அங்கே நிற்க அவர்களுக்கு உதறல். விளையாட்டு இப்படி முடிவதை நிறையத் தரம் பார்த்திருக்கிறேன்.

ஒரு சமயத்தில் கொத்தடிமை ஒருவன் எங்கள் களத்தில் வேலைக்காக வந்தான். முப்பது வயது என்றாலும் சிறுபிள்ளையைப் போல விளையாடித் திரியப் பிரியப்பட்டவனாய் இருந்தான் அவன். இந்தப் பொடியன்களில் ஒருவனை பிடித்து நிறுத்திக் கொண்டு அவன் சொன்னான். ‘சண்டியரு ஓடாதீரும். எருதைப் பார்த்து பயப்பட்டா எப்பிடி ? பெறகு நாளைக்கு வெள்ளாமை பாக்கறது எப்பிடி ? ‘ – அவன் என்னைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தான். ‘உண்மையில எருதைப் பார்த்து நாம வெலவெலக்க வேண்டியதில்லை! எம்மாம் பெரிய உருவம் அது. பாருங்க, ஆனால்கூட நம்மை அது முட்ட வரவே வாரதில்லை!… அதோட முழி வேற மாதிரியானது. ‘

இதுதான் கொத்தடிமை என்னிடம் சொன்னது – ‘உதாரணத்துக்கு… இந்த மரக்கம்பம்…. பாருங்க, அதோட பார்வையில் இது வானத்தையே தாங்கிட்டிருக்கிற துீண்!… அல்லது, ஒரு ரெண்டு ஏக்கரா பூமியைச் சொன்னா… அது எருதுக்கு முடிவே தெரியாத பிரதேசமாப் படுது!… எதைப் பார்த்தாலும், தன்னோட உருவத்தைவிட பிரம்மாண்டமா அதைப் பத்தி நினைச்சுக்குது அது. நம்மைப் பார்க்கிறபோது, நாலு லோகத்தையும் காப்பாத்தறது நாமதான்னு அதுக்கு நினைப்பு. அதும் முன்னாடி நாம நின்னா, நம்மைப் பார்த்து ‘அது ‘ மிரளுது!… நம்மை எதிர்க்க அது நினைக்கறதே இல்லை. அது நினைச்சிட்டிருக்கு, நாம விரலை அசைச்சம்னா தான் செத்துரும்னு. கட்டைவிரலாலேயே நாம அதைத் துீக்கி எறிஞ்சிருவம்னு அது நினைக்குது. மழை, வெயில்… எந்தக் காலமானா என்ன, நாம வயல்ல பாடு பாக்கறோம். அதாவது அது உழுது. நாம என்ன சொல்லறோமோ, சொல்றதைச் செய்யுது அது. அதுக்குத் தெரிஞ்சதெல்லாம் அவ்ளதான்! அதுக்கு அந்தமாதிரி கண் இருக்கிறது நம்ம அதிர்ஷ்டம்தானே சாமி. இல்லாட்டி நம்மகிட்ட அது அடங்கி வேலை செய்யாது. எவ்ள பெரிசு அது! என்ன பலம்! ஒற்ற எத்து விட்டிச்சின்னா நாம திரும்ப எந்திரிக்கவே நாள்க்கணக்குல ஆவும். நாம அஞ்சு ஆள் சேர்ந்தால்கூட ஒற்ற எருதைத் தாக்கு பிடிக்க ஏலாது… அது நிச்சயம்! ஆனா பாருங்க. நம்ம அதிர்ஷ்டம்! அதும் பார்வையில நாம ஒராளு, ஒருடஜன் மனுசாளாத் தெரியுதே… ‘

அதுக்குப் பிறகு களத்து மேட்டுப் பக்கம் நான் எப்போது போனாலும் அந்தக் கண்களையே பார்ததபடி போகிறேன். ஜனங்களை மிரள வைக்கும் அந்த சமாச்சாரம் இப்போது எனக்கு விளங்கியது. சகதி படிந்த மஞ்சள் ரப்பைகளும் எப்போதும் முன்னே வெறிக்கிற அந்தப் பார்வையும்… ரெண்டுமே அதன் பயத்தை, பயம் உருமாறிய வெறுப்பை, அதன் வெளிப்பாடான சோகத்தை நான் உணர்ந்தேன்.

எருதின் மனநிலையில், தன் கண்களை அது இழப்பது, இழந்து குருடாய்ப் போவது உத்தமம். ஏனென்றால் அதன்பிறகு அது சுதந்திரமாய் இருக்கும்.

—-

பின்குறிப்பு

சீனத்து அண்ணாச்சி யே ஷெங்டவோ அந்த ஊர் கி.ரா. போலிருக்கிறது. கம்பியூனிஸ்டு எழுத்து என்றாலும் என்ன அழகு. தீர்மானம். முத்தாய்ப்பு. கதையின் தாத்பரியம், அதன் வீர்யம் நம்மூர் கம்பியூனிஸ்டு எழுத்தாளர் ஒருத்தருக்கே விளங்காமல் – அவர் நம்ம திண்ணையிலும் எழுதுகிறார் – நான் எடுத்துக் கொடுத்தேன். அதான். கொத்தடிமைத்தனத்துக்கும் எருதின் வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கொத்தடிமை எருதை ஏளனம் செய்கிறான், என அண்ணாச்சி கொத்தடிமையை ஏளனம் செய்கிறார். முடிவில் ஒரு சோக முத்திரை.

storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்